நாயுடுவுக்கு நோ சொன்ன விவசாயிக்கு நிரந்தர கல்தா? ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திராவில் விவசாயி ஒருவர் மர்ம மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்து நீதி விசாரணை கோரியுள்ளன. முதல்வர்  சந்திரபாபு நாயுடு குண்டூர் மாவட்டம் கொண்டவீடு என்ற இடத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்தார். அங்கே அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க ஹெலிபேட் அமைக்க அரசு ஆவன செய்தது. இதற்காக கோடேஸ்வர ராவ் என்ற கோட்டையா என்பவரது நிலம் தேர்வு செய்யப்பட்டது. அந்த 2 ஏக்கர் நிலத்தில் பப்பாளி மரங்கள் இருப்பதால் அவற்றை வெட்டி ஹெலிபேட் அமைக்க கோட்டையா மறுத்ததாகவும், இதனால் ஆத்திரம் கொண்ட போலீஸார் அவரை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மோசமாகக் காயமடைந்த கோட்டையா உயிரிழந்தார். சம்பவத்தைக் கேள்விப்பட்டு பாஜக மாநில தலைவர் கண்ணா லக்ஷ்மிநாராயணா மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புகார் தெரிவித்து மத்திய அரசு விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார். ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மூன்று நபர் உண்மை அறியும் குழுவை அமைத்துள்ளார். இதற்கு ஆந்திர சட்ட மேலவை எதிர்கட்சித்தலைவர் உமா ரெட்டி வெங்கடேஸ்வரலு தலைமை ஏற்றுள்ளார். ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் நீதி விசாரணை கோரியுள்ளார்.

தாக்கப்பட்ட விவசாயியை மருத்துவமனை கொண்டு செல்லக்கூட போலீஸ் அனுமதிக்கவில்லை என்றும் முதல்வர் வந்து போன பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டனர் என்றும், மருத்துவமனை கொண்டு சென்றிருந்தால் கோட்டையா காப்பற்றப்பட்டிருப்பார் என்றும் ஆந்திர பிஜேபி தலைவர் லக்ஷ்மிநாராயணா கூறியுள்ளார்.

போலீஸார் இது குறித்துப் பேசுகையில் கோட்டையா குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்தனர். காவல் கண்காணிப்பாளர் ராஜசேகர பாபு கூறுகையில் முதல்வர் வருவதற்கு நான்கு மணி நேரம் முன்பு குடும்பத் தகராறு காரணமாக கோட்டையா பூச்சி மருந்து குடித்துவிட்டதாகவும் அதனாலேயே அவர் இறந்ததாகத் தெரிவித்தார். போலீஸார் கோட்டையாவை அடிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.  தெலுங்கு தேசக் கட்சியும் குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை என்றே வலியுறுத்தியிருக்கிறது.

சந்திரபாபு நாயுடு கோட்டையா குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் கருணைத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் முதல்வரின் தாராள மனது வெளிப்படுவதாக தெலுங்கு தேசக் கட்சியினரும், பாதிக்கப்பட்ட குடும்பத்தைக் பணம் கொடுத்து வாயடைக்கப் பார்க்கிறார் என்று எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டுகின்றனர்.

உண்மை வெளிவருமா என்பதே தற்போது நம்முன் உள்ள 5 லட்ச ரூபாய் கேள்வி.

(Visited 16 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *