ஆன்மிகம்செய்திகள்

சேஷாத்ரி ஸ்வாமிகள்

காஞ்சி நகரின் காமாட்சி அன்னையை ஆராதிப்பதற்காக ஆதிசங்கரர் சில உபாசனா முறைகளைக் தோற்றுவித்ததோடு அல்லாமல் அவற்றைச் சரிவர நடத்துவதற்காக நர்மதா நதிக்கரையில் இருந்து தேவி உபாசகர்களான முப்பது பக்தர்களை அவர்களின் குடும்பத்தோடு காஞ்சிக்கு அழைத்து வந்தார். அவர்கள் காமாட்சி தேவியைத் தங்கள் குலதெய்வமாகக் கொண்டு ஸ்ரீவித்யையைப் பரப்பி வந்தனர். அவர்கள் காலத்திலிருந்து தேவி பக்தியும் ஸ்ரீவித்யையும் செழித்து வளரத் தொடங்கியது. மக்கள் அவர்களைக் காமகோடியார் என அழைக்க ஆரம்பித்தனர். ஏனெனில் காஞ்சியின் காமாட்சி அம்மன் மட்டுமின்றிக் காஞ்சி நகரமே ஸ்ரீபராசக்தியின் ஸ்ரீசக்ரபீடத்தின் உருவாகவும் அம்மன் குடி கொண்டிருக்கும் காமகோடி பீடம் ஸ்ரீசக்கரத்தின் பிந்துவாகவும் கருதப்படுகிறது. அதை வழிபடுபவர்களைக் காமகோடியார் என்பது பொருத்தம் தானே! இவர்கள் வேத அத்யயனம் மட்டும் செய்யாமல் இதிகாசப் புராணங்களையும் நன்கு அறிந்தவர்களாக இருந்தார்கள். ஒரு சிலர் ஜோதிட சாத்திரத்திலும் வல்ல்வர்களாக இருந்தார்கள். காமாட்சி கோயிலில் மட்டுமில்லாமல் ஸ்ரீவரதராஜர் கோயிலிலும் பஞ்சாங்கம் வாசிக்கும் உரிமையும் அதற்கெனத் தனி மான்யங்களும் பெற்றிருந்தனர்.

இதில் காமகோடியார் மரபில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காமகோடி சாஸ்திரிகள் என்னும் பெயரில் ஓர் மகான் அவதரித்தார். ஆசாரசீலரான அவர் அம்பிகையின் வழிபாடு மட்டுமின்றி ஈசனையும் துதித்துப் பல பாடல்கள் வடமொழியிலும் தெலுங்கிலும் இயற்றி  இருக்கிறார். அபாரமான சங்கீத ஞானம் உடைய இவர் கல்லும் கரையும் வண்ணம் பாடல்களைப் பாடி வருவார். இவர் வீடே ஓர் பர்ணசாலை போல அமைதியும் எழிலும் நிறைந்து காணப்படும். அவர் சிலரின் வேண்டுகோள்படி அருகிலுள்ள வழூர் என்னும் சிற்றூருக்குச் சென்று தங்கினார். ஆனால் அவருக்கு ஆண் குழந்தைப் பேறில்லாமல் மனம் வருந்தினார்.. ஒரே ஒரு மகளைப் பெற்றிருந்த அவர் தம் அண்ணன் சிதம்பர சாஸ்திரிகளின் இரண்டு மகள்களையும் தம் சொந்தப் பெண் குழந்தைகள் போலவே வளர்த்து வந்தார். அவர்கள் இருவரில் கடைக்குட்டியான மரகதம் சிறு வயதிலேயே அபாரப் புலமையோடும் அழகும் நற்குணங்களும் வாய்க்கப் பெற்றிருந்தாள். சாஸ்திரிகளும் அவளுக்குப் புராணக்கதைகள், தர்ம சாத்திரங்களைக் கற்பித்ததோடு இசையோடு பாடவும் கற்றுத் தந்தார். நாளடைவில் தன் பனிரண்டாம் வயதிலேயே மரகதம் “சாஹித்ய சங்கீத கலாநிதி” என்னும் பட்டத்தைப் பெற்றாள்.

அவளுக்குத் திருமணப்பருவம் வந்து விட்டதை அறிந்த காமகோடி சாஸ்திரிகள் அவளுக்குத் தக்க மணாளன் தனது சீடனும், மாணவனும் ஆன வரதராஜனே என முடிவு செய்து அவர் தந்தையோடு கலந்து பேசித் திருமணத்தை நிச்சயித்தார். ஒரு நல்ல முகூர்த்தத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். மரகதமும், வரதராஜனும் அருமையாகவும் பெருமையாகவும் சீரோடும், சிறப்போடும் தாம்பத்தியம் நடத்தி வந்தனர். இன்முகத்தோடு அனைவரையும் உபசரித்த தம்பதிகள் இருவரும் தர்மநூல்களையும் புராணங்களையும் படித்து மகிழ்ந்ததோடு மாலை வேளைகளில் வரதராஜப் பெருமாளையும், ஸ்ரீகாமாட்சி அம்மனையும் தரிசித்து வந்தனர். எல்லாம் இருந்தும் இருவருக்கும் குழந்தைப் பேறே இல்லை. பல விரதங்கள் இருந்தனர். தானங்கள் செய்தனர். திருத்தல யாத்திரைகள் சென்றனர். காமகோடி சாஸ்திரிகளின் மனமும் வருந்தியது. காமாட்சி அம்மனிடம் சென்று அவள் சந்நிதியில் மனம் உருகப் பிரார்த்தித்தார். தான் ஏதேனும் தவறு செய்திருந்தாலும் அதற்காகத் தன் மகளைத் தண்டிக்க வேண்டாம் என்றும் அம்பிகையின் கடைக்கண் கடாட்சத்தைக் காட்டி அவளுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து அருளும்படியும் மனமுருகப் பிரார்த்தித்தார்.  அன்றிரவே காமகோடி சாஸ்திரியாரின் கனவில் அன்னை தோன்றி சாஸ்திரியாரைத் தம்பதிகளுக்கு வெண்ணெய் கொடுக்கும்படி சொல்லிவிட்டு அந்த வெண்ணெயை உண்ட தம்பதிகளுக்குச் சிறப்பான ஞானக்குழந்தை பிறக்கும் என்றும் சொல்லி மறைந்தாள்.

மறுநாள் காலை நீராடி அனுஷ்டானங்களை முடித்த காமகோடி சாஸ்திரிகள் தம்பதிகளை அழைத்துத் தாம் கண்ட கனவைச் சொல்லிவிட்டுப் பராசக்தியை வேண்டிக்கொண்டு அவளுக்குப் படைத்த பிரசாதமாக வெண்ணெயை இருவருக்கும் கொடுத்தார். ஜபங்கள், தபங்கள், துதிகள், மந்திரங்கள் செய்யப்பட்டு சொல்லப்பட்டுப் புனிதம் அடைந்திருந்த அந்த வெண்ணெயைத் தம்பதிகள் இருவரும் உண்டனர்.சில நாட்களிலேயே மரகதம் கருத்தரித்தாள்.

(Visited 53 times, 1 visits today)
2+
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close