பிப்ரவரி 19 – தமிழ்த்தாத்தா உ வே சா அவர்கள் பிறந்ததினம்
அழிந்து போகும் நிலையிலிருந்த பழங்காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்த உவேசா என்றழைக்கப்படும் உ. வே. சாமிநாதையர் இருபதாம் நூற்றாண்டில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் தலையாயவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார். சங்க இலக்கியங்களைப் பற்றி இன்று நாம் அறிந்து கொள்வதற்கு உ.வே.சா காரணமாவார்.
பிப்ரவரி 19, 1855ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் உள்ள “உத்தமதானபுரம்” எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர், சரசுவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது தந்தை ஒரு இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடம் கற்றார்.
பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திருச்சிராப்பள்ளி மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதையர், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.
உவேசா சிறுவயதில் விளையாட்டிலும் இசையைக் கற்பதிலும் ஆர்வமுடையவராயிருந்தார். தமது சிறிய தந்தையாரிடம் இயற்கையாகவே இசையில் ஆர்வமுள்ள உவேசா இசை பயின்றாா். ஆங்கிலம் கற்றுக் கொள்வது அக்காலத்தில் மிகவும் பெருமைப்படும் செயல். உவேசாவிற்கு சிறுவயதில் ஆங்கில எழுத்துக்கள் மட்டும் கற்கும் வாய்ப்பு கிட்டியது. சடகோபையங்காரே தமக்கு தமிழில் ஆர்வம் உண்டாகும் வண்ணம் முதன் முதலில் கற்பித்த ஆசிரியர் என்று உவேசா தெரிவிக்கிறார்.
உவேசாவின் தந்தை இவருக்கு நல்ல கல்வி கற்பித்து சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத் தரவேண்டும் என்பதில் தீவிர ஆர்வமும் கவலையும் கொண்டிருந்தார். பல தமிழ் நூல்களை அவருக்கு முறையாகக் கற்பித்தார். சிதம்பரம்பிள்ளை என்னும் தமது தந்தையின் நண்பரிடம் திருவிளையாடற்புராணம் நூலைக்கற்றார். நன்னூல், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களையும் சமகாலத்தில் இயற்றிய பிள்ளைத்தமிழ், கோவை முதலிய இலக்கியங்களையும் இது போன்றே தமிழறிஞா்களிடம் பாடம் கேட்டும் புலமையடைந்தார்.
இடையில் சிலகாலம் விருத்தாச்சலம் ரெட்டியாரிடம் உவேசா தமிழ் கற்றார். பாடல் எழுதுவதன் நுணுக்கங்களை அங்கு கற்றார். பின்னர் மஹாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் சேர்ந்து பாடம் கற்கத் துவங்கினார். அப்பொழுது திருவாடுதுறை ஆதினத்தின் அறிமுகமும் ஆசியும் கிடைத்தது. திருவாடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக சுவாமிகளை ஆசிரியருடன் சென்று சந்தித்து, அங்கு ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்லும் வாய்ப்பு கிடைத்தை பெருமையுடன் நினைவு கூர்கிறார் உவேசா. இசையுடன் பாடல்களை பாடி விளக்கம் அளித்த உவேசா, ஆதீனகர்த்தரிடம் நற்பெயர் பெற்றார்.
ஆதீனத்தில் பல புலவர்களுடன் கலந்துரையாடவும், ஆசிரியர்கள் நடத்திய பாடமும் கேட்கும் சந்தர்பமும் கிடைத்தது. அதீனகர்த்தர் ஐயரவர்களுக்கு புத்தகங்கள் பரிசு கொடுத்து அன்பு பாராட்டினார். இது தமது ஆசிரியருக்கு மெத்த மகிழ்ச்சியைக் கொடுத்தது என்று உவேசா கூறுகிறார். இது உவேசாவிற்க்கு மிகுந்த பலத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. பிற்காலத்தில் மடத்தலைவருடன் மிகவும் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் அதனால் அரிய தமிழ்த்தொண்டு ஆற்றவும் இது வழிவகுத்தது. உவேசா தமது ஆசிரியர் திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் அளவிட முடியாத பற்றும், பாசமும் பக்தியும் கொண்டிருந்தார்.
உவேசா திருவாடுதுறையில் தங்கியிருந்த பொழுது தாமும் விரும்பிய நூல்களை கற்றுக்கொண்டு மாணவர்களுக்கும் நூல்களைக் கற்பித்து வந்தார். செய்யுள் இயற்றுவதிலும் பயிற்சி செய்து தமது திறமையை வளர்த்துக் கொண்டார்.திருவாடுதுறை ஆதினத்தின் ஆதரவில் தாம் நல்ல முறையில் வாழ முடியும் என்ற நம்பிக்கை உவேசாவிற்க்கு இருந்தது. அப்பொழுது 1880 ஆம் வருடம் உவேசா வாழ்வில் மிகப்பெரிய திருப்பம் நிகழ்ந்தது. தியாகராச செட்டியார் அவர்கள் கும்பகோணம் கல்லூரியில் தமது வேலையை தாம் விட்டுவிட முடிவுசெய்து விட்டதாகவும். அந்த வேலைக்கு உவேசாவைப் பரிந்துரைத்துள்ளதாகவும் ஆதீன கர்த்தரிடம் கூறினார். திகைப்படைந்த சுவாமிகள் உவேசாவை அனுப்பும் எண்ணமில்லை என்று மறுத்து விட்டார். திருவாடுதுறை மடத்தின் அன்னம் என் உடம்பில் எவ்வளவு ஊறியுள்ளது என்பதை செட்டியார் நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை என்று பதிவு செய்கிறார் உவேசா. சன்னிதானம் இசைவு தெரிவித்தால் கல்லூரி வேலைக்குச் செல்வது என்று முடிவு செய்தார். செட்டியாரின் விடாமுயற்சி பலித்தது. உவேசாவால் மடத்திற்கு அநேக நன்மை இருந்தாலும் அவாின் எதிா்காலத்தை மனதில் கொண்டு சுவாமிகள் அவரை மடத்திலிருந்து அனுப்ப இசைவு தெரிவித்தார்கள்.
அக்காலத்தில் நூல்களை அச்சில் பதிப்பதற்கு முன்பு ஊர்ஊராகத் தேடிக் கிடைக்கும் நகல்களையெல்லாம் பெற்று அவைகளனைத்தையும் நன்று படித்து ஒப்பு நோக்கி வேறுபாடு இருக்குமானால் எது சரியானது என்று தீர்மானித்துப் பதிப்பிக்க வேண்டும். சிதைந்த பகுதிகளின் முழுவடிவத்தையும் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு சொல்லின் பொருள் முழுவதும் விளங்காமல் உவேசா எதையும் பதிப்பிப்பதில்லை. இவர் பிரதிகளைத்தேடித் தேடி தமிழகம் முழுவது அலைந்த விவரம் இவரது சுயசரிதமான என் சரித்திரத்தில் காணக்கிடைக்கும். நூற்றுக்கணக்கான மைல்களை உவேசா பயணம் செய்துள்ளார். தங்குவதற்கு, உணவு உண்பதற்கு வசதியில்லாத போதும், ஊர் ஊராக, கிராமம் கிராமமாக சென்று தெரிந்தவர்கள் வீட்டில் தங்கி கிடைத்ததை உண்டு தம் கருமமே கண்ணாக பண்டைய தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்.
நூல்களைப் பதிப்பிக்கத் தேவையான நிதி வசதியின்மையால் இவர் பல பெரியவர்களை அணுகி முன்பணம் பெற்றுக்கொண்டு பணியைத் தொடங்கினார். நூலை அச்சிடும்பொழுது ஒய்வில்லாமல் உவேசா உழைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொருநாளும் அச்சுப்பிரதிகளைத் திருத்திக்கொடுப்பது, கையெழத்துப் பிரதியைப் படிப்பது, போன்று பல வேலைகள் இருந்தன. திருவாடுதுறை சென்று தேசிகரிடம் அச்சு நகல்களைக் காண்பித்த பொழுது அவர் மிக்க மகிழ்ச்சியடைந்து “சாமிநாதையர் மடத்திலேயே இருந்தால் இந்த மாதிரியான சிறந்த காரியங்களைச் செய்ய இடமுண்டா? நல்ல வித்துக்கள் தக்க இடத்தில் இருந்தால் நன்றாகப் பிரகாசிக்கும்”. என்று குறிப்பிட்டு மகிழ்ந்துள்ளார்.
உ.வே.சா. கருத்தாழத்தோடு நகைச்சுவை இழையோடப் பேசும் திறமை உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா ஆற்றிய சொற்பொழிவே சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும் எனும் நூலாக வெளியிடப்பட்டது. உ. வே. சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது. இது தவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார். இந்திய அரசு பெப்ரவரி 18, 2006ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து மீட்டுப் பதிப்பித்துத் தந்தவர் என்னும் பெருமை உடையவர் உ.வே.சா. தன்னுடைய சொத்துக்களையும் விற்று பல தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பித்தார். இத்தகைய அரிய சேவைக்காக அவர் பட்ட சிரமங்களோ ஏராளம். இருந்தும் மனம் தளராது ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.
இவர் ஏட்டுச் சுவடிகளைப் படியெடுத்துப் பதிப்பிக்க மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்துவிட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருள் விளங்கும்படி விவரித்துப் பதிப்பித்தார். ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி, இந்த நூல்களை குறித்த முழுபுரிதலுக்கும் வழிவகுத்தார். அவர் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர் மறைந்த காலத்தில் உயர்ந்து நின்ற தமிழின் நிலைக்கும் பெரிய வேறுபாடுள்ளது.
ஏப்ரல் 28, 1942 அன்று உவேசா இயற்கை எய்தினார்.