யூரி-சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படம் – டவுன்லோடு செய்தால் ராணுவம் வருமா?

URI – The Surgical Strike என்ற திரைப்படம் வெளிவந்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திரைப்படம் ராணுவத்தினர் மத்தியிலும் நற்பெயர் பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற ராணுவத் தளபதிகள் படம் பார்த்துவிட்டு நன்றாக எடுத்திருப்பதாக பாராட்டுகின்றனர்.

இந்நிலையில் தில்லியில் ஒருவர் இந்தத் திரைப்படத்தை டொரண்ட் தளத்தில் இருந்து டவுன்லோடு செய்துள்ளார். 3.4 ஜிபி டேட்டா கொண்ட திரைப்படத்தின் ஃபைல் டவுன்லோடு ஆக தனியாக டேட்டா பேக் போட்டதாக வேறு சொல்கிறார். டவுன்லோடு முடித்தவுடன் இணைய இணைப்பைத் துண்டித்துவிட்டு அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல் படத்தை ஓடவிட்டுள்ளார்.

படம் ஓடத்தொடங்கியதும் முதலில் ட்ரைலர் போல ஆரம்பித்துள்ளது. திடீரென்று படத்தில் நடித்த நடிகர்கள் படத்தில் வந்த அதே ராணுவ அதிகாரிகளின் வேடத்தில் தோன்றி “எதிரி நாட்டுக்குள்ளேயே போய் அடித்துத் துவைத்துவிட்டு வந்தோம். உன் வீட்டுக்குள் வர முடியாதா, இல்லை உன் கள்ள சர்வருக்குள் வரமுடியாதா? திரைப்படத்தை திரையரங்கில் போய்ப் பார். இல்லையென்றால் வீடு புகுந்து சர்ஜிகல் ஸ்டிரைக் செய்வோம். சர்வர் எங்கே மாற்றினாலும் துவம்சம் தான்!” என்று பேசியுள்ளனர்.

இதுதான் அந்த மிரட்டல் டொரண்ட் ஃபைல். 3.4ஜிபி ஆகாது. தைரியமாக க்ளிக் செய்து பாருங்கள்.

அரண்டு போனவர் இது குறித்து போலீசில் புகார் அளிக்கவும் முடியாமல் டேட்டா பேக் செலவு செய்து போட்டு 3.4 ஜிபிக்கு டவுன்லோடு செய்ததில் இப்படி ஒரு 5 நிமிட ஃபைலோடு முடித்துவிட்டார்களே என்று தன் நண்பரிடம் புலம்பியிருக்கிறார். அவர் மூலம் விஷயம் கசிந்து பலருக்கும் தெரியவர, படக்குழுவினர் ஒரு அறிக்கை தந்துள்ளனர்.

இணையத்தில் நாங்கள் படத்தை இலவசமாக வெளியிடவில்லை. எங்கள் இணையப் பாதுக்காப்புக் குழு இப்படி ஒரு ஃபைல் தயார் செய்து பெரும்பாலான கள்ளத் திரைப்படம் தரும் டொரண்ட் சர்வர்களில் போட்டுள்ளது. நீங்கள் டவுன்லோடு செய்தால் இந்த ஃபைல் மட்டுமே வரும். டேட்டாவை வீணடிப்பதற்கு அந்தக் காசை வைத்து திரையரங்கில் படம் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

நம் தமிழ் சினிமா ஹீரோக்கள் நிஜத்தில் தமிழ் ராக்கர்ஸ் அட்மினை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் உட்காரவைத்து அந்த நேரத்திலும் அவர்கள் தளத்தில் புதுப்படங்கள் ரிலீசானதில் நொந்து போய் ஜீரோ ஆன கதைகள் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரத்தோடு ஒப்பிட்டு எள்ளல் சிரிப்புடன் விவாதிக்கப்படுகின்றன.

(Visited 48 times, 1 visits today)
4+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *