₹27000 கோடி சிங்கப்பூர் டு இலங்கை முதலீடு – விசாரணை வளையத்தில் ஜகத்ரட்சகன்?

திமுகவைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் ஜகத்ரட்சகன். இவர் கடந்த ஐமுகூ ஆட்சியில் மன்மோகன்சிங் அமைச்சரவையில் தகவல் தொடர்பு, மரபுசாரா எரிசக்தி, வணிகம், தொழில் ஆகிய துறைகளுக்கு இணை அமைச்சராக இருந்தார். நிலக்கரி ஊழலில் இவருக்கும் பங்கிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை ஜகத்ரட்சகன் மறுத்து தன் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றது உண்மை என்றும் ஒப்பந்தத்தை வேறு கம்பெனிக்கு விற்று விட்டதாகவும் அரசு அதை திரும்ப எடுத்துக் கொள்வதில் தமக்கு ஆட்சேபம் இல்லை என்றும் சொன்னார்.

இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகள், வழக்கு, விசாரணை, ஜாமீன் என்று திமுக முக்கிய தலைவர்கள் பிஸியாக இருந்து வரும் நிலையில் ஜெகத்ரட்சகன் மீது இந்துப்பத்திரிக்கை ஒரு பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பியுள்ளது. இலங்கையில் ஹம்பந்தோட்ட துறைமுகம் அருகே வரவிருக்கும் ஒரு தொழில் மையத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த Silver Park International Pte Ltd என்ற நிறுவனம் ₹27000 கோடி முதலீடு செய்கிறது. இந்த நிறுவனம் சிங்கப்பூர் அரசின் வியாபார நெறிப்படுத்தல் அமைப்பான Accounting and Corporate Regulatory Authority (ACRA)வில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் இயக்குநர்களாக ஜெகத் ரக்ஷகன் சந்தீப் ஆனந்த், ஜெகத் ரக்ஷகன் நிஷா, ஜெகத் ரக்ஷகன் அனுசுயா ஆகியோர் பெயர் உள்ளது. இவர்களது சென்னை முகவரிதான் சிங்கப்பூர் அரசுப் பதிவில் கொடுத்துள்ளனர். இவர்கள் முறையே ஜெகத் ரக்ஷகனின் மகன், மகள், மனைவி என்றும் இவர்களின் பெயரில் கம்பெனி பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை முதலீட்டு வாரியத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் ஜெகத்ரட்சகன் என்று வாரியத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

₹27000 கோடி முதலீடு செய்வது, அதுவும் சிங்கப்பூரில் இருந்து இலங்கையில் என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பொருளாதார அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் எழும் கேள்விகளைப் பார்ப்போம்.

பொருளாதார கேள்விகள்:

  1. இந்த பெரு முதலீட்டை தமிழகத்தில் செய்யலாமே? செய்தால் தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் பெருகுமே?
  2. இந்த முதலீட்டை நம் நாட்டில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் செய்து தொடர்புடைய பல சிறு தொழில்கள் பெருக வழி செய்திருக்கலாமே?
  3. சிங்கப்பூர் வழியாக இலங்கைக்கு முதலீட்டை சிங்கப்பூர் பணம் போல ஏன் கொண்டு செல்லவேண்டும்?
  4. இந்திய முதலீடாக இலங்கைக்குச் செலுத்தி இந்திய சிறு தொழில் முனைவோரை அங்கே சில தொழில்கள் தொடங்க ஊக்குவித்திருக்கலாமே?
  5. ஹம்பந்தோட்ட துறைமுகத்தின் அருகே உள்ள தொழில் மையத்தில் ஓமன் முதலீடு செய்வதாக இருந்து பின்வாங்கியது. துறைமுகம் எண்ணைத் தொழில் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அனுபவமிக்க ஓமன் பின்வாங்கியதற்கு என்ன காரணம்? முதலீட்டின் லாபகரத் தன்மைக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா?

அரசியல் கேள்விகள்:

  1. ஹம்பந்தொட்ட சீனக்கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகம். அங்கே சீன ஆதிக்கம் நம் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் என்பதால் இந்தியா துறைமுகத்தின் அருகே உள்ள விமானதளத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. இந்த முதலீடு சீனக் கடற்படையின் எரிபொருள் தேவைக்கான எண்ணை சுத்திகரிப்பு, சேமிப்பு சம்பந்தப்பட்டது என்றால் அதில் இந்தியர் சிங்கப்பூரிலிருந்து முதலீடு செய்ய என்ன பின்னணி?
  2. நம் தேசநலனுக்கு ஊறு வரும் வகையிலான தொழில் என்றால் அதில் இந்தியரான ஜெகத்ரட்சகன் குடும்பம் முதலீடு செய்வது ஏன்?
  3. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான வருமானக்கணக்கு இந்திய அரசுக்கு சமர்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதா?
  4. சிங்கப்பூரில் கம்பெனி தொடங்கி அங்கிருந்து இந்தியப் பணத்தை வெவ்வேறு நாடுகளில் முதலீடு செய்ய நம் அரசின் அனுமதி உள்ளதா?
  5. ஓமன் எண்ணைத் துறை இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகக் காரணம் என்ன? சீனாவிடம் இலங்கை பெற்ற 99 வருடக் கடனும் அது தொடர்பான சீனக் கட்டுப்பாடுகளும் காரணமா? அப்படியானால் இந்தியரின் கம்பெனி அங்கே முதலீடு செய்ய என்ன அவசீயம்?

இந்தக் கேள்விகளுக்கான பதில் இது வரை கிடைக்கவில்லை.

மேலும் அரசியல் நோக்கர்கள் கூறுகையில் இந்துப் பத்திரிகை திமுகவில் மாறன் குடும்பத்தின் உறவினர். ஊடகங்கள் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், தங்கள் கருத்தே செய்தியாக ஊடகங்களில் வரவேண்டும் என்று திமுக குடும்பத்தினர் பலரும் பல்லாண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றனர். இதில் சிறு மாறுதல் நிகழ்ந்ததால் வந்த வினையே மதுரை தினகரன் அலுவலக எரிப்பும் 3 ஊழியர் கருகி இறந்த துயரமும்.

இப்படிப்பட்ட நிலையில் இந்துப் பத்திரிகையில் இந்தச் செய்தி வருகிறது என்றால் மாறன் சகோதரர்களுக்கும் திமுகவின் பிற குடும்பம் அல்லாத தலைவர்களில் ஒருவரான ஜெகத்ரட்சகனுக்கும் ஏதேனும் விரிசலா?

ஜெகத்ரட்சகனை இப்படி மாட்டிவிடுவதன் மூலம் அவரைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்களா?

சிங்கப்பூர் முதலீடுகள் யூபிஏ அரசு கொழித்த காலத்திலிருந்தே கார்த்தி சிதம்பரத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பதாகவே தகவல்கள் உள்ளன. இந்நிலையில் சிதம்பர ரகசியம் ஏதேனும் இந்த முதலீட்டின் பின்னணியில் உள்ளதா?

இவர்களின் நிதி நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக இந்தச் செய்தி இந்துப் பத்திரிக்கையில் மட்டும் வந்துள்ளதா என்றும் அரசியல் நோக்கர்கள் ஆராய்கிறார்கள்.

வேறெந்த முக்கியப் பத்திரிகைகளோ ஊடகங்களோ இந்தச் செய்தியை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. டிவிக்களில் இது குறித்து விவாதமோ, செய்தியோ பெரிய அளவில் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இது குறித்து சுப்பிரமணிய சாமியின் ஆதரவு தளமான P-Gurus என்ற தளம் உள்ளிட்ட சமூக வலைத்தளச் செயல்பாட்டில் தீவிரமாக உள்ள செய்தி ஊடகங்கள் மட்டுமே கேள்விகள் எழுப்பி விவாதங்கள் செய்து வருகின்றன.

இந்நிலையில் சமூக ஊடகச் செயல்பாட்டில் பலரும் இந்தத் தகவலை வரித்துறையினருக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும், சட்ட அமலாக்கத்துறைகளுக்கும் அனுப்பி வைத்து விசாரணைக்கும், நடவடிக்கைக்கும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டின் மூலம் ஜெகத்ரட்சகன் தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லாத நிலையில் ஜெகத்ரட்சகனின் உள்வட்டாரத்தில் இருந்தே இப்படி ஒரு தகவல் கசிவு நடந்திருக்குமா என்ற கோணத்திலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

– எண்ணமும் எழுத்தும்

மீனாட்சி சுந்தர பாண்டியன்.

 

(Visited 73 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *