மைசூர் மஹாராஜா நான்காம் கிருஷ்ணராஜ உடையார் – ஜூன் 4. 

கர்நாடக மாநிலத்தின் இன்றய வளர்ச்சிக்கு அடித்தளம் இட்ட பெருமைக்குரியவர் மைசூர் ராஜ்யத்தைஆண்ட கிருஷ்ணராஜ உடையாரே ஆவார். 1884ஆம் ஆண்டு மஹாராஜா சம்மராஜேந்திர உடையாரின் முதல் மகனாகப் பிறந்தார். இவரது சிறு வயதிலேயே இவர் தந்தை மரணமடைந்தால் இவரின் தாயார் கிருஷ்ணராஜ உடையாரின் பிரதிநிதியாக ஆட்சி செய்துவந்தார். 1902ஆம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் கிருஷ்ணராஜ உடையார் அரியணை ஏறினார்.

ஆங்கிலம், கன்னடம் மற்றும் சமிஸ்க்ரித மொழிகளில் பயிற்சி, குதிரையேற்றம், நீதி வழங்குதல், அரசாட்சி செய்யும் முறை, இந்திய மற்றும் மேல்நாட்டு கலைகளில் தேர்ச்சி என்று நாடாளும் மன்னருக்கு தேவையான பயிற்சிகள் அவருக்கு வழங்கப்பட்டது.

மஹாராஜா கிருஷ்ணராஜ உடையார் இந்திய வரலாற்றில் ஜனகரைப் போல ராஜரிஷியாக அசோகரைப் போல பொது மக்களின் மனத்தைக் கவர்ந்த அரசராக விளங்கினார். மிகப்பெரும் உள்கட்டுமானப் ணிகள் இவர் காலத்தில் உருவாக்கப்பட்டது.

காசியில் உள்ள ஹிந்து சர்வகலாசாலையின் முதலாம் வேந்தராகவும், மைசூர் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் ராஜா செயல்பட்டார். ஒரு இந்திய அரசால் தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமை மைசூர்  பல்கலைக்கழத்திற்கு உண்டு.

Image result for maharaja krishna raja wodeyar

தீண்டாமையை ஒரு தண்டனைக்குரிய குற்றம் என்று ராஜா பிரகடனம் செய்தார். சிறுவயது திருமணத்தை தடை செய்தார். விதவையான பெண்களின் கல்விக்காக உதவித்தொகை அளித்தார். தனது சொந்தப் பணத்தில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு அறுபதாயிரம் ரூபாய் அளவிற்கு மாற்றுத் திறனாளி குழைந்தைகள் கல்விக்காக ஒதுக்கீடு செய்தார். கல்வி நிலையங்களில் 25% இட ஒதுக்கீடு அளித்தார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெண்கள் வாக்களிக்கும் உரிமையை வழங்கினார். இவரது காலத்தில் 1927ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் படி மைசூர் சமஸ்தானத்தில் 8000 பள்ளிகளில் ஏறத்தாழ 5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வந்தனர். அரசு நாற்பத்தி ஆறு லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்தது.

ஆரம்பக்கல்வியை ராஜா கட்டாயமாக்கினார், அதனை இலவசமாகவும் அளித்தார். எல்லா பள்ளிகளிலும் பட்டியல் இன மாணவர்களை சேர்க்க உத்தரவிட்டார். மைசூர் விவசாய பல்கலைக்கழகம், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் ஆகிவை இவர் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.

புகழ்பெற்ற பொறியாளர் விஸ்வேஸ்வரய்யாவை தனது திவானாக ( பிரதம மந்திரியாக ) நியமித்தார். சிவசமுத்திரம் நீர்மின்நிலையம், ஆசியாவில் முதல்முறையாக பெங்களூரு நகர் முழுவதும் மின்சக்தியால் இயங்கும் தெருவிளக்குகள் என்று பல்வேறு திட்டங்களை உருவாக்கினார்.

காவேரி நதியின் குறுக்கே அணை கட்டி, விவசாய நிலங்களை பெருக்கினார். அந்த அணை கிருஷ்ணராஜ சாகர் என்று அழைக்கப் படுகிறது.

பெங்களூர் நகரில் மிகப் பெரும் பரப்பளவிலான நிலத்தை ஜெ ஆர் டி டாட்டாவிற்கு அளித்தார். அந்த இடத்தில்தான் இந்திய அறிவியல் கழகம் ( Indian Institute of Science ) செயல்பட்டு வருகிறது.

ராஜா கிருஷ்ணராஜ உடையார் வயலின், புல்லாங்குழல், வீணை, சித்தார், போன்ற பல இசைக்கருவிகள் வாசிப்பதில் நிபுணராக விளங்கினார். பல்வேறு கலைஞர்களை ஆதரித்தார்.

சுருக்கமாக சொல்வது என்றால் அவரது ஆட்சிக்காலம் மைசூர் ராஜ்யத்தின் பொற்காலம் என்று கூறலாம். இதன் காரணமாக காந்தி ராஜா கிருஷ்ணராஜ உடையாரை ராஜரிஷி என்று புகழ்ந்து கூறினார்.

அரசாட்சி செய்த மன்னர்களில் காலம் கடந்தும் மக்களால் நினைக்கப்படவேண்டும் என்றால் கிருஷ்ணராஜ உடையாரைப் போல மக்களின் நலனுக்காக பாடுபடவேண்டும்.

(Visited 21 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *