கேபிள் பேக்கேஜ்கள் எனும் கேடான பெருங்கொள்ளைகள்

ட்ராய் (TRAI) எனும் மத்திய அரசு நிறுவனம் டிவி சேனல்கள் ஒளிபரப்புவதிலும், அதற்கான கட்டணம் வசூலிப்பதிலும் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஒரு புதியச் சட்டத்தைப் போட்டு உள்ளது. இந்தப் புதியச் சட்டத்தின்படி, பொதுமக்களின் தலையில் பேக்கேஜ்கள் என்கிற பெயரில் சேனல்களைத் திணிக்காமல், மக்களின் விருப்பப்படியான சேனல்களை மட்டுமே ஆப்பரேட்டர்கள் தந்தாக வேண்டும். இந்தச் சட்டத்தை எதிர்த்து, கேபிள் ஆப்பரேட்டரகள் இந்தியா எங்கும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ட்ராயின் இந்தச் சட்டத்தை அவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

இந்த எதிர்ப்பிற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் இரண்டு:

காரணம் 1. ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாகச் சேனல்களைப் பிரித்துக் கொடுப்பது சாத்தியம் இல்லை.

காரணம் 2. ஒவ்வொரு சேனல்களுக்கும் தனித்தனியாகப் பணம் கட்டினால், இப்போது தருவதை விட பல மடங்கு அதிக அளவு கட்டணத்தைப் பொதுமக்கள் தரவேண்டி இருக்கும்

இந்த இரண்டிலுமே உண்மை இல்லை.

காரணம் 1: DTH (Direct to Home) தரும் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் (Distribution platform operators (DPOs)) மற்றும் கேபிள் ஆப்பரேட்டர்கள் தரும் ஸெட் டாப் பாக்ஸில் இங்கனம், ஒவ்வொரு வீட்டிற்கும், வீட்டினர் விரும்பும் சேனல்களை மட்டும் பிரித்துத் தரும் வசதி இருக்கிறது.

இந்த வசதியின் அடிப்படையில்தான் ஒவ்வொரு சேனல்களின் பார்வையாளர் ரேட்டுகள் கணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு குடும்பமும் எந்தச் சேனலை, எந்த நேரத்தில், எவ்வளவு நேரம் பார்த்தது, எந்த விளம்பரங்கள் அதிகம் பார்க்கப் படுகின்றன என்பதுவரை பிரித்து அறியவும் முடிகிறது. இதன் அடிப்படையில் அதிக விளம்பரங்கள் பெறச் சேனல்கள் போட்டி போடுகின்றன.

“எங்களது அலறல்களையே மக்கள் அதிகம் பார்க்கிறார்கள், மற்றச் சேனல்களின் உளறல்களை அல்ல” என அலறல்ராப் கேஸ்ஸ்வாமி தன் சேனலில் கத்தி கத்திச் சொல்கிறார். இப்படி அவர் அடித்துப் பேசுவதற்குக் காரணம், நீங்கள் உங்கள் வீட்டில் மாடு ஆட மண்ணாங்கட்டி ஓட நிகழ்ச்சிக்கும், மாக்கள் அரங்க நிகழ்ச்சிக்கும் நடுவில் அவரது அலறல்ச் சேனலைப் பார்த்த விஷயம் அவருக்குத் தெரிந்து போவதுதான்.

டெக்னாலஜியின் வளர்ச்சியில் ஒவ்வொரு வீடும் விரும்பும் சேனல்களைப் பிரித்துக் கொடுப்பதோ, அதற்கான சேவையைச் சரியாகச் செய்வதோ, பணம் வாங்குவதோ மிக எளிதான விஷயம். ஆப்பரேட்டர்கள் சொல்வது போலப் பிரச்சினைக்கு உரிய விஷயங்களே அல்ல.

இரண்டாவது பொய்ப் பிரச்சாரத்தைப் பார்ப்போம்.

காரணம் 2: இப்பொய்யின்படி, முன்பை விட மக்கள் அதிக அளவுப் பணம் கட்ட வேண்டி வரும்.

மக்களிடம் அதிகப் பணம் வாங்க விரும்பாதக் கேபிள் ஆப்பரேட்டர்களின் சமூக நேர்மை உங்களை மெய் சிலிர்க்கச் செய்திருக்கும், உண்மையாக இருந்திருந்தால். இச் சட்டத்தை ஆப்பரேட்டர்கள் எதிர்க்கிறார்கள். அவர்கள் எதிர்ப்பதற்கான காரணம், அவர்கள் இஷ்டப்படி காசைக் கூட்ட முடியாது என்பதால்தான்.

ஒரு ஏரியாவில் சில சேனல்களுக்கு டிமாண்ட் அதிகம் இருக்கும்போது அந்தச் சேனல்களுக்கான விலையை வருடம் தோறும் கூட்டிக் கொண்டே போகிறார்கள் கேபிள் ஆப்பரேட்டர்கள். ஆனால், எந்தச் சேனலுக்கு எந்த அளவுப் பணம் வாங்குகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. கேட்டால், “உங்களுக்கு முன்னூறு சேனல்கள் தருகிறோம், நானூறு சேனல்கள் தருகிறோம்” என்று சொல்லி வந்தார்கள். ட்ராயின் இந்தப் புதிய விதி கேபிள்/டி.டி.எச். ஆப்பரேட்டர்களின் இந்தக் களவைத் தடுத்து உள்ளது. ஒவ்வொரு டிவி சேனலும் நேரடியாகத் தங்களது சேனலுக்கான கட்டணத்தை அறிவிக்கச் செய்துள்ளது. அந்தக் கட்டணத்தோடு, வரியும் சேர்த்துக் கொடுத்தால் போதும் என்று சொல்லி விட்டது ட்ராய்.

உதாரணமாகச் சிலக் கணக்குகளைப் போட்டுப் பார்ப்போம்.

மத்திய ஆளும் கட்சிக்கு ஆதரவான சேனலான டைம்ஸ் நவ் மாதம் 4 ரூபாய்கள் கட்டணம் எனச் சொல்கிறது என வைத்துக் கொள்வோம். அந்தச் சேனலை சாதாரண ஒளிபரப்பில் (SD) பார்த்தால் 1.3 ரூபாய் வரியும், உயர் ஒளிபரப்பில் (HD) பார்த்தால் 2.6 ரூபாய் வரியும் சேர்த்துக் கொடுப்பதே போதுமானது.

டைம்ஸ் நவ் சேனலோடு போட்டி போடும் மற்றச் சேனல்கள், போட்டிக்காக, அந்தச் சேனலைவிடக் குறைந்தக் கட்டணத்தைத்தான் விதிப்பார்களே தவிர, அதிகக் கட்டணம் விதிக்கத் தயங்குவார்கள். எனவே, டைம்ஸ் நவ் எந்தக் கட்டணம் விதிக்கிறதோ அதேக் கட்டணத்தைத்தான் “N”ehru “D”ynasty TV சேனலும் வசூலிக்கும் என்பதால், உங்களுக்குச் செலவு குறைந்து லாபமே கிடைக்கும்.

ஒரு குடும்பம் தன் வாழ்நாளில் 20 சேனல்களுக்கு மேல் தினமும் பார்ப்பதில்லை என்பதுதான் உண்மை. அப்படிப் பார்த்தால், வெறும் 20 சேனல்களை மட்டுமே நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள் என வைத்துக் கொள்வோம். இச்சட்டத்தின்படி, 20 X 6.6 (4+2.6) = 132 ரூபாய்கள்தான் மாதம் தோறும் உங்களுக்குச் செலவாகும்.

மாதா மாதம் ரூபாய் 800லிருந்து 1200 வரை உங்களிடம் வசூலித்துக் கொண்டிருந்த கேபிள் ஆப்பரேட்டர்கள் வெறும் ரூபாய் 150லிருந்து 200 ரூபாய்கள்தான் வசூலிக்கும் நிலை உருவாவதை விரும்பவில்லை.

இதில், ஏதேனும் சிலச் சேனல்கள் அதிக அளவுக் கட்டணத்தை அறிவித்தால்கூட நீங்கள் இப்போது தரும் கட்டணத்தினை விட அப்புதிய கட்டணம் அதிகமாக அமையும் வாய்ப்புகளும் குறைவே.

உதாரணமாக, தனது சேனல்க் கட்டணமாக, 4 ரூபாய்க்குப் பதிலாக 20 அல்லது 30 ரூபாயை விஜய் டிவி போன்றச் சேனல்கள் அறிவிக்கின்றன என்று வைத்துக் கொள்வோம்.

ஆபாசமான, போலி உணர்ச்சியைத் தூண்டும், மடமைக் கருத்துகளின் பிரச்சாரத்தை விரும்பும், அடிமைப் பொதுமக்கள் இப்போது தருவதைவிட அதிக அளவுப் பணத்தைக் கொடுத்தேனும் தங்களை அடிமையாக வைத்துள்ளச் சேனல்களைப் பார்க்கத்தான் போகிறார்கள்.

அவர்களுக்கும்கூட மாதம்தோறும் 20 X 32.6 (30 + 2.6) = 652 ரூபாய்கள்தான் ஆகும். இது தற்போது தரும் அதீதக் கொள்ளைக் கட்டண அளவுதான்.

இந்தக் கணக்கும்கூட 20 சேனல்களுக்கும் அதிக விலை வைத்துக் கணிக்கப் பட்ட ஒன்றே. நடைமுறையில், மக்கள் அதிக விலை உள்ள சேனல்களோடு, குறைந்த விலை உள்ள சேனல்களையும் சேர்த்துப் பார்க்கப் போவதால் நிச்சயம் மாதாந்திரச் செலவு குறையவே செய்யும்.

அதனால்தான், கேபிள்/டி.டி.எச். ஆப்பரேட்டர்கள் உங்கள் தலையில் பேக்கேஜ்களைக் கட்டவே முயல்வார்கள். இப்போது உங்கள் வீட்டு டிவியில் சேனல்கள் சரிவரத் தெரியாமல் வைப்பார்கள். நீங்கள் தொடர்பு கொள்ள முயன்றால் தொலைபேசியை எடுக்கவே மாட்டார்கள். தெருவில் பார்த்துச் சட்டையைப்  பிடித்துக் கேட்டால், “மத்திய அரசு கொடூரமானச் சட்டத்தைப் போட்டு உங்களது கழுத்தை நெறிக்கிறது. நாங்கள் என்ன செய்வது ? இது மக்களுக்கான போராட்டம், எதிர்ப்பு” என்று பதில் சொல்லித் தப்பிப்பார்கள்.

 

 

அவர்களது எதிர்ப்பின் காரணமாக, ட்ராய் தனது சட்டத்தில் ஓரிரு திருத்தங்களையும் செய்துள்ளது. அந்தத் திருத்தங்களின் படி, ஆப்பரேட்டர்கள் பல நிரந்தரக் கட்டணங்களை அறிவிக்கலாம். அதாவது, உதாரணத்திற்கு, ரூபாய் 200, ரூபாய் 300, ரூபாய் 500, ரூபாய் 800 எனப் பண-அடிப்படைப் பேக்கேஜ்களை அறிவிக்கலாம். ஆனால், அந்தப் பேக்கேஜ்களில்கூட மக்கள் அவர்கள் விரும்பிய சேனல்களை மட்டும்தான் தரவேண்டும் என்று விதி செய்தது.

ஆப்பரேட்டர்கள் இதனை ஏற்கவில்லை. ஏற்கப் போவதும் இல்லை. வழக்கம்போல, சேனல்-எண்ணிக்கை அடிப்படைப் பேக்கேஜ்களை உங்கள் தலையில் கட்டவே முயல்வார்கள்.

“இந்தப் பேக்கேஜை நீங்கள் தேர்ந்தெடுத்தால், வெறும் 450 ரூபாய்தான். வரி கட்ட வேண்டாம். அந்தப் பேக்கேஜைத் தேர்ந்தெடுத்தால் வெறும் 400 ரூபாய்தான். வரி தனியாகக் கட்ட வேண்டாம். எத்தனை பேக்கேஜ்கள் வேண்டும் ?” என்பார்கள்.  நீங்கள் வெறும் 150 ரூபாய் மட்டுமே செலவாக வேண்டிய விஷயத்துக்கு, 400 ரூபாய்கள் கொடுக்க முடிவு செய்வீர்கள். வரி கட்ட வேண்டாம் என்று ஆசை காட்டி உள்ளார்களே. அந்த 400 ரூபாய்ப் பேக்கேஜில் உள்ள ஒவ்வொருச் சேனலும் எவ்வளவு கட்டணம் விதிக்கிறது என்பதை எல்லாம் உட்கார்ந்து ஆராயவா போகிறீர்கள் ? கட் அவுட்டுக்குப் பால் ஊற்றும் நம் கலாச்சாரத்தில் ஆராய்ச்சிகளும், அலசல்களும் அவசியமற்றவை ஆயிற்றே.

ட்ராயின் இந்தப் புதியச் சட்டத்தின்படி, கட்டணச் சேனல்களோடு, பல இலவசச் சேனல்களையும்கூட நீங்கள் சேர்த்துப் பார்க்கலாம். “என்ன ! இலவசச் சேனல்கள் இருக்கின்றனவா ?” என நீங்கள் வாய் பிளந்து கேட்பது தெரிகிறது. ஆம். உங்கள் கேபிள் ஆப்பரேட்டர்கள் அது பற்றி இதுவரை உங்களுக்குத் தெரியாமல் வைத்திருந்தார்கள். இப்போது உங்களுக்கு இந்த உண்மையும் தெரிந்து உள்ளது. ஒவ்வொருச் சேனலும் எவ்வளவு கட்டணம் விதிக்கிறது என்பதும் தெரிய வந்து உள்ளது. இவ்வகையில் மத்திய ஆளும் பாஜக அரசு மக்களுக்கு மிக அருமையான வசதியைச் செய்து தந்துள்ளது. ஆப்பரேட்டர்கள் பரப்பும் பொய்யானது, மக்கள் குறைந்த எண்ணிக்கைச் சேனல்களைத் தேர்ந்தெடுப்பார்கள் எனும் அடிப்படை உண்மையை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கிறது.

தற்போது தரும் நூற்றுக்கணக்கான சேனல்களை வைத்துக் கணக்குப் போட்டு, ஒவ்வொரு குடும்பமும் தற்போது தருவதைவிட அதிக அளவுப் பணம் தர வேண்டி இருக்கும் என உங்களைப் பயமுறுத்தி வருகின்றனர் ஆப்பரேட்டர்கள். இப்படி அதிக அளவுச் சேனல்களைத் தருகிறோம் என்று இன்றுவரை கணக்குக் காட்டி பொதுமக்களிடம் கொள்ளை அடித்துக் கொண்டு இருந்தனர் ஆப்பரேட்டர்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் அநியாயமாகப் பணம் கூட்டுவதை விரும்பாமல், நீங்கள் எதிர்த்துக் கேள்வி கேட்டால், “உங்களுக்கு முன்னூறு சேனல்கள் தருகிறோம், நானூறு சேனல்கள் தருகிறோம்” என்று கணக்குச் சொல்லி வந்தார்கள்.

இப்படிச் சேனல்களின் எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டவே அபத்தமான, மக்கள் வேண்டும் எனக் கேட்காத, மொக்கையான சேனல்களை எல்லாம் சேர்த்து “பேக்கேஜ்”கள் எனத் தலையில் கட்டி வந்தார்கள். நானூறு சேனல்கள் தருகிறோம், ஐநூறு சேனல்கள் தருகிறோம் எனக் கணக்குக் காட்டினர்.

கேபிள் ஆப்பரேட்டர்களின் இந்தக் களவைப் புரிந்துகொண்ட சில அமைப்புகள், அவர்களுடையச் சேனல்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றன. 24 மணி நேரமும், “ஆண்டவர் வருகிறார், அவருடைய மதத்துக்கு மாறாவிட்டால் நீ நாசமாகப் போய்விடுவாய். உலகம் அழியப் போகிறது. சாத்தான் உனக்குக் கெட்டது செய்கிறான். படைத்தவனை வணங்காமல், படைப்பை வணங்கும் நீ சாத்தானைக் கும்பிடுகிறாய். உனது துயரங்களுக்குக் காரணம் இதுவே.” என்று பிரச்சாரம் செய்யும் இந்தச் சேனல்கள் அனைத்தும் இலவசச் சேனல்களே. ஒன்றுகூடக் கட்டணச் சேனல்கள் இல்லை.  இந்தச் சேனல்களை எல்லாம் சேர்த்துக் கணக்குக் காட்டித்தான், கேபிள்/டி.டி.எச். ஆப்பரேட்டர்கள் உங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள். நேற்றுவரை. இந்தக் கொள்ளைக்கு எல்லாம் ஆப்பு வைத்துள்ளது மத்திய பாஜக அரசு.

விலையுள்ளச் சேனல்களில் எவை வேண்டும், எவை வேண்டாம் எனத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இப்போது உங்கள் கையில். இந்தச் சுதந்திரம் விலையில்லாத இலவச் சேனல்கள் தேர்விலும் இருக்கிறது.  இலவசச் சேனல்களை மட்டுமே ஒரு குடும்பம் தேர்ந்தெடுத்தால்கூட, மத்திய அரசின் இந்தச் சட்டத்தின்படி, வெறும் 130 ரூபாய்கள் + வரி மட்டுமே அந்தக் குடும்பம் தர வேண்டி இருக்கும். மக்களின் நலனுக்காக தற்போதைய மத்திய அரசு செய்து வரும் அருமையான பல விஷயங்களுள் இதுவும் ஒன்று. மக்கள் நேரடியாகக் கவனித்து, அனுபவித்து, இது நன்மை என்பதை நேரடியாகவே அனுபவிக்க வழி செய்யும் சட்டம் இது.

ஆனால், இச்சட்டத்தால் பாஜகவுக்கு எந்த லாபமும் ஏற்படப் போவதில்லை என்பதுதான் நிதர்சனம். ஏனெனில், பாஜக ஆளாத மாநிலங்களில் இந்தச் சட்டத் திருத்தம் செல்லுபடியாகுமா, நடைமுறைக்கு வருமா என்கிற கேள்வி இருக்கிறது. மாநில அரசாகக் காங்கிரஸோ, கம்யூனிஸ்ட்டுகளோ இருந்தால், அவர்கள் கேபிள்/DTH ஆப்பரேட்டர்களின் கொள்ளைக்கு ஆதரவாகவே செயல்படுவார்கள். ட்ராயின் இந்த விதிகளைப் புறக்கணித்து விட்டு, இப்போது வரை உள்ள “பேக்கேஜ்கள்” எனும் கொள்ளைத் திட்டத்தையே உங்களின் தலையில் கட்டுவார்கள்.

அந்தப் பேக்கேஜ்கள் ஒவ்வொன்றிலும் அழைக்கிறார்-ஆண்டவர் சேனல்களும்,  “எங்களுக்கு ஃபோன் போட்டு ஓட்டை மிக்ஸி வாங்கினால் ஓட்டையே இல்லாத சல்லடை இலவசம்” என்று ஆசைகாட்டும் சேனல்களும் சேர்க்கப்பட்டு, உங்கள் தலையில்தான் மிளகாய் அரைப்பார்கள்.  இதனைத் தவிர்க்கத்தான் மத்திய அரசு இப்படி ஒரு நல்லச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ஆனால், இச்சட்டம் வேண்டாம் என உங்களையே சொல்ல வைக்கும் நிலைமைதான் இங்கு நிலவுகிறது. ஏனெனில், உங்களுக்கு உண்மை தெரியப் போவதில்லை.

பாஜகவின் தலைவர்களுக்கோ, தொண்டர்களுக்கோ இந்த விஷயங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லும் ஆர்வம் இல்லை. ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் விருப்பமும் இல்லை. அதனால், மீண்டும் பேக்கேஜ்கள் எனும் கொள்ளைத் தொழில் புதிய வடிவத்தில் வரும். இலவசச் சேனல்களை அதிகம் வைத்து, கொஞ்சூண்டு கட்டணச் சேனல்களையும் வைத்து, “உங்களுக்கு நான்கு பேக்கேஜ் வேண்டுமா, இல்லை ஆறு பேக்கேஜ் வேண்டுமா ? வெறும் ஆறாயிரத்து ஐநூற்றி ஐம்பது ரூபாய்கள் மட்டும்தான்” என ஆப்பரேட்டர்கள் தேனொழுகத் தேர்ந்தெடுக்கும் உரிமை தருவார்கள் உங்களுக்கு.  அண்டை வீட்டானின் பொறாமைக்காக பேங்கில் லோன் வாங்கிச் செலவுகள் செய்து விட்டு, அரசு தள்ளுபடி செய்யக் காத்திருப்பவர்கள், இந்த டிவி பேக்கேஜ் விஷயத்தில் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.

மாநில அரசியல்வாதிகளும் கேபிள்/டி.டி.எச். ஆப்பரேட்டர்களும் ஒன்று சேர்ந்து அடிக்கும் கொள்ளைக்கான பழியை பாஜகவின் மேல்தான் எதிர்க்கட்சியினர் போடுவார்கள்.  பெரும்பாலான சேனல்கள் இந்திய விரோத எண்ணம் கொண்டவை என்பதால், இந்தியரான உங்களிடம் இருந்து மிக அதிகப் பணம் பிடுங்கவே முயல்வார்கள்.  அதற்கானப் பழியையும் ஆளும் மத்திய அரசின் மேல் சுமத்துவார்கள்.

பாஜகவின் தரப்பில் இருந்து உண்மையைச் சொல்லப் பிராந்திய மாநில மொழிகளில் எந்தச் சேனல்களும், ஊடகங்களும் இல்லாததால் அனைவருக்கும் சொல்லப்பட்டப் பொய்யை மட்டுமே மக்கள் அறிவார்கள். உண்மை அவர்களுக்குத் தெரியப் போவதில்லை.  உண்மை அறியாத நீங்கள், கொள்ளையர்களின் கையில் வீட்டுச் சாவியைக் கொடுத்து, அவர்களிடம் இருந்து ரிமோட் கண்ட்ரோலைப் பெற்றுக் கொள்வீர்கள்.

அந்த ரிமோட் கண்ட்ரோல் ஆட்டுவிப்பது உங்களைத்தான்.

 

எண்ணமும் எழுத்தும்

ஆனந்த கணேஷ்
(Visited 125 times, 1 visits today)
9+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *