வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ – சவுக்கு எனும் ஊழல் எதிர்ப்பு மாயை

மோடி மாயை எழுதிய சவுக்கு எனும் ஊழல் எதிர்ப்பு மாயை – பாகம் 2.

தனது மோடி மாயை புத்தகத்தில், சிதைந்த  அமைப்புகள் என்ற தலைப்பில், மத்திய அரசு, சிபிஐ, ரிசர்வ் வங்கி, உச்ச நீதிமன்ற நிர்வாகங்களில் தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் தோழர் சவுக்கு.

ஆளும் அரசு, அரசு நிர்வாகங்களில் தலையிடுவது உண்மையா?

உதாரணத்துக்கு தமிழ்நாட்டில், ஒவ்வொரு புதிய அரசு அமையும்போதும், அரசின் ஆதரவாளர்கள் மற்றும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், பல்வேறு வாரியங்களின் தலைவர்களாக நியமிக்கப்படுவதுண்டு. இதன் பின்னணி என்னவென்றால், தங்கள் ஆதரவாளர்களுக்கு பதவி கொடுக்கவேண்டியது மட்டுமல்ல. முந்தைய அரசின் விசுவாசமான அதிகாரிகளால், அரசின் முக்கியத் தகவல்கள் வெளியாகாமல் தடுப்பதற்கும் மற்றும் அரசுக்குக் கெட்ட பெயர் வராமல் பார்த்துக்கொள்வதற்கும்தான்.

இது வாரியங்கள் மட்டுமல்ல, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடங்கி, காவல் துறை உதவி ஆய்வாளர் வரை நீளும் என்பதை, முன்னாள் காவல்துறை பணியாளர் தோழர் சவுக்கு, வசதியாக மறந்துவிட்டார்.

சரி. பாஜக, இந்த அமைப்புகளின் நிர்வாகங்களில் தலையிடுகிறதா? பார்க்கலாம்.

இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பாஜக ஆதரவாளர் நியமிக்கப்பட்டதாக ஆரம்பிக்கிறார். இந்த நிறுவனம் குறித்து இதுவரை எத்தனை பேர் அறிந்திருப்போம் என்ற கேள்விதான் முதலில் எழுகிறது. ஆர்பிஐ, உச்சநீதி மன்றம் குறித்த தனது வலுவில்லாத குற்றச்சாட்டுகளை, சினிமா தொடர்பான நிறுவனத்தில் இருந்து தொடங்குகிறார். நல்லது. அதன் முன்னாள் தலைமை இயக்குனர்களாக, கிரிஷ் கர்நாட், யுஆர் மூர்த்தி போன்றோர் இருந்தார்களாம். புதியதாக நியமிக்கப்பட்டவர் பாஜக ஆதரவாளராகத் தெரிந்த தோழர் சவுக்குக்கு, இவர்கள் இருவரும் தீவிர பாஜக எதிர்ப்பாளர்கள் என்ற உண்மை தெரியாமல் போனது விந்தை. இவர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான அரசு நிறுவனங்களில், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், பாஜக எதிர்ப்பு சிந்தனை உடையவர்கள். அதாவது, ஏதோ ஒரு அரசியல் சாயம் உடையவர்கள். ஆனால், அது சவுக்கு கண்ணுக்குத் தெரியாது.

அடுத்ததாக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். இடது சாரி சிந்தனைகளுக்கு இடமளிக்கும் முக்கியமான முற்போக்கு பல்கலைக்கழகமாம். இடதுசாரி என்றால் முற்போக்கு எனும் மாயை, முன்னாள் காம்ரேட் சவுக்கையும் பிடித்து ஆட்டுவதில் வியப்பில்லை. இடதுசாரிக்கு ஆதரவென்றால், அங்கும் அரசியல் சாயம் வந்துவிடுகிறது. எப்படி ஒரு கல்வி நிறுவனத்தில் அரசியல் பிரிவினைகள் இருக்கலாம் எனக் கேட்க வேண்டிய சவுக்கு, முற்போக்கு என்று சாமரம் வீசுகிறார். சரி அது பரவாயில்லை. அந்த பல்கலைக் கழகத்தின் முற்போக்கு சிந்தனையைக் கொஞ்சம் பார்க்கலாம்.

 

 

2013 ம் ஆண்டு பிப்ரவரியில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல் குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக, சரியாக மூன்று வருடங்கள் கழித்து, 2016 பிப்ரவரியில் கண்டன நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. எத்தனை முற்போக்கு பாருங்கள். மூன்று வருடங்களுக்குப் பிறகு, அரசின் ஒரு கல்வி நிறுவனத்தில், தேசத் துரோக வழக்கில் தூக்கிலிடப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக நிகழ்ச்சி நடத்துவதுதான் முற்போக்கு என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? புள்ளி விவரங்களுடன் பேசும் சவுக்கு, மறந்தும் கூட, இந்த வருடங்களை எங்குமே குறிப்பிடவில்லை என்பதில் இருக்கும் உள் நோக்கம் நமக்குத் தெரியாதா என்ன.

அந்த நிகழ்ச்சியில், கன்னையா குமார் என்ற மாணவர் பேசினாராம். அந்தக் கூட்டத்தில், அடையாளம் தெரியாத சிலர், இந்தியாவுக்கு எதிராகவும், தனி காஷ்மீர் வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பினார்களாம். அடையாளம் தெரியாத சிலருக்கு அரசு கல்வி நிறுவனத்தில் என்ன வேலை இருக்க முடியும் என்ற கேள்வி, தோழருக்கு வராததில் ஆச்சரியமில்லை.

இதையடுத்து, கன்னையா குமார் உள்ளிட்ட நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டார்களாம்.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களில், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும், தேசியக் கொடி ஏற்ற வேண்டும் எனவும், தேச பக்தி இல்லாத மாணவர்கள் வெளியேற வேண்டும் என்றும் கூறினார் என்று, பெரும் வலியுடன் குறிப்பிடுகிறார் தோழர் சவுக்கு.

பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தி, அதனால் தூக்கிலிடப்பட்ட தீவிரவாதிக்கு ஆதரவாக, மூன்று வருடங்களுக்குப் பிறகு கூட்டம் நடத்தும் இடதுசாரி முற்போக்குகளை, தேச பக்தியுடன் இருங்கள் என்று சொல்வது, எத்தனை பெரிய நிர்வாகத் தலையீடு. ஆம். பாஜக, அரசு, அமைப்புகளின் நிர்வாகங்களில் தலையிடுகிறது என்ற ரீதியிலான வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ வகையிலான குற்றச்சாட்டுகள் உண்மையே.

ஆர்பிஐ, உச்சநீதிமன்ற நிர்வாகத் தலையீடுகள், இனி வரும் கட்டுரைகளில்.

(Visited 904 times, 1 visits today)
19+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *