பிப்ரவரி 16 – வானியல் ஆய்வாளர் மேக்நாத் சாஹா நினைவு தினம்

இந்திய விஞ்ஞானிகளில் வானியல் ஆய்வு குறித்து சமீபத்தில் (அதாவது கடந்த இரு நூற்றாண்டுகளில்) ஆய்வு செய்தவர் சிலரே. அவர்களில் முக்கியமானவர் மேக்நாத் சாஹா. இவர் நட்சத்திரங்கள் குறித்த வேதியியல் இயற்பியல் பண்புகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு Saha ionization equation என்ற சமன்பாட்டின் மூலம் வான் இயற்பியல், வான் வேதியியல் ஆகியவற்றில்  அடிப்படைக் கோட்பாடுகள் அமைத்தார்.

1893, அக்டோபர் 6ஆம் நாள் தாக்காவில் பிறந்த மேக்நாத் பள்ளிக் கல்வி கற்ற பின் குடும்பச் சூழல் காரணமாக உயர்கல்வி கற்கச்சிரமப்பட்டார். பின்னர் பகுதிநேர வேலை பார்த்தபடி கல்லூரியில் சேர்ந்தார். தாக்கா கல்லூரி கல்விநிலையத்தில் இருந்து இவர் சுதேசி இயக்கத்தை ஆதரித்ததால் நீக்கப்பட்டார். பின்னர் ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அங்கே படிப்பை முடித்த பின் கல்கத்தா மாநிலக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்தார்.

1923ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்து 1938ல் அங்கிருந்து பேராசிரியராக விலகினார். பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார். அங்கே 1956 வரை கல்வி கற்பித்து வந்தார். இந்நிலையில் இவரது ஆராய்ச்சிகள் குறித்து அறிந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள் மேக்நாத்தை லண்டன் இம்பீரியல் கல்லூரிக்குப் பரிந்துரைத்தனர். அங்கே தன் ஆராய்ச்சிகளைச் சமர்பித்து 1927ல் முனைவர் பட்டம் பெற்றதோடு ராயல் சொசைட்டியிலும் சேர்த்துக்கொள்ளபட்டார்.

Dr-Meghnad-Saha.jpg

இவரது ஆசிரியர்களாக ஜகதீஷ் சந்திர போஸ், பரஃபுல்ல சந்திர ராய், சாரதா பிரசன்ன தாஸ் ஆகியோர் இருந்தனர். இவரது வகுப்புத் தோழர்கள் சத்தியேந்திர நாத் போஸ், ஞான் கோஷ், ஜே.என்,முகர்ஜி ஆகிய பிரபல அறிஞர்கள். இவர் கணித மேதை அமிய சரண் பானர்ஜியின் நெருங்கிய நண்பர்.

மேக்நாத்தை நோபல் பரிசுக்கு 1930ல் தேபேந்திரநாத் போஸ், சிசிர் குமார் மித்ரா இருவரும் பரிந்துரைத்தனர். ஆனால் நோபல் குழு இவரது கண்டுபிடிப்புகள் சிறந்த அறிவியல் பிரயோகம் ஆனால் கண்டுபிடிப்பு அல்ல என்று முடிவு செய்தது. 1937, 1940 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்க விஞ்ஞானி ஆர்தர் காம்ப்டன் இவரை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்தார். 1939, 1951, 1955 ஆகிய ஆண்டுகளில் சிசிர் குமார் மித்ரா மீண்டும் மீண்டும் சிபாரிசு செய்தார். ஆனால் நோபல் குழு தனது முந்தைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

நாட்டில் கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, ஆரோக்கியம் ஆகியவற்றைப் பேண அரசியல்வாதிகள் சரிவரமாட்டார்கள். பாராளுமன்றத்தில் அறிவியல் அறிந்தோர் பேசவேண்டும் என்று இவர் எண்ணம் கொண்டார். நண்பர்களிடம் பேசி 1951 தேர்தலில் மக்களவைக்குப் போட்டியிட்டார்.  இவரை எதிர்த்து நின்றவர் காங்கிரசின் பெரும் தலைவர், பணபலம், ஆள்பலம் கொண்ட பிரபுதயாள் ஹிமத் சிங்கா. இவர் அப்போது புத்தகம் எழுதிக் கொண்டிருந்தார். அந்த பதிப்பகத்தாரிடம் தேர்தலில் நிற்க செலவுக்குத் தேவை என்று 5000 ரூபாய் முன்பணம் பெற்று தேர்தலில் நின்றார். 16% அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பாராளுமன்றத்தில் கல்வி, அறிவியல், அணுசக்தி, திட்டமிடல், நீர்வளம், பேரிடர் மேலாண்மை என்று இவர் பல விஷயங்களில் விவாதங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார். Meghnad Saha in Parliament என்ற புத்தகம் இவரது பேச்சுக்களில் திட்டங்களில் இருக்கும் ஓட்டைகளை இவர் சுட்டிக்காட்டிப் பேசிவந்ததால் அரசுத் தரப்பு இவர் பேசுகிறார் என்றாலே ஒரு வித எச்சரிக்கையும் சற்றே எரிச்சலும் அடைந்ததைக் குறிப்பிடுகிறது.

நதிகள் குறித்த அனைத்துத் திட்டங்கள், கமிட்டிகளில் மேக்நாத் சாஹா இடம்பெற்றார். பிப்ரவரி 16, 1956ல் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஒரு திட்டக் குழு கூட்டத்துக்குச் சென்ற போது கூட்டம் நடக்கவிருந்த அறையில் இருந்து சில தப்படிகள் தூரத்தில் மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது. கல்கத்தாவுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு மக்களின் அஞ்சலிக்குப் பின் எரியூட்டப்பட்டது.

(Visited 24 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *