அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெறாது என்று பா.ஜ.க.வின் மூத்தத் தலைவா் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தொிவித்துள்ளாா்.
செய்தியாளா்கள் சந்திப்பில் பா.ஜ.க.வின் மூத்தத் தலைவா் சுப்பிரமணியன் சுவாமியிடம் சில கேள்விகளை முன்வைத்தனா். அப்போது அவா் கூறுகையில், மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாது. சசிகலா, டிடிவி தினகரன் அணியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்தால் மட்டுமே அதிக இடங்களில் வெற்றி பெற முடியும்.
மாறாக பா.ஜ.க. – அ.தி.மு.க., டிடிவி தினகரன், தி.மு.க. என மும்முனையில் போட்டியிட்டால் அது தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்துவிடும். பா.ஜ.க. தனித்து நின்றால் சிறிது ஓட்டுகள் கிடைக்கும், அடுத்த தோ்தலில் பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது.
இல்லையென்றால் பா.ஜ.க. டிடிவி தினகரனுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கருத்து தொிவித்துள்ளாா்.
ஆரம்பத்திலிருந்தே சுப்பிரமணியன் சுவாமி சசிகலா தரப்பைத் தான் ஆதரவு தெரிவித்துவருகிறார். பன்னீர் செல்வம் பதவி விலகிய போது சசிகலா முதல்வராக தமது ஆதரவைத் தெரிவித்தார். சசிகலா தரப்பு முதல்வரானவுடன், பாஜகவில் உள்ள தலைவர்கள் சொன்னதைக் காட்டிலும் தான் சொன்னதே நடந்தது என்று தெரிவித்தார். ஆனால் எடப்பாடி தினகரனைக் கட்சியை விட்டு துரத்தியது, அதன் பிறகும் எடப்பாடியும், பன்னீர் செல்வமும் இணைந்து சசிகலா தரப்பை அதிமுகவிற்குள் வரவிடாமல் தடுத்தது என நடந்த நிகழ்வுகளில் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துகள் பொய்த்துப் போயிருந்தது. இன்று வரையிலும் இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி இரண்டையும் பன்னீர் செல்வமும், எடப்பாடியும் கைப்பற்றி தாங்கள் கீழிருந்து அரசியலுக்கு மேல் வந்தவர்கள் என்பதை நிருபித்துக் காட்டி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் சுப்பிரமணியன் சுவாமி ஆதரிக்கும் தினகரனை சீண்டத் தான் கட்சிகள் இல்லை என்பதெல்லாம் சுவாமிக்குத் தெரியவில்லையா என்று தமிழக பாஜக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.