மே 6 – உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுப்பாராவ் நினைவுதினம்

பாரத நாட்டில் நீதிமான்கள் பலர் தேசத்துக்குச் சிறப்புச் சேர்த்துள்ளனர். அந்த வரிசையில் இந்தியாவின் ஒன்பதாவது தலைமை நீதிபதியாக மிளிர்ந்தவர் கோகா சுப்பாராவ். ஆந்திராவில் ராஜமுந்திரியில் 15 ஜூலை 1902 பிறந்தார். இவரது தந்தை ஒரு வக்கீல். சுப்பா ராவ் அரசு கலைக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார். அதன் பிறகு அவரது மாமனார் பி.வெங்கட்ராம ராவ் நாயுடுவின் அலுவலகத்தில் வக்கீலாகச் சேர்ந்தார். அது ஆந்திர கேசரி பிரகாசம் பந்துலுவின் அலுவலகம்.

பின்னர் வெங்கட்ராம ராவ் மாவட்ட முன்சீப்பாக குண்டூர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவுடன் சுப்பாராவ் தனது மைத்துனர் பி.வி.ராஜமன்னாருடன் கூட்டுச் சேர்ந்து வக்கீல் தொழிலில் சென்னையில் கொடி கட்டிப் பறந்தார். ஒருங்கிணைந்த சென்னை ராஜதானியில் மிக முக்கியமான வழக்குகள் பலவற்றையும் இவர்கள் கையாண்டு வென்றார்கள்.

Related image

 

1948ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் சுப்பாராவ். ஆந்திரா தனி மாநிலமாக பிரிந்து சென்றதும் ஆந்திர உயர்நீதிமன்றத்தை கட்டமைக்க கோவிந்த மேனன் என்ற பெயர்பெற்ற நீதிபதியை ராஜாஜி பரிந்துரைத்தார். ஆனால் பிரகாசம் பந்துலு சுப்பாராவைக் கேட்டுப் பெற்று நீதிமன்ற அமைப்புப் பணியில் சிறப்பு அலுவலராக நியமித்தார். நீதிமன்றம் அமைந்தவுடன் சுப்பாராவை தலைமை நீதிபதியாக நியமித்தனர். 1954ல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டவுடன் அதன் வேந்தராக தலைமை நீதிபதி சுப்பாராவ் பொறுப்பேற்றார். ஆளுநர் வேந்தராக சட்டம் மாற்றப்படும் வரை அந்தப் பொறுப்பில் தொடர்ந்தார்.

1958, ஜனவரி 31 அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் சுப்பாராவ். ஆறு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றிய பிறகு 1966ல் நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது காலத்தில் கோலக்நாத் வழக்கு என்ற புகழ்பெற்ற வழக்கில் அரசியல் சாசனம் அளித்த அடிப்படை உரிமைகளை அரசு தன்னிச்சையாக மாற்ற முடியாது என்று தீர்ப்பளித்தார். 1967, ஏப்ரல் 11 அன்று ஓய்வு பெற்றார் சுப்பாராவ்.

1967ல் ஜனாதிபதி தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் ஜாகிர் உசைனை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த தேர்வாக சுப்பாராவ் போட்டியிட்டார். ஆனால் ஜாகிர் உசைன் வெற்றிபெற்று ஜனாதிபதி ஆனார். சுப்பாராவ் அதன் பிறகு சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 1976, மே 6 அன்று அவர் காலமானர். பல்வேறு வழக்குகளில் இவரது வாதங்களும், தீர்ப்புகளும் இன்றும் நீதிமன்றத்தில் வழிகாட்டுக் குறிப்புகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வந்தே மாதரம்!

(Visited 17 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *