சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்தலையங்கம்வரலாற்றில் இன்று

நினைவில் இன்று – பி.ஆர்.ஹரன்

தமிழ்ஹிந்து தளத்தில் வந்த அஞ்சலிக் கட்டுரையின் (சற்றே தொகுத்தமைக்கப்பட்ட) மீள் பதிவு.

(மூத்த பத்திரிகையாளரும், இந்துத்துவ செயல்வீரருமான பி.ஆர்.ஹரன் 54 வயதில் 2018, ஜூலை 4ம் தேதி அன்று மாலை மாரடைப்பால் காலமானார். தமிழ்ஹிந்து உள்ளிட்ட பல தளங்களில்  தொடர்ந்து எழுதிவந்தவர். அவரது மரணத்திற்கு முன்பு வெளிவந்த அவரது கடைசிப் பதிவு தமிழ்ஹிந்து தளத்தில் வந்த நம்பிக்கை தொடரின் இறுதிப் பகுதி தான். அவரை இழந்து வாடும் உறவினர்கள்,  நண்பர்களது துயரத்திலும், நினைவைப் போற்றுவதிலும் ஒரேஇந்தியா தளமும் இணைந்து கொள்கிறது. அவரது நினைவைப் போற்றும் வகையில் அவர் செய்துவந்த பணிகளில் இயன்றளவு பங்களிக்க உறுதி கொள்வோம்  – ஆசிரியர் குழு)

————————————————————————செல்வத்தைத் தந்தேன் – உடலின் உழைப்பினைத் தந்தேன்
திறமைகள் அனைத்தும் உனக்கே அர்ப்பணம் செய்தேன்
என்ன தந்தபோதும் மனம் அமைதியற்றதால் – குருவே
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்..”

ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் குருபூஜை விழாவில் நமது பண்பாட்டின், தேசியத்தின் சின்னமான காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்தும்போது பாடும் இந்தப் பாடலின் வரிகள் தான் ஹரனைப் பற்றி எண்ணும்போது நினைவில் நிழலாடுகின்றன. அவரது மறைவில், தன்னலம் என்பதைச் சிறிதும் கருதாது இந்து ஒற்றுமைக்கும், இந்து விழிப்புணர்வுக்கும் அயராது உழைத்த ஒரு மகத்தான கர்மயோகியைத் தமிழ்நாட்டு இந்துக்கள் இழந்து நிற்கின்றனர்.

2004ல் ஜெயேந்திரர் கைதின் பின்னணியில் இந்து இயக்கச் செயல்பாடுகளில் முழு நேரமாக இணைந்தவர் ஹரன்.  செய்தி விமர்சனம், அலசல், சமகால சமூக அரசியல் நிகழ்வுகள், ஆன்மீகம் ஆகிய எந்த விஷயமானாலும், அவரது கட்டுரைகள் அனைத்தும் தகவல் செறிவுடனும் ஆதாரபூர்வமாகவும் இருக்கும். அதற்கு முன்பு புகழ்பெற்ற நிறுவனங்களில் மார்க்கெட்டிங் / மேலாண்மை ஆகிய துறைகளில் பணிபுரிந்த அனுபவம், அவரது எழுத்துக்களுக்கும் செயல்பாடுகளுக்கும் ஒரு சிறப்பான கச்சிதத்தையும் நேர்த்தியையும் அளித்தது.  Vijayvaani.com, திண்ணை, தமிழ்ஹிந்து, vsrc.in, வலம் மாத இதழ் ஆகியவற்றில் அவர் தொடர்ந்து எழுதிவந்தார். சர்ச்சைக்குரிய விஷயங்களையும் பிரசினைகளையும் எழுதுவதற்கு அவர் தயங்கியதே இல்லை. தமிழ் செல்வன் என்ற புனைபெயரில் தமிழ்ஹிந்துவிலும்இன்னும் சில ஆங்கிலத் தளங்களிலும் கட்டுரைகளை எழுதி வந்தது அவர் தான். இந்த விஷயம் எங்களது நட்பு வட்டத்தைத் தாண்டி பொதுவில் அனேகமாக யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனது எழுத்துக்களுக்காக ஹரன் ஒருபோதும் சொந்தம் கொண்டாடியதோ அல்லது அதை ஏதோ பெரிய விஷயமாக நினைத்ததோ இல்லை. தர்மத்தைக் காப்பதும் இந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமான புனித வேள்வியில் தான் சமர்ப்பிக்கும் ஆகுதிகளாகவே அவற்றை அவர் எண்ணினார்.

எழுத்துக்களுடன் கூட, செயல்வீரராகவும் களப்பணியாளராகவும் அவரது பங்களிப்புகள் சிறப்பானவை. சிதம்பரம் கோயில் வழக்கில் தீட்சிதர்களின் நியாயமான உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும் என்பதற்காகப் பின்னிருந்து உழைத்தவர்களில் அவரும் உண்டு. கோயில் நிலங்களைப் பாதுகாத்தல், கோயில் நிர்வாக ஊழல்களை அம்பலப்படுத்துதல், அறநிலையத்துறையினரின் அராஜகங்களுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து தீவிரமாகப் பங்களித்து வந்தார். இவை தொடர்பான பல ஆதாரபூர்வமான கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். “கிறிஸ்தவ பிராமண சமிதி” போன்ற மதமாற்ற சூழ்ச்சிகள், ஊடகங்களில் திட்டமிட்டு நடத்தப் படும் கிறிஸ்தவ பிரசாரங்கள் மற்றும் இந்துமத அவமதிப்புகள் (விஜய் டிவியின் ‘தாலி’ குறித்த விவாதம்) ஆகியவற்றைக் குறித்து எழுதி அவற்றைக் கவனப்படுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் இஸ்லாமிய மதவெறியும், ஆதிக்கமும் பெருகி வருவதை ஆவணப்படுத்துவதிலும் (வேத விஞ்ஞான ஆய்வு மையத்தின் ஆவணப் படம்) அவர் காத்திரமான பங்களித்துள்ளார்.  பழங்குடியினர் & பிற்பட்ட கிராமப்பகுதியினருக்கு கல்விச் சேவை வழங்கும் ‘ஓராசியர் பள்ளி’ அமைப்பின்பொறுப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.   தமிழ்நாட்டின் இந்து இயக்கத் தலைவர்கள், தீவிர செயல்வீரர்களில் ஹரனைத் தெரியாதவர்கள் அனேகமாக யாருமே இருக்க முடியாது.

பொதுவாக மிருகங்களிடம் மிகவும் அன்பும் கருணையும் கொண்டவர் ஹரன். தனது சிறுவயது முதலே பூனைப்பிரியராக இருந்தவர். ஆலய வழிபாட்டாளர்கள் சங்கம் அமைப்புடன் இணைந்து பசுக்கள் பாதுகாப்பு, சட்டவிரோதமாக கால்நடைகளைக் கடத்துவதற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் அவர் ஆத்மார்த்தமாக ஈடுபட்டார். துணிச்சலுடன் கடத்தல் சம்பவங்களை ஆவணப்படுத்துவது, காவல் துறையினரிடம் புகார் கொடுத்து பசுக்களை மீட்பது ஆகியவற்றிலும் பெரும் முனைப்புடன் செயல்பட்டு வந்தார். கடந்த 2 வருடங்களாக கோயில் யானைகள் நலன், பராமரிப்பு குறித்த விஷயங்களிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

புகைப்படம்: நன்றி ஜெயகுமார் ராஜகோபால்

ஹரனின் இந்துத்துவ செயல்பாடுகள் வெறுமனே அரசியல், சமூக தளத்தைச் சார்ந்தவை மட்டுமல்ல என்பது அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆழ்ந்த பக்தியுணர்வும், உள்ளார்ந்து ஆன்மீகத்தால் நிரம்பிய வாழ்க்கை குறித்த கண்ணோட்டமுமே அவரது பணிகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருந்தது. காஞ்சி பரமாசாரியாரிடமும் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடமும் அவர் கொண்டிருந்த பக்தி மிகவும் உறுதியானது. பாரதம் முழுவதும் பல புனிதத் தலங்களுக்கு யாத்திரை செய்வதும்,  கோயில்களையும், சாதுக்களையும் மகான்களையும் தரிசிப்பதும் அவரது மனத்திற்குப் பிடித்த விஷயங்கள். குறிப்பாக காசியும் கங்கையும் உணர்வுபூர்வமாக அவருக்கு மிகவும் நெருக்கமானவை. தனது ஹிமாலய / காசி யாத்திரை அனுபவங்களை முழுமையான தொடராக vsrc.in தளத்தில் எழுதியிருக்கிறார்.

புகைப்படம்: நன்றி – ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்

எழுத்து மட்டுமின்றி செம்மையான பேச்சாற்றலும் குரல்வளமும் கொண்டவர் ஹரன். ‘உடையும் இந்தியா” தமிழ் பதிப்பு புத்தக வெளியீடு உட்பட இந்து இயக்கங்களின் பல நிகழ்ச்சிகளில் அவர் தொகுப்பாளராக இருந்திருக்கிறார். அண்மைக்காலமாக இசைக்கவி ரமணன் குழுவினரின் பாரதியார் நாடகத்தில் பாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்தும் வந்தார். இப்போதும், ராஜபாளையம், தென்காசி ஆகிய இடங்களில் நாடகத்தை நிகழ்த்துவதற்காக ஜூலை 4ம் தேதி நாடகக் குழுவினரோடு பயணத்திற்காகப் புறப்பட்டிருந்த போதுதான், எழும்பூர் ரயில் நிலையத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே அவரது உயிர் பிரிந்திருக்கிறது.

2006-7ம் ஆண்டுகளில் தமிழ் வலைப்பதிவுகள் பிரபலமாகிக் கொண்டிருந்த காலத்தில் தான், அப்போதைய News Todayஇதழ்களில் அவர் எழுதிவந்த ஆங்கிலக் கட்டுரைகளின் வழியாக ஹரனின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அப்போது இணையத்தில், அதுவும் குறிப்பாக தமிழ்ப் பதிவுகளில் இந்துத்துவ ஆதரவாளர்கள் பலதரப்பட்ட இந்து விரோத சக்திளுடன் பல தளங்களில் மோதிக்கொண்டிருந்தோம். ஒரு நட்பு வட்டமாக இணைந்து செயல்படுவது தைரியமும் நம்பிக்கையும் அளிக்கும் ஒன்றாக இருந்தது. அதோடு, ஒத்த சிந்தனைகளும் உணர்வுகளும் கொண்ட பல நல்ல மனிதர்களின் நட்பும் உருவாயிற்று. அந்த வழியில் உருவாகி வளர்ந்தது தான் ஹரனுடனான எனது தோழமை.  அதன் பிறகு பலமுறை சந்தித்து, பழகி, உரையாடி, இணைந்து பணியாற்றியிருக்கிறோம். ஒரு சில விஷயங்களில் கருத்து உரசல்களும் அபிப்பிராய பேதங்களும் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி அனைவரிடமும் மிக இனிமையாகவும் சகஜமாகவும் தோளில் கைபோட்டுப் பேசுமளவுக்கு நெருக்கமாகிவிடக் கூடியவர் ஹரன். தனிப்பட்ட அளவில் அவரது மரணச் செய்தி நெஞ்சை உலுக்கி விட்டது. இதை எழுதிக் கொண்டிருக்கும் போதும் அவரைக் குறித்த நினைவுகளே மீளமீள வந்து கொண்டிருக்கின்றன.

அன்பு நண்பருக்கு ஆத்மார்த்தமான கண்ணீர் அஞ்சலி.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி:

(Visited 177 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close