ஆன்மிகம்

பகவத் கீதை – பதினைந்தாம் அத்யாயம் – புருஷோத்தம யோகம்

யோக விளக்கம்: 

புருஷோத்தமனும் சர்வ வல்லமை படைத்து அனைவருக்குள்ளும் அந்தர்யாமியாக இருப்பவனும் எங்கும் நிறைந்தவருமான பகவானுடைய குணங்கள், பிரபாவங்கள், ஸ்வரூபம் ஆகியவை விளக்கப்படுகின்றன. புருஷோத்தனமனை அறிவதின் சிறப்பும் அவரை எப்படி அடையலாம் என்பதையும் இந்த அத்யாயம் காட்டுகிறது.


“அர்ஜுனா! அரச மரத்தை சம்சாரத்திற்கு உவமானமாக வைத்து நான் கூறுவதைக் கேள். இந்த அரசமரத்திற்கு பரமேஸ்வரனான ஆதிபுருஷனான நான்தான் வேர். ஆனால் நான் பரமபதத்தில் இருப்பதால் இதன் வேர் மேலே இருக்கிறது. பின்னர் நான்முகனைப் படைத்தேன். இம்மரத்தின் தண்டு அல்லது நடுமரம் அவர்தான். கிளைகள் கீழே இருக்கின்றன. இந்த சம்சார மரத்தின் இலைகளே வேதங்கள். இப்படியிருக்கும் இந்த அரசமரத்தை யார் வேருடன் சேர்த்து தத்துவரீதியாக அறிகிறாரோ அவரே வேதத்தின் உட்கருத்தை அறிந்தவர் ஆகிறார். 

இந்த சம்சார அரசமத்தின் கிளைகள் சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குண நீரினால் வளர்கிறது. புலன்களால் நுகரக்கூடிய பொருள்களால் தளிர்விடுகிறது. தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் என்று பிறவிகள் உண்டாகிறது. கீழும் மேலுமாக பரவியிருக்கிறது. மனிதப்பிறவியில் கர்மாக்களுக்கு ஏற்றவாறு அகந்தை மமதை வாசனை உருவாகி கீழும் மேலுமாக பரந்துவிரிந்திருக்கின்றன. 

இந்த சம்சார விருக்ஷத்தின் ஸ்வரூபமானது அந்த விருக்ஷத்திலிருக்கும் ஜனங்களால் அறியப்படுவதில்லை. அகங்காரம் மமதை போன்ற உறுதியான வேர்கள் கொண்ட இந்த சம்சார விருக்ஷத்தினை வைராக்கியம் என்ற கோடரியினால் வெட்டி எரிந்துவிட்டு திரும்பி வரமுடியாதவாறு பரமபத ரூபனான பரமேஸ்வரனைத் தேடவேண்டும். இந்த சம்சார மரத்தின் தொடர்ச்சி பரமேஸ்வரனான நாராயணனிடமிருந்தே விருத்தியடைகிறது. அவனை சரணடைகிறேன் என்ற உறுதியோடு தியானிக்கவேண்டும். 

தற்பெருமை இல்லாதார்கள், மோகத்தை வென்றவர்கள், பற்றற்றவர்கள், பரமாத்ம ஸ்வரூபத்தில் ஸ்திரபுத்தியுடையவர்கள், ஆசையை அறுத்தவர்கள், இன்ப துன்பங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்ட ஞானிகள் அழிவற்ற பரமபதத்தை அடைகிறார்கள். அப்படி அந்த பரமபதத்தை அடைபவர்கள் மீண்டும் சம்சார பந்தத்துக்குள் வருவதில்லை. அந்தப் பரமபதம் ஸ்வயம்பிரகாசமானது. அங்கு சூரியன், சந்திரன் மற்றும் அக்னி ஆகியோர் ஒளி தருவதில்லை. அது என்னுடைய மேலான ஸ்தானம் ஆகும். 

உன் உடலில் இருக்கும் ஜீவாத்மா என்னுடைய அம்சம்தான். அதுதான் பிரகிருதியில் உள்ள மனத்தையும் ஐந்து புலன்களையும் தன்வசம் ஈர்க்கிறது. காற்றானது எந்தவிதமான மணமுள்ள இடத்தில் இருக்கிறதோ அதே மணத்தை இழுத்துக்கொண்டு செல்கிறது. அதுபோல ஜீவாத்மானவன் எந்த உடலை விட்டுக் கிளம்புகிறானோ அதிலிருக்கும் மனத்தோடு கூடிய புலன்களை எடுத்துக்கொண்டு அடையும் உடலை சேர்ந்துவிடுகிறான். 

உடலிலிருந்து கிளம்பும் போதும் உடலில் இருக்கும் போதும் கூட இந்த ஜீவனை அறிவிலிகள் அறிவதில்லை. விவேகமுள்ள ஞானக்கண் பெற்றவர்களே தத்துவமாக அறிகிறார்கள். இதயத்தில் உறையும் ஆத்மாவை யோகிகளாக இருந்தாலும் அவர்களும் முயற்சி செய்துதான் அறிந்துகொள்கிறார்கள். உள்ளத் தூய்மை இல்லாத அஞ்ஞானிகள் ஆத்மாவை அறிவதில்லை.

அர்ஜுனா! சூரியனிடத்தில் இருக்கும் ஒளியும் சந்திரனிடத்திலிருக்கும் ஒளியும் அக்னியினிடத்தில் இருக்கும் ஒளியும் என்னுடைய ஒளியே என்பதை தெரிந்துகொள். பூமியினுள் புகுந்து ஜீவராசிகள் அனைத்தையும் தாங்குகிறேன். அமுதைப் பொழியும் நிலவாக இருந்து அனைத்து பயிர்பச்சைகளையும் விருக்ஷங்களையும் போஷிக்கிறேன். எல்லா உயிர்களின் உள்ளிருந்தும் பக்ஷ்யம், போஜ்யம், லேஹ்யம், சோஷ்யம் என்ற நான்கு விதமான உணவுகளையும் ஜீரணம் செய்கிறேன். ஏனென்றால் நானே பிராண-அபான வாயுக்களுடன் அக்னியுமாகி ஜீவராசிகளின் உள்ளே உறைகிறேன். 

எல்லாப் பிராணிகளின் இருதயத்திலும் அந்தர்யாமியாக இருப்பவனும் நானே! என்னிடமிருந்தே நினைவும், சந்தேகங்களுக்குத் தெளிவும், அறிவும் ஏற்படுகிறது. வேதங்கள் அனைத்தினாலும் நானே அறியத்தக்கவன். வேதாந்தம் என்னால் செய்யப்பட்டது.. வேதங்களில் உட்கருத்தை அறிந்தவனும் நானே! 

இப்புவியில் அழிபவன் அழியாதவன் என்று இரண்டு வகையான புருஷர்கள் இருக்கிறார்கள். ஜீவராசிகளின் உடல் அனைத்தும் அழியக்கூடியது. அவர்களின் ஜீவாத்மா அழிவில்லாதது. க்ஷரப் பிரகிருதியாகிய உடலும் அக்ஷரப் பிரகிருதியான ஆத்மாவையும் அடக்கியாளும் தேவர் புருஷோத்தமர்.  அவர்தான் பரமேஸ்வரன். அவர்தான் எல்லோரையும் தாங்கிப்பிடிக்கிறார். நான் அழியக்கூடிய ஜடவர்க்கத்திலிருந்து அப்பாற்பட்டவன். அக்ஷரனான அதாவது அழியாத ஜீவாத்மாவைக் காட்டிலும் மேலானவன். ஆகையால் வேதத்தில் புருஷோத்தமன் என்று புகழப்பட்டுள்ளேன். 

யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம்!

ஸ ஸர்வ்வித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத!!

பரதகுலத் தோன்றலே! எவன் மதிமயக்கமில்லாமல் என்னை இவ்விதம் புருஷோத்தமன் என்று அறிகிறானோ அவன் எல்லாவிதமுமான வாசுதேவனான பரமேஸ்வரனான என்னையே தியானித்து வழிபடுகிறான். இப்படி ரகசியமாக மறைத்து போற்றத்தக்கதுமான இந்த சாஸ்திரம் உனக்கு என்னால் கூறப்பட்டது. இதை தத்துவார்த்தமாக தெரிந்துகொண்டவன் ஞானியாகி செய்யவேண்டிய காரியங்களை தவறாமல் செய்கிறான். 

ஒரு பாசுரம்:

உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே


-திருவாய்மொழி 1 – 1 – 1 – ஸ்ரீநம்மாழ்வார்

பொருள்:

உயர்வான பல சொல்லமுடியாத அளவுக்கு நலம் உடையவனாக இருக்கிறான். அவனைப் பற்றி அறிந்துகொள்வதற்காக ஞானமும் அருளியவன் அவன். அமரர்கள் ஞானிகள் யோகிகள் முக்தர்கள் ஆகியோர் போற்றும் அதிபதியும் அவன். அப்படிப்பட்ட புருஷோத்தமனின் சுடர் போன்ற அடிகளைத் தொழுது சரணடைந்து உயர்வு கொள் என் மனமே!

ஸ்வாமி தேசிகனின் கீதார்த்தசங்கிரகம் – புருஷோத்தம யோக சாரப் பாசுரம்

மூவெட்டிலும் அதின் மோகம் அடைந்த உயிர்களிலும்
நா வெட்டு எழுத்தோடு நல் வீடு நண்ணின நம்பரிலும்
மேவெட்டு வன் குண விண்ணோர் களினும் விசயனுக்குத்
தாவிட்டுலகு அளந்தான் தனை வேறு என்று சாற்றினனே

பொருள்

திரிவிக்கிரமனாய்த் தாவி உலகை அளந்தவன் விசயனுக்கு முவெட்டு இருபத்துநான்கு பிரகிருதியின் தத்துவங்களைக் காட்டிலும் அதில் மோகம் அடைந்த ஜீவர்களிலும் நாவினால் எட்டு எழுத்து அஷ்டாக்ஷரத்தை ஜெபித்து மோக்ஷத்தைப் பெற்ற உயர்ந்தவர்களைக் காட்டிலும் எட்டு வலிய குணங்களைக் கொண்ட ஜீவன் முக்தர்களைக் காட்டிலும் தான் வேறானவன் என்பதை உபதேசித்தான்.

===== புருஷோத்தம யோகம் நிறைவடைந்தது ====

இவருடைய முகநூல் லிங்க் https://www.facebook.com/mannairvs

(Visited 14 times, 2 visits today)
0
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close