சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்

மாநகர் மதுரையை மீட்டெடுப்போம் – பகுதி 2

நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க மதுரை மாநகரின் தேவைகளும் அதனை எதிர்கொள்ளும் வகையும். மண்ணின் மைந்தர் விஸ்வாமித்திராவின் ஆலோசனைகள் .
மதுரை பாரளுமன்றத் தொகுதி என்பது அத்துடன் தொட்டடுத்துள்ள சில தொகுதிகளுடனும் தொடர்புடைய ஒன்று ஆகவே நாம் ஒட்டு மொத்தமான தேவைகளைக் கருத்தில் கொள்ளலாம்.

3. மதுரைக்கானத் தொழிற் சாலைகள் கொணர்தல்

மதுரையின் முக்கியமான தொழிலாக சுற்றுலாவை மாற்றினாலே வேறு தொழில்கள் தேவையில்லை ஆகவே சுற்றுலாவையே மதுரையின் முக்கியமான தொழிலாக முன்னிறுத்துதல் அதற்கான திட்டங்களை மேற் கொள்ளூதல் அவசியம்.

சுற்றுலா போக மதுரையைச் சுற்றியுள்ள இடங்களில் ஓரளவுக்கு வேலை வாய்ப்புகளும் வரி வருமானங்களும் உருவாக்கக் கூடிய சிறு மற்றும் பெரு தொழில்களும் அவசியம். மதுரையில் விளையும் மல்லிகை, ஜாதிப் பூக்களில் இருந்து ஃபெர்ஃப்யூம் உருவாக்கும் தொழிற்சாலைகள், பதப் படுத்தப் பட்ட சத்துணவுகள் உருவாக்கும் வேல்யூ ஆடெட் பழ உணவுகள் குளிர் பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் ராணுவ தளவாட உபகரணங்கள் சம்பந்தப் பட்ட சிறு தொழிற்சாலைகள் கொணரலாம்.

ஏற்கனவே இருக்கும் இரு ஐ டி பார்க்குகளிலும் நிறுவனங்களைத் துவக்க ஊக்கப் படுத்தி அவற்றை முழுமை அடையச் செய்தல்

கைவினைப் பொருட்கள் கலைப் பொருட்கள் பொம்மைகள் செய்தல் போன்ற ஏராளமான சிறு தொழில்கள் செய்யும் கலைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் பூங்கா ஒன்றை அமைத்தல் அவற்றை மதுரையின் சுற்றுலா மையங்களிலேயே விற்பனை செய்தல்

மதுரைக்கான பிரத்யோகமான ஒரு கன்வென்ஷன் செண்ட்டர் அமைத்தல் அதனுள் கான்ஃப்ரன்ஸ் ஹால்கள், பெரிய மாநாடுகள் நடத்தும் இடங்கள், எக்ஸ்பிஷன் பூத்கள், உணவகங்கள் வாகன நிறுத்த இடங்கள் அனைத்தும் உள்ளடக்கிய ஒரு பெரும் கன்வென்ஷன் செண்ட்டர் உருவாக்குதல்.

4. போக்குவரத்து

மதுரையில் இருந்து செல்லும் அனைத்து ரயில் தடங்களையும் அகலப் பாதைகளாக மாற்றி அவற்றை குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள்ளாக முடித்தல்

மதுரை போடி அகல ரயில் பாதையை பூர்த்தி செய்து மதுரையை ஒரு ஸ்பைஸ் ஹப்பாக மாற்றுதல்

நகரத்துக்குள்ளும் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியும் பேட்டரி வாகனங்களை மட்டுமே அனுமதித்தல்

மதுரையைச் சுற்றி வட்ட வடிவில் மெட்ரோ ரெயில் கொணர்தல் அதில் இருந்து நகர மையத்துக்குள் செய்ய பேட்டரி வாகனங்களை மட்டும் அனுமதித்தல் அதன் மூலமாக போக்கு வரத்து நெரிசலையும் தூசி புகைகளையும் குறைத்தல்

மதுரை கோவை மதுரை ராமநாதபுரம் ராமேஸ்வரம் ஆகிய சாலைகளை நான்கு வழிப் பாதைகளாக மாற்றுதலை விரைவு படுத்துதல்

மதுரை விமான நிலையத்தை சர்வ தேச விமான நிலையமாக முழுமையாக மாற்றுதல் விமான ரன் வே நீட்டிக்கும் திட்டத்தை விரைவு படுத்தி அதில் போயிங் போன்ற பெரிய விமானங்கள் இறங்கக் கூடிய விமான தளமாக மாற்றுதல். விமானங்கள் நிறுத்தும்/தங்கும் இடமாக மாற்றுதல். மதுரையில் இருந்து வெளிநாடுகளுக்கு கார்கோ விமானச் சேவைகளை விரைவில் துவக்குதல்

விமான நிலையத்தில் இருந்து மதுரை நகருக்குள் வரும் பாதையினை சாக்கடைகள் அசிங்கங்கள் இல்லாத அழகான பசுமையான கலைநயத்துடன் கூடிய பாதையாக மாற்றுதல்.

நகருக்குள் ஓடும் அனைத்து பஸ்களையும் பேட்டரி பஸ்களாக மாற்றுதல்

மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி வெளி வீதி வரை உள்ள வீதிகளை சோலார் பேனல் கூரைகளினால் நிழல் படுத்துதல் அழகு படுத்துதல் அதன் மூலமாக நகருக்குத் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்தல் அதன் மூலமாக மின்சார ரெயில்கள் அமைத்தல்

நகர் முழுவதும் பேட்டரியால் இயங்கும் சிறிய ஆட்டோ போன்ற வாகனங்களையும் சைக்கிள்களையும் நிறுத்தி அவற்றை தானியங்கி மெஷின்களில் கட்டணம் செலுத்துவதன் மூலம் வாடகைக்கு விடலாம். இதன் மூலமாக நகருக்குள்ளாக கார்களின் நெரிசல் வெகுவாகக் குறையும். சான்ஃபிரான்ஸிஸ்கோ சான் ஓசே போன்ற நகரங்களில் அவை போன்ற சைக்கிள்களையும் பேட்டரி குறு வாகனங்களையும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு எந்த இடத்திலும் விட்டு விட்டுச் செல்லக் கூடிய வசதிகள் உள்ளன.

மதுரைக்குள் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் ஒரு சில பேட்டரி சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவுதல். பேட்டரி வாகன பயன்பாடுகளை ஊக்குவிக்க நகரின் சார்பாக ஊக்கத் தொகை அளித்தல்

வீடுகளின் கூரைகளின் மீதான சோலார் பேனல்களை அமைக்க பெரும் அளவில் நிதியுதவி ஏற்பாடு செய்தல்

5. பசுமைப் படுத்துதல்

மதுரை ஒரு பெரும் பாலை நகரமாக உள்ளது. அதன் பசுமைப் பரப்பை அதிகப் படுத்துவதன் மூலமாக மழை அளவை அதிகரிக்கலாம். பள்ளி கல்லூரி மாணவர்கள் ஒரு பெரும் மரத்தை முழுக்க வளர்த்துக் காண்பித்தால் அவர்கள் பள்ளியிறுதியில் கூடுதல் தனி மதிப்பெண்களும் கல்லூரிப் படிப்பில் உதவியையும் அறிவிக்கலாம். பெரிய மரங்கள் வளர்த்துப் பாதுகாக்கும் வீடுகளின் வரிகளில் சலுகை அளிக்கலாம். வளர்த்த மரம் ஒன்றுக்கும் குறிப்பிட்ட அளவு வரிச்சலுகை அல்லது இன்செண்ட்டிவ் அளிக்கலாம். காலியிடங்களில் மரம் வளர்க்கத் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கலாம். குன்றுகளின் காலியிடங்கள் அனைத்திலும் மரம் வளர்க்கும் பொறுப்பை ஒவ்வொரு கல்லூரி மாணவர்களிடமும் ஒப்படைக்கலாம். தரிசு நிலங்களில் மழைக் குட்டைகளிலும் மரங்களயும் வளர்க்க முன் வருபவர்களை ஊக்குவிக்கலாம்.

மதுரை முழுவதுமாக அர்பன் காடுகளை உருவாக்குதல்.

6. கல்வி நிலையங்கள்

மதுரையில் மத்திய அரசாங்கத்தின் பள்ளிகளை அதிகரித்தல். தனித்துவமான கல்விகளுக்கான சிறப்புக் கல்லூரிகளை அமைத்தல். ஆராய்ச்சி சாலைகளை ஏற்படுத்துதல்.

மதுரையைச் சுற்றிய உயரமான குன்றின் மீது ஒரு வானிலை ஆராய்ச்சி மையம் டெலஸ்கோப் ஆப்சர்வேட்டரி மற்றும் ஸ்பேஸ் சயின்ஸ் செண்ட்டர் ஒன்றை அமைத்தல்

7. சுகாதாரம்

மதுரை மிக மிக மோசமான ஒரு குப்பை நகரம். அங்கு மக்களிடமும் அரசாங்கத்திடமும் சுகாதார உணர்வு அறவே இருப்பதில்லை. மதுரையின் அனைத்து வீடுகளுக்கும் குப்பைகளைப் பிரித்து மக்கும் மக்கா மீள் உபயோகக் குப்பை கூடைகளை அளித்தல் அதில் மட்டுமே குப்பைகளைப் போட கட்டாயப் படுத்துதல். தனியாக குப்பைக் கூடைகளை அளிக்க முடியாத இடங்களில் பொது இடங்களில் மூவகை குப்பை சேகரிப்பு கார்ட்டுகளை அமைத்தல். அதை தினமும் முறையாகப் பராமரித்து அப்புறப் படுத்துதல்

குப்பைகளை பிரித்து மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் நிலையங்களை கட்டுதல்

மீள் உபயோகக் குப்பைகளைப் பயன் படுத்தும் நிலையங்களை கட்டுதல்

திரவக் கழிவுகளை சுத்திகரித்து மீள் பயன் படுத்துதல்

ஆறுகளிலும் குளங்களிலும் சாக்கடைகள் கலக்காமல் அவற்றை சுத்தப் படுத்தி உள்ளே விடுதல்

பேட்டரி வாகன பயன்பாடுகளை அதிகரிப்பதன் மூலமாக நகரின் சுவாச மாசுகளை குறைத்தல். பேட்டரி சார்ஜ்களுக்கான மின்சாரத் தேவைகளை சோலார் கூரைகள் மூலமாக நிறைவேற்றுதல்

சாமான்கள் கொண்டு செல்லும் சிறு சரக்கு வாகனங்கள் அனைத்தையும் பேட்டரி வாகனங்களாக மாற்றுதல்

மக்கும் குப்பைகளில் இருந்து உரம் உற்பத்தி செய்யும் சிறு சிறு நிலையங்களை நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் உருவாக்குதல்

மதுரை நகரின் பயன்பாட்டுக்காக ஒரு ஏர் ஆம்புலன்ஸாவது கொண்டு வருதல்

மதுரையின் அவசியத் தேவைகள் சில:

1. ஒரு மிகப் பெரிய குளூரூட்டப் பட்ட சேமிப்பு நிலையம். அதில் விவசாயிகளுக்கு சிறு பெட்டிகள் முதக் அறைகள் வரையிலும் வாடகைக்கு விடப் பட வேண்டிய ஸ்டோரேஜ் ஸ்பேஸ்கள். நீண்ட காலத்துக்கு சேமிக்க வேண்டிய அறைகள் அனைத்தும் இருக்க வேண்டும். அதை அரசாங்கம் தன் கொள்முதல்களுக்கும் விவசாயிகள் தங்கள் விளைச்சல்களை சேமிக்கவும், வியாபாரிகள் தங்களது உணவுப் பொருட்களை சேமிக்கவும் இடம் இருக்க வேண்டும். குறிப்பிட்ட கட்டணத்தில் அனைவருக்கும் அவை வாடகைக்கு விடப் பட வேண்டும்

2. உலகப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தயார் செய்யும் அளவுக்கான ஒரு தடகளத் தடம், நீச்சல் குளம், ஓடுதல் தளம், துப்பாக்கி சுடும் தளம், பாஸ்கெட் பால், டென்னிஸ், பேட்மிட்டண் போன்ற பயிற்சித் தளம் உரிய பயிற்சியாளர்களுடன் நிறுவப் பட வேண்டும். பள்ளி கல்லூரிகளில் அடையாளம் காணப் படும் திறமையான மாணவர்களுக்கு அங்கு பயிற்சி அளிக்கப் பட்டு இந்திய அளவு உலக அளவுக்கான போட்டிகளுக்கு அனுப்பப் பட வேண்டும்

3. மதுரைக்கு அருகே எங்கு விபத்துக்கள் நடந்தாலும் உடனடியாக பாதிக்கப் பட்டோர்களை எய்ம்ஸ் மருத்துவ மனைக்குக் கொண்டு வரத் தேவையான ஒரு ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிக்காப்ட்டரும் அது இறங்குவதற்கான தளமும் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம் அருகே அமைக்கப் பட வேண்டும்

4. இப்பொழுதுள்ள கோர்ட்டுகள் அதிகரிக்கப் பட்டு ஒவ்வொரு தனித் தனியான வழக்கு வகைகளுக்கும் ஸ்பெஷல் கோர்ட்டுகள் அமைக்கப் பட்டு மதுரையில் வழக்குகள் தேங்காமல் நீதி உடனடியாக வழங்கப் பட வேண்டும்.

5. மதுரை விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்லும் அனைத்து வழிகளையும் சற்று தூய்மையாகவும் அழகுணர்வுடனும் பராமரித்தால் அது வெளிநாட்டு வெளி மாநில சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும். முக்கியமாக சாலையோரங்களில் காணப் படும் சாக்கடைகள், பன்றிகள், சீமக் கருவேல முள் மரங்கள், சுவர்களில் ஒட்டப் படும் போஸ்டர்கள், மனிதக் கழிவுகள், குப்பை கூளங்கள், அரசியல்/சினிமா/தனிநபர் விளம்பரப் பலகைகள் ஆகியவற்றை அப்புறப் படுத்தி ஒரு அழகான தூய்மையான பாதையை அமைக்க முடியுமானால் அது சுற்றுலா வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிகரமாக அமையும். குறைந்த பட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடங்கள் அனைத்தையுமே நாம் அழகாகவும் சுத்தமாகவும் பராமரிக்க முடியுமானால் அது மதுரையின் புகழை வெளி உலகுக்கு வெகுவாக விளம்பரம் செய்ய உதவும். பொதுவாகவே ஒரு வெளிநாட்டுப் பயணி மதுரை போன்ற நகருக்கு வந்து விட்டு நாடு திரும்பியவுடன் தனது அனுபவங்களை பல்வேறு இணைய தளங்களிலும் சுற்றுலாவுக்கென்றே இருக்கும் பிரத்யோகமான பின்னூட்டக் குழுமங்களிலும் (feedback forums) பதிவு செய்கிறார்கள். முக்கியமாக அவர்களுக்கு தூய்மையற்ற அசுத்தமான சூழல் பெரிய ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. மதுரையின் பிருமாண்டமான கட்டிடக் கலைகளும் சிற்பங்களும் அவர்களைக் கவர்ந்தாலும் கூட அசுத்தமான சூழல் இருந்தால் அதையே அவர்கள் முக்கியமான பிரச்சினையாகக் கருதி அதை தங்கள் அனுபவப் பதிவாகப் பதிந்து விடுகிறார்கள். ஒரு சுற்றுலாத் தலத்தில் அசுத்தக் குறைவும் குப்பைகளும் இருப்பதாகக் கேள்விப் பட்டால் அந்த இடத்திற்குச் சென்றால் சுகாதாரக் கேடு ஏற்படுமோ என்று அஞ்சி பெரும்பாலான வெளிநாட்டுப் பயணிகள் தவிர்த்து விடுவார்கள். ஆகவே நாம் மதுரையை உலக சுற்றுலா வரை படத்தில் ஒரு முக்கியமான தலமாக மாற்ற விரும்பினால் மதுரையின் புறத் தோற்றத்தில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

6. மதுரையின் ஒவ்வொரு பகுதிகளிலும் தடைகள் இல்லாத நீண்ட நடைதள மேடைகள் நிறுவப் பட வேண்டும். மதுரையில் மக்கள் காலாற நடப்பதற்கு ஏற்ற இடங்கள் அதிகம் இல்லை. ஒரு சில இடங்களில் உள்ள க்ரவுண்டுகள் கூட ஏதாவது ஒரு தனியார் பள்ளியின் கட்டுப்பாட்டில் உள்ளன. பைபாஸ் ரோடு திருப்பரங்குன்றம் ரோடு போன்ற நீண்ட சாலைகளின் இரு புறமும் நடப்பதற்கு ஏற்ற நல்ல ப்ளாட்ஃபாரங்கள் அமைக்கப் பட வேண்டும் அவற்றில் கடைகள் ஆக்ரமிப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு நகர் பகுதியிலும் நடப்பதற்கும் ஓடுவதற்கும் விளையாடுவதற்கும் ஏற்ற மைதானங்கள் உருவாக்கப் பட வேண்டும்

7. மதுரையின் நடுப்புறத்தில் உள்ள சிறைச்சாலை ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறமான இடத்துக்கு நகர்த்தப் பட வேண்டும். சிறைச்சாலை உள்ள பகுதியில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கோர்ட்டுகள், மைதானங்கள் போன்ற மக்களுக்குத் தேவைப் படும் வசதிகளைக் கொண்டு வரலாம்

8. நகரின் வெளி வீதிகளில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளே பேட்டரி வாகனங்கள் அல்லது நடந்து மட்டுமே செல்ல அனுமதிக்கப் பட வேண்டும்.

மதுரை பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகும் வேட்பாளர் இதையெல்லாம் செய்தால் இன்னும் பல முறை போட்டியில்லாமலே அவர் மீண்டும் மீண்டும் வெற்றியாளராகத் தொடருவார்.
(Visited 320 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close