இந்தியாசிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

கணினி உலகின் கதாநாயகன் – இன்போசிஸ் நாராயணமூர்த்தி – ஆகஸ்ட் 20

கல்வியும், உழைப்பும் ஒரு எளிய குடும்பத்தைச் சார்ந்த ஒருவனை எப்படி முன்னேற்றும் என்பதையும், அதன் பலன் எப்படி நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் என்பதையும், எப்படி பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் என்பதையும், எல்லா தடைகளையும் தாண்டி எப்படி பாரதம் உலகின் முக்கியமான சக்தியாக விளங்க முடியும் என்பதை நமது கண்களுக்கு முன்னே காட்டிய வரலாறு திரு நாராயணமூர்த்தி அவர்களின் வரலாறு. 

கர்நாடக மாநிலத்தில் ஒரு எளிய மத்தியதர குடும்பத்தில் 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்தவர் நாராயணமூர்த்தி. அவரது தந்தைக்கு அவர் இந்திய ஆட்சிப்பணிக்கு செல்ல வேண்டும் என்பது எண்ணம். ஆனால் அன்றய இளைஞர்கள் போல நாராயணமூர்த்தி பொறியியல் துறையில் சேரவே ஆர்வம் கொண்டு இருந்தார். புகழ்வாய்ந்த இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ( IIT )  இடம் கிடைத்து இருந்தாலும், பொருளாதார நெருக்கடியால் அங்கே சேர முடியாமல் பிராந்திய பொறியியல் கல்லூரியில் ( REC ) மின் பொறியியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தார். பின்னர் கான்பூர் இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் ( IIT Kanpur ) முதுகலை பட்டம் பெற்றார். 

அஹமதாபாத் நகரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பணி புரியத் தொடங்கிய நாராயணமூர்த்தி, கணினி துறையால் ஈர்க்கப்பட்டார். சிறிது காலம் புனா நகரில் இருந்த பத்னி கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்தார். பிறகு தன் நண்பர்களோடு இணைந்து இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். 1981ஆம் ஆண்டு மிகச் சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. உலகம் முழுவதும் தொலைத்தொடர்பும் கணினிமயமாக்குதலும் அடுத்த இருபதாண்டுகளில் மிகப் பெரும் வளர்ச்சியை கண்டது. தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை குறைந்த செலவில் அளிப்பதில் இன்போசிஸ் நிறுவனம் முன்னணியில் இருந்தது. எனவே அதே துறையில் இருந்த பல நிறுவனங்களைக் காட்டிலும் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி பலமடங்கு அதிகமாக இருந்தது. 

இருபதாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டுகளில் நரசிம்ம ராவால் தொடங்கப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டது. மிகப் பெரும் இளைஞர் சமுதாயம், அதுவும் ஆங்கிலத்திலும் கணிதத்திலும் திறமையான இளைஞர் பட்டாளம் நாராயண மூர்த்திக்கு உறுதுணையாக அமைந்தது. இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி இந்த இளைஞர்களை பணக்காரர்களாக மாற்றியது. அதிகமான சம்பளம், நிறுவனத்தின் பங்குகளை அளித்தல் என்று திறமை வாய்ந்த இளைஞர்களை இன்போசிஸ் தக்க வைத்துக் கொண்டது. 

வறுமைக்கோட்டுக்கு கீழேயும், மத்தியதர வர்க்கமாகவும் இருந்த பல குடும்பங்கள் பொருளாதாரத்தில் பெருமளவு முன்னேறின.  இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பலர் பிறகு தனியாக நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமான தொழிலதிபர்களாக விளங்குகின்றனர். 

நாராயணமூர்த்தி அவர்களின் மனைவி திருமதி சுதா மூர்த்தி இன்போசிஸ் அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். இதன் மூலம் கல்வி சுகாதாரம் போன்ற துறைகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அவர் செய்து வருகிறார். 

பல்வேறு விருதுகளை பெற்ற நாராயணமூர்த்திக்கு பாரத அரசு பத்மஸ்ரீ மற்றும் பத்மவிபூஷண் விருதுகளை வழங்கி மரியாதை செலுத்தி உள்ளது. 

பாரத நாட்டின் அறிவின் கூர்மையை உலகமெங்கும் பறைசாற்றிய திரு நாராயணமூர்த்திக்கு ஒரே இந்தியா தளம் தனது நல்வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. 

(Visited 54 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close