அணு விஞ்ஞானி ஹோமி சேத்னா பிறந்தநாள் – ஆகஸ்ட் 24.

அது 1974ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீர் மாவட்டத்தில் தார் பாலைவனம் பரவிக் கிடைக்கும் பொக்ரான் நகரில் இருந்து டெல்லிக்கு  ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் இருந்தவர் அன்றய பிரதமர் இந்திரா காந்தி. பேசிய குரல் ஒரே ஒரு செய்தியைத்தான் கூறியது. ” புத்தர் சிரித்தார் ” இரண்டே சொற்களில் பாரதம் வெற்றிகரமாக தனது அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்தது என்பது அந்த சங்கேத வாக்கியத்தின் பொருள். இந்த மகத்தான சாதனை ஹோமி நுஸுர்வான்ஜி சேத்னா இந்திய அணுசக்தி நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது நடைபெற்றது. 

பாரசீக நாட்டில் இருந்து தங்கள் மத நம்பிக்கைகளை காப்பாற்றிக் கொள்ள பாரத தேசத்திற்கு அடைக்கலம் வந்த இனம் பார்சி மக்கள். பாலில் கலந்த சர்க்கரை போல பாரத நாட்டிற்கு பெரும் தொண்டாற்றிய சிறுபான்மை இனம் பார்சி இனம். புகழ்பெற்ற அறிஞர்களை தொழில்முனைவோர்களை ஆராய்ச்சியாளர்களை ராணுவ தளபதிகளை இந்த தேசத்திற்கு அளித்த இனம் அது. ஹோமி சேத்னாவும் பார்சி இனத்தைச் சார்ந்தவர்தான். 

1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் நாள் இன்றய மும்பை நகரில் பிறந்தவர் சேத்னா. மும்பை தூய சவேரியார் பள்ளியிலும் பின்னர் மும்பை பல்கலைக்கழகத்திலும் படித்த சேத்னா அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். சிறிது காலம் இங்கிலாந்து நாட்டில் பணியாற்றி விட்டு பாரதம் திரும்பிய சேத்னா Indian Rare Earth நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். 

அணு உலைகளுக்கு தேவையான மூலப் பொருள்களான தோரியம் மற்றும் புளூட்டோனியம் ஆகிய தனிமங்களை பிரித்தெடுக்கும் ஆலையை மும்பை நகரில் உள்ள டிராம்பே பகுதியிலும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் தனிமத்தை பிரித்தெடுக்கும் ஆலையை இன்றய ஜார்கண்ட் மாநிலத்திலும் பின்னர் நாட்டின் முதல் அணு மின் உற்பத்தி நிலையத்தை மும்பையிலும் உருவாக்கிய குழுக்களுக்கு தலைவராக இருந்து பணியாற்றினார். 

அடுத்தடுத்து மர்மமான முறையில் பாரத நாட்டின் முன்னோடி விஞ்ஞானிகளான ஹோமி பாபா மற்றும் விக்ரம் சாராபாய் ஆகியோர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணுசக்தி நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

உலக நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்த உறுப்பினர்களான ஐந்து நாடுகள் தவிர வேறு எந்த நாடும் அணு சக்தித் துறையில் ஆராய்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்த காலம் அது. அந்த தீர்மானம் நிறைவேற்றப் படுவதற்கு முன்னர் பாரதம் அணு ஆயுத சோதனையைச் செய்ய முடிவு செய்தது. அந்த பொறுப்பு சேத்னாவிடம் ஒப்படைக்கப்பட்டது. புத்தர் சிரித்தார், பூமி அதிர்ந்தது. பாரதத்தின் திறமை உலகமெங்கும் ஐயமே இல்லாமல் நிலைநாட்டப்பட்டது. 

நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானியான ஹோமி சேத்னாவுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி நாடு மரியாதை செலுத்தியது. பட்நாகர் விருது, பல்வேறு பல்கலைக்கழகங்கள் அளித்த முனைவர் பட்டங்கள் என்று சேத்னா கவுரவம் செய்யப்பட்டார். 

ஒரு சிறந்த தலைவரின் இலக்கணம் என்பது தன்னைக் காட்டிலும் சிறந்த தலைவர்களை உருவாக்குவதுதான். ராஜா ராமண்ணா, பி கே ஐயங்கார் என்று அடுத்த தலைமுறை அணுசக்திதுறை தலைவர்களை பட்டை தீட்டி சேத்னா நாட்டுக்கு அளித்தார். ஹோமி பாபாவும், விக்ரம் சாராபாயும், ஹோமி சேத்னாவும் அமைத்த பாதையில் இன்று நாடு நடை போடுகிறது. 

தனது எண்பத்தி ஏழாவது வயதில் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் ஹோமி சேத்னா காலமானார். 

நாட்டின் பாதுகாப்புக்கு பெரும்பங்காற்றிய அறிஞருக்கு ஒரே இந்தியா தளம் தலை வணங்குகிறது. 

(Visited 19 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *