மாயாவதியின் பிரதமர் கனவு நிறைவேறுமா ? பகுதி 1
இந்திய அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் மிகவிரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் அநேகமாக முடிந்துவிட்டன. எண்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும் கூட்டாக தலா முப்பத்தி எட்டு இடங்களில் போட்டி இடப்போவதாகத் தெரிவித்துவிட்டனர். மீதி உள்ள இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடமும் மற்ற கட்சிகளுக்கு இரண்டு இடமும் என்று அவர்கள் முடிவு செய்து விட்டனர்.
இரண்டு இடங்களில் மட்டும் போட்டி என்பதை காங்கிரஸ் ஏற்காது. அந்த இரண்டு இடங்களும் அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளாகத்தான் இருக்கும். இந்த நெருக்கடியைச் சமாளிக்க காங்கிரஸ் கட்சி தனது இளவரசியான பிரியங்கா வதோராவை கட்சியின் பொதுச்செயலாளராக ஆக்கி கிழக்கு உத்திரப்பிரதேசத்தின் பொறுப்பாளராக நியமித்து உள்ளது. அநேகமாக சோனியாவும், ராகுலும் உத்திரப்பிரதேசம் தவிர்த்து வேறு ஒரு பாதுகாப்பான தொகுதியிலும் போட்டி இடுவார்கள் என்று தகவல்கள் வலம் வருகிறது.
தலித் மற்றும் யாதவர்களின் கூட்டணியாக மாயாவதி – அகிலேஷ் கூட்டணி விளங்குகிறது. உபியில் 19% உள்ள இஸ்லாமியர்கள் யாரை ஆதரிப்பார்கள் என்பது ஒரு மிகப் பெரும் கேள்வி. ஆனால் அதே நேரத்தில் முத்தலாக் விவகாரத்தினால் இஸ்லாமிய பெண்களின் வாக்கு பாஜகவிற்குப் போகும் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. உயர்சாதி மற்றும் யாதவர்கள் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பாஜகவை ஆதரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
இதுவரை ஒன்பது பிரதமர்கள் உபியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா, சரண்சிங், ராஜீவ், வி பி சிங், சந்திரசேகர், வாஜ்பாய் மற்றும் தற்போதைய பிரதமர் மோதி ஆகியோர் உபியில் இருந்தே தேர்வானவர்கள். 1977இல் குஜராத்தில் இருந்து மொரார்ஜி தேசாயும், 1980இல் இந்திராவும் அதன் பின்னர் 1991ஆம் ஆண்டு நரசிம்மராவும் ஆந்திராவில் இருந்தும் தேர்வானார். தேவகௌடா, ஐ கே குஜரால் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்கள். தற்போதைய பிரதமர் மோதி வாரணாசி தொகுதியில் இருந்து தேர்வானார். 2014 தேர்தலில் உபியில் உள்ள எண்பது தொகுதிகளில் எழுபத்தி மூன்றை பாஜக கைப்பற்றியது.
1950 ஆண்டு முதல் தற்போது வரை இந்த மாநிலம் கோவிந்த வல்லப பந்த் முதல் யோகி வரை இருபத்தி ஒரு முதல்வர்களால் ஆளப்பட்டு உள்ளது. இங்கே முதல்வராக இருந்த சரண்சிங்கும் வி பி சிங்கும் இந்தியாவின் பிரதமராகவும் உயர்ந்தார். ஆச்சாரிய கிருபளானியின் மனைவியும் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமாகிய திருமதி சுசீலா கிருபளானி இந்தியாவின் முதல் முதலமைச்சராக 1963ஆம் ஆண்டு உபியில் பதவியேற்றார்.
1989ஆம் ஆண்டு முதல் இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரமுடியவில்லை. பாஜக, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய காட்சிகளே மீண்டும் மீண்டும் உபியில் ஆட்சியைப் பிடிக்கின்றன. 1989ஆம் ஆண்டு ராஜீவுக்கு எதிரான அலையில் ஜனதாதளத்தின் சார்பாக முலாயம்சிங் உபியின் பதினைந்தாவது முதல்வரானார். வி பி சிங்கின் ஆட்சி கவிழ்ந்தபோது சந்திரசேகர் அணிக்கு மாறி தனது ஆட்சியை முலாயம் தக்கவைத்துக்கொண்டார். ஆனால் வழக்கம் போல சந்திரசேகர் ஆட்சியை காங்கிரஸ் கவிழ்த்தது, அத்தோடு முலாயம்சிங் ஆட்சியையும் முடிவுக்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று கல்யாண்சிங் ஆட்சி அமைத்தார். ஜென்மஸ்தான் மசூதி இடிப்பினால் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது.
1992ஆம் ஆண்டு ஜனதாதளத்தில் இருந்து பிரிந்து முலாயம் சமாஜ்வாதி கட்சியைத் தொடங்கினார். மாயாவதியின் ஆதரவோடு 1993ஆம் ஆண்டு மீண்டும் முதல்வரானார். பதினெட்டே மாதத்தில் ஆதரவை விலக்கிக் கொண்ட மாயாவதி பாஜகவின் ஆதரவோடு முதல்வரானார். ஆனால் ஐந்தே மாதங்களில் பாஜக தனது ஆதரவை விலக்கிக்கொள்ள மாயாவதியின் ஆட்சி கலைந்தது. ஜனாதிபதி ஆட்சி அமுலாக்கப்பட்டது.
1997ஆம் ஆண்டு தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக விளங்கியது. ஆனால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கான எண்ணிக்கை இல்லாததால் மாயாவதியின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. காங்கிரஸுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்த மாயாவதி, தேர்தல் முடிந்தவுடன் பாஜகவின் ஆதரவோடு மீண்டும் முதல்வரானார். ஆறு மாதம் பகுஜன் சமாஜ் அடுத்த ஆறு மாதம் பாஜக என்று உடன்பாடானது. ஆறு மாதத்தில் முதல்வர் பதவியை விட்டு விலகிய மாயாவதி பாஜகவுக்கு ஆதரவு அளிக்க மறுத்துவிட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியை உடைத்து, தனக்கான ஆதரவு நிரூபித்து கல்யாண்சிங் மீண்டும் முதல்வரானார்.
கட்சி மேலிடத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கல்யாண்சிங் 1999ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகினார். இதற்கிடையில் ஆளுநர் ரொமேஷ் பண்டாரி கல்யாண்சிங்கின் ஆட்சியைக் கலைத்தார். மூன்று நாட்கள் முதல்வராக ஜெகதாம்பிகா பால் இருந்தார். கல்யாண்சிங் பாஜகவில் இருந்து விலகியதைத் தொடர்ந்து ராம்பிரகாஷ்குப்தாவும் அதன் பின் ராஜ்நாத்சிங்கும் முதல்வரானார். உபியின் பதின்மூன்றாம் சட்டசபை மாயாவதி, கல்யாண்சிங், ஜெகதாம்பிகாபால், ராம்பிரகாஷ்குப்தா, ராஜ்நாத்சிங் என்று ஐந்து முதல்வர்களை அளித்தது.
2002இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் எண்ணிக்கை கிடைக்கவில்லை. குதிரைபேரம் நடப்பதைத் தடுக்க சட்டசபை முடக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமுலாக்கப்பட்டது. மீண்டும் பாஜகவின் ஆதரவோடு மாயாவதி ஆட்சி, மீண்டும் பாஜக தனது ஆதரவை விலக்கிக்கொள்ள ஆட்சி கவிந்தது. 147 உறுப்பினர்களோடு தனிப்பெரும் கட்சியாக இருந்த முலாயம் பகுஜன் சமாஜ் கட்சியைப் பிளந்து 37 உறுப்பினர்களை தன்வசம் ஆக்கிக்கொண்டார். காங்கிரஸ் மற்றும் லாலு யாதவின் ராஷ்டிரிய ஜனதாதள கட்சிகளின் உதவியோடு மீண்டும் முதல்வரானார். ஏறத்தாழ மூன்றே முக்கால் வருடங்கள் அவர் ஆட்சி செய்தார்.
பல ஆண்டுகளாக இருந்த அரசியல் நிலையற்ற தன்மையால் மாநிலத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று மாயாவதி மீண்டும் முதல்வரானார். அவர் முழு ஐந்தாண்டுக் காலமும் ஆட்சி செய்தார்.
அதனைத் தொடர்ந்து 2012 முதல் 2017 வரையான காலகட்டத்தில் முலாயம்சிங்கின் மகனான அகிலேஷ் யாதவ் முதல்வரானார். முப்பத்தியேழு வயதில் முதல்வராகி அவர் இந்தியாவின் மிக இளைய வயதில் முதல்வரானவர் என்ற பெருமையையும் அடைந்தார்.
2017ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. மாநிலத்தின் முதல்வராக கோரக்பூர் மடத்தின் தலைவரான யோகி ஆதித்யநாத் நியமிக்கப்பட்டார்.
இதுதான் கடந்த முப்பதாண்டு உத்திரப்பிரதேசத்தின் தேர்தல் வரலாறு. இங்கே பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் பாஜகவிற்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கின்றது. சில இடங்களில் காங்கிரஸும் வலுவாக உள்ளது. கடந்த முறை போல பெருவாரியான இடங்களை பாஜக அள்ளுவது மிகக்கடினம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ஒருவேளை மத்தியில் பாஜக அரசு அமைக்க முடியாமல் போய், மூன்றாவது அணி ஆட்சி அமைக்குமானால் மாயாவதியைப் பிரதமராக்க அகிலேஷ் ஆதரவு தருவார் என்று கூறப்படுகிறது. அதற்குப் பிரதிபலனாக அகிலேஷை அடுத்த தேர்தலில் முதல்வராக மாயாவதி ஒப்புதல் அளித்துள்ளார் என்று தகவல்.
மாயாவதியின் பிரதமர் கனவு பலிக்குமா ?