சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

பாரத நாட்டில் ஒரு துருவ நட்சத்திரம் – ஜெ ஆர் டி டாடா – ஜூலை 29.

இஸ்லாமிய படையெடுப்பில் இருந்து தப்பி ஜொராஸ்டர்கள் என்னும் பார்சி இன மக்கள் பாரத நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அன்று குஜராத் பகுதியை ஆண்ட மன்னன் ஒரு கொள்கலம் நிறைய பாலை அவர்களுக்கு அனுப்பி வைத்தானாம். பார்சி மத பூசகர் கையளவு சர்க்கரையை அதில் போட்டு திருப்பி அனுப்பினாராம். எங்கள் நாட்டில் ஏற்கனவே அதிகமான மக்கள் இருக்கிறார்கள் என்பது அந்த மன்னன் அனுப்பிய செய்தி, பாலில் கலக்கும் சர்க்கரை தனியாகத் தெரிவதில்லை ஆனால் அது சுவையைக் கூடும் அதுபோல நாங்கள் இந்த மண்ணில் வேறுபட்டுத் தெரியமாட்டோம், ஆனால் இந்த மண்ணின் வளத்தைக் கூட்ட எங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்வோம் இது அந்த பூசகரின் பதில். நடந்ததோ இல்லையோ தெரியாது, ஆனால் பாரத நாட்டில் மிகச் சிறுபான்மையாக இருந்துகொண்டு, நாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய இனம் பார்சி இனம். அந்த இனத்தின் தன்னிகரில்லாத தாரகையாக ஒளிவீசியவர் ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா – சுருக்கமாக ஜெ ஆர் டி டாடா.

புகழ்பெற்ற டாடா குடும்பத்தில் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவிற்கும்  பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த அவரது மனைவியான சூஸ்சானாவிற்கும் மகனாக 1904ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள் பிறந்தவர் ஜஹாங்கிர் டாடா. தாயார் பிரெஞ்சு நாட்டவர் என்பதால் ஜஹாங்கீரின் இளமைப் பருவம் பிரெஞ்சு நாட்டிலேயே கழிந்தது. அவரது பள்ளிப்படிப்பும் அங்கேயே நடந்தது. டாடா நிறுவனங்களின் பணிக்காக அவரது தந்தை வேறுவேறு நாடுகளில் பணியாற்ற இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா என்று குடும்பமும் அவரோடு செல்ல பல்வேறு இடங்களில் ஜஹாங்கிர் படிக்க நேர்ந்தது. தாயாரின் மரணத்தை அடுத்து ரத்தன்ஜி தனது குடும்பத்தை இந்தியாவுக்கே கொண்டு வந்தார். தனது மேல்நிலைக் கல்வியை இங்கிலாந்து நாட்டில் முடித்த ஜஹாங்கிர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க முடிவு செய்தார். ஆனால் அப்போது பிரெஞ்சு நாடு இருபது வயதான இளைஞர்கள் அனைவரும் இரண்டாண்டு கட்டாய ராணுவ சேவை புரியவேண்டும் என்று சட்டமியற்றியது. ஆமாம், இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர் அப்போது பிரெஞ்சு குடிமகனாகத்தான் இருந்தார். அரசின் ஆணையை ஏற்று ஜஹாங்கிர் பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரியத் தொடங்கினார். தரைப்படையில் இணைந்த அவ்ருக்கு பிரெஞ்சு மொழியோடு ஆங்கிலமும் பேசவும் எழுதவும் தெரியும் என்பதையும் அதோடு அவருக்கு தட்டச்சும் தெரியும் என்பதால் அவரை பிரெஞ்சு தளபதி ஒருவரின் உதவியாளராக ராணுவம் பணிமாற்றம் செய்தது. கட்டாய ராணுவ சேவையை முடித்துவிட்டு மீண்டும் கல்லூரிக்குச் செல்ல ஜஹாங்கிர் திட்டமிட்டுக் கொண்டு இருந்தபோது, அவர் தந்தை அவரை டாடா நிறுவனத்தில் பணியாற்ற அழைத்தார். தனது பிரெஞ்சு குடியுரிமையை 1929ஆம் ஆண்டு துறந்த ஜஹாங்கிர் முறைப்படி இந்திய குடிமகனாக மாறினார்.

இதனிடையே 1025ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தில் சம்பளம் இல்லாத பயிற்சி பெரும் தொழிலாளியாக இணைந்தார். மாபெரும் வணிக சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பும் வரலாறு அங்கேதான் தொடங்கியது. 1938ஆம் ஆண்டு தனது 34ஆவது வயதில் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான TATA SONS நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஐம்பது  ஆண்டுகள் அவர் இந்தப் பதவியில் இருந்து செயல்பட்டார். பதினான்கு நிறுவனங்களாக இருந்த குழுமத்தை தொண்ணூற்று ஐந்து நிறுவனங்கள் கொண்ட மாபெரும் ஸ்தாபனமாக அவர் வார்த்தெடுத்தார். நிறுவங்களின் எண்ணிக்கை, கொள்முதல் வரவு செலவு, நிகர லாபம், மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கியது என்பதெல்லாம் போக டாடா நிறுவனம் என்றால் ஒரு நெறிமுறை தவறாத நிறுவனம் என்றும் தரமான பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற பெயரை எடுத்ததுதான் அவரது ஆகப் பெரும் சாதனையாக இருக்கும்.

டாடா மோட்டார்ஸ், டைட்டான் கடிகாரத் தொழில்சாலை, டாடா கம்ப்யூட்டர்ஸ், டாடா கன்சுலேட்டன்சி சர்வீசஸ் என்று டாடா நிறுவனங்களின் பொருள்களை உபயோகிக்காத இந்திய மக்களே இருக்க முடியாது.

பாரத நாட்டில் முதல் முதலாக விமானம் ஓட்டும் தகுதிச் சான்றிதழைப் பெற்றவர் ஜஹாங்கிர் டாடாதான். அவர் தொடங்கிய டாடா விமான போக்குவரத்து நிறுவனம்தான் இன்று ஏர் இந்தியா நிறுவனமாக மாறி உள்ளது. ஆனாலும் அவரது விமான சேவையை தேசியமயமாக்கியத்தில் டாடாவிற்கு வருத்தம்தான். 1932ஆம் ஆண்டு கராச்சியில் இருந்து அஹமதாபாத் வழியாக மும்பை நகருக்கு தபால்களை தன்னந்தனியாக ஜஹாங்கிர் தனது விமானத்தில் கொண்டு வந்தார். இந்திய விமானப் போக்குவரத்துத்துறை அன்றுதான் தொடங்கியது. இந்த நிகழ்வின் முப்பதாவது ஆண்டு நிறைவிலும் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அதே போன்ற சிறிய விமானம் ஒன்றை அதே கராச்சி மும்பை நகருக்கு இடையே ஜஹாங்கிர் ஓட்டினார். இந்த நிகழ்வின் ஐம்பதாவது ஆண்டு என்பது 1982, அப்போது அவருக்கு வயது எழுபத்தி எட்டு.

வெறும் தொழிலதிபராக மட்டும் இருந்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே பொதுவாக பார்சி தொழிலதிபர்களும் குறிப்பாக டாடா குழுமமும் தங்கள் இலக்காக வைத்துக் கொள்வதில்லை. பொதுவாக அவர்களின் குழுமங்களின் பெரும்பான்மையான பங்குகள் அவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்களின் பெயரில்தான் இருக்கும். எனவே பெரும்பான்மையான லாபம் என்பது மக்களின் தேவைகளுக்கே செலவிடப் படும். அப்படி டாடா நிறுவனம் முன்னெடுத்த இயக்கம் குடும்ப கட்டுப்பாடு மற்றும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது.

அதுபோக மும்பை நகரில் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை, Tata Institute of Social Science, Tata Institute of Fundamental Research ஆகியவை ஜஹாங்கிர் டாடாவால் நிறுவப்பட்டவை. அரசால் சட்டப்படி கட்டாயமாக்குவதற்கு முன்னமே தங்கள் தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர விலை, இலவச மருத்துவ சிகிச்சை, தொழிலாளர் சேம நிதி ஆகியவற்றை தங்கள் நிறுவனங்களில் ஜஹாங்கிர் டாடா அறிமுகப்படுத்தினார்.

பல்வேறு விருதுகளையும் மரியாதைகளையும் பெற்ற ஜஹாங்கிர் டாடாவிற்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருதை அரசு 1992ஆம் ஆண்டு வழங்கியது. இந்த விருதை பெற்ற முதல் தொழிலதிபர் டாடாதான். இன்றுவரை வேறு எந்த தொழிலதிபரும் இந்த விருதைப் பெறவில்லை.

1993ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம்  நாள் ஸ்விட்சர்லாந்து நாட்டில் தனது 89ஆம் வயதில் ஜெ ஆர் டி டாடா காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடாளுமன்றம் தனது நடவடிக்கைகளை ஒத்திவைத்தது. பொதுவாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் மறைவுக்கு இப்படி செய்வது மிக அரிது.

பாரத பொருளாதார வரலாற்றையோ அல்லது தொழில் வரலாற்றையோ எழுதும் போது ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவிற்கு ஒரு தனி இடம் இருக்கும் என்பதில் ஐயமே இல்லை.

(Visited 124 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close