பிப்ரவரி 26 – ஹிந்துத்வர் வீர ஸாவர்கர் நினைவு தினம்

ஹிந்துத் தன்மை தமிழில் பொருளாகும் ஹிந்துத்வம் என்ற சொல்லை அதன் வீரியம் குறையாமல் நாடு முழுவதும் பரவச் செய்த வீரத்திருமகன் விநாயக் தாமோதர் ஸாவர்கர் அவர்களின் நினைவு தினம் இன்று. சிறு வயதிலேயே வீரத்துடன் சிறுமைகளைக் கண்டு எதிர்த்து நின்ற காரணத்தால் வீர ஸாவர்கர் என்று அழைக்கப்பட்டார். சிறந்த எழுத்தாளராகவும், வக்கீலாகவும் இருந்தார் ஸாவர்கர்.

1883, மே 28ஆம் நாள் நாசிக்கை அடுத்த பாகூர் என்ற கிராமத்தில் தாமோதர் ஸாவர்கர், ராதாபாய் தம்பதிக்கு மகனாகப் பிற்ந்தார் விநாயக். இவருக்கு கணேஷ், நாராயண் என்ற இரு சகோதரர்களும் மைனா என்ற சகோதரியும் உண்டு. கிராமத்திலேயே ஆரம்பக் கல்வி கற்ற விநாயக், 12 வயதில் கிராமத்தின் திருவிழா ஒன்றில் விழா நடத்தக்கூடாது என்று கோவிலைக் கூட்டமாகத் தாக்க வந்த முஸ்லிம்களை தன் உடன் படித்த மாணவர்களுடன் சேர்ந்து எதிர்த்தான் சிறுவன் விநாயக். எண்ணிக்கை குறைவாக இருந்த போதும் விடாமல் கல்வீசித் தாக்கி வந்த கூட்டத்தை விரட்டினர் சிறுவர்கள். பயந்தவர்களிடம், “ஒரு ஆள் மட்டும் இருந்தாலும் கல்லெறிவோம். நம்மைத் தாண்டி நம் கோவிலுக்கு எவனும் கெட்ட எண்ணத்துடன் போகக்கூடாது” என்று சொல்லி தைரியமூட்ட கோவில் பக்கம் கூட நெருங்க இயலாது ஓட்டம் பிடித்தனர் வந்த முஸ்லிம்கள்.

விஷயம் கேள்விப்பட்டு ஊர்மக்கள் திரண்டு வரும் போது தாக்க வந்த ஒரு ஆள் கூட இல்லை. ஓடிவிட்டார்கள். என்ன நடந்தது என்று விசாரிக்கையில் சிறுவர்கள் தாங்கள் தொடர்ந்து கல்லெறிந்து தாக்கியதையும், விநாயக் ஆங்காங்கே நின்று தங்களை வழி நடத்தியதையும் சொன்னார்கள். சிறுவன் விநாயக்கிடம் கேட்ட போது, “நமக்கு பலம் கடவுள். மற்றவர்க்கு அஞ்சத் தேவையில்லை. நம்மை விட பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் திட்டமிட்டு எதிர்த்துப் போரிடவேண்டும்” என்றான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மக்கள் விநாயக்கை வீர ஸாவர்கர் என்று அழைத்தனர்.

இவரது பெற்றோர் மறைவுக்குப் பிறகு இவரது மூத்த சகோதரர் கணேஷ் குடும்பத்தின் தலைவராக பொறுப்புடன் நடந்து கொண்டார். விநாயக் தன் வயதொத்த சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு நண்பர்கள் குழு என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி இறைச் சிந்தனை, தேசியம், புரட்சிக்கருத்துக்கள் உள்ளிட்டவற்றை விவாதித்து வந்தார். 1901ல் யமுனாபாய் என்பவரை மணந்து கொண்டார். இவரது மாமனார் இவரை கல்லூரிக்கு அனுப்பிப் படிக்க வைத்தார். புனேயில் ஃபெர்க்யூஸன் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற விநாயக் தேசியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். மாமனார் இவரிடம் “வக்கீலாகி தேசியவாதிகளுக்காக வாதாடுவதும் தேச சேவை தான்” என்று சொல்லி வக்கீலுக்குப் படிக்க வலியுறுத்தினார்.

அப்போது வங்கப் பிரிவினை நிகழ்ந்த காலம். அதை எதிர்த்த முப்பெரும் தலைவர்களான லால் (லாலா லஜபதி ராய்), பால்(பால கங்காதர திலகர்), பால் (பிபின் சந்திர பால்) ஆகியோரை பின்பற்றி அரசை எதிர்த்து போராட்டங்களில் பங்கேற்றார். சுதேசி இயக்கத்திலும் பங்கெடுத்தார் விநாயக். ஆனால் “சின்னப்பையன் ஏதோ ஆர்வத்தில் செய்துவிட்டான். நல்ல படிப்பாளி.” என்ற கல்லூரி முதல்வரின் சிபாரிசில் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா என்ற தேசியவாதத் தலைவர் மூலம் திறமைக்கான உதவித்தொகை பெற்று லண்டன் சென்றார் விநாயக்.

லண்டனில் கிரேய்ஸ் இன் (Gray’s Inn) என்ற பாரிஸ்டர்களுக்கான கல்லூரியில் சேர்ந்தார். அங்கே இந்தியா ஹவுஸ் என்ற இடத்தில் தங்கினார். அங்கே பண்டித ஷியாம்ஜி என்பவர் இவருக்கு வழிகாட்டியானார். அங்கே தங்கியிருந்த மாணவர்களைக் கொண்டு சுதந்திர இந்திய சமூகம் என்ற அமைப்பைத் தொடங்கினார். அங்கே பேசும் போது, “இந்த ஆங்கிலேய ஆபீசர் சரியில்லை, அவர் சரியில்லை, இந்தச்சட்டம் தப்பு, அந்தச் சட்டம் தப்பு என்ற பேச்சு உதவாது. நாம் ஆபீசரையோ சட்டத்தையோ எதிர்த்துப் புகார் செய்வது வீண் வேலை. ஒட்டு மொத்த ஆங்கிலேயர் இந்தியாவை விட்டுப் போக வேண்டும். நமக்குப் பரிபூரண சுதந்திரம் வேண்டும்.” என்று பேசினார்.

1857 முதல் இந்திய சுதந்திரப் போர் குறித்து நம் தரப்பையும் ஆங்கிலேயர் தரப்பையும் கேட்டு, படித்து குறிப்புகளுடன் “The History of the War of Indian Independence” என்றொரு புத்தகம் எழுதினார். 1857 போரின் காரணிகள் குறித்து விளக்கி ஆங்கிலேய அரசு அடக்குமுறையும், அநீதியும் கைக்கொண்டு செயல்பட்டதாக எழுதினார். இந்தப் புத்தகம் ஆங்கிலேய ஆட்சியால் பிரிட்டிஷ் ஆட்சிப்பகுதிகள் எங்கும் தடை செய்யப்பட்டது. மேடம் பிகாஜி காமா என்ற ஃப்ரெஞ்சுப் பெண்மணி மூலம் புத்தகத்தைப் பிரான்ஸ் பகுதிகளிலும், நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் வெளியிட, பிரிட்டிஷ் ஆட்சிப்பகுதிகளுக்குள் ரகசியமாக எடுத்துச் சென்று விநியோகித்தனர்.

ஸாவர்கர் புரட்சி யுத்த முஸ்தீபுகள் குறித்து அறிந்து கொள்ள விழைந்த காலத்தில் ரஷ்யப் புரட்சியில் பங்கேற்ற ஒருவரது அறிமுகம் கிடைத்தது. அவர் ஸாவர்கருக்கு ஆயுதங்கள் கையாள்வது, குண்டுகள் செய்வது போன்ற பயிற்சிகளை அளித்தார். அவரிடம் கொரில்லா போர்முறை குறித்தும் அறிந்துகொண்டார் ஸாவர்கர். தான் கற்றுக் கொண்டவற்றை அச்சடித்து நண்பர்களிடம் விநியோகித்தார்.

1909ல் சர்.வில்லியம் ஹட் கர்ஸன் வில்லி என்ற ஆங்கில அதிகாரியை மதன்லால் திங்ரா என்ற மாணவர் சுட்டுக் கொன்றார். இந்தச் செயல் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றது. ஸாவர்கர் இந்தச் செயலை நியாயம் என்று சொல்லி மதன் லால் திங்ராவுக்கு அரசியல் மற்றும் சட்ட உதவிகளைத் திரட்டினார். இது குறித்த ஒரு கூட்டத்தில் திங்ரா செய்தது தவறு என்று ஒருவர் பேச அதை மறுத்து அடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்றால் ஆங்கிலேயர்களை அடித்து விரட்ட வேண்டும். கெஞ்சுவது வேலைக்கு ஆகாது என்று பதில் சொன்னார் ஸாவர்கர். திங்ரா தூக்கிலிடப்பட்டதும் அவரது உடலைப் பெற்று முறைப்படி எரியூட்டப் போராடினார். திங்ராவைத் தியாகி என்று கொண்டாடினார்.

இந்நிலையில் இந்தியாவில் இவரது அண்ணன் கணேஷ் ஸாவர்கர் மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள் குறித்து எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்கள் நடத்தினார். இந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்டமாக மாற, விநாயக் திட்டமிட்டுக் கொடுத்தார் என்று குற்றம் சுமத்தியது பிரிட்டிஷ் அரசு. கைதாவதில் இருந்து தப்ப ஃபிரான்ஸ் சென்றார் ஸாவர்கர். ஆனால் 1910 மார்ச் 13 அன்று போலீஸ் இவரைக் கைது செய்தது. போலீஸ் வரும் என்று தெரிந்து வைத்திருந்த ஸாவர்கர் தன் நண்பருக்கு தன் திட்டத்தை விளக்கிக் கடிதம் எழுதி கப்பலில் இந்தியா கொண்டு செல்லும் போது தப்பிக்கத் திட்டமிட்டார்.

எஸ் எஸ் மோரியா என்ற கப்பலில் ஸாவர்கரை இந்தியா கொண்டு சென்றது போலீஸ். அது ஃப்ரான்ஸ் நாட்டிலேயே மார்செயில் என்ற இடத்தில் துறைமுகத்தில் நின்ற போது கப்பலில் இருந்து குதித்துத் தப்பினார் ஸாவர்கர். ஆனால் கரையில் காருடன் காத்திருக்க வேண்டிய நண்பர் வரத் தாமதமானதால் போலீஸில் சிக்கிக்கொண்டார். ஃப்ரெஞ்சு அரசு பிரிட்டிஷ் போலீஸ் தன் ஊரில் ஒருவரைக் கைது செய்தது தவறு என்று சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தது. அங்கே பிரிட்டன் ஃபிரான்ஸில் ஸாவர்கரைக் கைது செய்தது தவறு ஆனால் திருப்பி ஒப்படைக்க வேண்டியதில்லை என்று தீர்ப்பானது.

1910, செப்டம்பர் 10 அன்று எரவாடா சிறையில் இவர் மீதான் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை தொடங்கியது. முடிவில் கொலைக்குத் துணை போனார் என்ற குற்றச்சாட்டில் 50 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து புனேவின் எரவாடா சிறையில் இருந்து அந்தமான் செல்லுலர் சிறைக்கு மாற்றியது பிரிட்டிஷ் அரசு. 1911 ஜூலை 4 அன்று அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார் ஸாவர்கர். சிறையில் மரம் வெட்டுவதற்கும் எண்ணைச் செக்கில் வேலை செய்வதற்கும் ஸாவர்கர் பணிக்கப்பட்டார். சில காலத்துக்குப் பிறகு சிறையில் நூலகம் ஆரம்பித்து கைதிகளுக்கு எழுதப் படிக்க கற்றுத்தருவதற்கு அனுமதி பெற்றார். ஆனால் பிற பகுதிகளில் உள்ள அரசியல் கைதிகளிடம் பேசவோ, ஊருக்குக் கடிதப் போக்குவரத்துக்கோ அனுமதி இல்லை.

அங்கிருந்தபடியே பம்பாய் அரசுக்கு கருணை மனு எழுதினார். பின்னாளில் இது குறித்து ஸாவர்கரிடம் கேட்ட போது சத்திரபதி சிவாஜி ஔரங்கசீப்புக்கு எழுதிய கடித்தத்தை உதாரணம் காட்டினார். எதிரியின் பிடியில் இருந்து தப்ப சற்றே பணிவது போல் நடித்து எதிரி பிடியில் இருந்து தப்பியபின் தன் பணியைத் தொடரவேண்டும் என்ற நிலைப்பாட்டை மேற்கோள் காட்டினார். ஜூலையில் சிறை சென்றவர் செப்டம்பர் 1911ல் கருணை மனு கொடுத்தார். அது நிராகரிக்கப்பட்டது. மீண்டும் நவம்பர் 1913ல் மனு போட்டார். பிரிட்டிஷார் நிராகரித்தனர். 1917ல் மீண்டும் ஒரு மனு கொடுத்தார். அச்சமயம் பல கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. 1918ல் தனது மனு பிரிட்டிஷ் இந்திய அரசிடம் பரிசீலனைக்கு கொடுக்கப்பட்டதை அறிந்தார்.

1919ல் பிரிட்டனின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் ஒரு அறிவிக்கை வெளியிட்டார். அதன்படி இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களை கவனிக்க இந்தியர்களுக்கு கொஞ்சம் அதிகாரம் தரலாம், இந்தியர்களின் அரசியல் ஆர்வத்தை வரவேற்கலாம், இந்தியக் கைதிகளுக்கு பகை மறந்து மன்னிப்புத் தரலாம் போன்ற சலுகைகளை அளித்திருந்தார். ஆனால் பிரிட்டிஷ் இந்திய அரசு 1920ல் புனே சிறையில் இருந்த கணேஷ் ஸாவர்கரை விடுவித்து விநாயக் தாமோதர ஸாவர்கரை சிறையிலேயே வைத்திருந்தது.

கணேஷும் பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததால் அண்ணனை விடுவித்து சிறையில் உள்ள தம்பியைக் காட்டி அவரை அடக்கியாள எண்ணியது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் விட்டல்பாய் படேல், பால கங்காதர திலகர், மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி உள்ளிட்டோர் விநாயக் தாமோதர ஸாவர்கரை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரினர். ஆனால் ஸாவர்கரிடம் வன்முறையில் ஈடுபடுவதில்லை, வன்முறையை ஆதரிப்பதில்லை, ஆங்கிலேய சட்டத்தை மீறுவதில்லை போன்ற உறுதி மொழிகளைக் கேட்டது அரசு. சகோதரர்கள் இருவரும் கையெழுத்திட அவர்கள் இருவரையும் 1921ல் புனே எரவாடா சிறைக்கு மாற்றியது அரசு. அண்ணன் விரைவில் விடுதலையானார்.

இறுதியாக தம்பி விநாயக் தாமோதர ஸாவர்கர் 1924ல் விடுவிக்கப்பட்டார். ரத்தினகிரி மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது என்று அரசு நிபந்தனை விதித்தது. அரசியல் உள்ளிட்ட எந்தப் பணியும் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டது. அப்படியானால் தனக்கு அரசு மாதம் நூறு ரூபாய் உதவித் தொகை தரவேண்டும் அல்லது வக்கீல் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார் ஸாவர்கர். அரசு எந்த வேலைக்கும் போகக்கூடாது என்ற நிபந்தனையுடன் மாதம் 60 ரூபாய் தர ஒப்புக்கொண்டது. 1937 வரை தினமும் போலீஸார் வீட்டைச் சுற்றி வ்ந்தனர்.

பின்னர் 1937ல் கடுமை சற்றே தளர்த்தப்பட ஸாவர்கர் பம்பாய் சென்றார். அங்கே ஹிந்து மஹா சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முகமதலி ஜின்னாவின் சொல்வாக்கு முஸ்லிம் லீகில் உயர்ந்து வந்ததால் ஹிந்துக்களிடம் ஹிந்து மஹாசபா செல்வாக்குப் பெற்றது. 1937 தேர்தலில் காங்கிரஸ் வென்றாலும் ஜின்னாவுடனான மோதலில் அதன் செல்வாக்கு சரிந்து ஹிந்து-முஸ்லிம் மோதலாக ஆனது. காங்கிரஸ் ஆட்சியை ஹிந்து ராஜ்ஜியம் என்று வர்ணித்த ஜின்னா, 1939 டிசம்பர் 22ஐ முஸ்லிம்களின் மீட்பு நாள் என்று கொண்டாடினார். அன்றுதான் காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாப் பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்தனர்.

1939ல் ஹைதராபாத்தில் கீழ்ப்படியாமை இயக்கத்துக்கு அறைகூவல் விடுத்தார் ஸாவர்கர். 86% இருந்த ஹிந்து மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். ஆரிய சமாஜம் 10000 பேரை நாடெங்கும் இருந்து அனுப்பியது. பல காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ், ஹிந்து மஹாசபை தேசியவாதிகள் பங்கெடுத்தனர். நிஜாம் அரசு 50% வாய்ப்புகளை ஹிந்துக்களுக்கு அளிப்பதாக ஒப்புக் கொண்டது. ஆனால் காங்கிரஸ் இந்தப் போராட்டத்தை மதவாதப் போராட்டம் என்று வர்ணித்தது. காந்திஜி, ஹிந்து மஹா சபை நிஜாமை மதரீதியாக எதிர்ப்பதாக குற்றம் சாட்டினார்.

இரண்டாம் உலகப் போரில் இந்தியர்களைப் பங்கெடுக்க ஸாவர்கர் ஊக்குவித்தார். ஹிந்துக்கள் ராணுவப் பயிற்சி பெறவேண்டும் என்றும் அப்போது தான் பிரிட்டிஷார் நாட்டை விட்டுப் போனதும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருக்கும் என்றும் சொன்னார். “அரசியலை ஹிந்துமயமாக்குவோம்; ஹிந்துக்களை ராணுவமயமாக்குவோம்” என்ற கோஷத்தை முன்வைத்தார் ஸாவர்கர். ஜின்னா தேசப் பிரிவினை கோரிய போது அவருடன் பேச்சு நடத்தப் போன காந்திஜியின் செயலை பிரிவினைவாதியை ஆற்றுப்படுத்தும் தேவையற்ற வேலை என்று சாடினார் ஸாவர்கர்.

வெள்ளையனே வெளியேறு என்ற கோஷத்தைக் காங்கிரஸ் வைத்த போது. இந்தியர்களுக்கு ராணுவப் பயிற்சிகொடுத்து விட்டு வெளியேறு வெள்ளையனே என்றார் ஸாவர்கர். ஹிந்து மஹாசபையினர் தங்கள் பதவிகளை விடவேண்டாம் என்று எழுதினார். முடிந்தவரை ராணுவத்தில் சேருமாறு சபையினரைக் கேட்டுக் கொண்டார்.

1947ல் தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது காங்கிரஸையும் பிரிட்டிஷாரையும் பிரிவினைக்கு வால் பிடிப்பவர்கள் என்று சாடினார். பிரிக்கப்படாத ஹிந்துஸ்தானம் என்ற கோஷத்தை முன் வைத்தார் ஸாவர்கர். ஆனால் பிரிந்து போனதை மீண்டும் இணைப்பது தற்போது சாத்தியப்படாது. இருப்பதை வலுப்படுத்துவதே உடனடிக் கடமை என்று சொல்லி ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஹிந்து மஹா சபையில் இருந்து ராஜினாமா செய்தார்.

1947ல் பாலஸ்தீனப் பகுதியில் யூதர்களுக்கு நாடு அமைவதை ஸாவர்கர் ஆதரித்தார். முழுப்பாலஸ்தீன நிலமும் யூதர்களைச் சேருவதே நியாயம் என்றார் அவர். ஐநா சபை ஓட்டெடுப்பை முஸ்லிம் ஆதர்வுச் செயல் என்று கண்டித்தார்.

1948 ஜனவரி 30 அன்று காந்திஜி கொல்லப்பட்ட போது ஸாவர்கர் கைது செய்யப்பட்டார். ஆனால் கோட்ஸே தான் ஹிந்து மஹாசபையிலோ ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலோ இல்லை என்றும், காந்தியைக் கொன்றது தேசத்தைத் துண்டாடிவிட்டார் என்பதால் தம் சொந்தக் கோபம் காரணமாக என்றும் வாக்குமூலம் கொடுதார். ஆனாலும் கோட்ஸே நடத்திய பத்திரிகைக்கு முதல் போட்டார் என்று ஸாவர்கர் மீதும் வழக்குப் பதிந்தது போலீஸ். நீதிமன்றத்தில் கொலைக்கும் இந்த வியாபாரத்துக்கும் தொடர்பை நிரூபிக்க முடியவில்லை. ஆகவே ஸாவர்கர் விடுதலை ஆனார்.

1964ல் பாலகங்காதர திலகரின் பேரன் கேத்கர் என்பவர்,  கோபால் கோட்ஸே உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுதலையானதைக் குறித்து நடந்த கூட்டத்தில் காந்தி கொலை பற்றி தமக்கு சம்பவம் நடப்பதற்கு 6 மாதம் முன்பே தெரியும் என்று பேசினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ஜீவன்லால் கபூர் விசாரித்து இதில் ஸாவர்கரை சம்பந்தப்படுத்த தடயங்கள், ஆதாரங்கள் ஏதுமில்லை என்றும் 1948ல் போலீஸார் சில விஷயங்களில் கோட்டை விட்டனர் என்றும் அவற்றைத் தற்போது மறு விசாரணைக்கு உட்படுத்தினாலும் குற்றம் நிரூபணமாகாது என்றும் அறிக்கை அளித்தார்.

சுதந்திரத்துக்குப் பிறகு நேரு ஸாவர்கரை பொதுவில் மட்டம் தட்டிப் பேசியும் நடத்தியும் வந்தார். காங்கிரஸ் உறுப்பினர்கள் ஹிந்து மஹாசபா நடத்தும் விழாக்களில் கலந்து கொள்வது தடை செய்யப்பட்டது. ஆனால் படேல். தேஷ்முக் உள்ளிட்ட காங்கிரஸ் மந்திரிகள் ஸாவர்கரை சந்தித்து சமாதானம் பேசினர். ஹிந்து மஹா சபை காங்கிரசுடன் சேரலாம் என்ற பேச்சு வந்த போது ஸாவர்கர் திட்டமாக மறுத்தார். ஆங்கிலேய அரசு ஸாவர்கருக்கு வழங்கிய உதவித் தொகையை நேரு நிறுத்தி வைத்தார். நேரு காலத்துக்குப் பிறகு லால்பகதூர் ஸாஸ்திரி உதவித் தொகையை உயர்த்தி வழங்கினார்.

1966ல் பிப்ரவரி 26 அன்று மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த ஸாவர்கர் தன் வீட்டிலேயே காலமானார். அவரது இறுதிச் சடங்கில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். அவரது மகன் விஸ்வாஸ் ஸாவர்கர் சிதைக்குத் தீ மூட்டினார். அவர் பயன்படுத்திய பொருட்கள், தங்கியிருந்த வீடு ஆகியவை பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாக்கப்பட்டது. அன்றைய மஹாராஷ்டிர அரசு இவரது மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கவில்லை. மத்திய அரசும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மக்கள் நாயகனாக மறைந்தார் ஸாவர்கர். அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் விமான நிலையத்துக்கு வீர ஸாவர்கர் விமான நிலையம் என்று அடல்பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு பெயரிட்டது. செல்லுலர் சிறையில் இவர் இருந்த அறை இவரது பெயர் தாங்கி இவரது நினைவாகப் போற்றப்படுகிறது.

வந்தே மாதரம்!

(Visited 35 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *