செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.
பெரியவர்கள், சான்றோர்கள், அறிஞர்கள் இருக்கும் தலைவனது அவையில், அவர் அறியும் படியாக, மற்றவரோடு காதருகே பேசும் ரகசியமும், ஒருவர் முகம் பார்த்துத் தம்முள் சிரிப்பதையும் தவிர்த்து நடத்தல் அவசியமாகும்!
ஒரு சபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அடிப்படை நாகரீகம் மட்டுமல்ல; தனி மனிதப் பண்புகளின் நேர்மையை வலியுறுத்தும் தொன்மையை உள்ளடக்கிய நூல் இது என்பதற்கு ஒவ்வொரு குறளும் சான்றாக இருக்கிறது.
சபையில் நேரிடையாக தனக்கிருக்கும் சந்தேகத்தை, தெளிவின்மையை, ஐயப்பாட்டைப் போக்கிக் கொள்ளும் திறன் அற்றவன், இப்படித்தான் என யூகித்தவற்றை அடுத்தவனிடமும் சொல்லிப் புரளியை உண்டு பண்ணுவது போன்ற நாகரீகமற்ற செயல்தான் காதோடு பேசுவதும், அது சார்ந்து சேர்ந்து நகைப்பதுமாம். இந்த மாதிரியான செயல் செய்பவர்களை உடல்மொழியே அவர்கள் யார் எனக் காட்டி விடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நெஞ்சத்தில் தெளிவும், நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் அற்ற வஞ்சகர்களின் வெஞ்சினத்தைக் காட்டும் செயலே, இத்தகைய செயல் என்பதை உறுதிப்படுத்தி விடும்.
ஆகவே, அரசவைக்குச் சொல்லப்பட்ட குறளாக இருப்பினும், அன்றாட வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய குறளாகவே கொள்ளக் கூடிய சிறந்த குறள் இது.
– சுரேஜமீ