ஆன்மிகம்செய்திகள்

பகவத் கீதை – பதினோராம் அத்யாயம் – விஸ்வரூபதர்சன யோகம்

யோக விளக்கம்:

அர்ஜுனனின் வேண்டுகோளுக்கிணங்க பகவான் அவனுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்தான். அவை பற்றிய வர்ணனைகளும் விஸ்வரூபத்தைப் பற்றியதும் அதைத் துதித்தபதாகவும் அமைகிறது இந்த அத்யாயம்.


“ஜனார்த்தனரே! உம்மால் எனக்கு அருள்புரியக் கூறப்பட்ட அத்யாத்மக் கருத்துகளடங்கிய உபதேசத்தால் அஞ்ஞானம் அகன்றது. பிராணிகளின் உற்பத்தியும் நாசத்தையும் தேவரீரடமிருந்து விஸ்தாரமாகக் கேட்டேன். அத்தகைய விபூதிகளைக் கொண்ட உமது சொரூபத்தைக் காண விரும்புகிறேன். அந்த ரூபமானது என்னால் பார்க்க அருகதையிருந்தால் அதை நீர் எனக்குக் காண்பியும்”

அர்ஜுனன் இப்படிக் கேட்டுக்கொண்டதும் ஸ்ரீகிருஷ்ண பகவான் ஒரு புன்னகையை உதிர்த்தார். அவன் மீது கருணையுடன் பேச ஆரம்பித்தார்.

“பார்த்தா! நீ உன்னுடைய இந்தக் கண்ணால் விஸ்வரூபியான என்னைக் காண்பதற்கு முடியாது. உனக்கு நான் இப்போது ஞானஸ்வரூபமான கண்களைக் கொடுக்கிறேன். என்னுடைய யோகசக்தியை இப்போது பார்”

படைகள் சூழ்ந்து நிற்கும் குருக்ஷேத்திரம். ஸ்ரீகிருஷ்ணர் தரையில் நின்றிருந்தர் மளமளவென்று கண்ணிமைக்கும் நேரத்தில் வளர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்குமாய் நின்றார். ஆயிரக்கணக்கில் தலைகள், கண்கள், கரங்கள் என்று அண்டசராசரமும் அவரால் நிறைந்துவிட்டது. சுற்றி நிற்கும் ஒருவராலும் அவர்களுடைய ஊனக்கண்களால் இந்தக் காட்சியைக் காண முடியாது.

“பார்த்தா! பலவிதமாகவும் பலதிவ்ய சொரூபங்களும் பற்பல வண்ணங்கள் பலப்பல வடிவங்கள் என்று நூறாகவும் ஆயிரமாகவும் இருக்கும் இந்த ரூபத்தைப் பார்! ஆதித்யர்களையும் வஸுக்களையும் ருத்ரர்களையும் அஸ்வினி தேவதைகளையும் மருத்துக்களையும் என் தேகத்தில் பார்! இந்த உலகமனைத்திலும் நிறைந்திருக்கும் வஸ்துக்கள் அனைத்தும் என்னில் நிலைபெற்றிருப்பதைப் பார்!” என்றார்.

மஹாயோகங்களுக்கு ஈஸ்வரரான ஸ்ரீகிருஷ்ணர் அப்போது அநேக முகங்களைத் தாங்கினார். அதில் ஆயிரக்கணக்கில் கண்கள் இருந்தது. மேனியெங்கும் திவ்யாபரணங்கள் பூட்டியிருந்தார். கரங்களிலெல்லாம் ஆயுதங்களைத் தாங்கியிருந்தார். கழுத்துகளில் திவ்ய மாலைகள் அலங்கரித்தன. திவ்யமான வாசனை பொருந்திய சந்தனம் பூசியதால் காற்றில் சுகந்தமான மணம் படர்ந்தது. பிரகாசமாக முடிவில்லாமல் எல்லா திசைகளிலும் முகங்கள் கொண்டு தன்னுடைய ஈஸ்வர ஸ்வரூபத்தை அர்ஜுனனுக்குக் காட்டினார்.

ஆயிரம் சூரியர்கள் வானத்தில் தோன்றியது போன்ற காந்தியுடன் நின்றார் ஸ்ரீகிருஷ்ணர். அப்போது அர்ஜுனனின் கண்ணுக்கு பலவிதமான பிரபஞ்சங்களும் தேவர்களின் தேவரான கிருஷ்ண பரமாத்மாவின் சரீரத்தில் நிலைபெற்றிருப்பதைப் பார்த்தான். கண்களில் நீர் சொரிந்தான். மேனி நடுங்கியது. உள்ளம் புளகாங்கிதம் அடைந்தது. கையிரண்டினையும் தலைக்கு மேலே தூக்கி குவித்துக்கொண்டு பரமாத்மாவை பிரார்த்தித்தான்.

“தேவரீர்! உம்முடைய தேகத்தில் பிரம்மாவையு, ஈஸ்வரரையும், எல்லா ரிஷிகளையும் எல்லாவிதமான சர்ப்பங்களையும் காண்கிறேன். பெரும் சிறகைப் போல விரிந்திருக்கும் கைகள், வரிசையாய் வயிறுகள், முகங்கள் அதில் ரெண்டிரெண்டாக இருக்கும் கண்கள் கொண்ட உம்மை எல்லா இடத்திலும் பார்க்கிறேன். உம்முடைய ஆதி எது மத்தி எது அந்தம் எது என்பதை என்னால் நிர்ணயிக்கமுடியவில்லை. கிரீடம், கதை, சக்ரம் இவைகளை தாங்கியிருக்கும் தேஜோன்மயமாக இருக்கும் உம்மை பார்ப்பதற்கு முடியாத அளவிற்கு சூரிய நெருப்புக்கு இணையான காந்தியுடையவராக நிற்கும் உம்மை நாற்புறங்களிலிருந்தும் பார்க்கிறேன்.

உபநிஷத்துகள் சொல்லியிருக்கும் அழிவில்லாத மிகச்சிறந்த வஸ்து நீர். நீரே இந்த உலகத்துக்கு ஆதாரம். தர்மங்களை நீரே பாதுகாக்கிறீர். முடிவற்ற வீர்யமுள்ள முடிவில்லாத கைகளையுடவர் நீர். சூரிய சந்திரர்களை கண்களாக உடையவராக இருக்கிறீர். ஜ்வலிக்கின்ற அக்னி முகமாக இருக்கிறது. உம்முடைய தேஜஸில் இவ்வுலகமே தபிக்கிறது. இந்த பூமிக்கும் அந்த ஆகாயத்துக்குமான இடைவெளியை நீர் ஒருவரே நிரப்புகிறீர். இந்த உருவத்தைக் கண்டு மூவுலகங்களும் பயத்தை அடைகின்றன. தேவகணங்கள் உம்மைச் சரணடைகின்றன. சிலர் உம் காலில் வந்து விழுந்து துதிக்கிறார்கள். மஹரிஷிகள் சித்தர்கள் கூட்டம் மங்களம் உண்டாகட்டும் என்று மந்திரம் ஜெபிக்கிறார்கள்.

ருத்ரர்கள், ஆதித்தியர்கள், வஸுக்கள், சாத்யர்கள், விஸ்வேதேவர்கள், அஸ்வினி தேவதைகள், மருத்ஹ்டுக்கள், பித்ருதேவதைகள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அஸுரர்கள், சித்தர்கள் ஆகியோரின் கூட்டங்கள் உம்மை அதிசயமாகப் பார்க்கிறார்கள். உம்முடைய இந்த விஸ்வரூபத்தைப் பார்த்து உலகங்கள் அனைத்தும் பயமடைந்திருக்கின்றன. நானும் பயப்படுகிறேன்.

திருதராஷ்டிர புத்திரர்களும் பீஷ்மரும் துரோணரும் கர்ணனும் அரசர்களுடைய கூட்டங்களும் நம்மைச் சேர்ந்த யுத்த வீரர்களும் கோரைப்பற்களையுடைய மிகவும் குரூரமாகத் தெரியும் முகத்தினுள் செல்கிறார்கள். சிலர் பற்களின் சந்துகளில் அகப்பட்டுக்கொண்டு பொடிப்பண்ணப்பட்ட தலையுடன் தெரிகிறார்கள். நதிகள் சமுத்திரத்தை நோக்கி ஓடுவதைப் போல அனைவரும் உம் முகத்தினை நோக்கி ஓடிவருகிறார்கள். ஜ்வலிக்கும் நெருப்பில் விழுந்து விட்டில் பூச்சிகள் அழிவதைப் போல நாசமடைகிறார்கள். எல்லா உலகங்களையும் ஜ்வலிக்கின்ற வாய்களால் விழுங்கிக்கொண்டே நான்கு பக்கத்திலும் அடிக்கடி நாவினால் நக்கிக்கொள்கிறீர்கள். விஷ்ணுவே! உம்முடைய உக்கிரமான கிரணங்கள் மூவுலகங்களையும் தவிக்கச் செய்கிறது. நீர் யார்? பிரசன்னமாகக்கடவீர்!! ஆதியாயிருக்கின்ற தேவரீரை நன்றாக தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்”

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அர்ஜுனன் நா தழுதழுக்க இப்படிப் பேசினான்.

“பார்த்தா! இவ்வுலகத்தை அழிக்கும் பொருட்டு நானே காலனாக இங்கே நிற்கிறேன். சத்ருக்களின் படைவீரர்கள் அனைவரும் நீ இல்லாமல் இருந்தாலும் உயிரோடு இருக்கமாட்டார்கள். ஆகையால் நீ எழுந்திரு! யுத்தம் செய்!! கீர்த்தியை அடை!! பகைவர்களை ஜெயித்து உன் ராஜ்ஜியத்தை அடைவாயாக!!

இந்த வீரர்கள் முன்பே என்னால் கொல்லப்பட்டுவிட்டார்கள். நீ என்னுடைய நிமித்தமாக செயல்படுகிறாய். அவ்வளவே! பீஷ்மர் துரோணர் ஜயத்ரதன் கர்ணன் இன்னும் மற்றுமுள்ள போர்வீரர்கள் அனைவரும் முன்பே என்னால் கொல்லப்பட்டார்கள். அவர்களை நீ இப்போது நாசம் செய். மனவருத்தமடையாதே! போர் புரி!! யுத்தத்தில் பகைவர்களை ஜெயிப்பாய்”

அர்ஜுனன் இப்போது கரங்களைக் குவித்துக்கொண்டான். நடுக்கமுற்று அவரை நமஸ்கரித்தான். நா தழுதழுக்க கூறலானான்.

“ஹ்ருஷீகேசரே! இவ்வுலகமானது உம்முடைய மகிமையைக் கீர்த்தனம் செய்வதால் சந்தோஷம்கொள்கிறது. ராக்ஷசர்கள் பயந்து அலறியடித்துக்கொண்டு திக்குகளை பார்த்து ஓடுகிறார்கள். சித்தர்களின் கூட்டங்கள் தேவரீரை நமஸ்கரிக்கிறது. பிரம்மதேவர்க்கு ஆதிகர்த்தாவான உம்மை ஏன் அவர்கள் வணங்காமல் இருப்பார்கள்? நீரே அழிவில்லாத ஜீவாத்மதத்துவம். சத் அசத் என்ற பிரகிருதி தத்துவமும் நீரே!

தேவதைகளுக்கெல்லாம் ஆதியான தேவதையும் புராணபுருஷருமாயிருக்கிறீர். நீரே இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம். அறிகிறவரும் அறியத்தக்க வஸ்துவும் உத்தம ஸ்தானமுமாகவும் இருக்கிறீர். இந்தப் பிரபஞ்சமே உம்மால் வியாபிக்கப்பட்டிருக்கிறது. வாயுவும் யமனும் அக்னியும் வருணனும் சந்திரனும் நான்முகனும் தேவரீர்தான். தேவரீர் பிதாமஹருக்கும் பிதாவாக இருக்கிறீர். தேவரீருக்கு ஆயிரம் தடவை நமஸ்காரம். நமஸ்காரம். மறுபடியும் மறுபடியும் நமஸ்காரம். நமஸ்காரம். முன்புறத்திலும் பின்புறத்திலும் உமக்கு நமஸ்காரம். நாற்புறங்களிலும் உமக்கு வந்தனம்.

ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம்

ஹே க்ருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி

அஜாநதா மஹிமாநம் தவேதம்

மயா ப்ரமாதாத்ப்ரணயேந வாபி!!

தேவரீரின் இவ்விதமான மகிமையை அறியாமல் என்னால் தவறுதலாகவோ நட்பினாலோ தோழரென்று எண்ணி அலக்ஷியமாக “ஓ! கிருஷ்ணா! ஓ! யாதவா! ஓ! நண்ப!!” என்று கூறியிருப்பேன். விளையாடும் பொழுதோ படுக்கும் பொழுதோ, உட்காரும்பொழுதோ, போஜனம் செய்யும் பொழுதோ தனித்திருக்கும் பொழுதோ எதிரிலோ பரிஹாசமாக என்னால் அவமதிக்கப்பட்டிருந்தால் என்னை மன்னியும். தேவரீர் இவ்வுலகத்திற்கு பிதாவாகவும் பூஜிக்கத்தக்கவராகவும் கௌரவமுள்ளவராகவும் இருக்கிறீர். மூவுலகிலும் உமக்குச் சமமாக எவருமில்லை.

புத்திரனுடைய குற்றத்தை தந்தை பொறுப்பது போல சிநேகிதனின் குற்றத்தை சிநேகிதன் பொறுப்பது போல பிரியரான தேவரீர் பிரியனான என் குற்றங்களைப் பொறுக்க வேண்டும் என்று நான் சரீரத்தை நன்கு தரையில் படியச்செய்து நமஸ்கரித்துக் கேட்டுக்கொள்கிறேன். முதலில் இந்த விஸ்வரூபத்தைக் கண்டு சந்தோஷமாயிருந்தேன். இப்போது பயத்தினால் கலங்குகிறேன். தேவரே! இதற்கு முன்னம் இருந்த ரூபத்தையே நீர் எனக்கு காண்பியும். முன்போலவே கிரீடத்தையும் கதாயுதத்தையும் சக்ராயுதத்தையும் கையில் ஏந்தியவராக காட்சியளியும். நான்கு கைகளுடன் கூடிய அந்த ரூபத்தையே காட்டும்.”

“அர்ஜுனா! மானிட உலகத்தில் உன்னைத் தவிர வேறு யாராலும் நான் இப்படிக் காணத்தக்கவன் அல்லேன். இப்படிப்பட்ட பயங்கரமான ரூபத்தைக் கண்டு நீ பயப்படவேண்டாம். துன்பம் உண்டாக வேண்டாம். மதிமயக்கம் வேண்டாம். நீ பயத்தை விட்டொழி. என்னுடைய அதே ரூபத்தை மறுபடியும் நன்கு பார்” என்றார் ஸ்ரீபகவான்.

கண்ணிமைக்கும் பொழுதில் மீண்டும் அவருடைய அந்த பழைய சொரூபத்தைக் காட்டினார்.

“தேவரீரின் இந்த சொரூபம் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது மனம் தெளிவடைந்தது” என்றான் அர்ஜுனன் முக மலர்ச்சியுடன்.

“நீ பார்த்த அந்த விஸ்வரூபம் ஒருவராலும் காணப்படாதது. காண முடியாதது. தேவர்களுக்கும் என்னுடைய இந்த ரூபமே விருப்பமாக இருக்கிறது.

“அர்ஜுன! இந்த மகிமையுள்ள நான் என்னிடத்திலே வைக்கப்பட்ட பக்தியானாலேயே அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் தகுந்தவன். எவன் என்னையே உத்தேசித்துக் கர்மங்களைச் செய்கிறானோ எவன் என்னையே கதியாக கொண்டவனோ என்னிடத்தைலேயே பக்தி செலுத்துபவனோ எல்லா விஷயங்களின் அபிமானங்களையும் விட்டவனோ எல்லாப் பிராணிகளிடத்திலும் துவேஷமற்று இருக்கிறானோ அவன் என்னையே அடைகிறான்” என்றார் ஸ்ரீகிருஷ்ணர் சாந்தமாக! இதழ்களில் ஒரு மந்தகாசப் புன்னகை தவழ்ந்தது.

ஒரு பாசுரம்:

உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்,
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்,
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில்வண்ண னேறக் கொலோ?,
உரைக்கின்ற உலகத் தீர்க்கென் சொல்லுகேன்
உரைக்கின்ற வென்கோ மளவொண் கொடிக்கே?

-திருவாய்மொழி – 5 – 6 – 8 – ஸ்ரீநம்மாழ்வார்

பொருள்: 

புராணங்களில் வேதங்களில் சொல்லப்படும் முக்கண்ணனான சிவபெருமானும் நானே என்றும் திசைக்கு ஒரு முகம் கொண்ட நான்முகனும் நானே என்றும் தேவர்களும் தேவர் தலைவனான இந்திரனும் நானே என்றும் முனிவர்களும் நானே என்றும் இவள் சொல்வது அந்த முகில்வண்ணனின் குணங்களாகும். அவனே இந்த அழகான கொடிபோன்ற இவள் மீது வந்து ஆவிர்ப்பவித்திருக்கிறான் என்பதையே நீங்கள் சொல் சொல் என்று கேட்பதற்கு பதிலுரைப்பேன்.

ஸ்வாமி தேசிகனின் கீதார்த்தசங்கிரகம் – விஸ்வரூப தரிசன யோகச் சாரப் பாசுரம்:

எல்லாம் தனக்குருவாய் இலங்கும் வகைத் தானுரைத்துச்
சொல்லால் அறிந்தது சோராமல் கண்டிட வேண்டும் என்ற
வில்லாளானுக்கு அன்று மெய்க்கண் கொடுத்திது வேறுமுண்டோ
நல்லார்கள் காண்பார் என்று நவின்றான் நாங்கள் நாயகனே

பொருள்:

  நம் நாயகனான கண்ண பரமாத்மா இந்த உலகத்திலுள்ள வஸ்துக்கள் எல்லாம் தனது விஸ்வரூப சரீரத்தில் பிரகாசிப்பதையும் தன்னுடைய உபதேசச் சொல்லால், சோர்வடையாமல் கண்டிட வேண்டும் என்ற ஆர்வமுள்ள வில்லாளனான அர்ஜுனனுக்கு தெய்வீகக் கண்ணைக் கொடுத்து இவ்விதம் காண்பதற்கு பக்தியைத் தவிர வேறு உண்டோ என்றும் நல்லவர்களான சாதுக்கள் என்னை இவ்விதம் காண்பார்கள் என்றும் உபதேசித்தான்.

===== விஸ்வரூப  தரிசன யோகம் நிறைவடைந்தது =====

இவருடைய முகநூல் லிங்க் https://www.facebook.com/mannairvs

(Visited 21 times, 1 visits today)
0
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close