கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், பாமக மாநில துணைத் தலைவருமாக இருந்த ரஞ்சித், பாமகவிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் பாமக ஏமாற்றி விட்டது.
நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த கட்சியில் சேர்ந்தேன். ஒரு நொடி பொழுதில் எனது கனவு தகர்ந்தது. நான் எனது பதவி மற்றும் பாமகவின் poருப்புகளில் இருந்து விலகுவதைத் தெரிவிக்கவே பத்திரிகைச் சந்திப்பை நடத்துகிறேன். எனது அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் விலகி கொள்கிறேன். 8 வழிச் சாலைக்காக நான் மக்களை சந்தித்தேன். அதில் வழக்கு போட்டார்கள். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதை ஒரு நொடி நினைத்து பார்த்தார்களா. எப்படி கூட்டணி அமைக்க முடிந்தது.
முதல்வரையும் மாறி மாறி மடையன், புறம்போக்கு, அடிமை, ஆண்மை அற்றவர்கள் என கடந்த வாரம் வரை பேசி விட்டு, எப்படி அவர்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள். என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று நம்பி வந்த இளைஞர்களின் வாழ்க்கையில் மண் அள்ளி போட்டுள்ளார் அன்புமணி.
மதுக்கடைக்கு எதிராக போராடிய கட்சி பாமக. அப்புறம் எப்படி மதுக்கடை நடத்தும் அரசுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். தினமும் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தினமும் செத்து கொண்டு இருக்கிறார்கள். நாமும் இதைப் போல் நினைப்பது இயல்பு தானே. ஒரு நல்ல தலைவன் முதல்வராக வரமாட்டாரா என்று. அதற்காக தான் அன்புமணியை தேர்ந்து எடுத்தோம்.
நான் இந்த கட்சியில் இருந்தபோது ஏதாவது தவறாக நடந்து இருந்தாலோ அல்லது தவறாக பேசி இருந்தாலோ உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் எனது தாயிடம் இதுபற்றி கேட்டேன். காரி துப்புகிறார்கள். வீட்டில் உள்ள அனைவரிடமும் பேசி முடிவெடுத்து உள்ளேன். நான் இந்த கட்சியில் இருந்து விலகி கொள்கிறேன். முன்னதாக பாமக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜேஸ்வரி பிரியா விலகியது குறிப்பிடத்தக்கது.