ஆன்மிகம்செய்திகள்

பகவத் கீதை – ஏழாம் அத்யாயம் – ஞானயோகம் / ஞானவிக்ஞானயோகம்

யோக விளக்கம்: 

பரமாத்மாவின் நிர்குண, சகுண நிலைகளின் தத்துவத்தையும், பிரபாவத்தையும், பெருமைகள், லீலைகள் முதலியவற்றைப் பேசுவது ஞானவிக்ஞான யோகம். பகவானின் ஸ்வரூபங்களும் அதனை யாரால் அறிய முடியும் அவர்களது தகுதிகள் என்ன? அதற்குண்டான சாதனைகள் என்னென்ன போன்றவற்றை விளக்கியிருக்கும் அத்யாயம் இது. எல்லா உலங்களும் தன்னுடைய வடிவம் என்கிறார் பகவான். அறிவிலிகள் இறைவழிபாடு செய்யமாட்டார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார்.


“பார்த்தா! நீ என்னிடம் பற்றுள்ள மனதை உடையவன். என்னையே ஆதாரமாகப் பற்றி யோகாப்யாசன் செய்ய முயல்கிறாய். என்னைச் சந்தேகமில்லாமல் சம்பூர்ணமாக அறியும் ஞானம் பற்றிச் சொல்கிறேன் கேள். எவற்றையறிந்தால் என்னிடமிருந்து மீண்டும் அறியவேண்டியது ஒன்றுமில்லையோ அந்த ஞானத்தை மிச்சமின்றி சொல்கிறேன். கேள்.

மனிதர்களில் ஆயிரக்கணக்கில் ஒருவர்தான் சித்தி அடைவதற்கு முயல்கிறான். அப்படி முயன்று சித்தியடைந்த ஆயிரத்தில் ஒருவன்தான் என்னை உள்ளபடி அறிகிறான். என்னுடைய இயற்கையானது பூமி, ஜலம், ஆகாயம், அக்னி, காற்று, மனம், புத்தி, அகங்காரம் என்று எட்டாகப் பிரிந்திருக்கிறது. இவ்வுலகம் எதனால் தாங்கப்பட்டிருக்கிறதோ அதைக் காட்டிலும் ஜீவஸ்வரூபமான என்னுடைய வேறொருப் பிரகிருதியை நீ தெரிந்துகொள்.

பஞ்சபூதங்கள் உள்பட எல்லாமுமே ஆக்கம் மற்றும் அழிவு ஆகிய இரண்டு விதமான தன்மையைக் காரணமாகக்கொண்டிருக்கின்றன என்பதை அறிந்துகொள். நான் உற்பத்திக்கு காரணமாக இருப்பது போல ஒடுங்குவதற்கும் காரணமாக இருக்கிறேன் என்பதை அறி. என்னைக் காட்டிலும் சிறந்தது இங்கே வேறொன்றுமில்லை.

ஒரு நூலில் மணிகள் எப்படிக் கோர்க்கப்பட்டிருக்கின்றனவோ அதுபல என்னிடத்தில்தான் இவையெல்லாம் கோர்க்கப்பட்டிருக்கின்றன. குந்தீபுத்திர! ஜலத்தில் ரசம் நான். சூரியசந்திரர்களின் ஒளி நான். எல்லா வேதங்களிலும் பிரணவம் நான். ஆகாயத்தில் ஏற்படும் ஒலிகளில் இருக்கிறேன். மனிதர்களிடத்தில் பௌருஷம் நானே. பூமியில் பரிசுத்தமான கந்தமாகவும் அக்னியினிடத்தில் ஒளியாகவும் எல்லாப் பிராணிகளின் உயிராகவும் தபம் செய்யும் தபஸ்வீக்களின் தவமாகவும் இருக்கிறேன். எல்லாப் பிராணிகளுக்கும் வித்து நான்.

புத்திசாலிகளின் புத்தியாகவும் தேஜஸ்வீக்களின் தேஜஸாகவும் இருக்கிறேன். சத்வரஜோதமோ குணங்களினால் உண்டானவை அனைத்தும் என்னிடமிருந்தே உண்டானவை என்று அறி. ஆனால் நான் அவைகளில் இல்லை. குணமயமான இவ்வுலகிலே இருப்பவர்கள் என்னை அறிவதில்லை. என்னால் ஏற்பட்டுத்தப்ப்பட்ட இந்த மாயை யாராலும் தாண்டமுடியாதது. என்னை யார் சரணடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையிலிருந்து விடுபடுகிறார்கள். பாவிகள் மூடர்கள் ஆத்மஞானமிருந்தாலும் மாயையினால் கவர்ப்பட்டவர்கள் அசுர சுபாவமுள்ள கீழானவர்கள் என்னை சரணடைவதில்லை.

அர்ஜுனா! வியாதிகளினால் பீடிக்கப்பட்டு சொஸ்தமாகத் துடிப்பவன், என் ஸ்வரூபத்தையே அறிய விரும்பி எப்போதும் என்னை நினைப்பவன், ஐஸ்வரியத்தில் ஆசையுள்ளவன், பிரம்மஞானி இந்த நான்கு விதமான மனிதர்கள் என்னை எப்போதும் பூஜிக்கிறார்கள். பஜிக்கிறார்கள்.

பஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் பரப்த்யதே

வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:

இவர்களுள் என்னிடம் பற்றுதலும் பக்தியுமுள்ள ஞானியே சிறந்தவன். அந்த ஞானிக்கு நான் பிரியமானவன். எனக்கு அவன் பிரியன். அநேக ஜென்மங்கள் எடுத்துக் கடந்த பிறகு அனைத்தும் வாஸுதேவ ஸ்வரூபம் என்று எண்ணுபவன் என்னையே அடைகிறான். அந்த மஹாபுருஷன் கிடைபதற்கு அரியவன்.

ஒரு பக்தனானவன் என்னுடைய எந்த சரீரத்தை ஸ்ரத்தையுடன் பூஜிக்க விரும்புகிறானோ அந்தந்த சரீரத்தில் அவனுக்கு ஸ்ரத்தை ஸ்திரமாக ஏற்படும்படி செய்கிறேன். அவன் அந்த ஸ்ரத்தையோடு அந்த தேவதையை ஆராதனம் செய்கிறான். பின்னர் வேண்டிய வரங்களை அத்தேவதையிடமிருந்து பெறுகிறான். அவையெல்லாம் நிரந்தரமானவையல்ல. பிற தேவதைகளை ஆராதிப்பவர்கள் பிற தேவதைகளை அடைகிறார்கள். ஆனால் என்னுடைய பக்தர்கள் என்னையே அடைகிறார்கள்.

அழிவில்லாத சர்வ உத்தமுமான என்னுடைய ஸ்வரூபத்தை அறியாதவர்கள் நான் கண்களுக்குப் புலப்படாதவன் என்றும் இப்போது ஜன்மம் எடுத்து பிரகாசமாக இருக்கிறேன் என்றும் நினைக்கிறார்கள். யோகமாயையினால் மறைக்கப்பட்டிருக்கும் என்னை எல்லோரும் அறிந்துவிடமுடியாது.

அர்ஜுனா! நான் சென்றது, நிகழ்வது, எதிர்காலத்தில் நிகழப்போவது என்ற அனைத்தையும் அறிவேன். என்னை ஒருவனும் அறியான். ஆசாபாசங்களினால் உண்டான துவந்தங்களினால் உண்டான மோகத்தினால் எல்லா பிராணிகளும் பிறக்கும்போதே புத்தியில் மயக்க நிலையில் இருக்கின்றன. அதில் புண்ணிய கர்மாக்களை உடையவர்கள் பாபம் அழியப்பட்டு சுகதுக்க த்வந்தங்களிலிருந்து விடுபட்டு கடுமையாகவும் உறுதியாகவும் விரதத்தோடு என்னையே பூஜிக்கிறார்கள். பஜிக்கிறார்கள். எவர்கள் என்னை அடைந்து மூப்பு சாவு இவ்விரண்டலிருந்தும் விடுபட முயல்கிறார்களோ அவர்கள் பிரம்மத்தையும் சகல பிரகிருதிகளையும் கர்மத்தையும் அறிகிறார்கள்.

அழிவுள்ள வஸ்துவான அதிபூதம், அதிதெய்வம் மற்றும் இந்தத் தேகத்தில் அந்தர்யாமியாக இருக்கும் அதியக்ஞனாகவும் இருக்கிறேன் என்று அறிந்து மரணகாலத்திலும் என்னையே நினைத்து உயிரை விடபவன் என்னையே சேர்கிறான் என்பதைத் தெரிந்துகொள்”

ஒரு பாசுரம்:

நீராய்  நிலனாய் தீயாய்க் காலாய் நெடுவானாய்,

சீரார் சுடர்க்க ளிரண்டாய்ச் சிவனாய் அயனாய்,

கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்

வாராய், ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.

–    திருவாய்மொழி 6 – 9 – 1 – ஸ்ரீநம்மாழ்வார்

பொருள்:

 நீராகவும் நிலமாகவும் தீயாகவும் காற்றாகவும் நெடுவானாகவும் என்று ஐம்பூதங்களாகவும் சிவனாகவும் பிரம்மனாகவும் எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக இருப்பவனே! கொடியவனான அடியவனுக்காகவும் கூரான சக்கரத்தையும் வெண்சங்கையும் ஏந்தி இம்மண்ணில் எழுந்தருளுவாய்! இப்படியொரு காட்சியைக் கண்டு இம்மண்ணும் விண்ணும் மகிழட்டுமே! ஆத்மஞானியான பக்தனுக்காக எல்லா வஸ்துக்களிலும் அந்தர்யாமியாக இருக்கும் பரந்தாமன் காட்சி தருவான் என்பதைக் காட்டும் பாடலாக இது இங்கே எடுத்துக்காட்டப்பட்டது!

ஸ்வாமி தேசிகனின் கீதார்த்தசங்கிரகம் – ஞான விக்ஞான யோக சாரப் பாசுரம்

தான் நின்ற உண்மையைத் தன் தனி மாயை மறைத்தமையும்
தானன்றி மாயை தனித் தவிர்ப்பான் விரகற்றமையும்
மேனின்ற பத்தர்கள் நால்வரில் ஞானி தன் மேன்மைகளும்
தேன் நின்ற செங்க ழ லான் தெளிவித்தணன் பார்த்தனுக்கே

பொருள்: 

தேன் போன்ற செம்மையான தாமரைப் பாதங்களுடைய சர்வேஸ்வரன் பார்த்தனிடம் தான் எல்லா வஸ்துக்களைக் காட்டிலும் இவ்வுலகில் தனித்து நின்ற உண்மையை தனது மாயையினால் மறைத்து நிற்பதையும் தன்னைத் தவிர இம்மாயையை தவிர்ப்பதற்கு உபாயம் ஒன்றுமில்லை என்பதையும் பக்தர்களில் நான்கு வகையினரான ஆர்த்தன் (இழந்த செல்வத்தை அடைய விரும்புவன்), அர்த்தார்த்தி (புதிதாக ஐஸ்வர்யம் பெற விரும்புபவன்), ஜிஜ்ஞாஸு (ப்ரகிருதி சம்பந்தமில்லாமல் பரிசுத்த ஆத்மஸ்வரூபத்தை அடைய நினைப்பவன்), ஜ்ஞாதி (பகவானின் அடிமையாக இருத்தலையே இயல்பாகக் கொண்டவன்) ஆகியோரின் மேன்மைகளையும் பெருமைகளையும் பார்த்தனுக்கு தெளிவாக உபதேசித்தான்.

============ ஞானவிக்ஞான யோகம் நிறைவடைந்தது ==========

இவருடைய முகநூல் லிங்க் https://www.facebook.com/mannairvs

(Visited 24 times, 1 visits today)
2+
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close