ஆன்மிகம்செய்திகள்

பகவத் கீதை – பதினான்காம் அத்யாயம் – குணத்ரய விபாக யோகம்

யோக விளக்கம்

சத்வ, ரஜஸ், தமோ குணங்களைப் பற்றியும் அவை எப்படியெல்லாம் ஜீவாத்மாவைக் கட்டுப்படுத்துகிறது என்பது பற்றியும் அர்ஜுனனுக்கு பரமாத்மா கிருஷ்ணன் எடுத்துரைக்கிறார். இந்த முக்குணங்களைக் கடந்துவிட்டால் பரமாத்மாவை அடைந்துவிடலாம். அப்படி அடைந்த மனிதனின் இலக்கணங்கள் எவை என்பதையும் விளக்குகிறார்.


“அர்ஜுனா! பரம்பொருளையே சிந்தித்துக்கொண்டிருக்கும் எல்லா முனிவர்களும் சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு பரமாத்மாவை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் அறிந்த ஞானமே ஞானங்களில் சிறந்தது. அதைப் பற்றி மீண்டும் சொல்கிறேன் கேள்”

அர்ஜுனன் ஆர்வம் மிகுந்தவனாக ஸ்ரீகிருஷ்ணரைப் பார்க்கிறான்.

“இந்த ஞானத்தை அடைந்துவிட்டால் இவ்வுலகம் படைக்கப்படும் போது மீண்டும் பிறப்பதில்லை, பிரளயத்தில் அழியும்போது துன்புறுவதில்லை. அர்ஜுனா! மஹத் பிரம்மம் எனப்படும் மூலப்பிரகிருதியான யோநியே அகில சராசரங்களுக்கும் பிறப்பிடம். அந்த பிறப்பிடத்தில் சேதனம் என்னும் உயிரினங்களின் கருவை வைக்கிறேன். அந்த ஜடசேதன சம்பந்தத்திலிருந்து உயிரினங்களின் உற்பத்தி ஏற்படுகிறது.

பலவிதமான உருவங்களுடன் உடல்களுடன் பிறக்கும் உயிரினங்களின் மூலப் பிரகிருதியான யோநியே பிறப்பிடம் – கருத்தரிக்கும் தாய். நான் விதையளிக்கும் தந்தை. சத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம் என்ற மூன்று குணங்களும் அழிவற்றதான ஜீவாத்மாவைக் கட்டிப்போடுகின்றன. உலகில் உள்ள எல்லா ஜடப்பொருள்கள் கூட இம்மூன்றின் விரிவாகத்தான் இருக்கிறது. இம்மூன்றில் சத்வ குணம் உயர்வானது. ஒளி தரக்கூடியது. அது இன்பம் மற்றும் ஞானத்தில் கொண்ட அபிமானத்தினால் கட்டுகிறது.

இந்த ரஜோ குணம் ஆசை பற்று ஆகியவற்றினால் உண்டாகி ஜீவாத்மாவை கர்மங்கள் மற்றும் அதன் பயன்களினால் கட்டிப்போடுகிறது. தமோ குணம் அஞஞான வடிவமானது. வீண் செயல்கள், சோம்பல், தூக்கம் ஆகியவற்றால் கட்டிப்போடுகிறது.

இப்படித் தெரிந்துகொள்! சத்வம் சுகத்தில் ஈடுபடுத்தும். ரஜோ செயலில் ஈடுபடுத்தும். தமோ ஞானத்தை மறைத்து வீணான செயல்களில் கொண்டு ஒருவனைத் தள்ளுகிறது.

அர்ஜுனா! ஒருவனுக்கு ரஜோ குணம் மேலோங்கும்போது அது சத்வத்தையும் தமோவையும் அடக்கிவிடுகிறது. இதுபோலவே தமோவும் சத்வ குணமும் மேலோங்கும் போது இன்னபிற இரண்டு குணங்களையும் அடக்கிவிடுகிறது.

எப்பொழுது ஒருவனுடைய உள்ளத்திலும் உடலிலும் புலன்களிலும் சைதன்யம் என்னும் ஒளியும் விவேகமும் உண்டாகின்றதோ அப்போது அங்கே சத்வம் மேலோங்கிவிட்டது என்பதை அறிந்துகொள். ரஜோ குணம் அதிகமாகும் போது அவன் பேராசை, லோகாதய கர்மங்களில் அதீத ஈடுபாடு, தன்னலத்தோடு எல்லாக் கர்மங்களையும் செய்தல், அமைதியைத் தொலைத்துவிட்டு உலகியல் பொருட்களை நுகர்வதில் பேராவல் ஆகியவை ஏற்படும். எப்போது பார்த்தாலும் தூக்கம், கவனமில்லாமல் செயல்களில் ஈடுபடுதல், கடமையில் ஈடுபாடின்மை ஆகியவற்றால் புலன்களில் ஒளியின்மை ஏற்பட்டால் அங்கே தமோ குணம் மேலோங்கிவிட்டது என்பதை அறிந்துகொள்.

சத்வ குணத்தோடு இறக்கும் ஒருவன் ஸ்வர்க்க லோகம் சென்றடைகிறான். ரஜோ குணம் மேலோங்கி இறப்பவன் மீண்டும் மனிதர்களிடையே பிறக்கிறான். தமோவில் உயிரை விடுபவன் அறிவில்லாத புழு பூச்சி விலங்கி ஆகிய பிறவிகளில் பிறக்கிறான்.

இன்னும் தெளிவாகச் சொல்கிறேன் கேள். சத்வ குணச் செயல்களின் பலன் சாத்வீகமானது. அதாவது சுகம் ஞானம் வைராக்கியம் ஆகியவை அடையப்பெறுவாய். அது தூய்மையானது. ராஜஸமான செய்லகள் உனக்கு எப்போதும் துன்பத்தைக் கொடுக்கிறது. தாமஸம் அறியாமையின் பயன். ஆகையால் சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது. ரஜோ குணத்திலிருந்து பேராசை உண்டாகிறது. தமோவிலிருந்து கவனமின்மையும் மதிமயக்கமும் உண்டாகின்றன

இதைக் கண்ணுறும் ஒருவன் எப்போது இந்த முக்குணங்களைத் தவிர்த்து வேறு எவனையும் கர்த்தா என்று பார்ப்பதில்லையோ இக்குணங்களுக்கு அப்பாற்பட்ட சத்சித் ஆனந்தமயமான பிரம்ம ஸ்வரூபம் என்று என்னைப் பார்க்கிறானோ அவன் இறுதியில் என்னை அடைகிஉறான். இப்படி இருப்பவன் உடல் தோன்றக் காரணமான இம்மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு இறப்பு மூப்பு போன்றவைகளிலிருந்து விடுபட்டு பரமானந்தம் அடைகிறான். “

அர்ஜுனன் கிருஷ்ண பரமாத்மா சொன்ன மனிதனின் முக்குணங்களைப் பற்றிக் கேட்டவுடன் அவைகளைக் கடந்து பேரின்ப வாழ்வு பெறுபவர்களை எப்படி அடையாளப்படுத்துவது என்ற சந்தேகம் எழுந்தது. தலையைத் தூக்கி அண்ணாந்து பார்த்து பரமாத்மாவைக் கேட்கிறான்.

“சத்வரஜோதமோ குணங்களைக் கடந்தவன் எந்த இலக்கணங்களோடு எவ்வித நடத்தை உடையவனாக இருக்கிறான்? அவன் எப்படி இந்த மூன்று குணங்களையும் கடக்கிறான்? அருள வேண்டும் ப்ரபோ” என்று கைக்கூப்பி தொழுது கேட்கிறான்.

சிரிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

“அர்ஜுனா! ஒருவன் குண விசேஷங்களின் பலன்களுக்குள் செல்லாமல் சாட்சி போல இருந்துவிட்டு அந்த குணங்களினால் அசைக்கப்படாமல் அதாவது சத்வ குணத்தின் வெளிப்பாடான பிரகாச சைதன்யத்தினை வரும்போது வெறுத்தும் விலகும் போது மீண்டும் அதை அடைய விருப்பமும் கொள்ளமல் இருப்பானோ அதே போலவே ரஜோ குணத்தின் செயல் சம்பந்தப்பட்ட ஊக்கத்திற்கும் தமோ குணத்தின் மோகத்திடமும் அடிபணியாமல் குணங்கள் குணங்களினால் இயக்கப்படுகின்றன என்று விட்டுவிட்டு சத்சித் ஆனந்தமயமான பரமாத்மாவிடம் நிலைக்குத்தி அதைவிட்டு விலகாமல் இருந்து ஆத்ம ஸ்வரூபத்தில் இருந்துகொண்டு, இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதி, மண்ணையும் கல்லையும் பொன்னையும் சமமாக மதித்து, இகழ்ச்சியும் புகழ்ச்சியும் ஒன்றென்று, வேண்டியது வேண்டாதது இரண்டும் ஒன்று என்றுக் கருதி, பெருமையையும் சிறுமையையும் சமமாக எண்ணி, நண்பர் பகைவர் இருவரிடத்திலும் சம நோக்கு கொண்டு செய்யும் அனைத்து செயல்களிலும் “நான்” செய்கிறேன் என்ற மனப்பான்மையை விட்டவன் முக்குணங்களைக் கடந்தவன்.

மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ: !

ஸர்வாரம்பபரித்யாகீ குணாதீத: ஸ உஸ்யதே !!

எதிலும் நாட்டமில்லாமல் பக்தியோகத்தில் நிலைத்து நின்று என்னை வழிபடுகிறவன் இந்த மூன்று குணங்களையும் கடந்து சத்சித் ஆனந்தமயமான பரப்பிரம்மத்தை அடையும் தகுதியை பெற்றுவிடுகிறான்.

ஏன் தெரியுமா?”

சிறிது நேரம் மௌனம் காத்த ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனின் முழு கவனமும் தன் மேல் இருப்பதை உறுதிசெய்துகொண்டு தொடர்ந்தார்.

“பரப்பிரம்மம் அழிவற்றது. அதன் அமரத்துவத்துக்கும் தர்மத்துக்கும் நிலையான சீரான ஆனந்தத்துக்கும் உறைவிடம் நானேயாக இருக்கிறேன்”

*சத்வ, ரஜ, தமோ குணங்களைப் பற்றியது.

ஒரு பாசுரம்:

திருமாலிருஞ்சோலைமலையே திருப்பாற் கடலே என்தலையே
திருமால்வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அருமா மாயத் தெனதுயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே
-திருவாய்மொழி – 10 – 7 – 8 – ஸ்ரீநம்மாழ்வார்

பொருள்:

முக்குணங்களை விட்டொழித்தவர்களின் மேனியையே பகவான் திவ்யதேசமாக்க் கொள்கிறான் என்ற கருத்தில் திருமாலிருஞ்சோலைமலையே திருப்பாற் கடலாகவும் எனது தலையே வைகுந்தமாகவும் உடலே திருவேங்கடமாகவும் கொள்கிறான். திவ்யதேசங்களில் எம்பெருமான் இருப்பது போலவே இவ்வுடல்கள் தாங்கும் ஆத்மாவுடன் ஒன்ற்றக் கலக்கிறான். அந்த உயிரின் மனம் வாக்கு கருமம் இம்மூன்றையும் ஒன்றாக்கி ஒரு நொடி கூட ஊழிமுதல்வன் பிரியாதிருக்கிறான்.

ஸ்வாமி தேசிகனின் கீதார்த்தசங்கிரகம் குணத்ரய விபாக யோகச் சார பாசுரம்:

முக்குணமே உயிர் முற்றவும் கட்டிட மூண்டமையும்
முக்குணமே அனைத்தும் வினை கொள்ள முயன்றமையும்
முக்குண மாயை கடத்தலும் முக்கதி தந்தளிப்பும்
முக்குணம் அற்ற பிரான் மொழிந்தனன் முடியோன் தனக்கே

பொருள்:

முக்குணமும் இல்லாத பிரான் கிரீடியான முடியோன் அர்ஜுனனுக்கு மூன்று குணங்களும் ஜீவாத்மாக்களாகிய எல்லோரையும் அகப்பட செய்வதற்கு முன்றதையும் அந்த மூன்று குணங்களுமே நம்முடைய செய்கை எல்லாவற்றையும் தம்மால் செய்யப்படுவபவனாகக் கொள்ள முயற்சி கொண்டமையும் முக்குண மாயைகளை நீக்கிக்கொள்வதையும் ஐஸ்வர்யம் கைவல்யம் மோக்ஷம் ஆகிய முக்கதிகளையும் கொடுத்துக் காக்கும் விதத்தையும் உபதேசித்தான்.

===== குணத்ரய விபாக யோகம் நிறைவடைந்தது =====

இவருடைய முகநூல் லிங்க் https://www.facebook.com/mannairvs

(Visited 35 times, 1 visits today)
1+
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close