பிப்ரவரி 24 – படக்கதை வித்தகர் ஆனந்த் பாய் நினைவு தினம்

1967ஆம் ஆண்டு. தூர்தர்ஷனில் ஒரு விநாடி வினா போட்டி நடைபெற்றது. ஆங்கிலத்தில். அதில் பங்கேற்ற பள்ளிக்குழந்தைகள் கிரேக்கப் பழங்கதைகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டாண் டாணென்று சரியான விடையளித்தனர். ஆனால் ராமாயணம், மஹாபாரதம் உள்ளிட்ட நம் நாட்டு இதிஹாச புராணங்களில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பேந்தப் பேந்த விழித்தனர். “ராமனின் தாயார் பெயர் என்ன?” என்ற கேள்விக்கு கௌசல்யா என்ற பெயர் கொண்ட பெண் குழந்தை விழித்தபடி “பாஸ்” என்று சொன்னாள். பலரும் குழந்தைகளின் கிரேக்கக் கதையறிவைப் அறிவைப் பாராட்டினர். ராமாயணம், மஹாபாரதம் தெரியாதது பெரிய விஷயமில்லை என்பது போலத் தோள்குலுக்கி நகர்ந்தனர். ஒருவர் மட்டும் இது சரியில்லை என்றும் இந்தப் போக்கை மாற்றவேண்டும் என்றும் யோசித்தார்.

அவர் 38 வயதான டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் புத்தக வெளியீட்டுப் பிரிவில் பணியாற்றிய ஆனந்த் பாய்.

1929, செப்டம்பர் 17 அன்று கர்நாடகத்தில் கர்கலா என்ற ஊரில் பிறந்த ஆனந்த், இரண்டு வயதில் பெற்றோரை இழந்தார். தாய் வழித் தாத்தாவால் வளர்க்கப்பட்ட ஆனந்த் 15 வயதில் தாத்தாவை இழந்தார். உறவினர் உதவியுடன் பம்பாய் சென்று அங்கே ஓரியண்ட் பள்ளியில் படிப்பை முடித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் வேதித்தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். சிறு வயதிலேயே காமிக்ஸ் எனப்படும் படக்கதைகளில் ஆர்வம் கொண்டவர் ஆனந்த்.  ஆனால் அவை ஆங்கிலத்தில் இருந்தன. ஐரோப்பிய வரலாறு என்ற விஷயத்தைத் தவிர வேறெதுவும் அவற்றில இல்லை. சில சமயங்களில் நீதிக்கதைகள் என்று ஆங்கிலக் கதைகளைப் படக்கதை ஆக்கி வைத்தனர்.

1954ல் மானவ் என்ற படக்கதைப் புத்தகத்தைத் தன் 25ஆவது வயதில் தொடங்கினார். ஆனால் அது பணமின்றி வியாபாரமின்றி நின்று போனது. பின்னர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் புத்தக வெளியீட்டுப் பிரிவில் பணியாற்றினார். அங்கே இந்திரஜால் காமிக்ஸ் என்று இந்தியப் பெயர் கொண்ட புத்தகம் வந்தது. ஆனால் அதில் ஃபாண்டம், மாண்ட்ரேக், அலெக்ஸாந்தர் என்று ஐரோப்பிய அமெரிக்கக் கதைகளே வந்தன. அவற்றை வெளியிட பெரும் பணத்தைக் கொடுத்து உரிமம் பெற்றனர். நம் நாட்டுக் கதைகளை காமிக்ஸ் ஆக்கலாமே என்ற ஆனந்தின் ஆலோசனை “எவன் படிப்பது?” என்ற எகத்தாள பதிலோடு புறந்தள்ளப்பட்டது.

1967 தூர்தர்ஷன் சம்பவத்துக்குப் பிறகு ஆனந்த  டைம்ஸ் ஆஃப் இந்தியா வேலையை விட்டார். ஒரு வெறியோடு ராமாயணத்தை குழந்தைகளுக்கான கதையாக எழுதி படங்கள் வரைந்து பல புத்தக வெளியீட்டாளர்களிடம் காட்டினார். “விக்கிற மாதிரி எதாவது கொண்டாய்யா. இதெல்லாம் பெருசுங்க போற காலத்துப் புண்ணியம்னு கேக்கிற கதை. அதை படிக்கிற பிள்ளைகளுக்குச் சொல்லி என்ன சாதிக்கப் போறே?” என்பதே அவருக்கு அனைவரும் சொன்ன பதிலின் சாரம். ஜி.எல்.மிர்சந்தானி என்ற மனிதரிடம் பேசினார். அவர் யோசித்துவிட்டு “நம் நாட்டுக் கதைகளைக் கேட்டுத்தான் நானும் வளர்ந்தேன். ஆனால் இப்போது மேற்கத்திய மோகம் ஆட்டிப் படைக்கிற நிலையில் இது விற்குமா தெரியவில்லை. ஆனால் ஒரு கடமை செய்தேன் என்ற நிறைவுக்காக காசு போடுகிறேன். அதிகம் எதிர்பார்க்காதே.” என்று சொன்னர்.

அது போதும் நானே எழுதி, அச்சிட்டு, வெளியிடவும் செய்கிறேன். விற்பனை வேலையும் நானே செய்கிறேன். அமர் சித்திரக் கதா என்று பெயர் வைக்கலாம்.” என்றார் ஆனந்த். மிர்சந்தானி பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. பணம் கொடுத்தார். கணக்கு நோட்டில் எழுதிவைத்துவிட்டு மறந்து போனார். திரும்பி வராது என்று நம்பிக்கை அவருக்கு. ஆனந்த உட்கார்ந்து கதை எழுதினார், படம் வரைந்தார், அச்சுக்குக் கொடுத்து சரிபார்த்து வெளியிட்டார். விற்பனைக்கு அலைந்தார். மிர்சந்தானி கொஞ்சம் ஆட்கள் மூலம் புத்தகங்களைச் சந்தையில் தள்ளிவிட்டார். ஆசிரியர்கள் முகம் சுளித்தனர். பெற்றோர் இதனால் பள்ளிப்பாடத்தில் மார்க் கிடைக்குமா என்றனர். வியாபாரிகள் இது களுத விக்காது நீங்க வேற என்று முகாரி பாடினர். அச்சடித்ததில் பாதி விற்றது. முதலாண்டு கணக்கில் நட்டம்.

கவலையோடு மிர்சந்தானியைப் போய்ப் பார்த்தார் ஆனந்த் பாய். அங்கே தான் சிறந்த வியாபாரி என்று நிரூபித்தார் மிர்சந்தானி. முன்னரே அமர் சித்திரக் கதா விற்கும் கடைகளில் ஆள் வைத்து  புத்தகம் வாங்கும் பெற்றோரிடம் பேசியிருந்தார். பிள்ளைகளுக்குக் கதை பிடிக்கிறது. எந்தப் பிரச்சனைகளும் இல்லாத நம்மூர் கதை. அமெரிக்கக் கதை போல ஏடாகூடமாக ஏதும் இல்லை. எங்களுக்கும் மகிழ்ச்சி என்று பலர் கருத்துச் சொல்லியிருந்தனர். “நீ எழுதி படம் போட்டு அச்சடிக்கிற வேலையைப் பார். வியாபாரம் என் பொறுப்பு. இது விற்கும்.” என்றார் ஆனந்திடம். பள்ளி விழாக்களில் தன் ஆட்களை வைத்து அமர் சித்திரக் கதை பற்றிப் பேச வைத்தார். பேச்சு வளர வளர பிள்ளைகளும் அது சூப்பர் புத்தகமாக்கும் என்று சொல்ல மற்ற பிள்ளைகள் எனக்கும் எனக்கும் என்றன.

இப்படி பம்பாய் சுற்று வட்டாரத்தில் விற்பனையை அதிகரித்த பின் பம்பாயில் சக்கை போடு போடும் புத்தகமாக்கும் என்று விளம்பரத்துடன் பிற பகுதிகளுக்கு அனுப்பினார். ஆனந்தின் கதை சொல்லும் நேர்த்தியும், பிள்ளைகளின் வயதுக்கேற்ற புரிதலுடன் கதை சொன்ன விதமும் அமர் சித்திரக் கதையை சந்தையில் நிலை நிறுத்தின. இந்திய இதிஹாசம் புராணம் கர்ண பரம்பரைக் கதை என்று 439 கதைகளை காமிக்ஸில் வெள்யிட்டது பாய்-மிர்சந்தானி கூட்டணி. லாபம் கொட்டியது.

Uncle anant pai.jpg

1969ல் ரங்க் ரேகா ஃபீச்சர்ஸ் என்ற பெயரில் இந்திய படக்கதை, கார்டூன் கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார் ஆனந்த் பாய். 1980ல் டிங்கிள் என்று ஒரு புத்தகம் கொண்டு வந்தார் ஆனந்த். அது குழந்தைகளுக்கான சிறுகதைகள், சிரிப்புத் துணுக்குகள், கல்வி சம்பந்தமான கட்டுரைகள் என்று களை கட்டியது. 2017ஆம் ஆண்டு வரை 669 தலைப்புகளில் கதைப்புத்தகங்கள் விற்று சாதனை படைத்தது டிங்கிள். இந்தப் புத்தகங்கள் மூலம் ஆனந்த பாய் குழந்தைகளால் பாய் மாமா (Uncle Pai) என்று அழைக்கப்பட்டார். எந்தப் பிரச்சாரமும் இல்லாமல் குழந்தைகளாகக் கொடுத்த பாசமிகு பட்டம் இது என்பது பெருமைக்குரிய விஷயம்.

1989ல் சிம்பு காமிக்ஸ் என்ற பெயரில் ஒரு புத்தகத்தைத் தொடங்கினார். ஆனால் அது பெரிய வெற்றி பெறவில்லை. 2000ஆவது ஆண்டில் தன்னுடைய ரங்க் ரேகா ஃபீச்சர்ஸ் நிறுவனத்தை ஐதராபாத்தில் உள்ள கலர் சிப்ஸ் என்ற அனிமேஷன் கம்பெனிக்கு விற்றார் ஆனந்த் பாய். குழந்தைகளுக்கும் பதின்வயதினருக்கும் பிரத்தியேகமாக How To Develop Self-confidence How to Achieve SuccessHow To Develop A Super Memory என்ற புத்தகங்களை எழுதியுள்ளார் ஆனந்த் பாய். இதுதவிர அமர் சித்திரக் கதையில் வந்த சில கதைகளைத் தேர்ந்தெடுத்து ஒலிப்புத்தகங்களாக வெளியிட்டார். அவற்றில் கதை சொல்லியாக இவரே குரல் கொடுத்திருந்தார். அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப் போனது.

2011ல் பிப்ரவரி 24 அன்று மாரடைப்பால் ஆனந்த் பாய் காலமானார். அவரது நினைவைப் போற்றும் வகையில் அமர்சித்திரக் கதை பாணியிலேயே ஆனந்தின் கதையை அனிமேஷன் படமாக வெளியிட்டது ACK Media என்ற மும்பைக் கம்பெனி. அமர் சித்திரக் கதையின் அனிமேஷன் வடிவங்களை அந்தக் கம்பெனி உரிமம் பெற்று வெளியிட்டு வருகிறது. 17 செப்டம்பர் 2011 அன்று கூகிள் தன் தளத்தில் டூடிள் என்ற பெயரில் ஆனந்தின் படத்தை காமிக்ஸ் படம் போல வெளியிட்டு மரியாதை செய்தது.

நம் பாரம்பரியத்தைப் பேணிக்காத்த பெருமகன் ஆன்ந்த் பாயின் நினைவைப் போற்றுவோம்.

தாய் மண்ணே வணக்கம்.

 

(Visited 37 times, 1 visits today)
5+

About The Author

You might be interested in

Comment (1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *