ஏக்நாத் ரானடே நினைவு தினம் – ஆகஸ்ட் 22.

நீலத் திரைகடல் ஓரத்திலே நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை. பாரத நாட்டின் தெற்கு எல்லையில் அன்னை தவம் செய்த ஸ்ரீபாத பாறையில் தவம் செய்ய கிழக்குப் பகுதியில் இருந்து ஒரு இளைஞர் வந்தார்.துறவறம் என்பது எந்த வேலையையும் செய்யாமல் இருப்பதல்ல, அது நாட்டுக்கு நாள்தோறும் உழைப்பது என்று கூறிய ஸ்வாமி விவேகானந்தர்தான அந்த இளைஞர். அதே பாறையில் ஸ்வாமிக்கு ஒரு மண்டபம் கட்ட வேண்டும், அது எண்ணற்ற பாரத இளைஞர்களை தேச சேவைக்கு தூண்டும் விளக்காக இருக்க வேண்டும் என்று பாரதத்தின் மேற்குப் பகுதியில் இருந்து ஒருவர் வந்தார். அவர்தான் ஏக்நாத் ரானடே. 

1914 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் நாள் மஹாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் பிறந்தவர் ஏக்நாத் ரானடே. சிறு வயதிலேயே ஏக்நாத்தின் குடும்பம் நாகபுரி நகருக்கு குடியேறியது. தத்துவ இயலில் இளங்கலை படிப்பும் பின்னர் சட்டமும் பயின்றவர் ஏக்நாத் ரானடே. ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம் ஆரம்பித்த சிறுது காலத்திலேயே தனது பதின்ம வயதில் ஸ்வயம்சேவகராக இணைந்து கொண்டார் ஏக்நாத் ஜி. தேசபக்தியும், கொள்கைப் பிடிப்புமாக சங்கம் அவரை வார்த்தெடுத்தது. குடும்பத்தையும் இல்வாழ்கையையையும் துறந்து சங்கத்தின் முழுநேர சேவகராக பணியாற்றத் தொடங்கினார். தனது இருபத்தி நாலாம் வயதிலேயே ஜபல்பூர் நகரின் பிரச்சாரகராக நியமிக்கப்பட்டார். காந்தி கொலையைத் தொடர்ந்து சங்கம் தடை செய்யப்பட்டது. பல முழுநேர ஊழியர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஏக்நாத் ஜி தலைமறைவானார். தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டே சங்க பணிகளில் ஈடுபட்டார். அரசோடு நடந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார். சிறிது காலத்திலேயே காந்தி கொலைக்கும் சங்கத்திற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று நிரூபணமாகி தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. 

வங்காளம், பிஹார், அஸாம் ஆகிய மாநிலங்கள் அடங்கிய பாரதத்தின் கிழக்குப் பகுதியின் க்ஷேத்திர பிரச்சாரக்காக 1950ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். பிரிவினைக்குப் பின்னால் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து பாரதம் வந்த ஹிந்து சகோதர்களை அரவணைத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை சிறப்பாக வழிநடத்தினார். சங்கத்தின் மிக முக்கியப் பொறுப்பான அகில இந்திய ப்ரச்சாரக் பிரமுக், பௌதிக் பிரமுக், சர்காரியவாக் ( செயலாளர் ) ஆகிய பொறுப்புளையும் ஏக்நாத் ஜி வகித்தார். 

1963ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகானந்தரின் நூறாவது ஆண்டு. அப்போது ஸ்வாமிஜியின் சிந்தனைகளை தொகுத்து ” ஹிந்து ராஷ்டிரத்திற்கு ஒரு அறைகூவல்” ( Rousing Call to Hindu Nation ) என்ற புத்தகத்தை வெளியிட்டார். ஸ்வாமியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஸ்ரீபாத பாறையில் மணிமண்டபம் ஓன்று கட்ட திட்டம் உருவானது. சங்கத்தின் சார்பாக ஏக்நாத் ஜி குழுவின் செயலாளராக அடையாளம் காட்டப்பட்டார். 

பாரதம்  முழுவதும் பயணம் செய்து பொதுமக்களின் ஆதரவை விவேகானந்தரின் மண்டபத்திற்கு ஏக்நாத் ஜி திரட்டினார். முன்னூறுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை கடிதம் மூலம் தெரிவித்தனர். கட்சி வேறுபாடில்லாமல் எல்லா கட்சி தலைவர்களையும் கட்டுமானப் பணிக்கு ஆதரவு தெரிவிக்க வைத்தார். ஏக்நாத் ஜியின் அயராத உழைப்பின் காரணமாக இன்று ஸ்ரீபாத பாறையில் விவேகானந்தரின் நினைவு மண்டபம் கம்பிரமாக நிற்கிறது. அதனைத் தொடர்ந்து கன்யாகுமரி கடற்கரை அருகில் விவேகானந்த கேந்த்ராவை உருவாகும் முயற்சியில் ஈடுபட்டு அதனையும் வெற்றிகரமாக முடித்தார். இன்று விவேகானந்தா கேந்திரா பல்வேறு தேசியப் புனர் நிர்மாணப் பணிகளையும், கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறது. 

எந்த பலனையும் எதிர்பாராமல் நிஷ்காமியமாக  செயல்படும் கர்மயோகியாக தனது வாழ்க்கையை பெரும் குறிக்கோளுக்காக அர்ப்பணம் செய்யும் ஸ்வயம்சேவக்காக தனது வாழ்க்கையை மற்றவர்களுக்கு உதாரணமாக நடத்திக் காட்டியவர் ஏக்நாத் ரானடே ஜி அவர்கள். 

தனது அறுபத்தி ஏழாம் வயதில் 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் நாள் ஏக்நாத் ஜி மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவர் உருவாக்கிய விவேகானந்தா கேந்த்ராவில் 23ஆம் நாள் மாலை சூரியன் மறையும் போது அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஸ்வயம்சேவக்காக பாரதம் முழுவதும் பணியாற்றி, தெற்கு கோடியில் தனது அயராத உழைப்பினால் மிகப் பெரும் ஸ்தாபனத்தை உருவாக்கிய ஏக்நாத் ரானடே ஜியின் வாழ்க்கை நம் எல்லோருக்கும் பாடமாக அமையட்டும். 

(Visited 101 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

Comment (1)

  1. மறைந்த கம்யுனிஸ்ட் தலைவர் ஜீவாவைப்பற்றி ஒரு விஷயம் அதிகம் சொல்வதுண்டு. அவர் ஒரே உடையோடுமாறு உடை இல்லாமல் இருந்ததால், அமரர் காமராஜர் வந்த போது அவரைக் காணத் தாமதமாக வந்ததற்கு இது காரணம் என்பதாக. ஏகநாத் ரானடே அவர்கள் வாழ்நாள் முழுவதும் உடுத்திய உடை போக ஒரே ஒரு மாறு உடையோடு வாழ்ந்தவர் என்பதைப் பலர் அறிய மாட்டார்கள். விவேகானந்தர் மண்டபப்பணியில் சாதாரணமக்கள் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்பதால், ஒவ்வொருவரிடமும் ஒரு ரூபாய் என்ற அளவில் ஒரு பெருந்தொகை திரட்டினார். மாநில அரசுகளிடம் பெருந்தொகையும் மக்களிடம் சிறு சிர்யஉ தொகைகளும் பெற்று உருவாக்கப்பட்டதே அந்த மண்டபம்

    0

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *