இன்று மாலை காலமான கோவா முதல்வர் மனோகர் பரிக்கருக்கு அஞ்சலிகள். அவரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற ஒரே இந்தியா செய்திகள் பிரார்த்திக்கிறது.
1955ல் கோவாவில் பிறந்த பரிக்கர், சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஈடுபட்டு ஸ்வயம்சேவகர் ஆனார். பள்ளிக்கல்வியை கோவாவில் படித்தவர், மும்பை ஐஐடியில் உலோவியல் படித்தார். ஊருக்குத் திரும்பி உலோகத் தொழில் செய்தபடியே ஆர்.எஸ்.எஸ்ஸில் பல பொறுப்புகளை வகித்தார்.
ராமஜென்மபூமி போராட்டத்தில் முக்கியப்பங்கு வகித்தார். பின்னர் பிஜேபிக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். கோவா எதிர்க்கட்சித் தலைவராகவும், கோவா முதல்வராகவும் பணியாற்றினார். வீட்டுக்கடன் பெற்று பாணாஜியில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கினார்.
கோவா முதல்வராக பெண்குழந்தைகள் பாதுகாப்பு, ஏழைப்பெண்களுக்கு வேலை, வருமானம் என்று பல திட்டங்களைச் செயல்படுத்தினார்.
நரேந்திர மோடியை 2013ல் நாட்டின் பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தார். 2014ல் மோடி அரசு அமைந்த போது முதல்வர் பதவியைத் துறந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆனார். இவரது அதிரடி செயல்பாடு பாதுகாப்புத்துறையில் செயல்பட்டு வந்த கமிஷன் ஏஜெண்டுகளுக்கு மிகுந்த தலைவலி கொடுத்தது. இவரது காலத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீரத்திலும், பர்மாவிலும் தீவிரவாதத் தாக்குதலுக்கு நமது ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
கோவாவில் பரிக்கர் முதல்வரானால் ஆதரிப்போம் என்று சில எம்.எல்.ஏக்கள் 2017ல் சொன்ன போது தயங்காமல் மத்திய அமைச்சர் பதவியை உதறிவிட்டு மாநில முதல்வர் ஆனார். கோவாவில் அடல் சேது என்ற பாலத்தை எண்ணித் திட்டமிட்டுச் செயல்படுத்தியதில் இவரது நிர்வாகத் திறமை பளிச்சிட்டது.
கடந்த 2018 மார்ச் மாதம் இவருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தில்லி AIIMS மருத்துவமனையிலும், அமெரிக்காவிலும் சிகிச்சை பெற்று, பின்னர் கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
புற்றுநோய் தாக்கிய நிலையிலும் தளராமல் தன் கடமையைச் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இறப்புக்குச் சில நிமிடங்களுக்கு முன் “I’ll pass my Josh to you” (என் உற்சாகத்தை உங்களூக்குத் தருகிறேன்.) என்று சொன்னார்.
நாட்டுக்கு இவர் போன்ற தலைவர்கள் அதிகமாகத் தேவை என்ற பிரார்த்தனையை ஒரே இந்தியா செய்திகள் பாரதமாதாவின் காலடிகளில் சமர்ப்பிக்கிறது.
மனோகர் பரிக்கர் அவர்களின் ஆத்மா நற்கதி பெற பிரார்த்திக்கிறோம்.
வந்தே மாதரம்!