மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பிறந்தநாள் – ஜூலை 10.

பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் தற்போதய மத்திய ராணுவ அமைச்சருமான ராஜ்நாத்சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று.

உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்த ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் 1951ஆம் ஆண்டு பிறந்தவர் ராஜ்நாத்சிங். இயற்பியல் துறையில் முதுகலைப் பட்டத்தை கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் பெற்ற இவர் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றிவந்தார். தனது 13ஆம் வயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ராஜ்நாத், 1974ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் மிர்சாபூர் நகரின் செயலாளராகவும் இருந்தார்.  அடுத்த ஆண்டே மாவட்ட தலைவராகவும் அதன்பின்னர் 1977ஆம் ஆண்டு உத்திரபிரதேச  சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

பாஜகவின் இளைஞர் பிரிவின் மாநிலத் தலைவராக 1984ஆம் ஆண்டிலும், பின்னர் தேசிய செயலாளராக 1986ஆம் ஆண்டிலும், இளைஞர் அணி தேசிய தலைவராக 1988ஆம் ஆண்டிலும் தேர்வானார்.

1988ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மேல்சபைக்கு தேர்வான ராஜ்நாத் 1991ஆம் மாநிலத்தின் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1994ஆம் ஆண்டு நாடாளுமன்ற மேல்சபைக்கு நியமிக்கப்பட்ட ராஜ்நாத், பாஜகவின் கொறடாவாகப் பணியாற்றினார். 1997ஆம் ஆண்டு பாஜகவின் உத்திரப்பிரதேச  மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1999ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசின் தரைவழி போக்குவரத்துதுறையின் அமைச்சராக ஏறத்தாழ ஓராண்டு காலம் பணியாற்றினார். வாஜ்பாயின் கனவு திட்டமான தங்க நாற்கர சாலை அமைக்கும் திட்டத்தில் ராஜ்நாத்தின் பங்கு மகத்தானது.

2000 – 2002ஆம் ஆண்டுகளில் உத்திரப்பிரதேச மாநில முதல்வராகப் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் அவர் பாஜகவின் தேசிய செயலாளராகவும் இருந்தார்.

மீண்டும் 2002ஆம் ஆண்டு மத்திய விவசாயத்துறை அமைச்சராகவும், பின்னர் உணவு பதப்படுத்தும் துறையின் அமைச்சராகவும் இருந்தார்.

2005 – 2009 காலகட்டத்திலும் அதன் பின்னர் 2013 – 2014 காலகட்டத்திலும் பாஜகவின் தேசிய தலைவராகவும் இருந்தார். அப்போதுதான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனிப் பெரும்பான்மை பெற்று பாஜக மத்திய அரசை அமைத்தது.

மோதி தலைமையிலான அரசின் உள்துறை அமைச்சராகவும், தற்போது பாதுகாப்புதுறை அமைச்சராகவும் ராஜ்நாத்சிங் பணியாற்றிவருகிறார்.

விஜயலக்ஷ்மி பண்டிட், ஷீலா கௌல், H N பகுகுணா அதன் பின்னர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஐந்து முறை வாஜ்பாய் ஆகிய நட்சத்திர வேட்பாளர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய லக்னோ தொகுதியில் இருந்து 2014 மற்றும் 2019 ஆண்டு தேர்தல்களில் ராஜ்நாத் வெற்றி பெற்று உள்ளார்.

நாற்பதாண்டு காலத்திற்கும் மேலாக தேசத்திற்காக உழைத்து வரும் திரு ராஜ்நாத்சிங் அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

(Visited 27 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *