ஹோட்டல் மும்பை – இளகிய மனத்துடையவர்களுக்கு அல்ல!

ஹோட்டல் மும்பை – இளகிய மனத்துடையவர்களுக்கு அல்ல! மொழி – ஆங்கிலம்; நேரம் – 120 நிமிடங்கள்

தாஜ் ஹோட்டலில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலின் அடிப்படையில் அமைந்தது இந்த படம். தனது விருந்தினர்களை தனிப்பட்ட முறையில் அவர்களின் தேவைகளை அறிந்து பேணுவதில் பெயர் பெற்ற தாஜ் ஹோட்டலின் தன்மையை அழகாக சித்தரித்துள்ளனர் படத்தின் முதல் 10 நிமிடங்களில்.

மற்ற 110 நிமிடங்கள் முழுவதும் இரத்தம் இரத்தம் இரத்தம் மட்டுமே! படத்தை பார்ப்போரின் இரத்தம் உறைவது உறுதி.

10 பாக்கிஸ்தானிய பயங்கரவாதிகள், மும்பை கடற்கரையோரம் யாருக்கும் சந்தேகத்திற்கு இடமில்லா வகையில் வந்திறங்கி, டாக்ஸியை எடுத்துக் கொண்டு, தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் பயங்கரவாத தாக்குதலுக்கான இலக்கை நோக்கிச் செல்கின்றனர்.

இவர்கள் அனைவரும் பாக்கிஸ்தானில் உள்ள தங்களது கையாளர்களுடன் இறக்கும் வரை செயற்கைக்கோள் தொலைபேசிகள் மூலம் தொடர்பில் இருந்தவாறே தாக்குதல்களை நடத்துகின்றனர்.

பாக்கிஸ்தானிய கையாளர் சொர்க்கத்தில் இறைவன் அவர்களுக்காக காத்திருக்கிறார் என்று பயங்கரவாதிகளை தூண்டிவிட்டு, மேலும் இந்திய பொருளாதார வலிமையின் குறியீடான மும்பையில் அவர்கள் காணும் அனைத்தும் தங்கள்களின் மூதாதையர்களிடமிருந்து திருடப்பட்டதென்றும் கூறி மேலும் அவர்களை வெறியேற்றி, உலகமெங்கும் மும்பையின் அலறல் மற்றும் அழுகைச் சத்தம் கேட்கும்படி தாக்குதலை மேற்கொள்ள ஆணையிடுகின்றனர்.

அதன்பின் தாஜ் ஹோட்டலில் நிகழ்ந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் நம் கண் முன்னே திரைப்படம் அரங்கேற்ற நமக்கு நா வறண்டு போகின்றது. பொதுவில் இருந்த அனைவரையும் எளிதில் கொன்று குவித்து பிறகு ஒவ்வொரு அறையாகச் சென்று ஹோட்டல் பணியாளர் போல் அழைத்து விருந்தினரை கதவை திறக்க வைத்து கொல்கின்றனர்.

ஹோட்டலின் சமையல்காரர்கள் மற்றும் இதர பணியாளர்கள் எப்படி பல விருந்தினர்களை குறிப்பாக மறைத்து வைத்து காப்பாற்றுகின்றனர் என்பது மீதி கதை.

தாஜ் ஹோட்டலின் ஷாமியானா உணவகத்தின் பணியாளராக தேவ் படேல் மற்றும் தலைமை சமையல்காரராய் அனுபம் கேர் ஆகியோர் தங்கள் பாத்திரங்களை மிகவும் நேர்த்தியாகச் செய்துள்ளனர் . பயங்கரவாதிகளாய் வலம் வரும் இளைஞர்களும் நம்மை மிரள வைக்கின்றனர்.

மதத்தின் பெயரிலும், புனிதப் போர் என்ற பெயரிலும் அவர்கள் எவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்டனர் என்பதனை காட்சி அமைப்பின் மூலம் எளிதில் புரிய வைக்கிறது படம்.

தாக்குதலை சமாளிக்க போதிய செயல்திறன் இன்றி மும்பை போலீஸ் திக்கித் திணறி நிலைகுலைந்து நிற்பதும், தில்லியில் உள்ள கமாண்டோ படைகளை அனுப்புவதில் மத்திய அரசு விரைவாக செயல்படாது இருந்ததையும் படம் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

நேரடி ஒளிபரப்பாய் மற்றும் பரபரப்பு செய்தி என்ற பெயரில் டிஆர்பி பைத்தியம் பிடித்த ஊடகங்கள் எப்படி நிமிடத்திற்க்கு நிமிடம் பயங்கரவாதிகளுக்கு மத்திய அரசின் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை கொடுத்தனர் என்பது கொடுமையின் உச்சம்.

பாக்கிஸ்தானில் உள்ள பெற்றோர்களை பயங்கரவாதிகள் ஹோட்டல் தொலைபேசி வழி தொடர்பு கொள்வது போன்ற மிகைப்படுத்தல்களை தவிர்த்திருக்கலாம்.

2611 என்ற அந்த கொடூரமான தினத்தை 10 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளி திரை வழி வந்து நம்மை மிரள வைத்திருக்கிறது ஹோட்டல் மும்பை. இயக்குனரின் முயற்சிக்குப் பாராட்டுகள்.

தாக்குதலுக்கான மூல காரணமானவர்கள் இன்றும் பாகிஸ்தானில் சுதந்திரமாக இருக்கின்றனர் என்பதுடன் படம் முடிகின்றது.

நீங்கள் 18 வயது நிரம்பியவர் என்றால், கண்டிப்பாக பார்க்க வேண்டும்!

எண்ணமும் எழுத்தும்

சங்கர் கைலாசநாதன்

சிங்கப்பூர்

(Visited 122 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *