எழுத்தாளர் பாலகுமாரன் பிறந்தநாள் – ஜூலை 5

பாலகுமாரன் பிறந்தநாளை முன்னிட்டு இரும்பு குதிரைகள் புதினத்தில் வெளியான கவிதையை வாசகர்களுக்காக வெளியிடுகிறோம்

கல்தோன்றி மண் தோன்றி கடவுள் தோன்றி
கைவழியே மொழிவளரும் காலம் தோன்றி
கால்நடையே செல்வமெனக் கொண்ட நாளில்
ஆண்டிருந்த ஓர் அரசன் பறையறிவித்தான்
வீட்டிற்கொரு குதிரை வளர்க்க வேண்டும்
வேண்டுகிற உதவிகள் அரசு செய்யும்
குதிரைகள் தேசத்தின் பொக்கிஷங்கள்
போர்வந்தால் புரவிகளை அரசே வாங்கும்
போர்க்காலம் காணாத அரசில்லை.
போராட்டம் இல்லாத காலம் இல்லை
போர்க்காலம் முன்கருதி புரவி வளர்ப்பீர்
பின்வரும் சந்ததிக்கு உறுதி கொடுப்பீர்
மீறுபவர் தேசத்தின் முதல் எதிரிகள்
மறுப்பவர்கள் வெளியேற்றப் படுவர் உறுதி
பறையடித்து ஊர் முழுதும் செய்தி சொல்ல
ஜனம்கூடி தெரு நடுவே புலம்பலாச்சு

இவன் என்ன பேயரசன் குதிரை வெறியன்
திடுமென்று குதிரைக்கு எங்கே போக?
குதிரைதான் செல்வமெனில் செந்நெல் என்ன?
கொள்ளுமட்டும் பயிரிடவா வயலும் நீரும்?
ஆடுகளோ உணவாகும்; மாடுகளோ பயிர் வளர்க்கும்;
மேய்ப்பதொன்றும் கடினமில்லை கோலசையக் கூடவரும்!
குடும்பத்து பெண்மணிக்கு குதிரைகளா கட்டுப்படும்?
குரல் கொடுத்தால் நாய்போல புரவிகளா துணையாகும்?
இவன் என்ன பேயரசன் குதிரை வெறியன்…
பார்ப்பனர்கள் சிலர்கூடி தமக்குள்ள பேசி
முடிவாக திடமாக சபைக்குள் சென்று
தமக்கு மட்டும் கட்டளையைத் தளர்த்துமாறு
பணிவாக அறிவித்தார் காரணம் சொன்னார்
வேதங்கள் சொல்லுகையில் குதிரை கனைக்கும்
பாடத்தில் முழுமுனைப்பு சிதறிப் போகும்
தோல்பொருளை பார்ப்பனர்கள் தொடக்கூடாது
வாரின்றி குதிரைகள் வசப்படாது
போருக்கும் பார்ப்பனர்க்கும் பொருத்தமில்லை
போரில்லா வழ்க்கையதே எங்கள் கொள்கை
பேரரசன் யோசித்தான் தலை அசைத்தான்
பார்ப்பனர்கள் குதிரைக்கு விலக்கு என்றான்

பார்ப்பனர்கள் சபை நீங்க வணிகர் வந்தார்
வைத்தியரும் கொல்லரோடு சேர்ந்து கொண்டார்
எங்களுக்கும் விலக்களிப்பாய் தேரா மன்னா
வணிகத்தில் எருதுகளே உதவியாகும்
பொதி சுமக்கும் கழுதைகளே போதும் எமக்கு
ஊர் சுற்றும் வேலையிலே நாங்கள் இருக்க
பெண்டுகளே பிற வேலை செய்தல்வேண்டும்
புரவிகளை பெண்டுகளால் ஆள முடியுமா?
பேரரசே தயை செய்யும் இது தாங்க முடியுமா?
மன்னவனும் மனு ஏற்றான்; விலக்கு என்றான்.
வந்தவர்கள் சபை மீள கூட்டமாக
தொழில் தெரிந்த சூத்திரர்கள் முன்னே சென்றார்
குதிரைகள் பேணுதற்கு வசதியில்லை
முன்பின்னே இது குறித்து பழக்கமில்லை
கைகாலே துணையாக உழைப்போர் நாங்கள்
போரென்றால் கால்படையின் அங்கம் நாங்கள்
குதிரைகள் சுமை எமக்கு உதவி வராது
உழவுக்கோ கவலைக்கோ துணையாகாது
மன்னவனும் தலையசைத்தான் சரியே ஏன்றான்
படைவீரர் மேற்கொள்வார் போகச் சொன்னான்

படைவீரர் பெருமறவர் கூட்டம் போட்டார்
முடிவாக அரசனிடம் வணக்கம் சொன்னார்
போர்க்காலம் குதிரைகள் தேவைஎனினும்
போர் எதிரி யானையுடன் வந்து நின்றால்
குதிரைகள் என்செய்யும் கலைந்து போகும்
படைவீரர் தெருவுக்கொரு யானை வளர்ப்பார்
முறைபோட்டு அனுதினமும் பேணிக் காப்பார்
வீட்டுக்கொரு குதிரைஎன்ற விதியினின்று
பேரரசே விலக்களிப்பீர் யானை தருவீர்!

பேரரசன் யோசித்தான் கவலை சூழ
கையசைத்தான் மற்றவர்கள் கலைந்துபோக
மறு நாளே சபை கூட்டி எழுந்து நின்று
பெருமன்னன் குரல் செருமிப் பேசலானான்.

குதிரை என்று சொன்னது விளங்கா மக்காள்
புரவியதன் மகிமையதைத் தெரியா சனமே
வீட்டுக்கொரு வலிமையுள்ள மனிதர் என்று
நான் சொன்ன செய்தியது தவறோ சொல்வீர்
குதிரையதை சபை நடுவே நிறுத்திப் பாரும்
உடல் முழுதும் கை தடவி உணர்ந்துபாரும்
எவ்வளவு தின்றாலும் குழிந்த வயிறு
எப்போதும் எப்போதும் துடித்த உணர்வு
கண்மூடி நின்றாலும் காதுகள் கேட்கும்
காதுகளே நாலுபக்கம் சுற்றிப் பார்க்கும்
உடல் வலிமை இருந்தாலும் மூர்க்கம் காட்டா
குதிரைகுணம் கொண்டோர் உயர்ந்தோர் ஆவார்.

போர் என்றால் குத்தீட்டி யுத்தம் அல்ல
மனிதரோடு மனிதர் வெட்டி சாய்தல் அல்ல
பெருவாழ்க்கை தன்னை நோக்கி காலம் போகும்
தன்மையினை போர்ன்றேன் வேறொன்றில்லை
புரியாத மக்காள் என் மந்தை ஆடே
உமக்கிங்கே அரசனாக வெட்கம் கொண்டேன்.
வெறும் பதரை கோல்பிடித்து காப்போர் உண்டோ?
உணர்வில்லா மக்களுக்கு அரசன் கேடா?
ஒரு காலம் இவ்வுலகம் கொள்ளும் கண்டீர்
குதிரைகளே உலகத்தின் பெருமூச்சாகும்
குதிரைகளே இப்புவியில் செங்கோல் ஓச்சும்
விரல் நுனியால் விசையறிந்து வேகம் காட்டும்
உழவுக்கும் தொழிலுக்கும் உதவியாகி
ஊர் விட்டு ஊர் போக கருவியாகி
விண்முட்டிக் கீழிறங்கி அனைத்துச் செயலும்
குதிரையே முன்னின்று நடத்தும் கண்டீர்!

பல்வேறு ரூபத்தில் மனிதர் முன்னே
குதிரைஎனும் பெருவுணர்வே கைகொடுக்கும்
கால்நடையில் ஆடுகளே செல்வம் என்ற
மக்களிடம் மன்னனென இருத்தல் வேண்டாம்
பசுக்களெனும் பார்ப்பனர்கள் காலம் முடிந்து
குதிரையிது வீணையிலே வேதம் பேசும்
காலத்தை என்னுள்ளே இன்றே கண்டேன்.
போய்வருவேன் என்மக்காள் விடை கொடுப்பீர்
உம்மோடு இருத்தல் இனி இயலாதென்றான்
பெருமன்னன் வாள் வீசி தலை துணித்தான்
கவியென்னும் குதிரையதன் ஆட்சியின்று
கண் திறக்கத்துவங்கி விட்ட நேரம் கண்டோம்

தலை துணித்த பெருமன்னன் வருவான் மீண்டும்
முகம் மட்டும் குதிரையாகக் கொண்டவாறு
குரங்குகளை மூத்தோராய் கொண்ட மனிதர்
குணம் மாறி குதிரைக்கு வணக்கம் சொல்வார்
கவியென்ற குதிரை தன் ஆட்சி துவங்கும்
மனிதருக்குள் மறுபடியும் நேசம் துளிர்க்கும்
யாகங்கள் பூஜைகள் பூர்த்தி செய்யா
சிநேகத்தை குதிரைகள் வளர்த்துக் கொடுக்கும்
குழப்பங்கள் முற்பரப்பில் தோன்றினாலும்
குதிரைகள் விஞ்ஞானம் உலகம் வளைக்கும்
குதிரைகள் ஞானத்தை என்னுள் கண்டேன்
கலி என்னும் யுகத்துக்கு வரவு சொன்னேன்.

(Visited 37 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *