ராட்சசி திரைப்படப் பார்வை – ஹரன் பிரசன்னா

ராட்சசி என்றொரு படம் பார்த்தேன். இனி தமிழ்த் திரைப்படங்களை அதன் கலைத்தன்மைக்காகப் பார்க்கத் தேவையில்லை என்று முடிவுக்கு எப்போதே வந்துவிட்டேன். அதன் அரசியல் பின்னணியும் சொல்ல வரும் அரசியல் கருத்துகளும் மட்டுமே முக்கியம் என்ற இடத்தை நோக்கி என்னைத் தள்ளிவிட்டன (பொலிடிகல் கரெக்ட்நெஸ்: ஒரு சில படங்கள் நீங்கலாக) தமிழ்ப் படங்கள். ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் (பொ.க.: ஒரு சிலர் நீங்கலாக!) ஒரு மிகப்பெரிய மாய வலையில் சிக்குண்டுள்ளது. அதன் இன்னொரு வெளிக்காட்டல் ‘ராட்சசி.’ இப்படத்தில் ஜோதிகா நடித்திருப்பது தற்செயலாகவும் இருக்கலாம். அல்லது கருணாநிதி குடும்பத்தைப் போல மாற எத்தனிக்கும் சிவகுமார் குடும்பத்தின் திட்டமிட்டப்பட்ட நகர்வாகவும் இருக்கலாம், எனக்குத் தெரியவில்லை.

முதலில் எனக்குத் தேவையானவற்றை மட்டும் சொல்லிவிடுகிறேன். பிறகு படம் பற்றிப் பார்க்கலாம்.

* தலைமை ஆசிரியரின் அறைக்குள் செல்ல இருக்கும் கதவைக் காட்டி இது ஏன் என்று கேட்கும் தலைமை ஆசிரியை சொல்கிறார், ‘இவங்க வரலாம் இவங்க வரக்கூடாது என்று சொல்ல இது என்ன கோவில் கர்ப்பகிரஹமா’ என்கிறார்.

* ப்ரேயர் என்பதற்கு முக்கியத்துவம் காட்டுகிறார் தலைமை ஆசிரியை. என்னடா ஆதாயமில்லாம எலி அம்மணமா ஓடாதே என்று நினைக்கும்போதே அந்த ப்ரேயர் இப்படி வருகிறது. வார்ம் அப் சாங் என்ற பெயரில் ஒரு விறுவிறு பாட்டை (குத்துப்பாட்டு!) போட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் ஆடலாம் என்கிறார்.

* பள்ளியில் ஒரு சுவரில் நான்கைந்து பேர் கையைத் தூக்கி வீறுகொண்டு எழும் படம் ஒன்று வரையப்பட்டுள்ளது. அத்தனையும் கருப்புச் சட்டை போட்டவர்கள். வண்ணம் தீட்ட வசதியில்லாத அரசுப் பள்ளி என்று சொல்லலாம், ஆனால் மற்ற சுவர்களின் வண்ணத்துடன் படங்கள் தீட்டப்பட்டுள்ளன.

* சின்ன வில்லனாக வரும் உதவித் தலைமை ஆசிரியர் நெற்றி முழுக்க பட்டை. கெட்டது செய்வது மட்டுமே இவரது தொழில்.

* இன்னொரு பள்ளியின் தாளாளர் பெரிய வில்லன். அவர் தன் பள்ளியில் இருக்கும்படியாகக் காண்பிக்கப்படும் காட்சிகளிலெல்லாம் பின்னணியில் ஹிந்துக் கடவுளரின் படங்கள் மட்டுமே.

* இஸ்லாம், கிறித்துவம் குறித்த சிறிய முணுமுணுப்புக் கூட கிடையாது. படத்தில் எங்கேயும் கிடையாது.

இனி திரைப்படம் பற்றி:

* நாம் ஒரு பள்ளி எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ, ஒரு தலைமை ஆசிரியர் எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அவை எல்லாவற்றையும் ஒரு தாளில் எழுதி வைத்து, அத்தனையையும் படமாக்கி இருக்கிறார் இயக்குநர். இப்படி இருக்கவே முடியாது என்று நமக்கும் தெரியும், இயக்குநருக்கும் தெரியும். எனவே இது நமக்கும் அவருக்குமான ஒரு கிச்சுகிச்சு விளையாட்டு மட்டுமே.

* சிவப்புக் கயிறு, மஞ்சள் கயிறு என்று இரண்டு பிரிவாக அடித்துக்கொள்ளும் மாணவர்களின் கயிறுகளை வெட்டி எரித்து சாதி சமத்துவத்தை ஒரே காட்சியில் கொண்டு வருகிறார் ஜோதிகா. அதை எதிர்த்துக் கேட்கும் சாதி வெறியர்களை மூன்றே கேள்விகளில் மடக்கி ஓட ஓட விடுகிறார்.

* அனைத்து கெட்ட ஆசிரியர்களையும் ஒவ்வொரு அசைன்மெண்டாக திருத்துகிறார். அவர்களும் தெரிந்தோ தெரியாமலோ திருந்திவிடுகிறார்கள்.

* அப்பா இறந்ததற்கு அரை நாள் விடுமுறையில் சென்று அவரே புரட்சித் தகனம் செய்துவிட்டு மதியம் உணவு இடைவேளைக்கு முன்பு பள்ளிக்கு வந்துவிடுகிறார். ஆனால் ஒரு மணி நேரம் பெர்மிஷனில் அப்பாவை எரித்துவிட்டு வேலைக்கு வருவதாகக் காட்டி இருந்தால் இன்னும் புரட்சி பலமாக இருந்திருக்கும். இயக்குநர் புரட்சி வடையை மயிரிழையில் தவற விட்டிருக்கிறார்.

* தலைமை ஆசிரியை பள்ளிக்கு வந்த சில மாதங்களிலேயே இலக்கியப் போட்டியில், நீளம் தாண்டுதலில், உயரம் தாண்டுதலில் என்று மாணவர்கள் திடீரென்று வென்று விடுகிறார்கள்.

* ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை உண்டு என்ற ஒற்றை வரியை நம்பி ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமையை எப்படியே கண்டுபிடித்துவிடுகிறார். கல்லால் எறியும் பையனை குண்டெறிதலில் திறமை உள்ளவன் என்று கண்டுபிடிப்பது புதுமையின் உச்சம்.

* 9ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களைத் தேடிப்பிடித்து, அவர்களை எப்படித் தோற்கச் செய்யலாம் என்று ஆசிரியர்களுக்கு டோஸ் விட்டு, அவர் தன் தனிப்பட்ட பொறுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கிறார். அவர்களுக்கு வகுப்பாசிரியராகவும் ஆகிறார். என்ன ஆச்சரியம்! 79 பேர் பத்தாம் வகுப்பில் வெல்கிறார்கள். அதில் 12 பேர் 400க்கும் மேல் வாங்குகிறார்கள். இதன் பின்னணி ரகசியமாக நான் கண்டுபிடித்தது, ஜோதிகா ஒரு நிமிடம் கூட இவர்களுக்குப் பாடம் எடுக்கவில்லை என்பதுதான். ஆம், ஒரு காட்சிகூட அவர் பாடம் எடுப்பதாக வரவில்லை. சண்டை போடுகிறார், டான்ஸ் ஆடுகிறார், கல்லாக இருந்து குலுங்கி குலுங்கி கரைகிறார், 2ம் வகுப்பு பையனை கல்யாணத்துக்குக் காத்திருக்கச் சொல்கிறார் (காத்துக்கொண்டிருக்கும் அந்தப் பையனை யாராவது பார்த்தால் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்), ஆனால் பாடம் மட்டுமே கடைசி வரை எடுக்கவே இல்லை.

* தலைமை ஆசிரியை ராணுவத்தில் இருந்தவர் என்ற காட்சி, பாண்டியன் ஐபிஎஸ் என்ற ரஜினியின் திடீர்க் காட்சியைவிட படுபயங்கரம்.

* மாணவர்கள் தலைமை ஆசிரியையைப் பெயர் சொல்லி அழைப்பதெல்லாம் கிறுக்குத்தனித்தின் சிகரம்.

ஒரு பள்ளியில் ஒன்றிரண்டு ஆசிரியைகள் தவிர அத்தனை பேருமே அயோக்கியர்கள் என்பது அயோக்கியத்தனம். உண்மையில் அவர்கள் திறமை இல்லாதவர்களாக இருக்கலாம், ஆனால் அயோக்கியர்களாக இருக்க வாய்ப்பில்லை. படத்துக்காக இப்படி வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது புரிகிறது என்றாலும் ஏற்றுக்கொள்ள  முடியவில்லை.

அரசுப் பள்ளியில் படிக்க வரும் மாணவர்களுக்கு ஆசை காட்டி தனியார்ப் பள்ளிகள் தங்கள் பள்ளிகளுக்கு இழுத்துக்கொள்கின்றன, அதற்கு அரசு ஆசியர்களுக்கு கமிஷன் என்பதெல்லாம் பைத்தியக்காரத்தனமான கற்பனை. அரசுப் பள்ளியை ஒழித்துக் கட்டவே தனியார்ப் பள்ளிகள் இயங்குகின்றன என்பதெல்லாம் கம்யூனிஸத்தின் பிரசாரம். இப்படி எல்லாம் எங்கேயும் நடக்காது. என்னவோ யோசித்து என்னத்தையோ எழுதி என்னவோ எடுத்திருக்கிறார்கள்.

ஒரே வருடத்தில் ஒரு பள்ளியை அடியோடு மாற்றிவிடலாம் என்பதெல்லாம் ஒரு அசட்டு நம்பிக்கை. திரைப்படத்துக்காகக்கூட இதையெல்லாம் நம்பமுடியாது. அரசுப் பள்ளிகளின் உண்மையான பிரச்சினைகளை இவர்கள் ஒருநாளும் கண்டடையைப் போவதில்லை. குற்றம் சொல்லும் தொனி மட்டுமே பிரதானம் என்று படமெடுத்தால் இந்த லட்சணத்தில்தான் படம் வரும். கொஞ்சமாவது உண்மை நிலைக்கு அருகில் வரவேண்டும் என்றால், பள்ளிகளைப் பற்றிப் புரிந்துகொள்ளவேண்டும். பள்ளிகளைப் பற்றி கம்யூனிஸ்ட்டிகள் எழுதித் தருவதைப் படித்துவிட்டுப் படம் எடுக்கக்கூடாது. உண்மையான பிரச்சினைகளைப் படம் எடுத்தால் படம் சுவாரஸ்யமாக இருக்காது, மக்களுக்குப் புல்லரிக்காது என்பது இயக்குநருக்குத் தெரிந்திருக்கிறது.

இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்த ஒரு நன்மை உண்டு. அது: இனியும் ஜோதிகாவால் இதைவிட ஓவர் ஆக்ட் செய்யமுடியாது. இதைப் பார்த்துவிட்டால் ஜோதிகாவின் எந்த ஒரு படத்தையும் தைரியமாகப் பார்த்துவிடலாம். வாங்க என்று சொல்வதற்குள் நான்கு முறை தலையை ஆட்டிவிடும் சாமர்த்தியம் ஜோதிகாவுக்கு இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள்.

பின்குறிப்பு: படத்தைக் கிழிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இதை எழுதி இருக்கிறேன் என்று யாரும் சந்தேகப்படவேண்டாம்.

– ஹரன் பிரசன்னா

(Visited 865 times, 1 visits today)
22+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *