கபில்சிபலுக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தமில்லை! – ஓட்டு எந்திரம் ஜியோ சிம் மூலம் பழுதாக்கப்பட்டதாம்!

லண்டனின் நேற்று ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் சையத் ஹுஜா என்பவர் முகத்தை மூடிக்கொண்டு பேசியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் தேர்தல் ஓட்டுப் பதிவு எந்திரங்களை சுலபமாக ஊடுருவி மாற்றங்கள் செய்யமுடியும் என்றும் 2014 தேர்தலில் அப்படி அநியாய ஊடுருவல்கள் நடைபெற்றன என்றும் குற்றம் சாட்டினார். தான் இந்திய மின்னணுவியல் நிறுவனத்தில் (Electronic Corporation of India Ltd – ECIL) வேலை பார்த்ததாகவும், 2014க்குப் பிறகு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் அமெரிக்காவுக்குத் தப்பியோடி அங்கே அரசியல் அடைக்கலம் கேட்டுள்ளதாகவும் சையத் ஷுஜா கூறியுள்ளார்.

முகம் கூடக் காட்டாத நிலையில் அவர் குறித்த எந்த அடையாளமும் தெரியவில்லை. இந்தியச் செய்தி நிறுவனங்களோடு ஸ்கைப்பில் பேசிய சையத் ஷுஜா 2014 தேர்தலில் வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்தது என்றும், காங்கிரஸ் கட்சி 201 இடங்களை இதனால் இழந்தது என்றும் ஷுஜா தெரிவித்தார். அது குறித்த ஆதாரம் எதுவும் அவர் தரவில்லை. தம் அணியில் இந்திய மின்னணுவியல் நிறுவனத்தில் வேலை செய்த பலரும் 2014க்குப் பிறகு கொல்லப்பட்டுள்ளதாகவும் ஷுஜா அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

2014 பாராளுமன்றத் தேர்தலில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சிக்னல் கிடைப்பதில் சிக்கல் செய்து அதன் மூலம் பாஜகவுக்கு சாதகமாக வாக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், தற்போதைய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தம் அணியினர் அமெரிக்காவில் இருந்து தகவல் தொடர்பு சாதனங்களைக் கண்காணித்து முடக்கியதால் பாஜக தோற்றது என்றும் இல்லாவிட்டால் பெருவெற்றி பெற்றிருக்கும் என்றும் சையத் ஷுஜா தெரிவித்தார்.

பாஜக தலைவர் கோபிநாத் முண்டேவுக்கு இந்த முறைகேடு பற்றித் தெரிந்ததால் அவர் கொல்லப்பட்டார் என்றும் ஷுஜா தெரிவித்தார். கர்நாடக பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இது குறித்து எழுத இசைந்ததாகவும், அதனால் அவரும் கொல்லப்பட்டதாகவும் ஷுஜா தெரிவித்தார். ஃபாரின் பிரஸ் சங்கம் (Foreign Press Association; @FPALondon) என்ற லண்டன் அமைப்பு இந்தப் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று அறிவித்துள்ளது.

கோபிநாத் முண்டே மரணம் குறித்து அவரது உறவினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான தன்ஞ்சய் முண்டே ரா அமைப்போ உச்சநீதிமன்ற நீதிபதியோ இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாஜக தவிர சமாஜ்வாதி, பஹுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் தம்மிடம் வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்வது குறித்து அணுகிப் பேசியதாகவும் ஷுஜா தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் ஜி கிஷன் ரெட்டி வாக்குப்பதிவு எந்திர முறைகேடு செய்தது தொடர்பாக 11 பேரைக் கொன்றதாகவும் ஷுஜா தெரிவித்துள்ளார். ”ஆனால் அப்போது ஹைதராபாத்திலும், தில்லியிலும் காங்கிரஸ் அரசு அதிகாரத்தில் இருந்தது. தாம் அப்படிச் செய்திருந்தால் தம்மை விட்டிருக்கமாட்டார்கள் என்றும் விசாரணைக்குத் தயார்” என்றும் கிஷன் ரெட்டி கூறியிருக்கிறார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவரும் வக்கீலுமான கபில்சிபல் கலந்து கொண்டார். இதற்காக அவர் லண்டன் சென்றுள்ளார். இந்நிலையில் கபில்சிபல் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்றும் அவருக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு வந்ததால் அவர் சென்றுள்ளார் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

உபி முன்னாள் முதல்வர் மாயாவதி 2019 தேர்தல்களை காகித ஓட்டுச்சீட்டுகள் கொண்டு நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமது கட்சி சார்பில் எந்திரத்தில் முறைகேடு செய்ய அணுகியது பற்றிய ஷுஜாவின் குற்றச்சாட்டு குறித்து அவர் பதிலளிக்கவில்லை.

உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவும் 2019 தேர்தல்களை காகித ஓட்டுச்சீட்டுகள் கொண்டு நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமது கட்சி சார்பில் எந்திரத்தில் முறைகேடு செய்ய அணுகியது பற்றிய ஷுஜாவின் குற்றச்சாட்டு குறித்து அகிலேஷும் பதிலளிக்கவில்லை.

மம்தா பானர்ஜியும் சந்திரபாபு நாயுடுவும் இதுகுறித்து கவலை தெரிவித்தனர். ஜனநாயகம் காக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறியுள்ளனர்.

தேர்தல் கமிஷன் வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்யமுடியும் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அதுகுறித்து அவதூறு பேசிய ஷுஜா மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து ஆங்கில செய்தி இணையதளம் க்விண்ட் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது.

(Visited 29 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *