பூஜ்ய குருதேவ் ஸ்வாமி சின்மயானந்தா அவதார தினம் – மே 8.

இருபதாம் நூற்றாண்டில் பாரதம் உலகிற்கு கொடையளித்த அத்வைத ஆசான் குருதேவ் ஸ்வாமி சின்மயானந்தா அவதாரத்தினம் இன்று.

கேரள மாநிலம் எர்ணாகுளம் நகரில் நீதிபதியாகப் பணியாற்றிக்கொண்டு இருந்த குட்டன் மேனன் என்பவருக்கும் பாருக்குட்டி அம்மாவிற்கும் மகனாகப் பிறந்தவர் ஸ்வாமிஜி. இவர் பூர்வாஸ்ரமப் பெயர் பாலகிருஷ்ணமேனன். தனது பட்டப்படிப்பை திருச்சூரில் முடித்த ஸ்வாமிஜி முது கலை மற்றும் சட்டப் படிப்பை லக்நோ பல்கலைக்கழகத்தில் பயின்றார். அது இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த நேரம். வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். அப்போது ஆங்கில அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை எழுதி, விநியோகித்து மக்களை போராடத் தூண்டியதாக பாலகிருஷ்ணமேனன் மீது அரசின் கைது நடவடிக்கை பிறப்பிக்கப்பட்டது. கைதாவதில் இருந்து தப்பிக்க அவர் தலைமறைவானார். இரண்டாண்டுகள் தலைமறைவு வாழ்கை வாழ்ந்த மேனன், 1944ஆம் ஆண்டு பஞ்சாபில் கைது செய்யப்பட்டார். பலமாதங்கள் சிறையில் சுகாதாரமற்ற சூழலில் வாழவேண்டிய இருந்ததால் அவர் உடல்நிலை மோசமானது. வெள்ளையர் ஆட்சி அவரை அதிகாரபூர்வமாக விடுதலை செய்யாமல், ஊருக்கு வெளியே ஒரு சாலை ஓரத்தில் வீசிவிட்டு சென்றது. அங்கே ஒரு பெண்மணியால் கண்டெடுக்கப்பட்டு, மருத்துவ உதவி அளித்து அவர் காப்பாற்றப்பட்டார்.

அதன் பின்னர் ஜவஹர்லால் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது இடதுசாரி சிந்தனைகளை ஆதரித்து பல்வேறு கட்டுரைகளை எழுதினார். இந்திய மெய்ஞான ஆசிரியராக விளங்கிய ஸ்வாமிஜி, அந்தக் காலத்தில் இந்திய தத்துவத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லாமலும், காவி கட்டிய சந்யாசிகள் அனைவரும் சோம்பேறிகள் என்ற எண்ணத்தையே கொண்டிருந்தார் என்றால் நம்ப முடிகிறதா ?

இப்படிப்பட்ட சன்யாசிகளின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் என்று எண்ணி, அவர் இமயமலையில் உள்ள சாதுக்களை சந்திப்பதற்கு ரிஷிகேஷ் சென்றார். அங்கே ஸ்வாமி சிவானந்தாவை கண்டடைந்தார். நாத்திகவாதியாக சென்ற பாலன் சிவானந்தாவின் சீடராக ஒரு ஆன்மீக குருவாக, பற்றுகளைத் துறந்த சந்நியாசியாக மாறினார். 1949ஆம் ஆண்டு சிவராத்திரி நாள் அவர் சின்மயானந்தா என்ற யோகபட்டதோடு சந்நியாசி ஆக மாறினார். தபோவன் மஹராஜ் என்ற சன்யாசியிடம் வேதாந்த பாடத்தை குறைவற கற்றுக்கொண்டார்.

பாரதத்தாய் காலம்தோறும் தனது பெருமையை நிலைநாட்டும், தன் மக்களை வழிநடத்தும் தகுதியாக பிள்ளைகளை அளித்துக் கொண்டேதான் இருக்கிறாள். அப்படியா பெருமைமிகு மகனாக சுவாமி வேதாந்த பாடத்தை நாடெங்கும் நடத்த ஆரம்பித்தார். கீதைக்கு அவர் கூறும் விளக்கங்கள் கீதா ஞான யக்யம் என்ற பெயரில் பல இடங்களில் நடைபெற ஆரம்பித்தன. கூர்த்த மதியும், நீரொழுக்கு போன்ற ஆங்கில மொழி ஆளுமையும், உள்ளோடிய நகைச்சுவையும், இன்றய காலகட்டத்தின் சவால்களை எப்படி வேதாந்தத்தின் துணைகொண்டு எதிர்கொள்ளலாம் என்ற நடைமுறை சாத்தியக்கூறுகளும் என்று ஸ்வாமிஜியின் விரிவுரைக்கு மக்கள் பெருந்திரளாக வரத் தொடங்கினார்கள்.

நாடெங்கும் கீதை வகுப்புகள் ஆரம்பமாகின. அவை அனைத்தும் சின்மயா மிஷன் என்ற பெயரில் ஒருங்கிணைந்தன. 1956ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த கீதா ஞான யக்யத்தை அன்றய குடியரசுத்தலைவர் திரு ராஜேந்திர பிரசாத் துவக்கி வைத்தார். ஸ்வாமிஜியின் புகழ் இந்தியாவைத் தாண்டியும் பரவத் தொடங்கியது. உலகத்தின் பலநாடுகளுக்குச் சென்று அங்கேயெல்லாம் அத்வைத வேதாந்த அறிவை ஸ்வாமிஜி வழங்கினார். 1975ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் சின்மயா மிஷன் தொடங்கப்பட்டது.

1963ஆம் ஆண்டு உலகெங்கிலும் உள்ள ஹிந்துகள் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றியும், அதனை சமாளிக்கும் வழிமுறை பற்றியும் விவாதித்து முடிவு செய்ய உலகளாவிய அமைப்பு ஓன்று தேவை என்று ஸ்வாமிஜி கருதினார். அதற்கான மாநாடு ஓன்று 1964ஆம் ஆண்டு அவரது சாந்தீபினி ஆஸ்ரமத்தில் கூட்டப்பட்டது. அதன் விளைவாக உருவானதுதான் விஸ்வ ஹிந்து பரீக்ஷித்.

சின்மயா மிஷின் சார்பாக இந்தியாவெங்கும் பல்வேறு இடங்களில் கல்விக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவை நடைபெறுகின்றன. சிறுவர் சிறுமியினருக்கான பாலவிஹார், இளைஞர்களுக்கான சின்மயா யுவ கேன்த்ரா, கீதை வகுப்புகள், வேதாந்த வகுப்புகள் என்று இந்திய தத்துவ மரபை அனைவருக்கும் அளிக்கும் பணி தொய்வில்லாமல் நடந்துகொண்டு இருக்கிறது.

பகவத்கீதை, பல்வேறு உபநிஷத்துக்கள் மற்றும் பல வேதாந்த நூல்களுக்கு ஸ்வாமிஜி உரை எழுதி உள்ளார், ஆங்கிலத்தில் உள்ள இந்த நூல்கள் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு, பலராலும் படிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு துறவிகள் சின்மயா மிஷன் மூலம் பயிற்றுவிற்கப்பட்டு உலகெங்கும் இந்தியாவின் ஞான பொக்கிஷத்தை பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். குருதேவ் தொடங்கிவைத்த ஞானஒளி உலகெங்கும் சுடர்விட்டுக்கொண்டு உள்ளது.

சுவாமிஜியின் வாழ்க்கை வெறும் பயணமல்ல, அது ஒரு தவம். சத்தியமே சின்மயமாக உருவெடுத்து வந்த விந்தை. 78 ஆண்டுகள் மெய் வருத்தம் பாராது, கண் துஞ்சாது தேசப் பற்றுடன் சமுதாய மேம்பாட்டுக்காகவும் அவர் செய்த பணிகள் மகத்தானது. தன்னைப் போல பலரை உருவாக்கிய அழிவற்ற விதை அவர்.

எத்தனையோ குருமார்கள் இந்த மண்ணில்
அவர் அனைவர்க்கும் எங்கள் வந்தனங்கள்.

(Visited 43 times, 1 visits today)
3+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *