சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

மார்ச் 11 – ஸ்வாமி சித்பவானந்தா மஹராஜ் அவர்களின் பிறந்ததினம்

தமிழகத்தில் தோன்றிய அத்வைத ஆச்சாரியர்களில் புகழ்வாய்ந்த ஸ்வாமி சித்பவானந்தா மஹராஜ் அவர்களின் பிறந்ததினம் இன்று. ஸ்வாமிகள் 1898ஆம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செங்குந்தபாளையம் என்ற ஊரில் பெரியண்ணன்  – நஞ்சம்மா தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னு என்பதாகும். தனது தொடக்கக் கல்வியை கோவையில் உள்ள ஸ்டேன்ஸ் பள்ளியில் ஆரம்பித்த இவர், தனது சீனியர் கேம்பிரிஜ் தேர்வில் அன்றைய சென்னை ராஜதானியில் ஏழாவது இடத்தில் தேர்ச்சி பெற்றார்.

இந்த அளவு படிப்பில் சூட்டிகையாக இருந்த மகனை இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பி மேல் படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று அவரின் பெற்றோர்கள் விரும்பினார். அதனால் சின்னு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார்.

Image result for swami chidbhavananda

கல்லூரி காலத்தில் தற்செயலாக அவருக்கு கிடைத்த சுவாமி விவேகானந்தரைப்  புத்தகம் அவரின் வாழ்க்கையை மாற்றிவிட்டது. சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று அங்கே உள்ள சன்யாசிகளோடு உரையாடுவது அவரின் வழக்கமாக மாறியது. ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரான ஸ்வாமி சிவானந்தா அவர்களின் சீடராக அவர் உருவெடுத்தார். அப்போது அவர் த்ரியம்பக சைதன்யா என்று அழைக்கப்பட்டார்.

1926ஆம் ஆண்டு ஜூன் மாதம் பௌர்ணமி நாள் அன்று ஸ்வாமி சிவானந்தா த்ரியம்பக சைதன்யா என்ற சின்னுவிற்கு முறைப்படி சந்யாச தீக்ஷை அளித்தார். அன்று முதல் அவர் ஸ்வாமி சித்பவானந்தா என்று அழைக்கப்பட்டார்.

ஆன்மீகத்தோடு மட்டும் நில்லாமல் பொதுமக்களுக்கு கல்வியறிவும் புகட்டும் வகையில் பல்வேறு கல்வி நிறுவனங்களை ஸ்வாமிஜி நிறுவினார். திருச்சி அருகே திருப்பராய்துறையில் ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவினார். புகழ்பெற்ற சேலம் சாரதா கல்லூரி, திருநெல்வேலி சாரதா கல்லூரி  கரூரில் உள்ள சாரதா நிகேதன் கல்லூரி போன்ற நிறுவனங்களை தபோவனம் நடத்தி வருகிறது.

Image result for swami chidbhavananda

தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து பகவத் கீதை பற்றியும், திருவாசகம் போன்ற பல பக்தி இலக்கியங்கள் பற்றி ஸ்வாமிஜி சொற்பொழிவாற்றி உள்ளார். அந்தர்யோகம் என்றும் மூன்று நாள் தியான பயிற்சி வகுப்புகளையும் ஸ்வாமிஜி நடத்திவந்தார்.

பகவத்கீதைக்கு ஸ்வாமிஜி எழுதிய உரை மிகவும் பிரசித்தி பெற்றது. அதுபோக திருவாசகம், ராமாயணம், மகாபாரதம், நன் மக்களைப் பெறுதல், தினசரி தியானம் என்று நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதி உள்ளார்.

1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் நாள் ஸ்வாமிஜி தனது உடலைத் துறந்து மஹாஸமாதி எய்தினார்.

எண்ணற்ற குருமார்கள் இந்த உலகில், அவர்கள் அனைவருக்கும் நமது வணக்கங்கள். நமது சிந்தனையை, பேச்சை, செயலை நமது குருமார்கள் நல்வழியில் வழிநடத்தட்டும்.

(Visited 71 times, 1 visits today)
5+
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close