வரும் லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை கோவையில் அதிமுக அணியில் பாஜகவும் திமுக அணியில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியும் நேருக்கு நேர் களத்தில் நிற்கின்றன. கொள்கையில், சித்தாந்தத்தில் , அரச நடவடிக்கைகளில், அரசியல் விமர்சனத்தில் காங்கிரசைக் காட்டிலும் பாஜகவின் நேரடி எதிரி கம்யுனிஸ்ட் கட்சியே ஆகும். வாக்கு சதவீதம், ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மக்களிடம் உள்ள ஆதரவு போன்ற காரணங்களில் பாஜகவும் காங்கிரசும் நேருக்கு நேர் மோதுகின்றன என்று சொல்லலாம். ஆனால் மக்களால் நிராகரிக்கப்பட்ட கம்யுனிஸ்ட் இயக்கங்கள், தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுக இல்லையெனில் அதற்குக் கிடைக்கும் ஒரு எம்பியோ எம்.எல்.ஏக்களோ கிடைக்கும் அளவுக்கு ஒரு தொகுதியில் கூட அதற்கு ஆதரவு கிடையாது.
பாஜக தனித்து நின்று 2.84 %ஐ , 2016 சட்டசபை தேர்தலில் வாங்கியது. கம்யுனிஸ்ட் கூட்டணிக் கட்சிகளோடு நின்று மா.கம்யுனிஸ்ட் 0.79%, இ.கம்யுனிஸ்ட் 0.71% என மொத்தமாகவே 1.5% தான் வாங்கின. குறைந்த இடங்களில் நின்றதால் என்று எவரும் விவாதம் செய்வார்களேயானால், அதற்கும் பதில் இருக்கிறது.
2014 லோக்சபா தேர்தலில், இரு கம்யுனிஸ்ட் கட்சிகளும் தனித்துத் தான் தேர்தலைச் சந்தித்தன. இருவரும் தலா 0.5% வாக்குகளைத் தான் வாங்கினார்கள். பாஜகவோ 5.5% வாக்குகளை பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக, அதிமுக அணியில் இல்லையெனில் தனித்து கம்யுனிஸ்ட் கட்சிகள் 1% வாக்குகளைப் பெறும் அளவுக்குக்கூட சக்தியில்லாத கட்சிகள் அல்லது மக்கள் நம்பிக்கையைப் பெறாத கட்சிகள் என்றும் சொல்லலாம்.
கோயம்பத்தூரில் பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் சார்பாக பி.ஆர்.நடராஜன் என்பவரும் நேருக்கு நேர் மோதுகின்றனர். அதிமுகவின் வலிமை, பாஜகவிற்கு தனித்தே இருக்கும் வலிமை, இந்து இயக்கங்களின் வலிமை என பாஜக நிற்கும் மற்ற தொகுதிகளைக் காட்டிலும் அதிக பலம் வாய்ந்த தொகுதியாக உள்ளது கோவை. கம்யுனிஸ்ட் கட்சிக்கும் இங்கு ஓரளவுக்கு செல்வாக்கு இருந்தாலும் திமுக வலிமை குன்றிய தொகுதிகளில் கோவையும் ஒன்று.
பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம்,கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது கோவை பாராளுமன்றத் தொகுதி. ஆறு தொகுதிகளிலும் அதிமுக அணியின் வாக்குகளே 2016 தேர்தலில் அதிகமாக வாங்கியுள்ளது.
தேர்தலில் எந்த அணி வெற்றி பெரும் வாய்ப்பைக் கொண்டுள்ளது என்பதற்கான எனது தரப்பு பார்வையை இந்த லிங்கில் சென்று படிக்கலாம்.
2016 சட்டசபை தேர்தலில் அதிமுக அணி பெற்ற வாக்குகள் 6,58,000
2016 சட்டசபை தேர்தலில் திமுக அணி பெற்ற வாக்குகள் 5,24,000
அதிமுக அணியின் வெற்றி வாக்கு வித்தியாசம் 1,34,000 !!!
பாஜக திட்டவட்டமாக வெற்றி பெறும் தொகுதிகளில் கோவை நிச்சயமாக இருக்கும். ஆகவே கோவையில் பாஜக வெற்றி பெறும் என்பதே எனது கணிப்பு. தேர்தல் முடிவில் பார்க்கலாம்.