புரட்சியாளர் வீர சாவர்க்கர் – பிறந்த தினம் மே 28

இந்திய சுதந்திர வரலாற்றில் இரட்டை ஆயுள் தண்டனை என்று அம்பது ஆண்டு கால சிறை தண்டனை பெற்ற போராளி, விநாயக தாமோதர சாவர்க்கர் என்னும் வீர சாவர்க்கர்.

1883ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகரின் அருகிலுள்ள பாகுர் கிராமத்தில் தாமோதர பந்த் சாவர்க்கர் – ராதாபாய் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். கணேஷ் தாமோதர சாவர்க்கர் என்ற அண்ணனும் நாராயண சாவர்க்கர் என்ற தம்பியும் மைனா என்ற சகோதரியும் இவர் உடன்பிறப்புகள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்த சகோதர்களை முத்த சகோதரர் கணேஷ் தாமோதர சாவர்க்கர் வளர்த்து வந்தார். குடும்பத்தில் அனைவருமே ஆயுத போராட்டங்கள் மூலமாகவே சுதந்திரம் அடையமுடியும் என்ற கருத்தைக் கொண்டிருந்தவர்கள்.

1898இல் மஹாராஷ்டிராவில் விடுதலை வீரர்கள் சபேகர் சகோதர்கள் தூக்கிலிடப் பட்டனர். அந்த நிகழ்வு போராளிகளை இன்னும் உத்வேகமடையச் செய்தது. சாவர்க்கர் சகோதர்கள் திலகரை தங்கள் அரசியல் ஆசானாகக் கொண்டனர். வீர சாவர்க்கர் தனது பட்டப் படிப்பை பூனாவின் பெர்கூசன் கல்லூரியில் முடித்தார். அப்போதே அவர் அபிநவ பாரத சங்கம் என்ற இளைஞர்கள் அமைப்பை உருவாக்கினார். அன்னியத் துணி புறக்கணிப்பு, அன்னியத் துணிகளை எரிப்பது என்ற போராட்டங்களை நடத்தினார்.

பின்னர் சட்டம் பயில இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றார். அங்கே பண்டிட் ஷாம்ஜி நடத்திக் கொண்டு இருந்த இந்தியா ஹவுஸ் விடுதியில் தங்கினார். லண்டன் நகருக்கு படிக்க வந்துள்ள இந்திய மாணவர்களின் சரணாலயமாக இந்தியா ஹவுஸ் விளங்கியது. அங்கே இவரோடு இருந்தவர்கள் வ வே சு அய்யர், மண்டயம் திருமலாச்சாரியா, டி எஸ் ராஜன் போன்றவர்கள். ஆங்கில சாம்ராஜ்யத்தின் தலைநகரில் இருந்து இந்திய விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடும் குழு இயங்கிக்கொண்டு இருந்தது. சட்டப் படிப்பில் தேர்ச்சி அடைந்தாலும் ஆங்கில அரசு சாவர்க்கரை சட்டத்துறையில் பணியாற்ற அனுமதிக்கவில்லை.

அப்போதுதான் சாவர்க்கரின் சீடனான மதன்லால் திங்ரா லண்டன் நகரில் கர்ஸான் வில்லியை சுட்டுக் கொன்றார். அரசை உலுக்கிய இந்த கொலையின் பின்னணியில் சாவர்க்கர் இருப்பார் என்று சந்தேகப்பட்ட ஆங்கில அரசு சாவர்க்கரை கைது செய்து விசாரணைக்காக இந்தியா அனுப்பியது. கப்பலில் வரும்போது பிரான்ஸ் நாட்டின் அருகே கப்பலில் இருந்து தப்பிய சாவர்க்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் கணேஷ் சாவர்க்கரும் நாராயண சாவர்க்கரும் இந்தியாவில் கைது செய்யப்பட்டனர். அதில் கணேஷ் சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார்.

வீர சாவர்க்கருக்கு ஒன்றன்பின் ஒன்றாக இரட்டை ஆயுள் தண்டனை அதாவது ஐம்பது ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது இருபத்தி எட்டுதான். பத்தாண்டுகள் அந்தமான் சிறையிலும் மூன்றாண்டுகள் இந்தியச் சிறையிலும் அவர் அவதிப்பட வேண்டி இருந்தது. அதன்பிறகும் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையோடு ஆங்கில அரசு சாவர்க்கரை வீட்டுக் காவலில் வைத்திருந்தது. ஆனாலும் அந்தப் பிறவிப் போராளி பல்வேறு இளைஞர்களை விடுதலை வேள்விக்கு தூண்டிவிட்டுக்கொண்டுதான் இருந்தார்.

போராட்டம் ஒருபுறம் என்றால் சாவர்க்கரின் எழுத்தாளர் என்ற ஆளுமை மறுபுறம். இங்கிலாந்து நாட்டில் இருக்கும் போதே இந்திய சுதந்திரப் போராட்டம் என்று 1857ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் நடந்த ஆயுதப் போராட்டம் பற்றிய புத்தகத்தை எழுதி இருந்தார். சிப்பாய் கலகம் என்று ஆங்கிலேயர்கள் கூறியது தவறு, எப்படி அது நாடு முழுவதும் நடந்த சுதந்திரப் போராட்டம் என்பதை அவர் விளக்கி இருந்தார். ஆங்கில அரசு அந்தப் புத்தகத்தை தடை செய்தது. காமா அம்மையார் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் அந்தப் புத்தகத்தை பதிப்பித்து அதனை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்.


இந்திய வரலாற்றின் ஆறு பொன்னேடுகள் என்று எவ்வாறு இந்த தேசம் அடக்குமுறைக்கு அடிபணியாமல் மீண்டும் மீண்டும் புதிய உத்வேகத்தோடு எழுந்து நின்றது என்பதை விளக்கும் புத்தகம், ஹிந்துத்வம் என்றால் என்ன என்பது பற்றிய புத்தகம், தனது சிறைச்சாலை அனுபவங்கள் பற்றிய புத்தகம் என்று பல்வேறு நூல்களை சாவர்க்கர் எழுதி உள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட பல போராளிகளுக்கு சாவர்க்கரின் இந்திய வரலாற்றின் ஆறு பொன்னேடுகள் புத்தகம் பெரும் உத்வேகத்தை அளித்தது.

மராத்திய சித்பவன் ப்ராமண குடும்பத்தில் பிறந்த சாவர்க்கர் ஜாதி பாகுபாட்டை ஒழிப்பதற்கு பாடுபட்ட பெரும்தலைவருமாவார். பல்வேறு ஜாதி மக்கள் ஒரே இடத்தில உணவு அருந்துவது, ஒரே கோவிலில் பிரார்த்தனை செய்வது போன்ற பல பணிகளை செய்துவந்தார்.

காந்தி கொலைக்கு சாவர்க்கர் காரணம் என்று மீண்டும் கைது செய்யப்பட்டு, ஆனால் குற்றமற்றவர் என்று நிரூபித்து விடுதலையானார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தேசபக்தியை ஊட்டிய சாவர்க்கர் 1966ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் உணவு அருந்துவதை நிறுத்திக் கொண்டார். ஒருவரது வாழ்க்கையின் லட்சியம் முடிந்த பின்னர், அவரால் சமுதாயத்திற்கு பலன் இல்லாதபோது வீணாக உயிர் வாழ்வதைக் காட்டிலும் மகிழ்ச்சியோடு மரணத்தை எதிர்கொள்வதுதான் சிறந்தது என்று கூறி பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி பாரத மாதாவின் காலடியில் கலந்தார்.

அப்பழுக்கற்ற தேசபக்தர்களின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டியாக அமையட்டும்.

(Visited 133 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *