கொல்கத்தாவில் பாஜகவிற்கு எதிராக கூடும் கட்சிகள்- கூட்டணியாக மாறுமா?

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று பாஜகவை எதிர்த்து மாபெரும் பேரணிக்கு மேற்கு வங்காளத்தின்  முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருக்கிறார். இதில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், திமுக, தெலுகு தேசம், மஜக, என்சிபி, பிஎஸ்பி, எஸ்பி , ராஷ்டிரிய லோக்தள் ஆகிய முக்கியக்  கட்சிகள் கலந்து கொள்கின்றன.

கலந்து கொள்ளாத கட்சிகள் :

சிபிஐ (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யுனிஷ்ட் கட்சி, சிவசேனா, அகாலிதளம், டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர்சிபி, அதிமுக, பிஜு ஜனதா தளம் ஆகிய முக்கியக்  கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.

தற்போதைய அரசியல் தெளிவை வைத்துப் பார்த்தால் என்ன நடக்கிறது? என்ன நடக்கலாம்?

டெல்லி, பஞ்சாப்:

டெல்லி மற்றும் பஞ்சாபில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, அகாலிதளம் கட்சிகளுக்கிடையே தான் லோக்சபா தேர்தலில் நேரடிப்போட்டி நிலவும். மம்தாவின் கூட்டத்தில் கலந்து கொள்ளும் காங்கிரசும், ஆம் ஆத்மியும் டெல்லி பஞ்சாபில் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று இரு கட்சிகளுமே அறிவித்து விட்டன. இதில் எங்கிருந்து பாஜகவை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எதிர்க்கின்றன என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. டெல்லியில் மும்முனைப் போட்டி நிலவப்போகிறது. பஞ்சாபில் அகாலிதளமும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போகிறது. டெல்லி, பஞ்சாபில் பாஜகவை ஒருமித்து எதிர்ப்பது நடைமுறையில் இல்லை என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உத்திரப் பிரதேசம்:

எஸ்பி, பிஎஸ்பி கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டன. கூடுதலாக காங்கிரசுக்கு இடமில்லை என்றும் சொல்லி விட்டன. தேசிய கட்சியான காங்கிரஸ் உ.பியில் தனித்து விடப்பட்டுள்ளது. திரிணமுல் என்ற கட்சி உ.பியில் கிடையாது. பாஜகவிற்கு உண்மையான சவால் எஸ்பி, பிஎஸ்பி தான். காங்கிரஸ் உ.பியில் முற்றிலுமாக வலுவிழந்த கட்சி. மஹா கட்பந்தன் என்று நிதர்சனத்தில் சொல்லிக் கொள்ளும் கட்சிகள் காங்கிரசோடு அணி சேரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது.

மகாராஷ்டிரா:

மகாராஷ்டிராவைப் பொருத்தமட்டில் காங்கிரஸ், என்சிபி கூட்டணி ஏற்கனவே முடிவாகி விட்டது. இடங்கள் ஒதுக்கீடு பிரச்சினை முடிந்து விட்டால் கூட்டணி தான். ஆனால் இங்கு சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவருக்கும் அடிப்படையில் கொள்கை ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ பெரும் பிரச்சினை இல்லை. சிவசேனா அதிக இடங்களை எதிர்ப்பார்க்கிறது. இப்பிரச்சினை முடிவுக்கு வந்தால் பாஜகவும் சிவா சேனாவும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே உண்மை நிலவரம். அத்தனை எளிதாக பாஜகவை வெல்லும் நிலையில் மகாராஷ்டிராவின் அரசியல் களம் இல்லை.

தமிழ்நாடு:

திமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது உறுதியான ஒன்று. அதிமுக பாஜகவோடு  அணி அமைப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. தேமுதிக, பாமக மற்றும் இதர கட்சிகள் இன்னும் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. தற்போதைய நிலையில் திமுக காங்கிரஸ் அணியே பலம் வாய்ந்ததாகவும் தெளிவான கூட்டணியை அமைத்தும் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. பாஜக மிக பலவீனமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு.

கேரளா, மேற்கு வங்காளம்:

கேரளாவில் கம்யுனிஸ்டுக்கும் காங்கிரசுக்கும் தான் நேரடிப்போட்டி நிலவும். பாஜக அங்கு வாக்குகளை மட்டுமே அதிக அளவில் பிரிக்கும் என்று தெரிகிறது. சபரிமலை விஷயத்தில் மக்கள் கம்யுனிஷ கட்சியை எதிர்த்து காங்கிரசுக்கு வாக்களிக்கப் போகிறார்களா? அல்லது பாஜகவிற்கு வாக்களிக்கப்போகிரார்களா என்பது பற்றி இன்னும் தெளிவு கிடைக்கவில்லை.

மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரையில் திரிணமுல் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் என்று இதுவரை இரு கட்சிகளுமே சொல்லவில்லை. திரிணமுல் காங்கிரசைப் பொறுத்தவரையில் தனித்து நின்று அதிக இடங்களைப் பெற்றால் மட்டுமே பிரதம வேட்பாளராக தன்னை முன்னிறுத்த முடியும் என்று நினைக்கிறது. எனவே காங்கிரசை கூட்டணிக்குள் கொண்டு வருமா என்று தெரியவில்லை. கம்யுனிஷ கட்சிகள் திரிணமுல் காங்கிரசை நேரடி எதிர்க் கட்சியாக பார்ப்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அக்கட்சியே தெரிவித்து தெளிவுபடுத்தி விட்டது. கம்யுனிஸ்டுகளும் காங்கிரசும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம். பாஜக மேற்கு வங்கத்தில் பல மடங்கு தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளது. போட்டி திரிணமுலுக்கும் பாஜகவிற்கும் இடையே தான் நடக்க வாய்ப்பிருக்கிறது.

ஆந்திரா, தெலுங்கானா:

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் தெலுகு தேசம் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. ஆனால் தற்போது நடந்து முடிந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில் டிஆர்எஸ் கட்சி அதிக இடங்களைப் பெற்றுள்ளதால் அங்கு இக்கூட்டணியால் அதிக பலன் அமைய வாய்ப்பில்லை. ஆனால் ஆந்திராவில் நிலை அப்படியல்ல. ஜெகன் மோகன் கட்சிக்கு காங்கிரஸ் தெலுகுதேசம் ஆகிய இரு கட்சிகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரலாம். இரு நாட்களுக்கு முன்பாக டிஆர்எஸ் ஒய்எஸ்ஆர்சிபி சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்துப் போட்டியிட வாய்ப்புகள் உள்ளது என்று தகவல்கள் வருகின்றன. பவன் கல்யாண் இன்னமும் தனது ஆதரவைத் தெரிவிக்கவில்லை. பாஜக இந்த இரு மாநிலங்களிலும் தற்போதைய நிலையில் தனித்து விடப்பட்டுள்ளது என்பது உண்மையே!! ஆனால் இவ்விரு மாநிலங்களிலும் பாஜகவிற்கு தேர்தலுக்கு பின்பு சில இடங்களில் ஆதரவு தேவைப்படும் போது தங்கள் மாநிலங்களில் தங்களைத் தக்கவைக்க பாஜகவையே ஆதரிப்பார்கள் என்பதே அரசியல் கணிப்பாக உள்ளது.

பீகார்:

பீகாரைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளத்தைக் காட்டிலும் பாஜக ஜனதா தளம் (யு), ராம்விலாஸ் பாஸ்வான் கூட்டணியே வலுவான அணி என்பதால் அங்கு பாஜகவை வெற்றி கொள்வது அத்தனை எளிதான காரியமல்ல.

ஓடிஸா:

ஓடிசாவில் பிஜு ஜனதா தளம் இன்றும் வலிமையாக உள்ளது. பிஜேடிக்கும் பாஜகவிற்கும் தான் நேரடிப் போட்டி நடக்கவிருக்கிறது. இருப்பினும் காங்கிரஸ் பாஜக இரு கட்சிகளையும் சம தொலைவில் வைத்துப் பார்க்கவே பிஜேடி விரும்புகிறது. மம்தா நடத்தும் இக்கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்வதால் தமது கட்சி கலந்து கொள்ளாது என்று வெளிப்படையாகவே அறிவித்து காங்கிரஸ் கூட்டணி கிடையாது என்பதை தெளிவு படுத்தியுள்ளது.

கர்நாடகம்:

கர்நாடகாவில் காங்கிரஸ் மஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. தற்போது அங்கு பாஜக தன்னாலான அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்த்து விட முயல்கிறது. அப்படி இந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் இவ்விரு கட்சிகளும் லோக்சபா தேர்தலில் சண்டையிட்டுக் கொண்டு தனித்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கிறது. இவ்விரு கட்சிகளும் கூட்டணி வைத்துப் போட்டியிட்டால் பாஜக கடும் போட்டியைச் சந்திக்க வேண்டி வரும். ஆனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பாஜகவிற்கும் காங்கிரசுக்குமே நேரடிப் போட்டி நிலவுவதால் பாஜக சில இடங்களையாவது பிடிக்கும். மூன்று கட்சிகளும் தனித்து நின்றால் மட்டுமே பாஜக 15 இடங்களுக்கும் அதிகமாக பிடிக்க இயலும். இல்லையேல் ஒற்றை இழக்க இடங்களையே வெல்லும். இதுவே கர்நாடக அரசியல் நிலவரம்.

இதுவே தற்போதைய அரசியல் கள நிலவரம். காங்கிரஸ் மற்றும் பாஜக நேரடியாக மோதும் மாநிலங்கள்  ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் .

வட கிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த காலத்தில் காங்கிரசுக்கும் அங்குள்ள மாநில கட்சிகளுக்குமே நேரடிப் போட்டி நிலவியது. ஆகையால் தேர்தலுக்கு முன்புள்ள கூட்டணி கணக்குகள் எப்படி இருப்பினும் தேர்தலுக்குப் பிந்தைய அணி மாறுதலே நடக்க வாய்ப்புள்ளது. இதில் அஸ்ஸாம், திரிபுரா இரு மாநிலங்களிலும் பாஜக ஆள்கிறது. பாஜகவிற்கு சில இடங்களே தேவைப்படுகிற சூழ்நிலை வந்தால் காங்கிரசைக் காட்டிலும் பாஜகவை ஆதரிப்பதே தங்களின் நீண்ட கால அரசியலுக்கு உதவும் என்றே அரசியல் கட்சிகள் முடிவு செய்யும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், மம்தா கூட்டியுள்ள பொதுக் கூட்டத்தால் காங்கிரஸ் பெரிதும் பலனடையவில்லை. இரண்டாவதாக மம்தாவும் காங்கிரஸ் தலைமையை ஏற்கிறேன் என்று சொல்லவில்லை. தேர்தல் நெருங்கும் போது மாநிலக் கட்சிகள் தங்கள் பழங்களின் அடிப்படையில் காங்கிரஸ், பாஜகவை எதிர்கொள்ளப்போகிறது என்பதே நிஜம்.

காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதும் மாநிலங்களின் முடிவைப் பொறுத்தே அடுத்த ஆட்சி யார் தலைமையில் அமையும் என்பது தெரியும். ஆனால் கள நிலவரங்களும், அரசியல் கூட்டணி கணக்குகளும் பார்த்தால் பாஜக தலைமையில் ஆட்சி அமையும். அல்லது காங்கிரஸ் ஆதரிக்கும் மூன்றாவது அணி தலைமையில் ஆட்சி அமையும். தற்போதைய அரசியல் கூட்டணிகளை மட்டும் வைத்துப் பார்த்தால் பாஜகவை எளிதில் வீழ்த்திவிட முடியாது என்பதே நிலவரம். இந்த மெகா கூட்டணி மறைமுகமாக மம்தா தன் தலைமையில் ஆட்சி வரவைக்க வேண்டும் என்பதற்கான முன்னோட்டமே. அதற்கு காங்கிரசும் இரையாகி உள்ளது என்பதே யதார்த்தம்.

 

(Visited 63 times, 1 visits today)
4+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *