ராகுல் சாங்கிருத்யாயன் பிறந்தநாள் -ஏப்ரல் 9

ஆரம்பப்பள்ளிவரையே படித்தவர், ஆனால் பேரறிஞர். பட்டம் ஏதும் பெறாதவர், ஆனால் பல்கலைக்கழக பேராசிரியர், பன்மொழி வித்தகர், புகைப்படக் கலைஞர், புத்தமதத் துறவி அதேநேரம் பொதுவுடமைவாதி, தத்துவமேதை, வாழ்க்கை முழுவதும் பயணத்திலேயே கழித்தவர், ஹிந்தி மொழியில் பயண இலக்கியம் என்ற புதிய பாதையை உருவாக்கியவர் இப்படி பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட ராகுல் சாங்கிருத்யாயன் பிறந்த தினம் இன்று.

இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , பண்டகா என்ற கிராமத்தில் பிறந்தார். தன் வாழ்வில் இந்தியோடு, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது, பாரசீகம், கன்னடம், சிங்களம், ப்ரெஞ்சு, ரஷ்யன் போன்ற 33 மொழிகளையும் தாமாகவே கற்று பன்மொழிப் புலவராய் விளங்கினார். இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதோடு மட்டுமன்றி நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம், முன்னாள் சோவியத் உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்.

திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச் சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங் களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார். இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா நூலகத்தில் இருந்தவை ஆகும். 1963 ஏப்ரல் 14 அன்று தனது 70வது வயதில் மறைந்த ராகுல்ஜி எனும் ராகுல் சாங்கிருத்தியாயன் இன்றளவும் அவரது எண்ணற்ற எழுத்துக்களுக்காக இன்றுவரை போற்றப்படுகிறார். இது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் திபெத் மீது சீனா படையெடுத்த பிறகு இந்த இலக்கியங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு இருக்கும்.

இராகுல்ஜி பல்வேறு துறைகளில் 146 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். வால்கா முதல் கங்கை வரை, பொதுவுடமை தான் என்ன?, சிந்து முதல் கங்கை வரை, இந்து தத்துவ இயல், இஸ்லாமிய தத்துவ இயல், ஐரோப்பிய தத்துவ இயல், விஞ்ஞான லோகாயத வாதம் மற்றும் ஊர்சுற்றிப் புராணம் ஆகியவை அவற்றில் சில.

சிறுவயதிலேயே வீட்டைவிட்டு புறப்பட்டு விட்ட ராகுல்ஜி காசி நகரத்தில் சமிஸ்க்ரிதம் பயின்றார். அங்கிருந்து தமிழகம் வந்து தமிழ் கற்று சித்தாந்த நூல்களில் தேர்ச்சி பெற்றார். பின்னர் ஆர்யா சமாஜத்தின் கருத்துக்களால் கவரப்பட்டு அதையும் பயின்றார். அதன் பிறகு புத்த மத துறவியாக மாறி பௌத்த நூல்களைக் கற்றார். இதற்கு நடுவில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவித்தார்.

அதிகாரபூர்வமாக பட்டம் எதையும் பெறாத ராகுல்ஜி சோவியத் ருஷ்யாவின் லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் இந்தியத்துறை பேராசிரியராகப் பணியாற்றினார். ஹிந்தி, சமிஸ்க்ரிதம், பாலி, போஜ்புரி, திபெத்திய மொழி ஆகியவற்றில் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.

மத்திய ஆசியாவின் வரலாறு என்ற புத்தகத்திற்காக இவருக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. இந்திய அரசு 1963ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கியது.

1963ஆம் ஆண்டு ராகுல்ஜி காலமானார்.

ஹிந்தி மொழியில் எழுதப்படும் சிறப்பான பயண இலக்கியத்திற்கு மஹாபண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயன் விருது வழங்கப்படுகிறது.

(Visited 23 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *