மாநகர் மதுரையை மீட்டெடுப்போம் – பகுதி 1
நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க மதுரை மாநகரின் தேவைகளும் அதனை எதிர்கொள்ளும் வகையும். மண்ணின் மைந்தர் விஸ்வாமித்திராவின் ஆலோசனைகள் .
ம்துரை பாரளுமன்றத் தொகுதி என்பது அத்துடன் தொட்டடுத்துள்ள சில தொகுதிகளுடனும் தொடர்புடைய ஒன்று ஆகவே நாம் ஒட்டு மொத்தமான தேவைகளைக் கருத்தில் கொள்ளலாம்.
1. மதுரையின் மாபெரும் பிரச்சினை தண்ணீர். மதுரை பொதுவாகவே ஒரு பெரும் மழை மறைவு பிரதேசமாக உள்ளது. வைகை ஆறு பத்து வருடங்களுக்கு ஒரு முறையே மதுரை வரை வந்து சேர்கிறது. ஆக மதுரையின் தண்ணீர் தேவைகளுக்குத் தீர்வு காணாமல் மதுரையின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து திட்டமிட முடியாது.
மதுரையின் தண்ணீர் தேவைகளை பின் வருமாறு அணுகலாம்.
1. வைகை ஆறு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் பிற சிறு நதிகளில் இருந்து ஓரளவுக்குத் தண்ணீரை மதுரைக்குக் கொண்டு வருதல். தற்சமயம் குடிநீருக்க்காகவும் பாசனத்துக்காகவும் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப் படுகிறது. ஆனால் அது போதுமானதாக இருப்பதில்லை. காவேரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டமும் அது போலவே பற்றாக்குறை உடையது. ஆக மதுரைக்கு ஆற்று நீர்களைக் கொண்டு வருவது அனேகமாக சாத்தியமில்லாத போதுமான நீர் வளம் இல்லாத ஒன்றே. மாற்று வழிகளில் கவனம் செலுத்த வேண்டும் அவையாவன:
மதுரையில் பெய்யும் மழை நீர்களை மிக அதிக அளவில் சேமிக்கும் வழி முறைகள். மழை நீர் சேமிப்பு பெரும் திட்டங்கள் அதற்கான முதலீடுகள்
மதுரையின் பசுமைப் பரப்பை அதிகரித்தல்
மதுரையில் தற்சமயம் பயனில்லாமல் இருக்கும் டவுன் ஹால் ரோடு தொப்பக் குளத்தில் நீர் சேமித்து அந்த இடத்தின் தொன்மையை மீட்டல் அதைச் சுற்றியுள்ள கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றி விட்டு அதை மீண்டும் கோவில் பயன் பாட்டுக்குரிய நீர் நிறைந்த குளமாக மாற்றுதல் அதன் மூலம் நிலத்தடி நீரை அதிகரித்தல். அனைத்து கோவில் தொப்பக் குளங்களுக்கும் தண்ணீர் தடை படாமல் வரச் செய்தல் ஆக்கிரமிப்பு தடைகளை அகற்றுதல் அதன் மூலமாக நிலத்தடி நீரை அதிகரித்தல்.
கிருதுமால் நதியை மீண்டும் சுத்தமாக மீட்டெடுத்து மழை நீரைச் சேகரிக்கும் கால்வாயாக அதை மாற்றுதல். அதில் படகுப் போக்குவரத்தை ஏற்பாடு செய்து சுற்றுலா நீர்வழித்தடமாக மாற்ற்றுதல் அதன் மூலம் நிலத்தடி நீரை அதிகரித்தல். கிருதுமால் நதியின் சாக்கடை கழிவுகளை நீக்கி அதை மீண்டும் ஒரு சுத்த நீர்க் கால்வாயாக அழகிய நீரோடையாக மாற்றுதல், மதுரையைச் சுற்றி அழகிய நீர் வழிப் பாதை ஒன்றை ஏற்படுத்துதல்
மதுரையையைச் சுற்றி உள்ள அனைத்துக் குளங்களில் இருந்தும் முள் செடிகளை புதர்களை அகற்றை ஆழப் படுத்தி மழை நீர் சேகரிப்பை அதிகம் செய்தல் அவற்றைச் சுற்றி மருத மரம், கடம்ப மரங்களை வளர்த்தல்
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வெற்று இடங்களில் மழை நீர் சேகரிப்புக் குட்டைகள் அமைத்தல் சுற்றி பெரும் மரங்களை நடுதல் நிலத்தடி நீர் சேகரிப்பை அதிகப் படுத்துதல்
அனைத்து குளங்கள், கண்மாய்கள், கோவில் தொப்பங்கள், நீரோடைகள் அனைத்திலும் வருடம் முழுவதும் தண்ணீர் தேங்க வழி செய்தல். அதன் மூலமாக நிலத்தடி நீரை செறிவு படுத்துதல்.
காலியிடங்கள் அனைத்திலும் மதுரையின் இயற்கையான மதுரைக்குரிய பெரு மரங்களை வளர்த்தல் அதன் மூலமாக மழைப் பொழிவை அதிகரித்தல்
இவையெல்லாம் சொற்ப அளவிலேயே உதவும். ஆகவே ராமேஸ்வரம் கடற்பகுதியில் அல்லது கடலுக்குள்ளாக ஒரு மாபெரும் கடல் நீர் சுத்திகரிப்புத் திட்டத்தைத் துவக்கி ராட்சச குழாய்கள் மூலமாக மதுரை வரும் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் மட்டுமே மதுரையின் நீர் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப் பட வேண்டும். மதுரைக்குத் தேவையான தண்ணீர் வைகை மூலமாகவும் மழை நீர் மூலமாகவும் வரும் காலங்களில் குறைந்த அளவிலும் கோடை காலங்களில் அதிக அளவிலும் கடலில் இருந்து நீர் கொண்டு வர திட்டமிட வேண்டும். அந்த நீரை குறைந்த கட்டணத்துக்கு தொழிற்சாலைகளுக்கும் வீடுகளுக்கும் வழங்கலாம். குடிநீருக்காக வைகையில் இருந்து பெறும் தண்ணீரை பாசனங்களுக்கு திருப்பி விடலாம்.
அவ்வாறு கடல் நீரைச் சுத்திகரித்து வரும் நீர்களைக் கொண்டு மதுரையின் கோவில் தொப்பக் குளங்களை நிரப்புதல் மூலமாக நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கலாம்.
இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து மதுரையின் இயல்பாகப் பெய்யும் மழை நீரையும் கடல் நீரையும் கொண்டு மதுரையின் நீர்த் தேவைகளை பூர்த்தி செய்யும் வழி முறைகளை கண்டறிய வேண்டும். அது முற்றிலும் சாத்தியமான ஒன்றே. முனைப்பாக முயன்றால் மதுரையை ஒரு நீர் வளமிக்க பகுதியாக 4 ஆண்டுகளுக்குள் மாற்றி விடலாம்.
2. மதுரையை ஒரு உலகப் புகழ் பெற்ற கலாசாரத் தலமாக மாற்றுதல். தற்சமயம் மதுரையின் கோவில்களும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களும் உலக அளவில் சென்று சேரவில்லை. அமெரிக்கர்களுக்கு ஒரு ஏதென்ஸ் தெரிந்த அளவு மதுரையைப் பற்றித் தெரியவே தெரியாது. மதுரையை ஒரு உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கலாசார மையமாக மாற்றுவது மதுரையின் வளர்ச்சிக்குரிய முக்கியமான ஒரு திட்டமாக இருத்தல் அவசியம். அதை எவ்வாறு செய்வது
மதுரையில் மட்டுமே கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் முதல் 3000 ஆண்டுகள் வரையிலான ஏராளமான பழமையான பாரம்பரியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. அவை அனைத்தையும் அவற்றின் பழமை சற்றும் மாறாமல் உடனடியாக மீட்டெடுக்கப் பட்டு பாதுகாப்பு செய்யப் பட வேண்டியது
மதுரையின் அனைத்து தொல் பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் ஆவணப் படுத்தி ஒரு கையேடு தயாரித்தல் அதை உலக அளவில் பிரபலப் படுத்துதல்
மதுரயையைச் சுற்றி உள்ள அனைத்து சமணர் குகைகளையும் உரிய விதத்தில் பாதுகாப்பு செய்து அவற்றுக்கு போக்கு வரத்து சாலைகள் கழிப்பறைகள் ஏற்பாடு செய்து அவற்றை அகில இந்திய அளவில் சமணர்களிடம் பிரபலப் படுத்துதல்.
மதுரையைச் சுற்றியுள்ள அனைத்துக் கோவில்களின் ஆக்ரமிப்புகளை அகற்றி அவற்றை விசாலமான பெரிய கோவில்களாக மாற்றுதல். மதுரைக் கோவில்களின் சிற்பங்களையும் கட்டிடக் கலைகளையும் ஆவணப் படங்களாக எடுத்து அகில இந்திய சுற்றுலாப் பயணிகளிடம் கொண்டு சேர்த்து அதிக அளவில் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தல்
மதுரையின் கட்டிடக் கலைகள், கோவில்கள், மற்றும் கடந்த சில நூற்றாண்டு கால வரலாற்று சிறப்பு மிக்கக் கட்டிடக் கலைகளை ஆவணப் படங்களாக எடுத்து உலக அளவில் கொண்டு செல்லுதல். நெட்ஃப்ளிக்ஸ் அமேசான் ப்ரைம் போன்ற உலக அளவிலான சேனல்களில் டிராவல் டாக்குமெண்டரிகளாகக் கொண்டு சென்று பிரபலப் படுத்துதல்.
இந்தியாவின் நடுத்தர வர்க்க ஏழை சுற்றுலாப் பயணிகள் யாத்ரீகர்கள், பக்தர்களின் வசதிக்காக நடுத்தரமான கட்டணத்தில் சுகாதாரமான வசதியான பெரும் தங்குமிடங்களை ஏற்படுத்துதல்
மதுரையின் வரலாறு மற்றும் கட்டிடக் கலைகளை விளக்கும் வண்ணம் வரலாறு படித்த இளைஞர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளித்து அவர்களை முறையான வழிகாட்டிகளாக அமர்த்தி சுற்றுலாப் பயணிகளுக்கு பயன் படுத்துதல் அதன் மூலமாக வரலாறு படித்த மாணவர்களுக்கு வேலை வழங்குதல்
மதுரையின் தொன்மையான இடங்கள் அனைத்துக்கும் செல்லும் விதமாக சுற்றிலும் கண்ணாடிகளினால் ஆன பேட்டரியில் இயங்கும் ஹாப் இன் ஹாப் அவுட் எங்கும் ஏறி இறங்கிக் கொள்ளும் வசதியுள்ள சுற்றுலா வாகனங்களை மதுரை முழுவதும் இயக்குதல் அவரை குறிப்பிட்ட இடைவெளிகளில் அனைத்து இடங்களுக்கும் சென்று சுற்றி வருதல்
நாகமலை அழகர் மலை போன்ற மலைகளின் சரிவுகளில் உள்ள நீரூற்றுகளை மேம்படுத்தி அவற்றின் அருகே பசுமையான பூங்காக்களை உருவாக்கி அவற்றை நகர மக்களின் வார இறுதி சுற்றுலாத் தலங்களாக உடற்பயிற்சிக்கு உதவும் இடங்களாக மாற்றுதல். உதாரணமாக மதுரையைச் சுற்றியுள்ள அனைத்து மலைகளுக்கும் ஹைக்கிங் செய்யும் வசதிகளை ஏற்படுத்துதல் மலையுச்சிகளில் சிறு பூங்காக்கள் அமைத்தல் பொது வசதிகளை ஏற்படுத்துதல். திருப்பரங்குன்றம் மலை, மொட்டையரசு மலை, பசுமலை, நாகமலை, யானை மலை, அழகர் மலை போன்ற அனைத்துக் குன்றுகளிலும் மலையேறும் ஹைக்கிங் பாதைகளை அமைத்து பொது மக்களிடம் மலையேறும் பழக்கத்தினை ஊக்கப் படுத்தி அவர்களின் ஆரோக்யத்தினை அதிகரித்தல். மக்களுக்கு வார இறுதிகளில் செல்லக் கூடிய பொழுது போக்கும் இடங்களாக அவற்றை மாற்றுதல்.
நாகமலை, அழகர் மலை உச்சிகளில் சுற்றுச் சூழல் , உயிரியல் ம்யூசியங்கள், பூங்காக்கள் அமைத்து அவற்றுக்கு ரோப் கார் வசதிகளை ஏற்படுத்துதல்.
மீனாட்சி அம்மன் கோவில் ஆக்ரமிப்புகளை அகற்றி கோவில் இடங்களை மீட்டெடுத்து கோவிலைச் சுற்றிய சித்திரை வீதி முழுவதிலும் சோலார் பேனல் கூரைகளை அமைத்து அதன் அடியில் ஒரு மாபெரும் தொல் பொருள் வரலாற்று காட்சிக் கூடம் அமைத்தல். அதனுள் ஆவணப் படங்கள் புகைப் பட கண்காட்சிகள் கலைப் பொருட்கள் விற்பனைக் கூடங்கள் தமிழக வரலாற்றினை விளக்கும் காட்சிகள் தமிழகத்தின் வரலாறுகளை விளக்கும் காட்சிகள் பல்வேறு இடங்களில் பாதுகாப்பின்றி இருக்கும் சிற்பங்களின் காட்சிக் கூடங்கள் என்று ஒரு முழுமையான ஹெரிட்டேஜ் மையம் ஒன்றை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி கட்டமைத்தல் அதை லூவர் ம்யூசியம் போன்றதொரு உலகப் புகழ் பெற்ற காட்சிக் கூடமாக மாற்றுதல்
மதுரையின் அனைத்து தொன்மையான இடங்கள் குறித்துத் தனித் தனி கையேடுகள் தயாரித்தல் அவற்றை பயணிகளிடம் விநியோகித்தல்.
மதுரையின் புராதனத்தை மீட்டெடுக்க வேண்டும். முதலில் தற்பொழுதைய மதுரை நகரின் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 5 கி மீட்டர் ரேடியசுக்கு வேறு எந்தவிதமான புதிய (நூறாண்டுகளுக்குள்ளாகக் கட்டிய கட்டிடங்கள்) கட்டிடங்களும் இருக்கக் கூடாது. அவற்றுக்கு நஷ்ட ஈடு வழங்கி விட்டு இடித்து விட வேண்டும். ஐந்து வகை நில வாழ்க்கைகளையும் பழந்தமிழர் வாழ்க்க்கை ம்யூசியங்களையும் அந்த புதிய கலாசார நகரத்தில் நிர்மாணித்துக் கொள்ளலாம். மீதமிருக்கும் இடங்களில் இதுவரை நடந்த அகழ்வாய்வில் கிடைத்த அரும் பொருட்களின் மியூசியங்கள் அமைக்கலாம். தமிழ் நாட்டை மொத்தமாக விவரிக்கும் அதன் அனைத்து விதமான பரிமாணங்களையும் விளக்கும் ஒரு நேச்சரல் ஹிஸ்டரி ம்யூசியம் அமைக்கலாம். மீனாட்சி அம்மன் கோவில், புது மண்டபம், பிற கோவில்கள் போன்றவற்றின் பழமையும் மெருகையும் மீட்டெடுக்க வேண்டும். நாயக்கர் காலங்களில் கட்டப் பட்ட நிலத்தடி நீர் வழிக் கால்வாய்களை மீட்டெடுத்து நகருக்குள் இப்பொழுது பீ இருப்பதற்காக பயன் படுத்தப் படும் கோவில் குளங்களை அதன் அழகுடன் மீட்டெடுக்கலாம். நகரம் முழுவதும் மீண்டும் கடம்ப வனத்தை உருவாக்கலாம். மொத்தத்தில் உலக அளவில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கியமான இந்து ஆன்மீக தலமும் அருங்காட்சியகமும் கூடிய ஒரு பாரம்பரிய நகரமாக மதுரையை மாற்றி அமைக்கலாம்.
மதுரையைச் சுற்றி உள்ள மலைகளில் ஒரு மலையான நாகமலையின் மேல் இந்தத் தமிழ்த் தாயை நிற்க வைக்கலாம். அது ஏற்கனவே ஒரு 500 அடி உயரம் உடைய நீண்ட மலை. அதன் மேல் இன்னும் ஒரு 300 அடி வைத்தால் தமிழ்த் தாய் மதுரை மாவட்டம் முழுக்க தரிசனம் கொடுப்பாள். அந்த 800 அடி உயரத்தைச் சென்றடைய கீழே விழுந்து விடாத கேபிள் காட் விடலாம். ஹாங்காங்கின் மலைத்தொடர்களின் மேல் அமர்ந்துள்ள உயரமான புத்தர் சிலை போல அமைக்கலாம். அதே பாணியில் அமைத்தால் ஹாங்காங்குக்கு வருவதைப் போலவே மதுரைக்கும் உலகமெங்கிலும் இருந்து பயணிகள் வருவார்கள். அந்த மலையின் மேலேயே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலுக்கான காட்சியகங்களையும் உருவாகி வைக்கலாம்.
வான் மூலமாக சுற்றிப் பார்க்க ஹெலிக்காப்டர் சுற்றுலா ஏற்பாடு செய்தல்
விமான நிலையம் பஸ் நிலையம் ரெயில் நிலையங்களில் மதுரையின் அனைத்து சுற்றுலா இடங்களையும் விளக்கும் அழகான கையேடுகளையும் மேப்களையும் உள்ளடக்கிய கையேடுகளை விநியோகித்தல்,
மொத்தத்தில் ஆண்டுக்கு பில்லியன் டாலர்கள் வருமானம் கொணரக் கூடிய ஒரு மாபெரும் கலாசார ஆன்மீக சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் கொண்ட நகரம் மதுரை. அதற்குத் தேவை சுத்தமான சாக்கடைகள் குப்பைகள் அற்ற நகரமாக மதுரையை மாற்றுதல் மட்டும் சுற்றுலா பயணிகளிடம் ஏமாற்றாமல் அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொள்ள வேண்டிய வழிகாட்டிகள் போக்குவரத்து வாகன ஓட்டிகள் கடைகள் உணவகங்கள் தங்குமிடங்கள் நடத்துபவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருமே. மதுரை ஒரு குப்பையில்லாத சுத்தமான நகரமாக மாறுமானால் அதை ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக மாற்றி அதன் மூலமாக பல நூறு கோடி ரூபாய் வருமானத்தையும் அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் மதுரையில் உருவாக்கி விட முடியும்.
தொடரும்