ஆன்மிகம்செய்திகள்

பகவத் கீதை – இரண்டாம் அத்யாயம் – ஸாங்கியயோகம்

யோக விளக்கம்: 

அர்ஜுனன் சோகத்தில் மூழ்கிவிட்டான். அதை எப்படித் தீர்ப்பது என்று கிருஷ்ணரிடம் வேண்டுகிறான். ஞானமாகிய ஆத்ம தத்துவத்தை அர்ஜுனனுக்கு விஸ்தாரமாக விளக்குகிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். பின்னர் ஒவ்வொருக்கும் விதிக்கப்பட்டிருக்கும் ஸ்வதர்மத்தைப் பற்றிச் சொல்லி கர்மயோகத்தையும் கோடிட்டு விளக்கிவிடுகிறார். ஆத்ம தத்துவங்கள் நிறைந்திருப்பதால் ஸாங்கிய யோகம் எனப்படுகிறது. ஸாங்கியம் என்பதற்கு ஞானம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. ஆத்ம தத்துவ வித்தையை அறிந்துகொள்வது ஞானமடைதல் தானே? ஸ்திதப்ரக்ஞன் யார்? என்பது பற்றிய விளக்கமும் இந்த யோகத்தில் வருகிறது.


உறவுகளையும் நட்புகளையும் ஆச்சாரியரையும் பார்த்து நெஞ்சினில் கருணை சுரக்க, கண்களில் நீர்க்கோர்க்க, கலங்கியபடி நின்ற அர்ஜுனனைப் பார்த்து மதுஸூதனர் பேச ஆரம்பித்தார்.

“அர்ஜுனா! சோகம் கொள்ளாதே. இது அபகீர்த்தியை ஏற்படுத்தும். பகைவர்களை வாட்டும் நீ பயமும் கொள்ளத்தகாது. எழுந்திரு” என்றார்.

“கிருஷ்ணா! நான் பூஜிக்கும் பீஷ்மரையும் துரோணரையும் எப்படிக் கொல்வேன்? அப்படி அவர்களை கொன்றால்தான் ராஜ்ஜியம் கிடைக்கும் என்றால் எனக்கு அது தேவையில்லை. நான் பிச்சையெடுத்தாவது பிழைத்துக்கொள்கிறேன். நாம் ஜெயிப்போமா? அல்லது அவர்கள் ஜெயிப்பார்களா? என்று தெரியாது. அதோ எதிரில் நிற்கும் துரியோதனாதிகளைக் கொன்று நாம் பிழைக்க வேண்டாம். தர்மத்தில் மனது மயக்கம் கொள்கிறது. நான் இப்போது உங்கள் சிஷ்யன். உம்மைச் சரணடைகிறேன். எது நமக்கு நிச்சயமான நன்மையை விளைக்கும் என்பதை எனக்கு உபதேசிக்கவேண்டும்”

கைகளைக் கூப்பிவிட்டான் அர்ஜுனன். கிருஷ்ணரைக் குருவாக்கி சரணாகதியடைந்துவிட்டான்.

“இனி நான் போர்புரியப் போவதில்லை” என்று முணகிக்கொண்டே தேர்த்தட்டில் அமர்ந்துவிட்டான். தேர் இருசேனைகளுக்கும் நடுவில் நிற்கிறது. ஸ்ரீகிருஷ்ணர் நகைத்துக்கொண்டார்.

“யாரைக் கண்டு துக்கிக்கத் தேவையில்லையோ அவர்களைக் கண்டு துக்கம் கொள்கிறாய். ஆன்மாக்கள்தான் உயிருள்ளவை. தேகங்கள் உயிரில்லாதவை. ஞானிகள் இவை இரண்டைப் பற்றியுமே துக்கம் கொள்ளமாட்டார்கள். அர்ஜுனா! ஒன்று சொல்கிறேன் கேள்!! நான் எல்லாக்காலங்களில் நித்யமாக இருக்கிறேன். நீயும் இல்லாமல் இருக்கவில்லை. இதோ எதிரில் நிற்கிறார்களே அவர்களும் இல்லாமலிருக்கவில்லை. இந்த ஜீவாத்மாவுக்கு பால்யமும் இளமையும் முதுமையும் எவ்விதம் சம்பவிக்கிறதோ அதே போல வேறு தேகத்தையும் அடைகின்றன. ஞானியாவன் இவ்விஷயத்தில் கலங்குவதில்லை. நீ குமாரனாக இருந்தாய், பின்னர் யவௌனத்தில் இருக்கிறாய், அதன்பின்னர் வ்ருத்தனாகி முதுமையில் இருப்பாய். எல்லாக் காலத்திலும் இந்த தேகத்திற்குதான் இந்த அடையாளங்களே தவிர உன் ஆத்மாவுக்கு மாற்றங்கள் இல்லை.

பார்த்தா! வெப்பம் குளிர்ச்சி சுகம் துக்கம் போன்றவைகள் அநித்யங்கள். வாழ்வில் வந்துபோகக்கூடியவை. அவைகளை நாம் பொறுத்துக்கொள்ளவேண்டும். சுகதுக்கங்களை சமமாக ஏற்றுக்கொள்பவன் மோக்ஷத்தை அடைகிறான்.

இவ்வுலகில் அசத்தான வஸ்துகள் நிலையாக இருப்பதில்லை. சத்தான வஸ்துகள் அழிவதும் இல்லை. இவையனைத்தும் எதனால் படைக்கப்பட்டிருக்கிறதோ அது அழிவற்றது என்பதை அறிந்துகொள். இன்று இல்லையெனினும் என்றாவது இத்தேகத்துக்கு நிச்சயம் அழிவுண்டு. ஆகையால் யுத்தம் செய்!

இன்னொரு கோணத்தில் சொல்கிறேன் கேள்.

அர்ஜுனா! நீ பீஷ்மரைக் கொன்றால், நீ கொல்பவன். அவர் கொல்லப்பட்டவர். இப்படி கொல்பவன் கொல்லப்பட்டவன் என்று இருவேறுவிதமாக அறிவது தவறு. இரண்டுமே “இவன்” என்ற ஆத்மவஸ்துகள். அந்த “இவன்” ஒருவனைக் கொல்வதுமில்லை. வேறொருவனால் கொல்லப்படுவதுமில்லை. இவன் பிறப்பதுமில்லை. இறப்பதுமில்லை. ஒரு சமயம் தோன்றி இன்னொரு சமயத்தில் அழிபவனும் இல்லை. இவன் பிறப்பற்றவன். அழிவில்லாதவன். எப்போதும் இருப்பவன். முன்னோன். தேகத்தை அழித்தாலும் இவன் அழிவதில்லை. இவன் என்பதே ஆத்மா.

இன்னொருவிதமாகவும் சொல்கிறேன் கேள். நீ எப்படி பழைய துணிகளை அவிழ்த்துவிட்டு புதிய வஸ்திரங்களை அணிந்துகொள்கிறாயோ அப்படியே ஜீவன் ஒரு தேகத்திலிருந்து இன்னொரு சரீரத்துக்குச் செல்கிறது. நான் முன்னரே சொன்ன அந்த ‘இவனை’ ஆயுதங்கள் வெட்டுவதில்லை. நெருப்பு எரிக்கமுடியாது. ஜலம் நனைக்காது. காற்று உலர்த்தாது. இவன் எப்போதுமிருப்பவன். எல்லாவிடங்களிலும் வியாபித்திருப்பவன்.

எப்பொழுதும் பிறப்பதும் இறப்பதுவுமாக இருக்குமிந்த கேவலமான தேகத்தை ஆத்மா என்று எண்ணுகிறாயா? பிறந்தவனுக்கு மரணம் நிச்சயம். மரித்தவனுக்கு பிறப்பு நிச்சயம். ஆகையால் உன்னுடைய துக்கம் நியாயமல்ல. “

ஸ்ரீகிருஷ்ணர் உயரிய விஷயங்களை அவனுக்குப் போதிக்கத் துவங்கினார். அர்ஜுனனுக்கு தலைசுற்றியது. எதிரே நிற்கும் பீஷ்மரும் துரோணரும் அவன் சிறுவயதில் விளையாடியவர்கள். துக்கம் தொண்டையை அடைக்கிறது. ஸ்ரீகிருஷ்ணர் விடாமல் உபதேசம் செய்கிறார்

“ஆச்சரியமான இந்த ஆத்மாவை அநேக மனிதர்களுள் ஒருவன் பார்க்கிறான். அப்படிப் பார்த்தவர்கள் ஒருவனே இந்த ஆச்சரியமான ஆத்மாவைப் பற்றிப் பிறருக்கும் சொல்கிறான். அதில் ஒருவன் காதால் கேட்கிறான். கேட்டும் பார்த்தும் சொல்லியும் ஒருவனாவது ஆத்மாவை உள்ளபடி அறிவதில்லை. எந்தப் பிராணியை நீ கொன்றாலும் அதன் ஆத்மாவைக் கொல்லமுடியாது. ஆகவே பிராணிகளைக் குறித்து நீ துக்கப்படலாகாது.

உனக்கு யுத்ததர்மமே விதிக்கப்பட்டிருக்கிறது. க்ஷத்ரியன் யுத்தத்திலிருந்து விலகுவது தர்மமல்ல. நீ யுத்தம் புரியவில்லையென்றால் அதர்மம் செய்த பாவியாகிவிடுவாய். அபகீர்த்தி உன்னைச் சேரும். அவமானம் என்பது மரணத்தைக் காட்டிலும் ரணம் மிகுந்தது. நீ இப்போது எவர்களைப் பார்த்து யுத்தம் புரியமாட்டேன் என்கிறாயோ அவர்கள் நீ பயத்தினால் பின்வாங்குகிறாய் என்று சிரிப்பார்கள். உன்னுடைய பகைவர்கள் சொல்லத்தகாத வார்த்தைகளைச் சொல்லி உன்னை ஏளனம் செய்வார்கள். நீ அதையெல்லாம் கேட்டு மனவலிமையுடன் தாங்கிக்கொள்வாயா?

அர்ஜுனா! நீ இந்த யுத்தத்தில் தோற்றுக் கொல்லப்பட்டால் ஸ்வர்க்கம் செல்வாய். ஜெயித்தால் இப்பூமியை ஆள்வாய். ஆகையால் போர்புரிவதற்கு எழுந்திரு!! பார்த்தா! ஸாங்கியமான ஆத்மதத்துவ விஷயங்கள் உனக்காக இப்போது என்னால் உனக்குச் சொல்லப்பட்டது. கர்மங்களைப் பற்றியும் சொல்கிறேன் கேள். கர்மபந்தத்தை விடக்கூடாது. கர்மயோகத்தில் ஆரம்பித்த காரியத்துக்கு அழிவே கிடையாது. தொடங்கியதைப் பாதியில் விட்டால் கூட தோஷமில்லை. ஆனால் கர்மமானது சிறிதானும் செய்யப்படவேண்டும். கர்மயோகத்தில் நிச்சய ஸ்வபாமுள்ள புத்தியானது ஒன்றுதான். ஆனால் நிச்சய ஸ்வபாவமில்லாத புத்திகள் பலவகைகளாகவுள்ளது. கர்மபலன் ஸ்வர்க்கத்தில் சுகங்களை அனுபவிக்கலாம் என்பதும் அதைத்தவிர வேறில்லை என்பதும் அந்த ஸ்வர்க்கமே மேலானது என்று எல்லாக் காரியங்களையும் செய்பவர்களுக்கும் நிச்சயஸ்வபாவமான மனது உண்டாகாது.

அர்ஜுனா! வேதங்கள் முக்குணங்கள் பற்றியவை. நீ முக்குணங்களையும் இழந்து சத்வகுணத்தில் நிலைபெற்று சுகதுக்கங்களாகிய இரட்டைகளையும் கடந்து யோகக்ஷேமங்களற்றவனாக ஆத்மவானாக ஆவகக்கடவாய்.

பார்த்த! தடாகத்தில் நீர் நிரம்பி இருக்கும். இருந்தாலும் உன் தாகத்திற்கு எவ்வளவு பிரயோஜனமோ அவ்வளவே எடுத்துக்கொள்கிறோம். அதுபோலவே பிராம்மணனுக்கு எல்லா வேதங்களிலும் எது மோக்ஷ சாதனமோ அவ்வளவு மாத்திரமே எடுத்துக்கொள்ளத்தக்கதாகிறது.

கர்மண்யேவாதி காரஸ்தே மா பலேஷு கதாசந

மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோஸ்த்வர்கர்மணி

(பி. ஆர். சோப்ரா எடுத்த மஹாபாரதத் தொடரின் தலைப்புப் பாடலில் இந்த ஸ்லோகம் இடம்பெற்றிருக்கிறது)

உனக்கு கர்மம் செய்வதிலேதான் அதிகாரம் இருக்கிறது. அதன் பலன்களில் கிடையாது. பலன்களில் பற்று வைக்காமல் வெற்றி தோல்விகளில் கவனம் வைக்காமல் சமமாக இருத்தலே யோகம் எனப்படும். ஆகையால் அந்த யோகத்தில் இரு. பலன் கருதி கர்மாவைச் செய்பவர்கள் சம்சாரிகள் அல்லது தீனர்கள். இந்த சமத்துவ புத்தியுடைய ஞானிகள் கர்மங்களினால் கிடைக்கும் பலனில் பற்றுதல் வைக்காமல் பிறவியாக பந்தத்திலிருந்து விடுபடுகிறார்கள்.”

PC: sangatham.com

“கேசவரே! ஸ்திதப்பிரக்ஞன் எனப்படும் நிலைத்த பிரக்ஞையை உடையவன் எவ்விதம் பேசுவான்? எப்படி நடந்துகொள்வான்?”

“துக்கங்களில் வருந்தாத சுகங்களில் பற்றில்லாத ஆசை பயம் கோபம் ஆகியவற்றை ஒழித்த முனியாவன் ஸ்திதப்ரக்ஞனாகிறான். எந்த வஸ்துவிடமும் அபிமானமில்லாமில்லாமல் தனக்கு வேண்டியது வேண்டாதது என்று எதையடைந்தாலும் அதன் மீது விருப்பும் வெறுப்பும் இல்லாமல் இருப்பவனது பிரக்ஞை நிலைபெற்றதாகிறது.

பார்த்தா! ஆமையைக் கவனித்திருக்கிறாயா? தனது ஓட்டிற்குள் அவையங்களை அடக்கிக்கொள்ளும். அதுபோல எவனொருவன் தனது இந்திரியங்களை அடக்கிக்கொள்கிறானோ அவனது பிரக்ஞை நிலைபெற்றதாகிறது. விஷயங்களில் பற்றுள்ளவனின் மனது பரமான வஸ்துவான ஆத்மஸ்வரூபத்தில் நிலைபெறாது. விஷயங்களின் மீது விருப்பம் இருக்கும் போது என்ன முயற்சிசெய்தாலும் அது மனதை இழுத்துக்கொண்டே செல்கிறது. இந்திரியங்களை அடக்கி என்னையே பிரதானமாக்கி சமாதி நிலையிலிருக்கவேண்டும். இந்திரியங்கள் வசபப்ட்டனுக்கு பிரக்ஞை நிலைபெற்றதாகிறது.

விஷயங்களைச் சிந்திக்கும் மனிதனுக்கு அவைகளின் மீது ஆசை உண்டாகிறது. ஆசையினால் குரோதம் உண்டாகிறது. குரோதத்தினால் அறிவிழக்கிறான். புத்தி நாசத்தினால் முழுவதும் அழிந்து போகிறான். மனதில் தெளிவுள்ளவனுக்கு புத்தி சீக்கிரமாக நிலைக்கு வருகிறது. இந்திரியக் கட்டுப்பாடில்லாதவனுக்கு புத்தி நிலைபெறுவதில்லை. ஆகையால் அத்தகையவனுக்கு ஆத்மபாவனையில்லை. ஆத்மபாவனையில்லாவதனுக்கு சாந்தி இல்லை. சாந்தி இல்லாதவன் எப்படி சுகமாக இருப்பான்?

எவனொருவன் இந்திரியங்களின் ஆட்டத்திற்கேற்ப மனதை அலையவிடுவானோ அந்த மனமானது ஜலத்தில் மிதக்கும் ஓடத்தைக் காற்று இழுப்பதுபோல அவனுடைய விவேகத்தை இழுக்கிறது. ஆகையால் இந்திரயங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனுக்கு பிரக்ஞை நிலைபெற்றதாகிறது.

எல்லாப் பிராணிகளுக்கும் எது இரவோ அதில் இந்திரியங்களை அடக்கிய யோகி விழித்துக்கொண்டிருக்கிறான். எல்லாப் பிராணிகளும் விழித்திருக்கும் நேரத்தில் முனிக்கு இரவாகிறது. கடலில் நதிகள் கல்ப்பது போல எந்த யோகினிடத்தில் கர்மாக்கள் கலக்கின்றனவோ அவன் சாந்தியை அடைகிறான். எவனொருவன் எல்லா விஷயங்களையும் விட்டு ஆசையில்லாமல் மமதையில்லாமல் அஹங்காரமில்லாமல் இருக்கிறானோ அவன் சாந்தியடைகிறான். அப்படி இருந்தால் கடைசியில் அவன் பிரம்மத்தை அடைகிறான். அந்திம காலத்தில் ஆனந்தமயமான பிரம்மத்தை அவன் அடைகிறான். “

அர்ஜுனனுக்கு இப்போது ஒன்றுமே புரியவில்லை. முதலில் போர் புரி அது உனது கர்மம் என்றான். பின்னர் ஞானவானாக எல்லாவற்றிலும் பற்றுக்களை விட்டு ஸ்திதப்ரக்ஞனாக பிரக்ஞையை நிலை நிறுத்துவதற்கு இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதற்கு உபதேசம் செய்கிறான். ஏற்கனவே எதிரில் நிற்பவர்கள் தனது பந்துக்கள் என்பதில் மயக்கமடைந்த அர்ஜுனன் இப்போது குழம்பித்தவித்தான். ஸ்ரீகிருஷ்ணர் வழக்கம்போல சிரித்தார்.

ஒரு பாசுரம்:

பொய்ந் நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும், அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறவாமை உயிர் அளிப்பான்,
எந் நின்ற யோனியுமாய், பிறந்தாய்! இமையோர் தலைவா!
மெய் நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும் விண்ணப்பமே. (2478)

                              -திருவிருத்தம் (1) – ஸ்ரீநம்மாழ்வார்

பொருள்:

ஆத்மாவும் இந்த தேகமும் ஒன்றே என்ற பொய்யான ஞானமும் ஐம்புலன்களை அலையவிட்டு இந்திரிய சுகத்தில் உழலும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் என்ற இந்த நிலைமையிலிருந்து என்னை விடுவித்து ஆத்மஞானம் அடையும்படி புனர்ஜென்மத்திலாவது வரம் அருள்வாய் என்று மெய்யாய் நின்று கேட்டுக்கொள் என்பதே அடியேன் செய்யும் விண்ணப்பமே!

ஸ்வாமி தேசிகனின் கீதார்த்தசங்கிரகம் – ஸாங்கியயோகப் பாடல்:

உடலம் அழிந்திடும் உள்ளுயிர் அழியாது எனைப் போல்
விடுமது பற்று விடாததடைத்த கிரிசைகளே
கடுக உனக்குயிர் காட்டு நினைவு அதனால் உளதாம்
விடு மயல் என்று விசயனைத் தேற்றினான் வித்தகனே

விளக்கம்: 

உடலாகிய இந்த சரீரம் அழிந்துவிடும். உள்ளுயிராக இருக்கும் ஜீவாத்மாவானது என்னைப் போல அழியாத அமரத்தன்மை உடையது. பற்றை விடு. நாம் செய்யவேண்டியது என்று அடைந்த கிரிசைகளானக் கடமைகளை நாம் விடக்கூடாது. தேகமானது ஆத்மாவிற்கு சட்டை போல உள்ளது. உயிராகிய ஜீவாத்மாவை அந்த உடலோடு சம்பந்தப்படுத்தும் நினைவு உனக்கு உள்ளதால் உன்னுடைய அஞ்ஞானத்தை (மயல்) விட்டுவிட்டு சீக்கிரம்(கடுக) கர்மயோகத்தைச் செய் என்று விசயனாகிய அர்ஜுனனைத் வித்தக பார்த்தசாரதி தேற்றினான்.

================ ஸாங்கிய யோகம் நிறைவுற்றது ===========

இவருடைய முகநூல் லிங்க் https://www.facebook.com/mannairvs

(Visited 52 times, 1 visits today)
4+
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close