குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பிறந்தநாள் – ஜூலை 1

பாஜகவின் மூத்த தலைவரும் பாரதநாட்டின் 13ஆவது குடியரசு துணைத்தலைவருமாகிய திரு வெங்கையா நாயுடு அவர்களின் பிறந்தநாள் இன்று.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1949 ஆம் ஆண்டு பிறந்தவர் திரு நாயுடு. தனது பள்ளிப்படிப்பையும், அரசியல் அறிவியல் துறையில் பட்டபடிப்பையும் நெல்லூரில் முடித்த நாயுடு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை நிறைவு செய்தார். சிறுவயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட திரு நாயுடு அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பில் ஆந்திர பல்கலைக்கழகங்களின் மாணவர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

1972ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெய் ஆந்திரா போராட்டத்திலும் அதன் பின்னர் 1974ஆம் ஆண்டு ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான போராட்டங்களிலும் முன்னிலை வகித்தார். பிரதமர் இந்திரா அறிவித்த நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடி சிறை சென்றார்.

1978 மற்றும் 1983ஆம் ஆண்டுகளுக்கான சட்டமன்ற தேர்தல்களில் ஆந்திராவின் உதயகிரி தொகுதியில் இருந்து தேர்வானார். கடுமையான உழைப்பும், அற்புதமான பேச்சாற்றலும் கொண்ட திரு நாயுடு பாஜகவின் முன்னணி தலைவராக உருவாகத் தொடங்கினார்.

1998, 2004 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில்  கர்நாடகா மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் ராஜ்யசபைக்கு தேர்வானார். 2016ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபை உறுப்பினரானார். வாஜ்பாய் தலைமையிலான அரசின் கிராமப்புற வளர்ச்சித்துறையின் அமைச்சராகப் பணியாற்றினார். மோதி தலைமையிலான அரசின் நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, ஏழ்மை ஒழிப்பு ஆகிய துறைகளிலும் பின்னர் பாராளுமன்ற விவகாரங்கள் துறையிலும் , செய்தி மக்கள் தொடர்பு துறையிலும் அமைச்சராகப் பணியாற்றினார்.

2003ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய தலைவராகப் பொறுப்பேற்ற திரு நாயுடு 2004ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பின்னர் அந்தப் பொறுப்பில் இருந்து விலகினார். பல்லாண்டுகள் பாஜகவின் மூத்த உதவி தலைவராகவும், செய்தி தொடர்பாளராகவும் அவர் பணிபுரிந்தார்.

2017ஆம் ஆண்டு பாஜக சார்பில் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதுவரை டாக்டர் ராதாகிருஷ்னன் மற்றும் முகமத் ஹமீத் அன்சாரி ஆகிய இருவரும் இரண்டு முறை குடியரசு துணைத்தலைவர் பதவியை வகித்துள்ளார். 2022ஆம் ஆண்டு நடைபெறும் குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலில் நாயுடு அவர்களே பாஜகவின் வேட்பாளராக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பொதுவாக குடியரசு துணைத்தலைவரையே அடுத்த தேர்தலில் குடியரசு தலைவராக முன்மொழிவது பழக்கம் என்பதால் இந்தியாவின் மிக உயரிய பதவியை திரு நாயுடு வகிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

(Visited 13 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *