ஆன்மிகம்செய்திகள்

பகவத் கீதை – ஆறாம் அத்யாயம் – அத்யாத்மயோகம்

யோக விளக்கம்: 

உடல் மனம் புத்தியெல்லாம்  ‘ஆத்மா’  என்றழைக்கப்படுகின்றன.  கர்மயோகமாக இருந்தாலும் சாங்கிய யோகமாக இருந்தாலும் அவற்றை சாதனை செய்வதற்கு தியானயோகம் தேவை. இதில் உடல் மனம் புத்தி ஆகியவைகளை அடக்குவதைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் யோகிகளின் யோக்யதையான சமதர்ஸனத்தைப் பற்றியும் பகவான் எடுத்துரைக்கிறான்.


கைகளைக் கூப்பி முழங்கால்களில் அமர்ந்திருக்கும் அர்ஜுனனுக்கு மேலும் யோகங்களை உரைத்துக்கொண்டிருந்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

“அர்ஜுனா! கர்மங்களின் பலன்களில் கண் வைக்காமல் செய்ய்வேண்டிய கர்மத்தை செய்பவனே சந்நியாசி. அவனே யோகி என்று அறிந்துகொள். அக்னியின் செய்யப்படும் வேள்விகளையும் கிரியைகளையும் விட்டவன் சந்நியாசியும் யோகியும் கிடையாது. எதை ஞானயோகம் என்று சொல்கிறார்களோ அது கர்மயோகம் என்றறி. ஞானயோகத்தை அடைய விரும்பும் யோகிக்கு கர்மயோகம் முக்கியமானதாகச் சொல்லப்படுகிறது.

மனிதன் மனதினால் தன் ஆத்மாவை உயரிய நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும். தன் மனமே உறவு. தன் மனமே பகை. எவனொருவன் தன் மனதை தான் ஜெயிக்கிறானோ அவனுக்கு மனம் பந்து. மனதை அடக்காதவனுக்கு அது பகை. சத்ரு. சுகம் துக்கம் மானம் அவமானம் வெப்பம் குளிர்ச்சி போன்றவைகளில் வேறுபாடு காணாதவன் மனதில் பரமாத்தாவின் அனுசந்தானத்திற்கு யோக்கிவானாகிறான்.

ஆத்மாவிடத்தில் நிலைபெற்று இந்திரியங்களை ஜெயித்தவன் மண்ணாங்கட்டிக் கல்லையும் தங்கத்தையும் சமமாகப் பார்க்கும் யோகியாவான். [ஸுஹ்ருத், மித்ரன், சத்ரு, உதாஸீனன், மத்யஸ்தன், த்வேஷி, பந்து, சாது மற்றும் பாபி]* என்று ஒன்பது விதமானவர்களிடம் சமமாக இருப்பவன் மேன்மையடைகிறான்.

பரிசுத்தமான ஒரு இடத்தில் அதிக உயரமும் அதிக தாழ்வாகவும் இல்லாமல் தர்ப்பைகளையும் அதன் மேல் மான்தோலையும் போட்டு அதை ஆசனமாக உட்கார்ந்து இந்திரியங்களை அடக்கி மனதையும் அடக்கி அந்தகரண சுத்திக்காக யோகம் செய்யவேண்டும். யோகி தனது சரீரம் தலை கழுத்து ஆகியவைகளை நேர்க்கோட்டில் வைத்து அசைவில்லாமல் தனது மூக்கின் நுனியை பார்த்துக்கொண்டு மனதை அடக்கி பிரம்மச்சரிய விரதத்தில் இருந்து அந்த மனதை என்னிடம் செலுத்தவேண்டும். இப்படி இருப்பவன் என்னிடத்தில் சாந்தியை அடைகிறான்.

அர்ஜுனா! இந்த தியான யோகமானது அதிகமாக உண்பவனுக்கு சித்திக்காது. முழுவதும் உணவில்லாமல் இருப்பவனுக்கும் சித்திக்காது. அதிக தூக்கமும் எப்போதும் தூங்காதவனுக்கும் சித்தியாகாது. இவற்றில் மிதமாக இருப்பவர்களுக்கு இது சித்தியாகிறது. மனதை அடக்கி ஆத்மாவினுள் வைத்துவிட்டால் அவன் ஆசை அற்றவன் ஆகிவிடுகிறான். அப்போதுதான் யோகத்திற்கு யோக்கியதை பெறுகிறான்.

மனதை அடக்கி ஆத்ம சாக்ஷாத்காரம் செய்து கொண்டிருக்கும் யோகினாவனன் காற்றில்லாத இடத்தில் சுடர்விட்டு எரியும் அசைவில்லாத தீபம்போல இருக்கிறான்.

மனம் எதில் மிகவும் ஆனந்தத்தை அடைகிறதோ, யோகினெனப்படுபவன் லயித்து ஆத்மஸ்வரூபத்தைக் கண்டு அந்த ஆத்மாவிடத்தில் ஆனந்தமடைகிறானோ, இந்திரியங்களினால் இல்லாமல் புத்தியால் கிரகிக்கும் போது எதில் முடிவற்ற சுகத்தை அறிகிறானோ, எதை ஒன்றைப் பற்றிக்கொண்டு அதன் தத்துவத்திலிருந்து வெளிவராமல் இருக்கிறானோ, எதை அடைந்தால் அதைவிட வேறு ஒன்றும் பெரிதில்லை என்று எண்ணுகிறானோ, துக்கம் என்பதை அறியாமலிருக்கும் எதில் நிலைபெற்றிருக்கிறானோ அந்த அதை யோகம் என்று அறி! அந்த யோகம் மனதினால் களிப்புடன் அனுஷ்டிக்கத்தக்கது.

இந்திரியசம்பந்த விஷயங்களை தவிர்த்து மனதை ஆத்மாவிடத்தில் நிலைபெறச் செய்யவேண்டும். மனது இயற்கையாகவே சஞ்சலம் உள்ளது. அதை அடக்கி ஆத்மாவிடத்தில் வசப்பட செய்யவேண்டும். ரஜோகுணம் நசிந்து சாந்த மனத்துடைய யோகியை சுகம் தானாக வந்தடைகிறது. அப்படியிருப்பவன் பிரம்மானந்த சுகத்தை இலகுவாக அடைகிறான். யோகி எல்லாப் பிராணிகளிடத்தும் சமமான ஆத்மாவைப் பார்க்கிறான்.

ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி

ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஸந:

எவனொருவன் என்னை எல்லா வஸ்துகளிடத்தும் பார்த்து எல்லா வஸ்துக்களையும் என்னிடத்தில் பார்க்கிறானோ அவனுக்கு நான் நிச்சயம் தரிசனம் தருகிறேன். அவனை நான் கவனித்துக்கொள்கிறேன். இப்படி வஸ்துக்களில் அபேதமற்று இருக்கும் யோகி எந்த நிலையில் இருந்தாலும் அவன் என்னிடமே இருக்கிறான்.

அர்ஜுனா! எல்லாப் பிராணிகளிடத்திலும் சுகதுக்கங்களை தன்னிடமுள்ளது போலவே நினைக்கும் யோகியே சிரேஷ்டன் என்றெண்ணப்படுகிறான்.”

அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரின் யோகியைப் பற்றிய விளக்கத்தையும் யோகத்தின் பொருளையும் ஓரளவு உணர்ந்து கொண்டவனாகி தன்னுடைய ஸ்திதியை அவருக்குச் சொல்கிறான்.

“மதுஸுதனரே! எல்லாவற்றிலும் ஒரே நோக்குடைய யோகத்தினை என்னுடைய சஞ்சலப்படும் மனதினால் என்னால் காணமுடியவில்லை. கிருஷ்ணா! மனம் அதிக பலமுள்ளது. அது இந்திரியங்களில் பற்றுள்ளதாக இருக்கிறது. ஓரிடத்தில் நிலைக்காது. அந்த மனத்தை அடக்குவது காற்றைக் கட்டுவது போல அசாத்தியமான காரியம் என்று நான் நினைக்கிறேன்”

அர்ஜுனனின் நிலையை எண்ணி அவனுக்கு மனதை எப்படி அடக்கவேண்டும் என்று விளக்க ஆரம்பித்தார்.

“அர்ஜுனா! சஞ்சலமான மனத்தை அடக்கமுடியாதுதான். சந்தேகமில்லை. ஆனால், அப்பியாஸத்தினாலும் வைராக்கியத்தினாலும் நீ மனதை அடக்கலாம். அடக்கப்படாத மனதை உடையவன் கூட யோகத்தை மேலே சொன்னபடி அடையலாம். மனதை வசப்படுத்த முயற்சி செய்யவேண்டும்”

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் இந்த உபாயம் தன்னால் முழுவதும் கடைபிடிக்க முடியுமா என்று அர்ஜுனனுக்குச் சந்தேகம் எழுந்தது. பகவானிடமே மீண்டும் கைகளைக் கூப்பிக் கேட்கிறான்.

“கிருஷ்ணா! ஒருவன் ஸ்ரத்தையுடன் யோகத்தை அப்பியசிப்பதில் இறங்குகிறான். ஆனால் அவனால் முழுவதும் பூர்த்தி செய்யமுடியவில்லை. அப்படி யோகசித்தியைப் பெறாதவனின் கதி என்ன? அப்படிப்பட்டவன் கர்மயோகத்திலும் நிலையாக இல்லாமல் யோகமார்க்கத்தில் ஞானமற்றுப் போனவன் காற்றினால் கலைக்கப்பட்ட மேகத்தைல் போல அழியாமலிருப்பானா? உம்மைத் தவிர எனது இந்த சந்தேகத்தை யார் தீர்ப்பார்?”

பகவான் சிரித்துக்கொண்டே அவனுக்கு அருள்கிறார்.

“பார்த்தா! அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் ஒருக்காலும் கெடுதி நேராது! அப்பா! நல்ல காரியம் செய்த்வன் ஒரு நாளும் கெட்டுப்போகமாட்டான். யோகத்திலிருந்து பாதியில் நழுவியவன் புண்ணியம் செய்தவர்களின் லோகங்களை அடைகிறான். அங்கே பலகாலம் வசித்து நல்லொழுக்கமுள்ள ஸ்ரீமான்களின் வீடுகளில் பிறக்கிறான். இல்லையென்றால் ஞானியாக யோகிகள் குலத்தில் உதிக்கிறான். உலகத்தில் இப்படிப்பட்ட பிறப்பு அரிதானது. அப்படிப் பிறந்த பிறகு பூர்வதேகத்தில் உண்டான அந்த புத்தியையும் பெறுகிறான். ஆகையால் திரும்பவும் இந்த பிறப்பெடுத்த ஜன்மத்தில் அவன் யோக சித்தியைப் பெறுவதற்கு முயற்சிக்கிறான். யோகத்தில் ஈடுபடும் மன நிலை இல்லையென்றாலும் பூர்வஜன்ம வாசனையின் காரணமாக பலாத்காரமாக யோகத்தில் இழுக்கப்படுகிறான்.

அர்ஜுனா! முயற்சி செய்து யோகாப்பியாஸம் செய்யும் யோகினாவன் எடுக்கும் ஜன்மங்களிலெல்லாம் நல்ல சித்தியை அடைந்து உத்தமமான கதியை அடைகிறான். ஒரு யோகியானவன் தபஸ்விகள் ஞானிகள் மற்றும் அஸ்வமேதம் முதலிய வேள்விகளை அனுஷ்டிப்பவர்களைக் காட்டிலும் மேலானவனாக எண்ணப்படுகிறான். ஆகையால் நீ யோகியாகக்கடவாய். எவன் என்னிடத்தில் மனதை நிறுத்தி என்னை சிரத்தையுடன் உபாசிப்பவனோ அவன் தான் யோகிகளும் மிகச்சிறந்தவன்!

அடிக்குறிப்புகள்:

*ஸுஹ்ருத் – கைம்மாறு கருதாமல் வயது வித்யாசம் பார்க்காமல் ஒருவனுக்கு நன்மை செய்பவன். உதவி புரிபவன்.

மித்ரன் – அன்புள்ள ஒத்த பிராயத்தை உடைய ஸ்நேகிதன்.

சத்ரு – காரணத்தோடு பகைப்பவன்

உதாஸீனன் – எந்தக் கட்சியையும் சேராதவன். விருப்புவெறுப்புக்கு காரணமில்லாமல் உதறியவன்.

மத்யஸ்தன் – விரோதிகளுக்குள் நன்மையை நாடுபவன். அல்லது விருப்புவெறுப்பு இல்லாதவன்.

துவேஷி – இயற்கையாகவே பகைகொண்டிருப்பவன். அப்பிரியமானவன்.

பந்து – உறவினன்.

சாது – சாஸ்திரங்களில் உள்ளபடி நடக்கும் தர்மசீலர்.

பாபி – செய்யக்கூடாது என்று நூல்களிலிருப்பதைத் தவறாமல் செய்பவர்.

ஒரு பாசுரம்:

வாமனன், என் மரகதவண்ணன், தாமரைக்கண்ணினன்,
காமனைப் பயந்தாய் என்றுஎன்று உன் கழல் பாடியே பணிந்து
தூமனத்தனனாய்ப் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீமனம் கெடுத்தாய், உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே?

–        திருவாய்மொழி   2 – 7 – 8 – ஸ்ரீநம்மாழ்வார்

பொருள்

உடல் மற்றும் புத்தியை அடக்க மனம் செவ்வையாக இருக்கவேண்டும். அந்த தீமனத்தைக் கெடுத்து தூய்மையான மனம் கொண்ட தூமனத்தினனாய் ஆக்கினாய். அப்படி நல்மனத்தினால் தியானம் செய்து என் பிறவித் துயரத்தை நீக்கிக்கொள்வேன். இதை அடையும் முறையையும் அடைய வேண்டியது எல்லாவற்றையும் வாமனன், மரகதவண்ணன், தாமரைக்கண்ணன், காமனே உன்னைக் கண்டு பயங்கொள்ளூம் அழுபடைத்தவன் ஆகிய ஸ்ரீதரா நீ செய்த இந்த பெரும் உபகாரத்திற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்?

ஸ்வாமி தேசிகனின் கீதார்த்தசங்கிரகம் – அத்யாத்மயோக சாரப் பாசுரம்:

யோக முயற்சியும் யோகில் சமநிலை நால் வகையும்
யோகின் உபாயமும் யோகு தன்னால் வரும் பேறுகளும்
யோகு தனில் தன் திறமுடை யோகு தன் முக்கியமும்
நாகணை யோகி நவின்றனன் நன் முடி வீரனுக்கே

பொருள்:  

நாகணை என்னும் அனந்தாழ்வானின் திருப்பள்ளியில் யோக நித்திரை கொள்ளும் சர்வேஸ்வரனாகிய ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நல்ல கிரீடத்தை அணிந்த வீரனாகிய அர்ஜுன்னுக்கு, யோகத்தில் முயற்சி பற்றியும் அந்த யோகத்தினில் விளையும் சமதர்ஸனத்தையும் அந்த யோகத்தைச் செய்யும் சாதனங்களும் அவற்றினால் உண்டாகும் பயன்களும் அந்த யோகத்தைவிட தன்னைப் பற்றிய பக்தியினால் உண்டாகும் முக்கியத்தையும் எடுத்துரைத்தான்.

======= அத்யாத்ம யோகம் நிறைவடைந்தது =======

இவருடைய முகநூல் லிங்க் https://www.facebook.com/mannairvs

(Visited 14 times, 1 visits today)
1+
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close