24 ஜனவரி – கற்பூரி தாக்குர் பிறந்ததினம்

பிஹாரின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவரும் பல தலைவர்களை உருவாக்கியவரும் மக்கள் நாயகர் என்று அழைக்கப்பட்டவருமான கற்பூரி தாக்குரின் பிறந்ததினம் இன்று. 1924 ஜனவரி 24 அன்று பிஹாரின் சமஷ்டிபூர் மாவட்டத்தில் பிதௌஞ்சியா (தற்போது கற்பூரி கிராமம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) கிராமத்தில் கோகுல் தாக்குர்-ராம்துலாரி தேவி தம்பதியரின் மகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கிராமத்தின் திண்ணைப் பள்ளியில் பயின்றார். பின்னர் சமஷ்டிபூரில் உயர்நிலைக் கல்வி கற்றார். பட்னாவில் கல்லூரியில் படித்த போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குபெற்று 26 மாதங்கள் சிறை சென்றார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு 1947ல் தம் கிராமத்துக்குத் திரும்பி கிராமப் பள்ளியில் ஆசிரியர் வேலையில் சேர்ந்தார். ஐந்து ஆண்டுகள் கழித்து 1952ல் பிஹார் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960ல் தபால் தந்தி, தொலைபேசி ஊழியர்களின் பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்துப் பேசினார். அதற்காகக் கைதானார். 1970ல் டெல்கோ (Telco) ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 28 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். கோரிக்கை ஏற்கப்பட்டது.

இவர் தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவித்தார். தொடர்பு மொழியாக ஹிந்தியை வழிமொழிந்தார். பிஹார் கல்வி அமைச்சராக இருந்த போது ஆங்கிலம் கட்டாயப்பாடம் என்ற சட்டத்தை மாற்றி ஆங்கிலம் விருப்பப் பாடம் என்றாக்கினார். இதனால் பிஹாரிகள் ஆங்கிலம் கற்பதில் சுணக்கம் கண்டு ஆங்கிலக் கல்வி தரம் தாழ்ந்து போனது என்ற குற்றச்சாட்டை கற்பூரி தாக்குர் மறுத்தார். விருப்பப்பாடம் என்றாலும் சரியாகக் கற்பித்தால் ஆங்கிலம் கற்பதில் சுணக்கத்துக்கு வாய்ப்பில்லை என்றார் இவர்.

பிஹாரின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வராக 1970ல் ஆனார் கற்பூரி தாக்குர். பிஹாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். இவரது காலத்தில் பிஹாரின் பின் தங்கிய கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் பல அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. 1971ல் போலா பாஸ்வான் சாஸ்திரி என்பவர் சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இவர் பதவி விலகினார்.

ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு மிக அணுக்கமாக விளங்கிய கற்பூரி தாக்குர் அவசரநிலைக் காலகட்டத்தில் முழுப் புரட்சி இயக்கத்தில் பங்கெடுத்தார். கடும் சிறைவாசம் அனுபவித்த பிறகு அவசரநிலை விலக்கப்பட்ட நிலையில் விடுதலையானார். சிறையில் நிதிஷ் குமார், லாலு பிரசாத், ராம்விலாஸ் பாஸ்வான், ஹுகும்தேவ் நாராயண் யாதவ் போன்ற பல இளைஞர்களை ஊக்குவித்து அவர்களுக்கு வழிகாட்டினார்.

1977ல் கட்சித் தேர்தலில் சத்தியேந்திர நாராயண் சின்ஹாவை வென்று இரண்டாவது முறையாக பிஹாரின் முதல்வரானார். 1979 வரை முதல்வராக இருந்தார். 1978ல் பிஹார் அரசுப்பணிகளில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவந்தார். பின்னர் உட்கட்சி விவகாரங்களால் 1979ல் ராம் சுந்தர் தாஸ் என்பவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜனதா கட்சியில் இருந்த கற்பூரி தாக்குர் பின்னர் ஒருங்கிணைந்த சோஷலிஸ்ட் கட்சிக்குத் தலைவரானார். 1988 பிப்ரவரி 17 அன்று கற்பூரி தாக்குர் காலமானார். இவரது மறைவுக்குப் பிறகு இவரது பெயரில் பிஹாரில் பக்சர் நகரில் ஜனநாயக் கற்பூரி தாக்குர் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டது. மாதேபுராவில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. சமஷ்டிபூரிலும், தர்பங்காவிலும் இவர் பெயரில் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன.

1991ல் அரசு இவரது உருவம் பொறித்த தபால் தலை வெளியிட்டு கௌரவித்தது. இன்றும் பிஹார் அரசும் அரசியல் கட்சிகளும் கற்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகின்றனர்.

 

(Visited 15 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *