மீண்டும் பாரதப் பிரதமராக மோதி – சாத்தியமாவது எப்படி? -பாகம் 2 -பி.கே.ஆர்

இந்தியாவின் பத்திரிகையாளர்களும், அறிவுஜீவிகளும் இப்படி எதிர்த்து எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்த நேரத்தில் இவர்கள் யாருக்கும் பதில் சொல்லாமல் மோதி அமைதியாகவே அவரது வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

ஒன்றன்பின் ஒன்றாக அவர் மனதில் நினைத்திருந்த வேலைகளை செய்யத் தொடங்கினார். ஜன்தன் என்ற பெயரில் பாரதத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. கழிப்பறை இல்லாத வீடுகளே இல்லாமல் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு அதற்கான முன்னெடுப்புகள் ஆரம்பமாகின. எல்லா மக்களுக்கும் வீடு வழங்கவேண்டும் என்று திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் தொடங்கின. முத்ரா கடன் திட்டம் என்ற பெயரில் சிறு குறு தொழிலதிபர்களுக்கு கடன் வழங்கப்பட்டது. மானியங்கள் பெருவாரியாக மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

சுதந்திரதின விழாவில் பிரதமர் பேசுவது பெரு நிறுவங்களின் வருடாந்திர கூட்டங்களில் நிறுவனத்தின் தலைவர் தருவது போன்று கடந்த ஆண்டு என்ன குறிக்கோளை வைத்தோம், அதில் எதை அடைந்தோம், அடுத்த ஆண்டு என்ன செய்யப் போகிறோம் என்று தனது இலக்குகளையும் மக்களுக்கு விளக்கிக்கொண்டு இருந்தார்.

ஸ்கில் இந்தியா, மேக் இந்த இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று அடுக்கடுக்காக புதிய திட்டங்கள் செயல்படத் தொடங்கியது. சாகர்மாலா, பாரத்மாலா என்று பாரதம் முழுவதும் புதிய சாலைகளாலும், துறைமுகங்களாலும் இணைக்கப்பட்டது. ரயில்வே துறைக்கு புதிய வழித்தடங்கள், புதிய புகைவண்டி பெட்டிகள், வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்தல் என்ற வேலைகள் தொடங்கின.

கங்கை நதியைத் தூய்மைப்படுதுவதற்கு தனி முன்னுரிமை வழங்கப்பட்டது. கங்கையின் வழியே போக்குவரத்து ஆரம்பமானது. பாரதத்தின் கடைசி கிராமம் வரை மின்னிணைப்பு அளிக்கப்பட்டது. மரபுசாரா எரிசக்தி தயாரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மின்சக்தியை குறைவாகப் பயன்படுத்தும் LED விளக்குகள் குறைந்த விலையில் கிடைக்கத் தொடங்கின. பல்வேறு மருந்துகளின் விலைகள் குறைந்தன.  இவை அனைத்தும் நாட்டின் குடிமக்களை நேரடியாக ஒரு மாறுதலை உணரவைத்தது.

எந்தவிதமான கையிருப்பும் இல்லாமல் வங்கியில் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்ட ஜன்தன் கணக்குகளில் இன்று ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி அளவிற்கு பணம் குவிந்துள்ளது. இதுபோலவே செல்வமகள் சேமிப்புத் திட்டத்திலும் பெருவாரியான மக்கள் சேமிக்கத் தொடங்கினார்கள். இயல்பாகவே சேமிக்கும் பழக்கமுள்ள பாரத மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்த ஒருவராலேயே இந்தத் திட்டங்கள் பற்றி யோசித்தது இருக்க முடியும்.

மக்களின் எண்ணப்போக்கு மாறியுள்ளதை எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் உணர மறுத்தன. மக்களைப் பற்றி, அவர்கள் தேவைகள் பற்றி, அவர்களுக்கு எது சரி எது தவறு என்பது, அவர்கள் எண்ணவோட்டம் எப்படி உள்ளது என்பது  தங்களுக்குத்தான் தெரியும் என்ற நினைப்பில் அவர்கள் இருந்தார்கள். பத்திரிகைகளை முழுவதும் புறம்தள்ளி பிரதமர் மக்களோடு பேசிக்கொண்டு இருந்தார். மன் கீ பாத் என்ற தலைப்பில் மனதோடு பேசுவோம் என்று நாட்டுமக்களோடு மாதா மாதம் பிரதமர் உரையாடிக் கொண்டு இருந்தார். பாரதத்தின் பெருவாரியான மக்கள் தவறாமல் அந்தப் உரையாடலைக் கேட்டார்கள். பல நேரங்களில் அந்தப் பேச்சில் பாரதத்தின் பல பகுதியைச் சார்ந்த சாதாரண மக்களோடு தனக்கான அனுபவத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டார். பிரதமரால் குறிப்பிடப்பட்டவர்கள் உடனடியாக பிரபலமானார்கள்.

உள்நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கடந்த பல வருடங்களில் நடந்தது போன்ற குண்டு வெடிப்புகள் அநேகமாக இல்லாமலே ஆனது. ஈராக் நாட்டில் ஐ எஸ் தீவிரவாதிகளால் கைது செய்யப்பட்ட செவிலியர்களை விடுவித்து, மியான்மார் நாட்டில் புகுந்து நாகலாந்து தீவிரவாதிகளை அழித்தது போன்ற அதிரடி வேலைகள் நடந்தன.

ராணுவத்தினரின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக தள்ளிப்போடப் பட்ட தளவாடங்கள் வாங்கப்பட்டன. ராணுவ தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. பாகிஸ்தான் மீது எல்லைதாண்டி தாக்கி தனது ராணுவ பலத்தை இந்தியா நிரூபித்தது.

அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானிலும் சூடானிலும் சுவிசேஷத்தை பரப்பச் சென்ற கிருஸ்துவ பாதிரிகள் அங்கே உள்ள முஸ்லீம் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்டபோது ஹிந்து அடிப்படைவாதி என்று கூறப்பட்ட பாஜக அரசு அவர்களை வெற்றிகரமாக மீட்டுக் கொண்டு வந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கிக்கொண்ட பொதுமக்களை ஜெனரல் வி கே சிங் மற்றும் திருமதி சுஷ்மா ஸ்வராஜும் மீட்டுக் கொண்டு வந்தனர். உலகநாடுகளில் பாரதத்தின் பெருமை நிலைநாட்டப்பட்டது. பல்வேறு நாடுகளோடு நல்லுறவு உறுதி செய்யப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதர்களும், பணியாட்களும் அந்தந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என்ற எண்ணிக்கை விதைக்கப்பட்டது. இதற்கு நடுவில் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டையும் இந்த அரசு மீது எதிர்கட்சிகளால் வைக்க முடியவில்லை.சற்றேறக்குறைய இருபது ஆண்டுகளாக பாரதத்தின் வளமான மாநிலத்தின் முதல்வராகவும், பாரதப் பிரதமராகவும் இருந்தபின்பும் மோதியின் உறவினர்கள் நடுத்தர வாழ்க்கையையே வாழ்கிறார்கள்.

அப்படியானால் இந்த ஆட்சியில் குறைகளே இல்லையா என்றால் அதற்கு உடனடியாக இல்லை என்று கூறிவிட முடியாது. பிரதமர் அலுவலகத்திலேயே பெருவாரியான அதிகாரம் குவிந்து கிடக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. மிகச் சில அமைச்சர்கள் தவிர பலரின் செயல்பாடுகள் வெளியே தெரிவதே இல்லை. புதிதாக உருவாகியுள்ள ஹிந்து செயல்பட்டவர்கள் பேச்சுகளாலும் செயல்களாலும் பல நேரங்களில் ஆட்சிக்கு தர்மசங்கடமான நிலைமை உருவாகிறது என்பதையும் மறுக்க முடியாது.

தனிப்பட்ட மனிதர்களை முன்னிறுத்துவது என்பது பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் சித்தாந்தத்திற்கு எதிரானது. ஆனால் இன்று மோதி கட்சியைத் தாண்டி ஆர் எஸ் எஸ் இயக்கத்தைத் தாண்டி விஸ்வரூபம் எடுத்துள்ளார் என்பதும் உண்மைதான்.

மனோகர் பாரிக்கர், பிரமோத் மகாஜன், ரெங்கராஜன் குமாரமங்கலம், கோபிநாத் முண்டே என்று அரசியல் வானில் சுடர்விட்டுப் பிரகாசித்து இருக்கவேண்டிய பல தலைவர்களை மிக இளம் வயதிலேயே பாஜக இழந்திருக்கிறது.

இந்தோர் தொகுதியில் இருந்தது 1989ஆம் ஆண்டு முதல் எட்டு முறை தேர்வான நாடாளுமன்ற சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன், பிரதமர் வேட்பாளர் என்று அடையாளம் காட்டப்பட்ட திருமதி சுஷ்மா ஸ்வராஜ், மத்தியபிரதேசத்தில் கட்சியை வளர்த்த உமா பாரதி ஆகியோர் இனி நேரடி அரசியலில் இயங்கப் போனதில்லை. அநேகமாக அருண் ஜெட்லீயும் மந்திரியாகத் தொடரமாட்டார் என்று கூறப்படுகிறது. அனுபவமிக்க அமைச்சர்கள் இல்லாமல் இருப்பதை பாஜக எப்படி சமாளிக்கப்போகிறது என்பது ஒரு மிகப்பெரும் கேள்வி. பரந்துபட்ட பாரத நாட்டில் தேசம் முழுவதும் அறியப்படக் கூடிய அளவில் அடுத்து தலைமுறை தலைவர்கள் போதுமான அளவில் இல்லை என்பதும் உண்மை.

ஆனால் இதெல்லாம் வரவிருக்கும் காலங்களுக்கான கேள்விகள். நாம் இப்போது எப்படி பாஜக இந்த தேர்தலுக்காகத் தன்னைதயார் செய்துகொண்டது என்பதைப் பாப்போம்

(Visited 67 times, 1 visits today)
7+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *