தொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கருப்ப கவுண்டர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்று வரும்16 ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் ஆகப் போகிறது. பணி நிமித்தம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்த கட்டுரையாளர் , கடந்த இரண்டு ஆண்டுகளில் ஈபிஎஸ் என்று அறியப்படும் முதல்வர்
பழனிச்சாமியின் இரண்டு ஆண்டுக் கால ஆட்சியில் மக்களின் எண்ண ஓட்டங்கள் எவ்வாறு தொடர்ந்து மாறுபட்டு வருகின்றன என்பதை கவனித்து வந்ததன் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது

ஊழல் குற்றச்சாட்டுகள், சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக இன்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவிக்கும் சசிகலாவால் முதல்வராக அமர்த்தப்பட்டவர் எடப்பாடி என்ற வரலாறை யாருமே மறுக்க முடியாது.

ஆனால் மிகவும் சாமர்த்தியமாக ,சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தை ஓரம்கட்டிவிட்டு , ஓபிஎஸ்ஐ மீண்டும் சேர்த்ததன் மூலம் , மத்திய அரசின் வேண்டப்பட்டவரானார் எடப்பாடி.

முதல்வராக பதவி ஏற்ற உடனே ‘இந்த அரசு கவிழ்ந்துவிடும் என்று ஆருடம் சொன்ன, இன்றும் சொல்லிக் கொண்டிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினை எடப்பாடி முந்திக் கொண்டிருக்கிறார் என்பதே கள நிலவரம் .

இரண்டு ஆண்டுகளைப் போல இல்லாமல், இன்று கிராமங்களில், புற நகர்ப் பகுதிகளில்  அதிமுக ஆட்சியின் மேல் எந்த வெறுப்பும் இல்லை . பெரும்பாலான ஆறுகள்,குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன .கழிவு நீர்க் கால்வாய்கள் தொடர்ந்து கட்டப்பட்டு வருகின்றன .

கிராமங்களில் இலவச ஆட்கள்,கோழிகள் வழங்கும் திட்டங்கள், பராமரிப்புப் பணிகள் , மத்திய அரசின் கழிவறை திட்டங்கள் செயல்படுத்தப்படுதல் என பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும்.

எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட பிரச்சாரத்தையும் தாண்டி, தொடர்ந்து மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு ,புதிய சாலைத்திட்டங்களை கொண்டு வர எடப்பாடி அரசு முயற்சி செய்வதை மக்கள் கவனித்து வருவதையும் , சாதரணமாக மக்களிடம் பேசினாலே யாரும் புரிந்து கொள்ளலாம் .

பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கியதன் மூலம் ஐந்தாண்டு ஆட்சி எனும் கிரிக்கெட் டெஸ்ட் மேட்சில் 50 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக தொடர்ந்து விளையாடி வருகிறார் என்பதே உண்மை நிலவரம்.

வன்னியர்களுக்கான திட்ட உதவிகள், சட்ட சபையில் ராமசாமி படையாட்சி உருவ பட திறப்பு ,கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் என தொடர்ந்து செயல்பட்டு வன்னிய மக்களை கவர்ந்து வருகிறார் ஈபிஎஸ். பாமகவின் வாக்கு வங்கியையே அசைத்து விட்டிருக்கிறார் எடப்பாடி. உண்மையில் வரும் லோக்சபா தேர்தலில் பாமக தான், அதிமுக உடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட வேண்டிய நிலையே இன்று உள்ளது.

அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளையோ அல்லது சிபிஐ ரைடுகளை பற்றியோ பொது மக்களிடம் பெரிய விவரங்கள் இல்லை . சில விவரமான கட்சி சாராத கிராம மக்கள், திமுகவின் ஊழல் வழக்குகளுக்கே இன்னும் தண்டனை கிடைக்காத போது , அதிமுக மேல் வெறும் குற்றசாட்டுகள் மட்டுமே உள்ளது என்றும் அந்த குற்றசாட்டுகளை நாங்கள் நம்பவில்லை என்றே கூறியதையும் கேட்க முடிகிறது.

உண்மையில் திமுக முதலான எதிர்க்கட்சிகளின் தீவிர பாஜக , பிரதமர் மோடி மீதான எதிர்ப்பு பிரச்சாரம் , எடப்பாடிக்கே நன்மை கொடுத்துள்ளது என்பதே களத்தில் காணும் உண்மை .

சாதாரண கிராம மக்கள் முதல், அமெரிக்க்காவில் வேலை செய்யும் பொறியாளர்கள் வரை, தமிழக பிரச்சனைக்கு காரணம் பாஜக தானே , நாம் மாநில அரசை எப்படி குறை சொல்ல முடியும் என்றே கருதுவது வியப்பளிக்கவில்லை.
இந்த மோடி, பாஜக எதிர்ப்பின் தீவிரத்தை ஆளும் அதிமுக அரசே அறுவடை செய்யப்போகிறது என்பது திமுக முதலான எதிர்க்கட்சிகள் இன்னும் உணராத வரை , எடப்பாடி அரசுக்கு மகிழ்ச்சியே!!

மேலும் பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் வாரிசு அரசியல் அதிமுகவில் இல்லை என்பதை மக்கள் கவனித்து வருகிறார்கள். உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளும் திமுவின் உத்தி தீவிர திமுக தொண்டர்களுக்கே பிடிக்கவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

உதயநிதி பங்கு கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கிராம மக்கள் கேட்ட கேள்விகளை திமுகவினரால் எதிர் கொள்ள முடியவில்லை.அந்த காணொளியே ,கள நிலவரம் திமுகவினர் நினைத்த மாதிரி இல்லை என்பதற்கு ஒரு சான்று .

திமுக கையில் எடுத்த எடப்பாடி மீதான கொலைப்பழியை கொங்கு மக்கள் , தங்கள் சமூகத்தின் மீதான குற்றச்சாட்டாகத்தான் கருதுகிறார்கள். திமுகவின் மீது கடுமையான எதிர்ப்பு மனநிலை கொங்கு மண்டலத்தில் எழுந்துள்ளது என்பதே உண்மை.

மத்திய அரசின் பொதுப் பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்ததன் மூலம், திமுக கன்யாகுமரி மாவட்டத்தில் பெரிய எதிர்ப்பை சந்திக்க போகிறது. கடுமையான சொற்களால் ஆன திமுக எதிர்ப்பு சுவரொட்டிகள் கன்யாகுமரி மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டள்ளன. இந்த சூழலை பாஜகவுடன் சேர்ந்து , அதிமுகவும் பயன்படுத்தும் என்பது மாவட்ட நிலவரம்.

மேலும் கடந்த  திமுக -காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த ஜல்லிக்கட்டு தடை, காவிரி ஆணையம் , மீத்தேன் திட்டங்கள் போன்ற பிரச்சனைகளை மத்திய அரசின் துணையோடு முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம், இன்று எதிர்க்கட்சிகள் எந்த பிரச்சனையையை குறித்து அதிமுக அரசை எதிர்ப்பது என்று குழம்பி வருவதையும் மக்கள் கவனித்து வருகிறார்கள்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த கலவரம்- துப்பாக்கி சூடுகளை அடுத்து இனி பொது மக்கள், மீண்டும் ஸ்டெர்லைட் திறக்கப்பட்டால் போராடுவார்களா என்பதே சந்தேகம் தான். ஸ்டெர்லைட்ஆலையை மீண்டும் திறக்க சொல்லி, தூத்துக்குடி மக்கள் போராட்டம் , மனு குடுப்பது என இன்று கள நிலவரம்  ஸ்டெர்லைடக்கு ஆதரவாக மாறி வருவதையும் எடப்பாடி அரசு கவனித்து வருகிறது.

சென்ற மாதம் ரெண்டாவது உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தி, தானும் ஒரு ஆளுமையாக பரிமளிக்க முடியும் வாரிசு என்கிற நிலைக்கே எடப்பாடி செல்வதை நம்மால் காண முடியும் .

கடந்த சில மாதங்களுக்கு முன் வரை , தொலைக்காட்சி பேச்சாளர்கள் , இப்போது தேர்தல் வந்தால் திமுக தனித்தே நின்று வெற்றி பெரும் என்று சொல்லி கொண்டிருந்தார்கள் .தொலைக்காட்சிகளில் வந்து தங்கள் சொந்த கருத்துக்களையே மக்களின் மனநிலை என்று பேசி செல்லும் யாரையும் மக்கள் பொருட்படுத்தவில்லை போலவே தெரிகிறது.

ஆக ,ஆக என்று மேடைகளிலோ, நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளிலோ உளறாமல் , சாதாரண மனிதராய் பேசி வரும் முதல்வர் எடப்பாடியை யாருமே வெறுக்கவில்லை என்கிற நிலையில் இருந்து , இன்று மக்கள் அவரின் பேச்சை கூர்ந்து கவனித்து விரும்ப தொடங்கியிருக்கிறார்கள் என்பதே கள யதார்த்தம் .

 

 

 

(Visited 1493 times, 1 visits today)
28+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *