21 ஜனவரி – ராஷ் பிஹாரி போஸ் நினைவு தினம்

வெள்ளையனை நடுநடுங்கச் செய்த வங்காளிகளில் முக்கியமானவர் ராஷ் பிஹாரி போஸ். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முன்னோடி. இவர் மேற்கு வங்கத்தில் சுபல்தஹா என்ற கிராமத்தில் பிறந்தார்.

இவரது தாத்தா இவருக்கு சிறு வயதில் வீர வங்கப் போர்வீரர்களின் கதைகளைச் சொல்லி வளர்த்தார். டூப்ளே கல்லூரியில் படித்த இவர் அந்தக் கல்லூரி முதல்வரால் புரட்சி இயக்கங்களின் பால் ஈர்க்கப்பட்டார். உயிரியல், மருத்துவம் ஆகியவற்றில் மேற்படிப்பு படித்து மார்டன் பள்ளியில் பட்டங்கள் பெற்றார். பின்னர் ஃப்ரான்ஸ், ஜெர்மனி ஆகிய தேசங்களுக்குச் சென்று பொறியியல் பயின்றார்.

தில்லி சதி வழக்கு என்ற பிரபலமான வழக்கில் இவர் சம்பந்தப்பட்டிருந்தார். 1912ல் அப்போதைய கவர்னர் ஜெனரல் ஹார்டிங்கை கொலை செய்ய வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு அது வைஸ்ராய் ஹார்டிங் மீது வீசப்பட்டது. ஆனால் குறி தப்பியதில் ஹார்டிங் தப்பித்தார்.

ஆங்கிலேய ராணுவத்தை எதிர்த்து 1915ல் உலகப் போர் சமயத்தில் நெருக்கடி கொடுக்க உருவாக்கப்பட்ட புரட்சி அமைப்பு கதர் அமைப்பு. அதில் ராஷ் பிஹாரி முக்கியப் பங்காற்றினார். பிரிட்டிஷ் போலீஸ் தேடிக் கொண்டிருக்க பிரிய தர்ஷன் தாகூர் என்ற பெயரில் 1915ல் ஜப்பானுக்குத் தப்பினார். அங்கே பல பெயர்களில் பல ஊர்களில் வாழ்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான ஆசிய அமைப்புகளில் பங்கெடுத்து இந்திய விடுதலைக்கு ஆதரவு திரட்டினார்.

இவர் ஆங்கிலேய இந்தியாவின் குடிமகன் என்று ஆங்கிலேய அரசு இவரை ஒப்படைக்கும்படி ஜப்பானுக்கு நெருக்கடி கொடுத்தது. அங்கிருந்த ஒருங்கிணைந்த ஆசியர் அமைப்பின் உறுப்பினர்களான ஐசோ சோமா, கொக்கோ சோமா என்ற தம்பதியின் நாக்கமுரா பேக்கரி என்ற கடையில் வேலை பார்த்தபடி புரட்சி இந்தியர்களை ஊக்குவித்து உதவி திரட்டி வந்தார் ராஷ் பிஹாரி போஸ். இந்நிலையில் இவர் ஐசோ, கொக்கோ தம்பதியின் மகளை மணந்து கொண்டு ஜப்பானிய குடியுரிமை பெற்றார். அதனால் பிரிட்டனிடம் இவரை ஒப்படைக்க ஜப்பான் அரசு மறுத்துவிட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது 1942ல் இந்திய தேசிய லீக் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் ராணுவக் கிளையாக இந்திய தேசிய ராணுவத்தையும் தொடங்கினார். போரில் ஜப்பானிடம் பிடிபட்ட பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் வீரர்களைக் கொண்டு இந்தப் படையை உருவாக்கி படைக்குத் தலைமை ஏற்று நடத்தும்படி நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு தகவல் அனுப்பினார்.

1945 ஜனவரி 21ஆம் நாள் காசநோயால் பாதிக்கப்பட்ட இவர் காலமானார். ஜப்பானிய அரசு இவருக்கு Order of the Rising Sun (Second Grade) விருதை வழங்கி கௌரவித்தது.

பின் குறிப்பு: ராஷ் பிஹாரி போஸ் பற்றிய குறிப்புகள் கட்டுரைகள் எழுத இந்திய விடுதலை வரலாற்றில் பள்ளிக்கல்வி பாடத்திட்டங்களில் ஓரிரு வரிகளில் சொல்லப்பட்ட பல நிகழ்வுகளை விவரிக்க வேண்டும். சிறு கட்டுரையில் அது இயலாது என்பதால் அந்த விவரங்கள் குறித்த விரிவான கட்டுரைகளை நம் தளத்தில் விரைவில் வெளியிட முயல்வோம்.

அவை வெளிவந்த பிறகு ராஷ்பிஹாரி போஸ் வரலாறு படிக்கும் போது புரிதலுக்கு எளிதாக இருக்கும். மே மாதம் 25ஆம் நாள் ராஷ் பிஹாரி போஸின் பிறந்தநாளுக்குள் இக்கட்டுரைகளை வெளியிட இறையருளுடன் முயல்வோம். வந்தே மாதரம்.

(Visited 18 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *