ஆன்மிகம்சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்

பகவத்கீதை முன்னுரை

ஸ்ரீமத் பகவத்கீதை – ஒரு சாமானியனின் எளிய உரை
=================================================

முன்னுரை:


அர்ஜுனனுக்குச் சாரதியாக கண்ணபிரான் குருக்ஷேத்திரத்திற்குள் நுழைகிறான். அதுவரை மனதில் உறுதியோடு வீரம் பொங்க இருந்த அர்ஜுனன் எதிரில் படையோடு அணிவகுத்து நிற்கும் தனது ஆச்சாரியார்களையும், பிதாமஹரையும் மற்றும் தனது சொந்தங்களையும் கண்டு மலைத்துப் போய் மதிமயக்கம் கொண்டு “என் உறவுகளுடன் நான் போரிடமாட்டேன்” என்று காண்டீவத்தைக் கீழே போட்டுவிடுகிறான். அவனை இப்போது போரிடவைக்கவேண்டும் என்பதே ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவின் குறிக்கோள். மாயவனான பகவான் ஸ்ரீகிருஷ்ணன் எண்ணற்ற ஜாலங்களைச் செய்தது போல இங்கேயும் ஒரு சிறு மாயம் செய்து அர்ஜுனனை போர்த்தொழிலில் ஈடுபடுத்தியிருக்கலாம். ஆனால், தேகம், தேகி, ஆத்மாவைப் பற்றி அவனுக்குப் பாடம் புகட்டுவதாக, உபதேசம் செய்வதாக, வாழ்க்கையைப் பற்றியும் உறவுகள் பற்றியும் சொல்லிக்கொடுப்பதாக, பிரகிருதி என்றும் ஈஸ்வரன் என்றும் புகழப்படும் புருஷோத்தமன் யார் என்றும் அவனை அடையும் வழிகள் என்ன என்பது பற்றியும் ஒரு உரை நிகழ்த்துவதாக ஞானமும் மோக்ஷமும் அடைவதற்கான மார்க்கங்களைக் காட்டுவதற்காகவும் பகவத் கீதை வியாஸபாரதத்தின் பீஷ்ம பர்வத்தில் வருகிறது.  இது அர்ஜுனனுக்காகவா? அவனுக்கு மட்டுமல்ல. சனாதன தர்மத்தின் உயர்ந்த கருத்துகளான கர்ம, பக்தி, ஞானம் ஆகியவைகளைத் தனது வாய்மொழியாகவே கண்ணன் அர்ஜுனனுக்குச் சொல்கிறார். அவரது திருவாயிலிருந்தே வந்த வாக்கானதால் இதன் விசேஷம் அளவற்றதாகச் சொல்லப்படுகிறது. கீதையைப் பாராயணம் செய்பவர்களுக்கு பல நன்மைகள் விளைகிறது என்பது ஆன்றோர்களின் கருத்து. 

உயர்ந்த தத்துவங்களை, வாழ்வியல் நெறிமுறைகளை, மனிதனின் குண விசேஷங்களை, அவனுக்கு ஞானம் பிறக்கும் முறைகளை, தெய்வத்தை வழிபடும் வகைகளை, தனக்கு விதிக்கப்பட்டக் காரியங்களை முடிக்கும் திறமைகளை, சிரத்தையாக இருப்பதின் மகத்துவத்தை, புருஷோத்தமனான அவனின் பெருமைகளை, அகங்காரத்தைத் துறப்பதை, ஸ்திதப்ரக்ஞான இருந்து காரிய சித்தி அடைவதை என்று சகலவிதமான விஷயங்களையும் ஆச்சாரியனாக போதிக்கிறான். இறைவனே நேரடியாக இதைச் சொன்னபிறகு இதற்கு வேறு அத்தாட்சி வேண்டுமா? அவன் கீதையில் சொன்னபடி நடப்பவர்கள் தனக்குப் பிரியமானவனாகி தன்னையே வந்தடைகிறான் என்று மோக்ஷ பதவியை இதைப் படிப்பதன் மூலமாகவே வழங்கிவிடுகிறான் வாஸுதேவன். 

PC: krishna.org
PC: krishna.org

மதிமயக்கமும் மனச்சோர்வும் கொண்ட அர்ஜுனனைக் காட்டுவதாக ஆரம்பிக்கிறது அர்ஜுன விஷாத யோகம் கீதைச் சொல்லப்படுவதற்கு முகாந்திரமாக கட்டமைகப்பட்டுள்ளது. பின்னர் ஆத்மதத்துவத்தை 2) சாங்கிய யோகத்திலும், வர்ணாசிரம தர்மங்களுக்கு ஏற்ற செயல்களை 3) கர்மயோகத்திலும், தத்துவத்தோடு கர்மயோகத்தையும் சாங்கியயோகமடங்கிய சந்நியாஸத்தையும் 4) ஞானகர்ம சந்நியாஸ யோகத்திலும், ஞானகர்ம சந்நியாஸத்தைப் புகழ்ந்த கண்ணனிடம் கர்மத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்ததென்று சொன்னதால் மனம் குழம்பி அர்ஜுனன் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்களை 5) கர்ம சந்நியாஸ யோகத்திலும், மனம் புத்தி புலன்கள் ஆகியவற்றை அடக்குவது பற்றி 6) ஆத்ம ஸம்யம யோகத்திலும், பகவானின் முழுமையான சொரூபத்தையும் அவரை அடையும் தத்துவம் வழிகளைப் பற்றி 7) ஞான விஞ்ஞான யோகத்திலும், பகவானின் திரு நாமமான “ஓம்” என்ற அக்ஷரம் என்று ப்ரஹ்மம் என்று சொல்லி அதன் வர்ணனையை 8) அக்ஷர ப்ரஹ்ம யோகத்திலும், தன்னுடைய உபதேசங்கள் எல்லா வித்தைகளிலும் ஒப்பற்றது என்று பகவானே கூறுவதை 9) ராஜவித்யா ராஜகுஹ்ய யோகத்திலும், பகவானது விபூதிகளைப் பற்றி 10) விபூதி யோகத்திலும், விண்ணுக்கும் மண்ணுக்குமாய் அளந்த தனது விஸ்வரூபத்தை 11) விஸ்வரூப தரிசன யோகத்திலும், பக்தி செலுத்தும் சாதகனுக்கான வழிமுறைகளை அலசும் 12) பக்தியோகத்திலும், உடல் ஆத்மாவைப் பற்றிய செய்திகளை 13) க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகத்திலும், சத்வரஜஸ்தமோ என்ற முக்குணங்களைப் பற்றி 14) குணத்ரய விபாக யோகத்திலும், புருஷோத்தமனின் குணவிசேஷங்கள் மற்றும் பிரபாவங்கள் பற்றி 15) புருஷோத்தம யோகத்திலும், நற்பண்புகளை உடைய தெய்வசம்பத்தை அடைவது பற்றியும் தீயபண்புகளான அசுரசம்பத்தை களைவதையும் 16) தைவாசுர சம்பத் விபாக யோகத்திலும், சிரத்தையில் ஊன்றியவர்களைப் பற்றி 17) சிரத்தாத்ரய விபாக யோகத்திலும், மோக்ஷமாகிய பரமாத்மாவிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிடுமாறு 18) மோக்ஷ சந்நியாஸ யோகத்திலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்கிறார். 

இந்த பதினெட்டு யோகங்களும் ஆறாறாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் ஆறு கர்மயோகத்தை வலியுறுத்துவதாகவும், இரண்டாம் ஆறு பக்தியோகத்தையும் மூன்றாம் ஆறு ஞானயோகத்தையும் உரைக்கிறது. மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்ற வாக்கியத்தின் மூலம் என்னையே சரணடை. நான் உன்னை காப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறான் இறைவன். அப்படி சராணகதி அடைந்த அர்ஜுனன்தான் படை வேண்டாம் நீ போதும் என்று கண்ணனை பணிந்து சாரத்யம் செய்வதற்கு அழைத்துவந்தான். தன்னை சரணாகதி அடைந்தவர்கள் தனக்கு தோழன் என்ற ஸ்தானத்தில் வைத்து அவர்களை ரக்ஷிக்கிறான் ஈஸ்வரன். அவன் இருந்தாலே அவ்விடத்தில் ஜெயம் என்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த உத்தமமான அறசாரத்தை சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் வர்ணித்து முடிக்கும் போது சொன்னதை இங்கே குறிப்பிடுவது முக்கியமாகிறது. 

“எங்கு யோகேஸ்வரனனா பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் காண்டீவம் ஏந்திய அர்ஜுனனும் இருக்கிறார்களோ அவ்விடத்தில் மகாலக்ஷ்மியும் வெற்றியும் சகல ஐஸ்வர்யங்களும் நீதியும் நிலைத்து நிற்கும் என்பது என்னுடைய கொள்கை”

சுதந்திரப் போராட்டக் காலத்தில் கர்மயோகத்தைப் பிரதானமானக் கருப்பொருளாக வைத்து அந்தக் கோணத்தில் பகவத் கீதைக்குப் பலரால் உரை எழுதப்பட்டது. லோகமான்ய பாலகங்காதரத் திலகர், மஹாத்மா காந்தி ஆகியோர் கீதைக்கு உரை எழுதி சுதந்ததிரப் போராட்டத்திற்கு எழுச்சி ஊட்டினார்கள். ஆதிசங்கரர் ஞானயோகத்தையே முக்கியமாக்கி உரை செய்தார் என்று சொல்வார்கள். ராஜாஜியின் உரையும் பாரதியார் உரையும் கண்ணதாசன் உரையும் நமக்குப் பொக்கிஷங்கள். ஆத்ம விசாரத்தை உபதேசம் செய்த பகவான் ஸ்ரீரமண மஹரிஷியும் சாதாரணர்களுக்குப் புரியும்படியாக எளிய உரையை அருளியிருக்கிறார்கள். இப்படிச் செய்த ஆன்றோர் சான்றோர்களின் வரிசைக்கு அருகில் செல்லக்கூட அருகதையில்லாதவன் நான். இருந்தாலும் கம்பராமாயணக் காவியத்தை ஆரம்பிக்கும் கம்பநாட்டாழ்வான் பாற்கடலை நக்கிக் குடிக்க முயலும் பூனையைப் போல ( ஒரு பூசை, முற்றவும் நக்குபு புக்கென – பூசை என்றால் பூனை) என்று அடக்கிவாசிக்கிறான். கவிச்சக்ரவர்த்தியே இப்படிச் சொன்னபின்பு என்னைப் போல அற்பன் வேறென்ன சொல்லமுடியும்? சூரியனை ஒரு தட்டாம்பூச்சி பறந்து சென்று பிடிக்க யத்தனிப்பது போன்றது என்னுடைய முயற்சி. 

ஸ்ரீமத் பகவத் கீதை மொத்தம் 745 ஸ்லோகங்களைக் கொண்டது. இதில் கண்ண பரமாத்மா 620 ஸ்லோகங்களைச் சொன்னார். அர்ஜுனன் 57 ஸ்லோகங்கள் மூலமாக தனது சந்தேகங்களைக் கேட்டான். ஸஞ்சயன் 67 ஸ்லோகங்களில் திருதராஷ்டிரனுடன் பேசுவது பதிவாகியிருக்கிறது. திருதராஷ்டிரன் ஒரேயொரு ஸ்லோகத்தால் பேசினான்.

கீதை சர்வ சாஸ்திர ஸ்வரூபமாக சிலாக்கியப்படுத்தப்படுகிறாது. ஹிரியானவர் சர்வ தேவர்களின் ஸ்வரூபி. கங்கை சர்வ தீர்த்தங்களின் ஸ்வரூபம். காயத்ரீ மந்திரமான சர்வ வேத மயமாகப் பாவிக்கக்கூடியது. கீதை,  கங்கை, காயத்ரீ மற்றும் ஹரியான கோவிந்தா என்ற நான்கும் மனதில் நிலைபெற்றிருக்குமானால் எவருக்கும் மறுபிறப்புக் கிடையாது என்கிறார் வியாச பகவான். 

எல்லா பெரியவர்களின் பாதம் பணிந்தும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நமஸ்கரித்தும் இதை ஆரம்பிக்கிறேன். குற்றம் பொறுத்து அடியேனை ஆசீர்வதிக்குமாறு அனைத்து பக்தர்களையும் வேண்டுகிறேன். நன்றி! 

அவருடைய முகநூல் ப்ரொபைல் லிங்க் https://www.facebook.com/mannairvs

(Visited 145 times, 5 visits today)
7+
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close