வரலாற்றில் இன்று

தொழிலதிபர் T V சுந்தரம் ஐயங்கார் பிறந்தநாள் – மார்ச் 22

தமிழகத்தின் முக்கியமான டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர் திரு சுந்தரம் ஐயங்காரின் பிறந்ததினம் இன்று 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி என்ற சிறு கிராமத்தில் 1877ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி பிறந்தவர் திரு சுந்தரம் ஐயங்கார். திருநெல்வேலி ஹிந்து கல்லூரியில் படித்த அவர் சட்டபடிப்பையும் முடித்தார். அதனைத் தொடர்ந்து ரயில்வேயில் குமாஸ்தாவாகவும் பின்னர் வங்கியிலும் பணியாற்றினார். பின்னர் தொழில்துறையில் சுந்தரம் ஐயங்கார் கால்பதித்தார். 

1911ஆம் ஆண்டு தனது நிறுவனத்தை ஆரம்பித்த ஐயங்கார் 1912ஆம் ஆண்டு பஸ் போக்குவரத்தைத் தொடங்கினார். தஞ்சாவூர் – புதுக்கோட்டை வழியில் இவரது முதல் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. பேரம் பேசும் நிலைமையை மாற்றி தூரத்திற்கு ஏற்ப கட்டணம், பயணிகள் கொடுக்கும் பணத்திற்கு ஒப்புகை சீட்டு, குறிப்பிட்ட காலத்தில் கிளம்பி சரியான நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைதல் என்று அந்தக் காலத்திலேயே தரத்தில் கவனம் செலுத்தினார். டிவிஎஸ் நிறுவனத்தின் பேருந்துகள் வருவதை வைத்து கடிகாரத்தின் நேரத்தை சரி செய்துகொள்ளலாம் என்று அன்று பேசுவது இயல்பான ஒன்றாக இருந்தது. 

பேருந்து போக்குவரத்தைத் தொடர்ந்து அதோடு தொடர்புடைய பல்வேறு தொழில்களிலும் டிவிஎஸ் நிறுவனம் கால்பதிக்கத் தொடங்கியது. வாகன உதிரிப்பொருள்கள், பெட்ரோல் / டீசல் விநியோகம், டயர் உற்பத்தி என்று விரிவடைந்தது. பின்னர் நாடு சுதந்திரம் அடைந்தபிறகு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களின் விநியோக உரிமையும் டிவிஎஸ் நிறுவனத்திற்கு கிடைத்தது. எந்தவிதமான சமரசமும் இல்லாத தரக்கட்டுப்பாடு, அரசின் சட்டதிட்டங்களை மீறாத செயல்பாடு, பணிபுரியும் ஊழியர்களை குடும்ப உறுப்பினர்கள் போல நடத்துதல் என்று ஒரு உதாரண நிறுவனமாக டிவிஎஸ் நிறுவனத்தை ஐயங்கார் வார்த்தெடுத்தார். நிறுவனத்தில் கான்டீன் வசதி, தொழிலாளர்களுக்கு குடியிருப்பு, மருத்துவ வசதி, அவர்கள் பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் என்று அன்றய காலகட்டத்தில் எந்த தொழிலதிபரும் யோசிக்காத வசதிகளை தங்கள் தொழிலாளிகளுக்கு அவர் ஏற்படுத்திக் கொடுத்தார். 

வாகன விநியோகத்தில் ஈடுபட்ட நிறுவனம், தங்கள் வாகனங்களை விற்பனை செய்ய சுந்தரம் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தையும் உருவாக்கியது. இன்று வாகன கடன் வழங்குவதில் சுந்தரம் பைனான்ஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. அரசு தனியார் போக்குவரத்தை அரசுமயமாக்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் நிறுவப்பட்டது. வீல்ஸ் இந்தியா, சுந்தரம் கிளேட்டன், டிவிஎஸ் மோட்டார்ஸ்,  என்று பல்வேறு நிறுவங்களாக அவை உருவெடுத்தன. 

தாங்கள் தயாரிக்கும் பொருள்களின் தரத்திற்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த நிறுவனங்கள் பல்வேறு உதிரிப்பாகங்களை ஏற்றுமதியும் செய்து வருகின்றன. டிவிஎஸ் குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் தரக் கட்டுபாட்டுக்கான டெமிங் தர விருதையும் பெற்றுள்ளன. இன்று ஏறத்தாழ 60,000கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு 8.5 பில்லியன் அமெரிக்கா டாலர் வியாபாரத்தை டிவிஎஸ் குழுமம் செய்து வருகிறது. 

சுந்தரம் ஐயங்கார் அவர்களுக்கு ஐந்து மகன்களும் மூன்று மகள்களும் உண்டு. முற்போக்கு சிந்தனையாளராகவும், காந்தியைப் பின்பற்றுபவராகவும் சுந்தரம் ஐயங்கார் இருந்தார். சிறுவயதில் விதவையான தனது மகள் சௌந்தரம் அவர்களுக்கு ராமச்சந்திரன் என்பவருக்கு மறுமணம் செய்து வைத்தார், காந்திகிராம கிராமப்புற பல்கலைக்கழகத்தை நிறுவியவர்கள் இந்த தம்பதியினரே. 1955ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் நாள் சுந்தரம் ஐயங்கார் காலமானார். 

தமிழகத்தின் தொழில்வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த திரு சுந்தரம் ஐயங்கார் அவர்களின் பிறந்ததினத்தில் அவரை ஒரே இந்தியா செய்தித்தளம் போற்றி வணங்குகிறது. 

(Visited 48 times, 1 visits today)
0
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close