பிப்ரவரி 25 – ஹிந்து தேசியவாதி பல்ராஜ் மதோக் பிறந்ததினம்

ஹிந்து தேசியவாதிகள் பலர் நம் நாட்டில் தோன்றியுள்ளனர். சத்திரபதி சிவாஜி முதல் சுவாமி தயானந்தர், சுவாமி விவேகானந்தர் என்று பிரதமர் மோடி வரை பிரபலமான ஹிந்து தேசியவாதிகளின் வரிசை உண்டு. இது தவிர போர்வீரர்கள் போல கடமை செய்துவிட்டுக் கரைந்து போகும் பல்லாயிரம் பேர் உள்ளனர். சற்றே பிரபலமான ஹிந்து தேசியவாதி ஒருவரின் பிறந்ததினம் இன்று. கஷ்மீரத்தில் ஷேக் அப்துல்லாவின் இஸ்லாமிய மயமாக்கும் திட்டத்தை முறியடிக்க ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தலைவர் குருஜி கோல்வால்கர் கண்டெடுத்த சிங்கம் பல்ராஜ் மதோக் இன்று பிறந்தார்.

1920, பிப்ரவரி 25 அன்று தற்போது கில்கிட்-பலிஸ்தான் என்றழைக்கப்படும் பகுதியில் ஸ்கார்டு என்ற இடத்தில் பிறந்தார் பல்ராஜ். இவரது தந்தை ஜகன்னாத் மதோக் மேற்கு பஞ்சாபில் குஜ்ரன்வாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் கஷ்மீர அரசில் பணியேற்று லடாக் பகுதியில் வேலை பார்த்துவந்தார். அவர் ஆரிய சமாஜத்தில் ஈடுபாடு கொண்டவர். ஸ்வாமி தயானந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். பல்ராஜ் வளர்ந்தது ஜம்மு, லடாக் பகுதிகளில். இவர் கல்விக்காக குடும்பம் ஸ்ரீ நகருக்கு இடம் பெயர்ந்தது. வேல்ஸ் இளவரசர் கல்லூரியுடன் சேர்ந்த பள்ளியில் பள்ளியிறுதி வரை படித்தார். பிறகு லாகூரில் DAV கல்லூரியில் 1940ல் வரலாற்றில் பட்டம் பெற்றார்.

படிக்கிற காலத்தில் 1938ல் லாகூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டார். ஆரிய சமாஜத்தின் கொள்கைகள் போலவே சங்கத்தின் கொள்கைகள் இருந்தமையால அதில் இணைந்து கொண்டதாக பல்ராஜ் மதோக் பின்னாளில் சொன்னார். 1942ல் சங்கத்தின் முழுநேரப் பிரச்சாரக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஜம்முவில் இரண்டாண்டுகள் பணி செய்த பிறகு ஸ்ரீநகர் சென்றார். அங்கே DAV கல்லூரியில் ஆசிரியப்பணி செய்து கொண்டே சங்கப்பணியும் செய்தார். ஸ்ரீ நகரில் ஷாகா தொடங்கி நடத்தினார்.

தேசப் பிரிவினையின் போது அகதிகளாக இந்துக்கள் ஸ்ரீநகருக்கு வரவே அவர்களை இந்தியப்பகுதி ஜம்மு-கஷ்மீரத்தில் ஸ்வயம்சேவகர்கள் உதவியுடன் தங்க வைத்தார். 1947ல் DAV அமைப்பின் மேலாண் அறாங்காவலர் மெஹர் சந்த் மஹாஜன் என்பவர் கஷ்மீர அரசின் பிரதமரானார். இதனால் அகதிகளுக்கு உதவ பல்ராஜ் அரசிடம் சுலபமாக அணுக முடிந்தது. அகதிகள் மூலம் பாகிஸ்தான் ஜம்மு கஷ்மீரத்தின் மீது படையெடுக்க இருப்பதை அறிந்து ராணுவம், அரசு என்று பலருக்கும் அறிவித்தார். அதோடு நில்லாமல் கைகளில் கிடைத்த ஆயுதங்களுடன் 200 ஸ்வயம்சேவகர்களைத் திரட்டி ஸ்ரீ நகர் விமான நிலையத்தை பாதுகாக்க ரோந்து சுற்றினார்.  ராணுவம் முழுதாக வந்து விமான நிலையத்தை கையில் எடுத்துக் கொள்ளும் வரை உள்ளூர் பாகிஸ்தான் ஆதரவாளர்களிடம் இருந்து விமான நிலையத்தைக் காத்த பணி வெகுவாகப் பாராட்டப்பட்டது.

ஜம்மு-கஷ்மீரம் இந்தியாவுடன் இணைந்த பிறகு ஷேக் அப்துல்லா கஷ்மீரப் பிரதமரானார். பல்ராஜ் மதோக் ஜம்மு சென்றார். அங்கே பிரஜா பரிஷத் என்ற கட்சியில் சேர்ந்து கொண்டார். சங்கத்தின் ஜம்மு-கஷ்மீர மாநிலத்தின் தலைவர் (சங்கசாலக்) பிரேம் நாத் டோக்ராவும் அந்தக் கட்சியில் சேர்ந்தார். இவர்கள் ஜம்மு-கஷ்மீரம் இந்தியாவுடன் பிற சமஸ்தானங்களைப் போல முழுதாக இணைவதே தேவை என்று போராடினர். “நேரு-அப்துல்லா ஒப்பந்தப்படி சேர்ந்தும் சேராத திரிசங்கு நிலை தேவையில்லை. ஜம்மு-கஷ்மீரம் இந்தியாவின் பகுதியே. அதை முழுமையாக இணைக்க வேண்டும்.” என்று சொன்னார் மதோக். அப்துல்லா இதை எதிர்த்தார். மதோக் கஷ்மீரத்துக்குள்ளே வரக்கூடாது என்று தடை விதித்தார்.

1948ல் கடும் போராட்டங்களுக்குப் பிறகு மதோக் தில்லி சென்றார். அங்கே பஞ்சாப் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆசிரியப்பணி செய்தார். அந்தக் கல்லூரி மேற்கு பஞ்சாபில் இருந்து தப்பி அகதிகளாக வந்த மாணவர்களின் கல்விக்காக ஏற்படுத்தப்பட்டது. பின்னர் தில்லி DAV கல்லூரியில் ஆசிரியப்பணி ஆற்றினார்.

1951ஆம் ஆண்டு ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மாணவப் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதே ஆண்டு ஷ்யாமா பிரசாத் முகர்ஜி பாரதிய ஜன சங்கத்தைத் தொடங்கிய போது அதில் தம்மை குருஜியின் ஆசிகளுடன் இணைத்துக் கொண்டார். ஜன சங்கத்தின் பஞ்சாப், தில்லி கிளைகளைத் தொடங்கினார் மதோக். 1954ல் கட்சியின் செயற்குழுவில் இணைந்தார். அங்கே காங்கிரஸ்காரர் மௌலி சந்திர ஷர்மா சற்றே இடது தாக்கத்துடன் காங்கிரஸ் போலவே கட்சியை வடிவமைக்கச் செய்த வேலைகளை முறியடித்து ஹிந்து தேசியவாதம் என்பதை கட்சியின் அடிநாதமாக எழுதி வைத்தார்.

இந்தச் சிக்கல் காரணமாக ஷர்மா பிரச்சனை கிளப்ப கட்சியின் தில்லி கிளை ஹிந்துத்வர்களை முற்றிலுமாகக் கொண்டு சீரமைக்கப்பட்டது. 1961 தேர்தலில் தில்லியில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தேர்வானார் மதோக். 1966-67ல் ஜனசங்கத்தின் தலைவரானார். 1967 பொதுத் தேர்தலில் ஜனசங்கம் நாடெங்கும் 35 இடங்களில் வென்றது. இது கட்சியின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்திருந்த நிலையில் ஸ்தாபன காங்கிரஸ், ஸ்வதந்திரா கட்சி ஆகியவற்றை இணைத்து தேசியவாத சக்திகளின் கூட்டணிக்கு முயன்றார் மதோக். ஆனால் அது செயலுக்கு வரவில்லை.

Image result for balraj madhok photo

சங்கத்தில் இருந்து கட்சியில் சேர்ந்த தீவிர ஹிந்துத்வர்களில் ஒருவரான அடல் பிஹாரி வாஜ்பாயி காங்கிரஸின் எந்த வடிவத்துடனும் சேர்வதை எதிர்த்தார். ஸ்வதந்திரா கட்சி ஹிந்துத்வத்தை ஏற்றால் சேருவோம் என்றார். ராஜாஜி, காமராஜர், நிஜலிங்கப்பா போன்ற பழம்பெரும் தலைவர்களிடம் இப்படி கரட்டுவழக்காகப் பேச முடியாது என்றும் சேர்ந்த பிறகு சிறிது சிறிதான முயற்சிகள் மூலம் அவர்களை இந்து தேசியவாதத்தை ஏற்கச் செய்யலாம் என்றும் மதோக் வாதாடினார். “அந்த விஷயத்தில் ராஜாஜியை நம்ப முடியாது, நம்மை அவர் பக்கம் மாற்றிவிடுவதில் வல்லவர். மேலும் காமராஜர், நிஜலிங்கப்பா போன்றோர் தீவிர காந்தியவாதிகள். ஹிந்து தேசியத்தை ஏற்பார்களா என்பது சந்தேகமே” என்றார் வாஜ்பாயி. இதனால் மதோக் கனவுகண்ட வலதுசாரிக் கூட்டணி ஏற்படாது போனது.

கோபம் கொண்ட மதோக் வாஜ்பாயி, அத்வானி போன்றவர்கள் இடதுசாரிகள் ஆகிறார்களோ என்ற சந்தேகப்படும்படி பேசினார். மேலும் சங்கம் கட்சியை அளவுக்கதிகமாகக் கட்டுப்படுத்துகிறது என்றார். குருஜி இதை ஒப்பவில்லை. அரசியல் கூட்டு, வெற்றி இவற்றுக்காக அடிப்படை விஷயங்களில் சமாதானம் செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டையே குருஜி ஆதரித்தார். 1973ல் கட்சித் தலைவரான அத்வானி உடனடியாக பல்ராஜ் மதோக்கை ஜன சங்கத்தில் இருந்து மூன்றாண்டுகளுக்கு நீக்கிவிட்டார்.

இந்நிலையில் 1975ல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அத்வானி, வாஜ்பாயி, மதோக் உள்ளிட்டோர் சிறை சென்றனர். 1977ல் அவசர நிலை விலக்கிக் கொள்ளப்பட்ட போது மதோக் விடுதலை ஆனார். அவர் அப்போது எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு போலச் செயல்பட்ட ஜனதா கட்சியில் சேர்ந்தார். ஆனால் 1979ல் ராஜினாமா செய்துவிட்டு அகில பாரதிய ஜன சங்கம் என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால் கட்சி பெரிய அளவில் வளரவில்லை.

1980ல் சங்கத்தின் ஆதரவுடன் பாரதிய ஜன சங்கம் ஜனதா கூட்டமைப்பில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சி என்று புதிய அமைப்பைத் தோற்றுவித்தது. அதற்கு அடல் பிஹாரி வாஜ்பாயி தலைவரானார். ஆனால் மதோக் வாஜ்பாயி அத்வானி உள்ளிட்ட தலைவர்களை விமர்சனம் செய்துவந்தார். தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. தேசத்தின் பண்பாட்டுப் பெருமை, பிரிவினை காலக் கொடுமை, நேருவிய இடர்பாடுகள் என்று பலவிஷயங்களை விளக்கிப் பல புத்தகங்கள் எழுதினார்.

ஜனசங்கத்தின் தலைவர்களையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாடுகளையும் பற்றி அனைத்துத் தகவல்களையும் சொன்னால் அமைச்சர் பதவி தருவதாகவும், ஆடம்பர வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் இந்திராகாந்தி இவரிடம் சொல்லியனுப்பினார் என்றும் அதைத் தாம் மறுத்துவிட்டதாகவும், தன் மனைவியின் ஆசிரியப்பணி தந்த வருமானத்திலேயே பெரும்பாலான வாழ்நாள் ஓடியதாகவும் மதோக் 2010ல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் சொன்னார்.

2016ல் மே மாதம் 2ஆம் தேதி இவர் உடல் நலக்குறைவால் காலமானார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

வந்தே மாதரம்.

(Visited 33 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *