சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

குரு வணக்கம் – சோ ராமஸ்வாமி அக்டோபர் 5

வரலாற்றின் பக்கங்களில் இந்தியா என்றுமே ஒரு கொந்தளிப்பான நாடாகத்தான் இருந்துவந்தது. உலக சரித்திரத்தில் மிக முக்கியமான நாகரீகமாக, உலக வர்த்தகத்தில் முக்கியமான பங்கேற்பாளராக, அளவற்ற செல்வம் நிறைந்த நாடாக, அதனாலே அந்தச் செல்வத்தைக் கவர நினைத்த பலருக்கு ஒரு கனவு தேசமாக, மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களால் படையெடுக்கப்பட்ட தேசமாக, மீண்டும் மீண்டும் தன் வாழ்வுக்கான போராட்டத்தை நடத்திய தேசம் என்றே இந்த நாட்டின் சரித்திரத்தைச் சொல்லிவிடலாம்.

இந்தக் கொந்தளிப்புக்கு சிறிதும் குறைந்ததல்ல சுதந்திரம் அடைந்த பிறகான காலகட்டடமும். நாட்டின் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் இரண்டாக்கப் பிளவுபட்டதும், ஊழலுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் நாடெங்கும் போராட்டங்கள் வெடித்ததும், அலகாபாத் நீதிமன்றத்தின் புகழ்பெற்ற தீர்ப்பின் மூலம் பதவியில் இருக்கும் பிரதமமந்திரியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து பதவியைத் தக்கவைக்க நாடெங்கும் நெருக்கடிநிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு, மக்களின் உரிமைகள் எல்லாம் மறுக்கப்பட்டு, எதிரணியில் இருந்த தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதும் என்று இருந்த காலகட்டம் அறுபதுகளின் கடைசி வருடம் முதல் எழுபதுகளின் பாதிவரை இருந்த வரலாறு.

“நாங்கள் அவர்களை மண்டியிடச் சொன்னோம், அவர்கள் தவழவே செய்தார்கள்” இது அன்றய காலகட்டத்தின் பத்திரிகைகளை பற்றிய அதிகாரத்தின் கூற்று. அரசாங்கத்தின் கொள்கையாக தனிமனிதர்களின் துதிப்பாடல் நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. ” இந்தியாவே இந்திரா, இந்திராவே இந்தியா” என்று துதிபாடிகள் புகழ்பாட, ஏழ்மையை ஒழிப்போம் என்ற கோஷங்களும், பிரதமமந்திரியின் இருபது அம்சத் திட்டமும், அவர் மகனின் ஐந்து அம்சத் திட்டமும் பொன்னுலகைக் கொண்டுவரும் என்ற பிம்பங்களும் கட்டமைக்கப்பட்ட காலம் அது.

இதன் பின்புறத்தில் தனித்து ஒலித்த குரல் திரு சோ ராமஸ்வாமியின் குரல். பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் பிறரை மிரட்டியும், யார் பதவிக்கு வரவேண்டும் யார் வரக்கூடாது என்று தரகு வேலை பார்த்தும், நாட்டின் நலனை, நாட்டு மக்கள் நலனை கருத்தில் கொள்ளாது இருக்கும் நிலையில், தனக்கென ஒரு தனி வழியை, தான் நல்லது என்று நினைக்கும் வழியைத் தேர்ந்தெடுத்து அதில் நடந்தவர் திரு சோ என்பது இன்றய தலைமுறைக்கு ஆச்சர்யம் அளிக்கக் கூடியதாகத்தான் இருக்கும்.

நாடக நடிகராக, திரைப்பட நடிகராக, கதாசிரியராக, இயக்குனராக என்று பல தொழில் செய்தவரின் எல்லாப் பாதைகளும் இறுதியாகச் சங்கமித்த இடம் பத்திரிகை ஆசிரியர் என்றானது. அதிகாரத்தின் மிக நெருக்கமான இடங்களில் இருந்தபோதும் அதை அவர் தனக்கான தனிப்பட்ட பலனுக்காக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை அவர்மீது யாரும் சுமத்த முடியாததே அவரின் தனிவாழ்வின் நேர்மைக்குச் சான்றாகும்.

அரசின் எந்தப் பதவியிலும் இல்லாத திரு சஞ்சய் காந்தி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது. அதைக் கண்டிக்கும் விதமாக அந்த விபத்தில் மரணமடைந்த கேப்டன் சுபாஷ் சாஸ்சேனாவின் தபால் தலையை துக்ளக்கில் வெளியிட்டார். எம் ஜி யார் ஆட்சியை கேலி செய்து அவர் எழுதிய சர்க்கார் புகுந்த வீடு என்ற தொடர் மிகவும் புகழ்வாய்ந்தது.

இந்து மஹா சமுத்திரம், மஹாபாரதம் பேசுகிறது, வால்மீகி ராமாயணம், எங்கே பிராமணன் ஆகிய புத்தகங்கள் ஒரு பண்பாட்டுத் துறையின் ஆரம்பநிலை வாசகன் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்.

விளையாட்டாகத்தான் அவர் பத்திரிகை ஆரம்பித்தார், ஆனால் அதைத் தொடர்ந்து நடத்தவேண்டிய கட்டாயத்தை கலைஞர் செய்தார். துக்ளக் பத்திரிகையைப் பறிமுதல் செய்து, கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு புத்தகம் வாங்கவைத்த பெருமை அன்றைய முதல்வரையே சாரும். இப்படிப்பட்ட கைங்கரியத்தைச் செய்தவரைதான் மாபெரும் அரசியல் அறிஞர் என்றும், மூத்த பத்திரிகையாளர் என்றும் கருத்துரிமையின் காவலர் என்று சிலர் சொல்லித் திரிகின்றனர்.

அதையும் தாண்டி நெருக்கடிநிலைமையைக் கலைஞர் எதிர்த்ததை பாராட்டி, மத்திய அரசை விமர்சிக்கும் உரிமை கிடைக்கும்வரை மாநில அரசை விமர்சிக்கப் போவது இல்லை என்று சொன்னவர். தணிக்கைத்துறை அதிகாரிகளிடம் ” என் வேலையை நீங்கள் செய்கிறீர்கள், அதனால் எனது சம்பளத்தையும் நீங்கள்தான் வாங்கிக் கொள்ளவேண்டும்” என்று கூறி திகைக்க வைத்தவர்.

அவர் ஒரு பழமைவாதி என்று சனாதனவாதி என்று இன்று சிலர் கூறுகின்றனர். அவர் என்று தனது கொள்கைகளை மறைத்து வேஷம் போட்டார் ? அவர் சரி என்று நினைத்தத்தைச் சொன்னார், எழுதினார். இந்த நாட்டுக்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு, அதற்க்கு ஒரு சிறப்பு உண்டு என்று அவர் உளமார நம்பினார். போலி அறிவுஜீவிகள் போல நடித்து இருந்தால் அவருக்கும் உலகளாவிய புகழ் கிடைத்து இருக்கும், அது வேண்டாம் என்று நினைத்தார், தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்.

பெண்ணுரிமையை அவர் ஆதரிக்கவில்லை என்று சொல்வார்கள் எது உரிமை ? கட்டற்ற உரிமை என்பது எங்குமே இருக்க முடியாது. எல்லா உரிமைகளும் கடமைகளின் மீது அமைக்கப்பட்டவைதான். புகைபிடிப்பதும், மது அருந்துவதும், கட்டற்ற பாலியல் உறவு வைத்துக் கொள்வதும்தான் பெண்ணுரிமை என்று கூறுபவர்கள் அவர்கள் குடும்பத்து பெண்களுக்கு அதையா கூறுகிறார்கள் ?

அவர் எண்ணங்களை கூறப் பயன்படுத்தினாலும், எதிர்கருத்துக்களுக்கும் சோ இடம் அளித்தே வந்தார். அதனால்தான் வலதுசாரி கருத்துடைய திரு குருமூர்த்தி அவர்களின் கட்டுரைகளையும் அதே நேரத்தில் அதற்க்கு எதிரான கம்யூனிஸ்ட் தலைவர்களின் கட்டுரைகளும் துக்ளக்கில் வெளிவந்தன. பத்திரிகை என்பது அறிவார்ந்த விவாதங்களை உருவாகும் இடமாக இருக்கவேண்டும் அதற்க்கு எதிரும் புதிருமான தகவல்களைத் தரவேண்டும் என்பது அவர் கருத்தாக இருந்தது.

பல்வேறு தலைவர்கள் அவர்களது அரசியல் வாழ்க்கையைப் பற்றிய சித்திரங்களை துக்ளக்கில் எழுதி உள்ளனர். ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் மூத்த பிரச்சாரகர் திரு சூரியநாராயணராவும் திரு அப்துல் சமது அவர்களுக்குமான உரையாடல் ஆர் எஸ் எஸ் இயக்கம் பற்றிய ஒரு தெளிவை மக்களுக்குத் தந்தது.

எண்பதுகளில் விடுதலைப் புலிகளை பற்றித் தவறாகச் சொன்னாலே கிடைக்கும் வசைகளைத் தாண்டி அவர்கள் ஒரு தீவிரவாத இயக்கம் தான், அவர்களால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது என்று எச்சரித்தவர் சோ மட்டும்தான். அதைத்தான் இன்று கழகக் கண்மணிகளும் கூறுகின்றனர் என்பதுதான் நகைமுரண்.

சில ஆயிரம் விற்பனையாகும் பத்திரிகையின் ஆசிரியர் என்று சிலர் எழுதியதை பார்த்தேன். வீட்டு வாசல்படியில் பாலும், வரிசையில் இருந்து சாராயமும் விற்பனையாகும் மாநிலத்தில் ரோஜாப் பூக்கும் கள்ளிச் செடிக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

முழுவாழ்விலும் பிரிவினை சக்திகளுக்கு எதிராகவே சோ நின்றிருந்தார். ஹிந்து மதத்தைத் தாக்குவது ஒன்றே பகுத்தறிவு என்று பேசியவர்களின் இடையே நெற்றி நிறைய திருநீரோடு காட்சி அளித்தார்.

தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் என்னால் ஏற்கமுடியாதவைதான் என்றாலும், எழுத்துக் கூட்டி வாசிக்க ஆரம்பித்த நாள்முதலாக பல வருடங்களாக நான் படித்த ஒரு பத்திரிகையின் ஆசிரியர், பெருவாரியான மக்களின் கருத்து எப்படி இருந்தாலும் என் நெஞ்சுக்கு சரியென்று தோன்றியதை எதற்கும் அஞ்சாமல் எடுத்துரைக்க வேண்டியதின் அவசியத்தைப் புரியவைத்தவர். நடுநிலைமை என்பது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அல்ல, ஆனால் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அறிவுத்தியவர் அவர்.

சிலநேரங்களில் ஆசிரியர்கள் ஒரே இடத்தில் நின்றுவிடலாம் , அவர்களைத் தாண்டி அவர்கள் கற்றுக்கொடுத்தவற்றில் சரியானவற்றை மாணவர்கள் முன்னெடுப்பதுதான் ஆசிரியர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்.

சென்று வாருங்கள் ஆசிரியரே.

ஆசிரியர் சோ அவர்களின் மறைவை ஒட்டி வலம் இதழில் வெளியான கட்டுரை 

(Visited 147 times, 1 visits today)
3+
Show More

One Comment

  1. சிறப்பு! இந்தக் கட்டுரையை, துக்ளக் வாசகர் வட்டம் மற்றும் ரீடர்ஸ் கிளப் பக்கங்களில் பதிவிட ஆலோசிக்கிறேன்.
    நன்றி!

    0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close